Thursday, 10 November 2016

கடவுளான கல்லறை மனிதர்கள்

கடவுளான கல்லறை மனிதர்கள்

தமிழ்நாட்டின் கோவில்கள் பெரும்பாலும் புகழ்பெற்றவர்களின் கல்லறையின் மீதே கட்டப்பட்டிருக்கும். சமணப் பள்ளிகளும், புத்த விகாரங்களும் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும் கல்லறை மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அருணகிரிநாதரின் கல்லறை மீது திருச்செந்தூர் கோவிலும், போகரின் சமாதியில் பழனி ஆண்டவனும், சுந்தரச் சோழனின் அதாவது மாமன்னன் இராசஇராசனின் சந்தையின் மீது தஞ்சைக் கோவிலும் எழுப்பப்பட்டிருப்பதாக கூறுவதுண்டு.
இறந்தவர்களை கடவுளாக்கும் சடங்குகள் என்பது இறந்தவரின் விசேஷ நிகழ்ச்சியாகும். இறந்தவரின் உறவினர்கள் துக்கத்தைக் களைகின்ற நாளில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று இறந்தவனின் ஆவியை அந்த இறைவனோடு இணைத்து விட்டு வணங்குவது வழக்கமாகும். இறந்தவர்களை தெய்வத்திரு என்று அழைப்பது இப்போது பாஷனாகி விட்டது. நினைவில் வாழும் என்றும் போடுகிறார்கள். நேசத்திற்குரிய கடவுள் நினைவில் தானே வாழ முடியும்? நேரிலா வரமுடியும்?
விழா நாட்களிலெல்லாம் சேலையை வைத்து வணங்கும் பழக்கம் தமிழ் நாட்டுக் குடும்பங்களில் நிகழ்வதுண்டு. அந்தக் குடும்பத்தின் முன்னோரில் மறைந்த  ஒரு பெண்ணை நினைத்து வழிபடும் நிகழ்வாகும். குறிப்பாக அம்மன் வழிபாடு என்பதே தமிழ்நாட்டில் முக்கிய வழிபாடாகும். மாரியம்மன் - காளியம்மன், கன்னியம்மன், பெரிய பாளையத்தம்மன், மதுரை மீனாட்சியம்மன், காஞ்சி காமாட்சி, முத்தாலம்மன், மூகாம்பிகை என்றெல்லாம் வழிபடுவது மட்டுமின்றி அவ்வையார் சாமி என்று செவ்வாய்கிழமை சாமியையும் பெண்கள் மட்டுமே வழிபடுவதுண்டு.
இராசபாளையத்தில் பெத்தநல்லூர் மாயூரநாதசாமி கோவில் ஒரு முஸ்லீம் பெண்ணின் சமாதியாகும். இப்போதிருக்கும் கோவிலைச் சுற்றி மிகப்பெரிய புளியந்தோப்பு ஒரு காலத்தில் இருந்தது. ஒரு மழைக் காலத்தில் அந்தப் பகுதி வழியாக நடந்து வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் மழைக்கு ஒரு புளிய மரத்தின் கீழ் ஒதுங்கினாள். ஓவென்று பெய்த பேய் மழையோடு ஓங்கியறைந்த ஓர் இடியொன்று அந்தச் சூழ்கொண்ட முஸ்லீம் பெண்மீது இறங்கியது. இடிதாக்கிய அந்த இளமங்கை இறந்து போனாள். நிறைமாத கர்ப்பிணி என்பதால் அங்கேயே ஒரு கோவிலை எழுப்பினார்கள்.
பெரும்பாலும் சைவ மதக் கோவில்கள் சமாதி என்பதால் இதையும் சைவக் கோவிலாக்கி வணங்கும் பழக்கம் வந்ததென்று வாழ்ந்த மறைந்த வயதான பெருமக்கள் கூறுவதுண்டு. அது உண்மை என்பது போலவே பெத்தவநல்லூர் கோவிலும் பெத்தவநாச்சியார் கோவில் என்றே வழங்கி இருக்கிறது. மனிதரை உற்பத்தி செய்யும் உறுப்புகளை வைத்தே சைவ சமயம் தனது வழிபாட்டு வடிவங்களை உருவாக்கியது.
கருப்பையை மையமாகக் கொண்டே கர்ப்பகிரகம் என்று கோவிலின் மூலஸ்தானத்தை உருவாக்கினார்கள். கருப்பையை மையமாக வைத்தே கருப்பையா, கருப்பாய், கருப்பசாமி, கருமுத்து, கருப்பழகு என்றெல்லாம்  பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்
கல்லறைத் தோட்டங்களை கடவுள் உலகம் பூமியாகக் கருதுவது உலகில் உள்ள எல்லா மதங்களிலும் உள்ளது. கல்லறையில் இருந்து ஏசு உயிர்த்தெழுந்தார் என்று கிறித்துவர்கள் ஒருநாளை விழாவாக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
இங்கே மாசி மகா சிவராத்திரி என்று ஒரு பண்டிகை நாளில் இடம்விட்டு இடம் பெயர்ந்து எங்கெங்கு சென்றாலும் தம் முன்னோர் வாழ்ந்த ஊரையும் அவர்களின் உடல் புதைந்த இடத்தையும் அடையாளம் கண்டு காடு மேடு எல்லாம் சென்று வழிபடுவது என்பது இன்றும் நடக்கின்ற ஒன்றாகும்.

தனது இனம், மொழி, பண்பாடு, இனிதான, இலட்சிய வரலாறு ஆகியவற்றையெல்லாம் மறந்து விட்ட தமிழன், நினைவுபடுத்தும் தனது முன்னோரின் இடத்தை வழிபடுவது சிறிது மகிழ்ச்சிக்குறியதாகும்.

No comments:

Post a Comment