Tuesday, 29 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

5. தலை சிறந்து வாழ்க!
எழிலே! எங்கள் உயிரே!
மாண்புகள் சிறந்திட மலர்ந்த விழியே!
மாசுகள் மறைந்திட சுடரும் ஒளியே!
வளர்ந்திட நீ சிறந்திட வாழ்த்துகள்!
நான்கு கிராம் எடையிலிருந்தே
நலன் காக்கும் கடமையிலே
நாளெல்லாம் வினைபுரிந்தார்
நல்லோராம் உன் தாய், தந்தை!
வீரர் வழி வந்தவர்கள்
விவேகம் சிறந்தவர்கள்
கற்றறிந்த கலை மலர்கள்!
கவிதை மனம் கொண்ட
உன் அன்னை, தந்தை!
அன்பு நெறி உரைப்பார்!
அறிவின் தொகை சொல்வார்!
ஆற்றலை வளர்த்திடுவார்!
ஆசை பொங்க உனை வளர்ப்பார்!
இயல், இசை கலை தருவார்!
இனிய தமிழ் மொழி உரைப்பார்!
இன்னல்கள் தீர்க்கும் வழி
எதுவென்று எடுத்துரைப்பார்!
சீர்தரும் செழுமை சொல்வார்!
சிந்தனையின் நெறி காட்டுவார்!
சிறுமையை அழித்தொழிக்கும்
சித்தாந்த முறை வழங்குவார்!
உலகத்தைக் காட்டிடுவார்!
உண்மையின் பொருள் உரைப்பார்!
ஊருக்கு உழைத்தோரின்
உள்ளத்தைப் படம் பிடிப்பார்!
அடிமை விலங்கொடித்த
ஆப்ரகாம் லிங்கனையும்!
எப்போதும் பேசுகின்ற
ஏதன்ஸ் சாக்ரடிசையும்!
வாளின் கூர்மையை விட
பேனாவின் முனை கூர்மை என்ற
வைர நெஞ்சம் கொண்ட
வால்டேர் பெருமகனையும்!
சமத்துவம், சுதந்திரம்,
சகோதரத்துவம் பெற
சங்க நாதம் எழுப்பிய
சான்றோன் ரூசோவையும்!
துருக்கியைத் தூய்மை செய்ய
துணிந்து செயல் புரிந்த
முகமது கமால் பாட்சாவையும்
முன்னிறுத்தி பதிய வைப்பார்!
தாய்த் தமிழ்ச்செல்வியும்!
தந்தை உதயமாறனும்!
மாசற்ற மனம் படைத்த - போர்
மறவர் குலத் தோன்றல்கள்!
கல்லூரி கண்டவர்கள்!
கலைப் பாடம் கற்றவர்கள்!
வளம் சிறக்க வாழ்வதற்கு
வழிவகை தெரிந்தவர்கள்!
உலகின் தலைமகனாக
உனை வளர்த்து நிலையுயர்த்த
உழைப்பார்கள், மகிழ்வார்கள்!
உண்மை நெஞ்சம் கொண்டவர்கள்!
கிரேக்கத்தின் கீர்த்தி சொல்வார்!
கிளித் தமிழில் வாழ்த்து சொல்வார்!
கிஞ்சிற்றும் அச்சம் கொள்ளார்!
கிழக்கில் தோன்றும் வெளிச்சம் போல!
புரட்சிகளுக்கு வித்திட்ட
புதுமைக் கவிஞன் செல்லியின்!
புகழ்மிக்க கவிதை சொல்வார்!
புத்துலகை நீ படைத்தளிக்க!
நாடு, மொழி, இனம் என்று
நாகரீக நிலை என்று
நல்லோரின் பாதையிலே
நடைபோடச் செய்திடுவார்!
ஏடென்றும், இதழென்றும்
இன்னும் பல நூலென்றும்
நெஞ்சத்தைப் பண்படுத்த
நீட்டோலை தீட்டிடுவார்!
காடு, மலை, கானக வெளிகளில்
கானம்பாடும் புள்ளினங்கள்!
கண் சிமிட்டும் பூ மலர்கள்!
இசை பாடும் வண்டினங்கள்
இனிய காட்சி காட்டிடுவார்!
மழையருவி தரும் அழகு
மாலை நேரப் பேரழகு
சிலை காட்டும் சீரழகு
செம்மலரே உன்னில் பதிப்பார்!
கொஞ்சு தமிழ்க் கோலச் செல்வனே!
கொள்கைவழிச் சீலனே!
அறிவின் வழி நடக்கும் அன்னை, தந்தை
அனைத்தையும் அறிமுகப்படுத்துவர்!
அறிவியல் அறிஞர்கள்,
அரசியல் மேதைகள்,
ஆன்றோர், சான்றோர்,
அறவழிச் செல்வர்கள்,
ஆற்றல்மிகு மனிதர்கள்,
இயல், இசை வேந்தர்கள்
எழிற்கலை ஆசிரியர்கள்
இலட்சிய வீரர்கள்,
இனிய உலகைப் படைத்த ஏந்தல்கள்,
இனிவரும் உலகை ஆள்பவர்கள்,
எல்லோராக் குகைச் சிற்பங்கள்,
ஏற்றம் தரும் விஞ்ஞானிகள்
எழுத்துலக வேந்தர்கள்
இனிய சொல்லேரு உழவர்கள்
கலை வடிவான காவிய மன்னர்கள்,
காலத்தை வென்ற கவிதைக் குயில்கள்,
காற்றையும் விஞ்சும் கற்பனையாளர்கள்,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மிக்கவர்கள்,
கவிச்சோலை அமைத்தவர்கள்
கடல்களில் எழில் கலங்கள்
சமைத்தவர்கள்
வானில் வழி கண்டு வாகனம்
விட்டவர்கள்,
வாயுக்களை வகைப்படுத்தி வளம்
கண்டவர்கள்
வண்ணமிகு எண்ணங்களை வாரி
வழங்கியவர்கள்
வற்றாத பேரறிவை, உழைப்பை
வழங்கிய வள்ளல்கள்,
புதுமைச் சித்தர்கள்,
புகழ்கொடி வேந்தர்கள்,
ரோமாபுரிச் சீசரையும்,
பாம்பே சல்லா அந்தோணியும்
பேராளன், அழகுப்பேச்சாளன்,
அரசியல் நெறி வழங்கிய சிசரோவும்!
நாடு செழிக்க நாடகங்கள் தந்தவன்,
ஏடு நிறைய எழுதிக் குவித்தவன்,
ஆங்கில மக்களின் அன்பைப் பெற்றவன்,
அழியாத புகழ்வாணன்,
ஆற்றல்நிறை சேக்ஸ்பியரும்!
ஆதிகால ஆய்வாளன் அறிஞன்
ஆற்றலின் வடிவம் ஆர்க்கிமிடீஸ்!
அரசியல், கல்வி மேம்பட
வழி கண்டு வடிவம் தந்த
கீர்த்திமிகு கிரேக்கத்து பிளேட்டோ!
அரசர்களின் அரசியல் வழிகாட்டி,
ஆற்றல்நிறை அலெக்சாண்டரின் ஆசான்,
ஆய்வுக் கருத்துக்களை அள்ளி வழங்கியவன்,
அரிஸ்ட்டாட்டில் பெருமகனையும்!
இதயத்திற்கு அச்சமூட்டும் அரசியல் நெறிசொன்ன
இத்தாலிய மாக்கியவல்லி!
எகிப்திய பாரோ மன்னர்கள்!
எழிலரசி கிளியோபட்ரோ!
இன்னும் பல மாமனிதர்களை உன்
இதயத்தில் பதிப்பார்கள்!
எழிலே உன்னை வளர்ப்பார்கள்!
மதம் கண்ட மகான்கள்
மதம் கொன்ற மகான்கள்
மாசற்ற மேதைகளையும்
மனதிலே பதிய வைப்பார்கள்!
வேலெடுக்கும் மரபினர்
வீரம் செறிந்த மாண்பினர்
வெற்றிகளைக் குவித்தவர்களை
விளக்கி உன்னில் பதிய வைப்பர்!
காடு கொன்று கழனிகளாக்கி
ஏர் கொண்டு நிலம் உழுது
வேளாண்மை விளை பெருக்கிய
வித்தகர்களை பதிவு செய்வர்!
ஏர் கண்ட சீர் மனிதன்,
உருளை கண்ட உயர் அறிஞன்,
உலகம் வாழ உயிர் தந்தவன்,
உண்மையாளர்களை உன்னில் பதிப்பர்!
நாடு கண்டு நல்லறம் செய்தவன்!
ஏடு கண்டு ஏற்றம்பெற உழைத்தவன்!
நெறிகண்டு வழி கண்ட நேர்மையாளர்
நெஞ்சில் வஞ்சமில்லா பாசம் உள்ளவர்!
வகை பிரித்து வலைத்தளம் போல் உன்
வாஞ்சைமிகு உள்ளத்தில் பதிய வைப்பர்!
உலகம் உருண்டை என்றும்,
உருண்டு கொண்டே இருக்கும் என்றும்
உண்மை அறிவை உனக்குரைப்பர்!
உலகத்தைப் புரிய வைப்பர்!
புரட்சிக்குப் பூபாளம் இசைத்தோர்
புதுமைக்கு பூக்கோலம் போட்டோர்
புத்துலகம் காண்பதற்கு உழைத்தவர்கள்
புகழ்வாழ்வு கண்டவரை புரிய வைப்பர்!
சிந்திக்கும் மரபில் வந்த செம்மலரே!
சிறு வயது முடியும் முன்னே செந்தமிழ் பயில்வாய்
கணிதமும், தாய் மொழியும்
கண்போலக் காத்திடு!
கல்விக் கூட வாழ்வை களிப்புடன் ஏற்றிடு!
தமிழரின் படைப்புகளை
தரணி போற்றும் எண்ணங்களை
தளிரே, எழிலே உன்னில் பதிய வைப்பர்!
அய்வகை நிலம் பிரித்து
அதன் ஆற்றலை வகுத்தளித்து
இயற்கையின் இயல்பு சொல்லி
இலக்கணம் எழுதிக் காட்டும்
தோன்று புகழ் தொல்காப்பியம்
தொடர்ந்து வந்த சங்கத் தமிழ் தரும்
நற்றினை, நல்ல குறுந்தொகை,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றோர் ஏத்தும் கலித் தொகை
அய்ங்குறுநூறு, அகம், புறம் என
எட்டுத் தொகை எழிலும்
பட்டிணப்பாலை, நெடுநல்வாடை,
மதுரைக்காஞ்சி, முல்லைப் பாட்டு,
குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம்,
பெரும்பாணாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
திருமுருகாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை
பத்துப்பாட்டின் பயன் அறியவும்!
எப்பொருளிலும் மெய்ப்பொருள்
காணத் தூண்டும் திருக்குறள்,
சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி, குண்டலகேசி,
வளையாபதி என வாழும்
அய்ம்பெருங் காப்பியங்கள்
அடுத்தடுத்து வந்த அற்புத
இலக்கியங்கள், எண்ண வரைவுகள்,
நன்னூல் இலக்கணமும்,
நாலடியார் கவிதைகளும்,
புறப்பொருள் வெண்பாவும்,
புதுப்பொலிவாய் அடர்ந்து வந்த
புலவர்களின் கவிதைச் சாரல்
இதயத்தில் பதிய வைத்து
எழுச்சியூட்டி வளர்த்திடுவர்!
இலக்கிய உலகு காட்டிடுவர்!
புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்....

No comments:

Post a Comment