புதிய
தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...
6.
இயற்கையின் இயக்கம்!
எழிலே அழகே எங்களின் இளவரசே!
இயம்புவேன் கேளாய் இயற்கையின்
இயக்கத்தை விளைவுகளை!
சூரியச் சிதறலில் சிந்தியது
சுற்றி வரும் இந்தப் பூமி!
தீப்பிழம்பாய் சுற்றிய பூமி
மெல்ல மெல்ல குளிர்ந்தய்யா!
இருவேறு நிலை கொண்ட
இயற்கைத் தன்மை இங்கேயும்
தோன்றியது!
சூடும் குளிரும் ஒளியும் இருளும்
ஒன்றையொன்று வீழ்த்துவதில்
ஓயாது போரிட்டன!
ஒளியின் பேராற்றல்
உவமை சொல்ல இயலாதது!
இருப்பினும் இருளின் ஆற்றலும்
ஈடு சொல்ல முடியாதது!
ஒளியின் உயிர்ப் பொருளை
இருளின் பனி மூடிக் கொண்டது!
உயிரணு மெல்லக் கண் விழித்தது
ஓருயிர் உருவானது!
உயிர்கள் பலப்பல உருவாக
இருளும் ஒளியும் இணைந்தே உதவின!
ஒரு செல் அமீபாவின் வளர்ச்சி
மனம் படைத்த மனிதர் வரை வளர்ந்தது!
பகுத்தறியும் மனித மனம்
பலவாறு செயல் புரிந்தது!
நன்மையும், தீமையும், உண்மையும்,
இன்மையும்,
படர்ந்தது நடந்தது வளர்ந்தது!
சுழலும் சூரியனும் சுற்றும் பூமியும்
இருக்கின்ற இடைவெளியால்
பொருள்கள் உயிர்களாயின் என்று
உரைத்தனர் அறிஞர்கள்!
இயற்கை தன் ஆற்றலால்
எழிற்கோலம் அளித்தது பூமிக்கு!
வான்வெளியில் வண்ணமிகு காட்சிகள்!
வகை வகையான வடிவங்கள்!
திரவ நிலையில் பல மீன்கள் (ஸ்டார்)!
திட நிலையில் பல கோள்கள் (பிளானெட்)!
ஆவி நிலையில் அழகிய கோள்கள், மீன்கள்!
ஒளியால் ஒன்றோடொன்று
உறவு கொள்வதும் பரிவு கொள்வதும்
வளர்சிக்கு வழிகாட்டியது!
வேதிநிலை தனிமங்களால் விளைந்த
விதவிதமான அழகு பொருட்கள்!
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி நீராகி”
என இலக்கியம் சொல்வது போல
இந்த அய்வகைக் கூட்டணியால்
ஆன பொருட்கள் ஆயிரமாயிரம்!
மலைகள், மரங்கள், அருவிகள், ஆறுகள்
இலை, தழைகள், செடி, கொடிகள், மலர்கள்
குலுங்கும் காய்கள், கனிகள்
எண்ணத் தொலையா எழிற்கோலங்கள்!
இயற்கையின் இயக்கத்தில்
ஏற்படும் இனிய மாற்றங்கள்!
பருவங்களால் ஏற்படும்
பாதக சாதகங்கள்!
ஒன்று பலவாக உயிரினங்கள்!
உருவ வேறுபாட்டுக் காட்சிகள்!
நெடுங்கால இடைவெளியில்
நேரிடும் வேறுபாடுகள்!
விழுக்காடுகளின் அளவுகளால்
விளைந்திடும் மாறுபாடுகள்!
ஆய்வில்லாத நாட்களில்
இவையெல்லாம் அதியங்கள்!
படிநிலை வளர்ச்சியிலே
பல்வேறு மாற்றங்கள்!
இரை தேடி போராடுவதில்
எத்தனையோ நிகழ்வுகள்!
வலிமை கொண்டவை வாழ்ந்தன!
வலிமையற்றவை வீழ்ந்தன!
உடல் வளர்த்தார், உயிர் வளர்த்தார் என்று
உயர் கவிஞன் திருமூலன்
சொன்னதுபோல்
உடல் வலிமை உயிர் நீளச் செய்தது!
குன்றனைய உருவங்கள்
கொன்று திண்ணும் விலங்குகள்
இருளும், ஒளியும் போல
இங்கேயும் நிகழ்வுகள்!
ஒன்றை ஒன்று கொல்வதற்கு
ஓயாத போராட்டம்!
இந்தப் போரில் இழந்ததும் உண்டு!
இனிமை விளைந்ததும் உண்டு!
காடுகள், அடர்ந்த தாவரங்கள்,
மலைகள், வனங்கள், குன்றுகள்
இத்தகைய சூழலில் உயிரினங்கள்
பூமிப் பந்து முழுவதும்
பூக்கோல காட்சிகள்!
பூச்சிகள், புழுக்கள், புள்ளினங்கள்,
ஊர்வன, நடப்பன, பறப்பன,
நீரில் நீந்தும் நிறைய உயிர்கள்!
பூரித்த நிலையில் பூமி உருண்டது!
ஒளி தரும் காட்சிகள் ஒவ்வொன்றிலும்!
எத்தனை அழகு எத்தனை எழில்!
வான் தரும் வண்ணக் காட்சிகள்!
சூடும் குளிரும் தரும் சூரிய நிலாக்கள்!
கோடி கோடி மீன் கூட்டத்தின்
மின் ஒளிகள்!
இடி மழை மின்னல் என இனிய காட்சிகள்
வான் பொழிவை ஏந்தி நிற்கும்
நிலமடந்தை மேனியெல்லாம்
நெளிந்திடும் நீர்க்கோடுகள்
வான் மழையை வாங்கி வைத்து
மலையருவி இசைபாடும்!
அருவி நீர் பாய்ந்து சென்று
ஆறுகள் உருவாகும்!
ஆறுகளாய் ஓடைகளாய்
ஆடிவரும் நீரலைகள்!
தேங்குகின்ற அணையாகும்!
நிலம் செழிக்க குளமாகும்!
ஏரி என்றும், ஊருணி என்றும்
எங்கெங்கும் நிறைந்து நிற்கும்!
குட்டைகள் தெப்பங்களில்
குளிர்புனல் கூத்தாடும்!
வாய்க்கால்கள் வழியோடி
வயல்களில் மகிழ்ந்தாடும்!
விலங்குகளாய் வாழ்ந்த உயிர்
வேறு வேறு வடிவமெடுத்தன!
குனிந்த நடந்த ஒன்று
நிமிரத் தொடங்கியது!
நாலு காலில் நடந்தது மாறி
இரு கால்களில் நடக்கின்ற நிலை கண்டது!
உள்ள உணர்வுகள்
உறவுகளை நாடியது!
இணைந்திணைந்து வாழ்வதில்
இணக்கம் கண்டது!
எல்லா உயிரினமும் ஒரே மாதிரியாக
மனம்
படைத்த மாந்தனில்
மாற்றங்கள்
நிகழ்ந்தது!
மூளை
வளர்ச்சியில்
முன்னேற்றம்
தோன்றியது!
முதுகெலும்பும்
நிமிர்ந்து
முன்னேற்றம்
கொண்டது!
விலங்குகளானது
பூமியில்
மனிதனாய்
மாறியது!
வேதியியல் மாற்றங்களும்
விரைந்து நிகழ்ந்தது!
மூளை வளர்ச்சியில் மேலும்
முன்னேற்றம் தொடர்ந்தது!
எந்தப் பொருளையும்
ஆய்ந்து பார்த்தது!
ஏன்? எதற்கென எண்ணவும் தோன்றியது!
உள்ள உணர்வுகள் புற
உறுப்புகளில் தோன்றியது!
நானாவித எண்ணங்கள்
நடிப்புத் தசைகளில் ஒளிர்ந்தது!
ஒருவரையொருவர் பார்ப்பதற்கும் ஈர்ப்பதற்கும்
விழிகளும் இமைகளும் புருவங்களும்
துடித்தன நடித்தன!
உடல் மொழிகள் தோன்றின
உள்ளத்தை வெளிப்படுத்த
கையசைவு, கண் அசைவு
கருத்துக்களைப் பகிர்ந்தன!
ஒருவரின் எண்ணம்
எதிர் நிற்போர்க்கு புரிந்தது!
சிறிது சிறிதாய் சிந்தனைக் கூறுகள் தோன்றின!
பார்க்கும் காட்சிகளை பகுப்பாய்வு செய்தது!
நெஞ்சக் கருத்துகள் நீள்கனவாய் மாறியது!
கனவில் கண்டதெல்லாம் கருத்தில் உறைத்தது!
உறைந்தது புறப் பொருளாய் உருவெடுத்தது!
உடல் மொழி வளர்ச்சி வாய் மொழியானது!
உள்ளம் வளர பொருள்கள் பெயர்
கண்டது!
பெயர்களின் பெருக்கம் மொழியை
வளர்த்தது!
மொழி வளர்ச்சி முறைகளை வளர்த்தது
முறைகளும் விதிகளும் முன்னேறச்
செய்தது!
குகைகளில் வாழ்ந்த மனிதக் கூட்டத்தின்
கூடுகளாய் இருந்த நிலை மாறியது!
வீடுகள் கட்டும் விபரம் தோன்றியது!
விளைநிலங்களின் வளர்ச்சி வேகம் காட்டியது!
மக்கள் கூட்டம் பெருகி சமுதாயமானது!
பார்த்ததை கேட்டதை பகுத்தறிந்தது
பழக்க வழக்கமாகிப் பண்பாடானது!
பார்ப்பதில் பகுத்தறிவதில் பற்பல
பரிமானங்கள் பல நோக்குச் சிந்தனைகள்
முரண்பாடுகள் முட்டுக் கட்டைகள்
அடிமை உணர்வுகள் அறியாமை எண்ணங்கள்
வல்லமைசாலிகளின் வன்செயல்கள்
இத்தனைக்கும் நடுவில் இனிமையின் வாழ்வு!
இதயத்தைப் பண்படுத்தும் இலட்சிய கீதம்!
பல்பொருள் அங்காடி சந்தை போல
பல்வேறு சிந்தனைகள் பற்பல எண்ணங்கள்
ஒன்றையொன்று வீழ்த்துகின்ற
இயற்கையின் நிகழ்வு இங்கேயும்!
இயற்கையின் இயக்கத்தில்
இனிமையும் உண்டு, இன்னலும் உண்டு!
இன்பமும் உண்டு! இடர்பாடும் உண்டு,
ஏற்றமும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு!
தென்றலும் உண்டு, புயலும் உண்டு!
மாலை வெயில் இனிப்பும் உண்டு!
மதியத்தில் கொடிய சூடும் உண்டு!
ஊட்டி விடும் அமுதம் போல
உளம் மகிழும் சாரலும், தூறலும் உண்டு!
ஊரையே அழிக்கும் பேய் மழையும் உண்டு!
மணம்
தரும் மலர்களும் உண்டு!
மயக்கமூட்டும்
நச்சுச் செடிகளும் உண்டு!
கொஞ்சும்
கிளிகளும் உண்டு!
கொல்லும்
வல்லூறுகளும் உண்டு!
பாடும்
குயில்கள் உண்டு!
பயங்கர
கோட்டானும் உண்டு!
இசைபாடும் மூங்கில்களும் உண்டு!
இரை தேடும் பாம்புகளும் உண்டு!
பார்ப்பதற்கு அழகூட்டும்!
பக்கம் சென்றால் பயமூட்டும்!
இனிய காடுகளில் இருக்கும் நிலை இது!
வானுயர்ந்த மலைகள்!
வளர்ந்து நிற்கும் மரங்கள்!
ஆலோலம் பாடும் அருவிகள்!
அழகொளிரும் அற்புதச் சோலைகள்!
நீர் நிறைந்த தடாகம் ஒன்று!
தாழையும் வாழையும் கரையில் நின்றன!
தடாகத்தில் குளித்திட எருமைகள் வந்தன!
எருமையின் மடுக்களில் வாளை மீன்கள் முட்டின!
முட்டியதால் எருமைகள் பாலைச் சொரிந்தன!
பாலருந்திய வாளைகள் துள்ளி மகிழ்ந்தன!
துள்ளிய வாளைகள் வாழையில் மோதின!
வாழையின் இழை கவிழ்ந்து தாழையில் சாய்ந்தன!
சாய்ந்த இழையில் தாழை மலர் கொட்டியது!
விருந்துக்கு வந்தவரைப் போல் வந்த
தென்றல் ஊருக்குள் மணம் சேர்ந்தது!
குற்றாலக் குறவஞ்சி கவிராயன்
குறள் வழித்தமிழ் எடுத்து வரைந்த
கவிதை இது!
கலித் தொகைக் காட்சி ஒன்று!
கபிலன் வரைந்த கலை மலர்!
மலை மீது ஓரிடத்தில்
சுனை நீர் தேக்க மொன்று!
சுனை அருகில் வாழை மரக் கூட்டமொன்று!
செழித்து வளர்ந்த வாழையின்
கனிந்த பழங்கள் நீரைக்
கள்ளாக மாற்றியது!
தாகமெடுத்த மந்தி ஒன்று!
தண்ணீரைக் குடித்தது!
மதுவான தண்ணீர் மயக்கத்தைத் தந்தது
மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள்
மலர் மஞ்சமாக மாறி இருந்தது!
மயங்கிய மந்தி அந்த மஞ்சத்தில்
மன்னனைப் போல் உறங்கியதென்று
மாபெரும் கவிவேந்தன் கபிலன்
வரைந்து காட்டுகிறான்!
காடுகள் வளமுற்றிருந்ததை
கவிதையில் காட்டி களிப்புறச் செய்தனர்!
இனிமையில் பூத்த எழில் மலரே
இன்னும் சொல்வேன் இயற்கையை!
No comments:
Post a Comment