தமிழ் கண்ட வளர்ச்சி - பெருமை
தமிழின் பிறந்த நாள் எதுவென்று
ஆய்ந்து கூறிய பேரறிவாளர் யாருமில்லை.
தமிழின் பெருமை கூறும் பேராளர்களை
இன்னும் உலகம் வாழ்த்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் பல்துறைப் பாவலர்களின்
நெஞ்சில் தவிழ்ந்து உலகை வளம் பெறச் செய்திருக்கிறது.
தமிழ் பிறந்த காலம் எதுவென்று
அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும் கணக்கீட்டுக் கருதுகோள்கள் தமிழுக்கு பல்லாயிரம்
வயதென்று பாமாலை சூடுகின்றன.
உலக மொழிக்களுக்கெல்லாம் தமிழ்தான்
தாய்மொழி என்று மொழி ஞாயிறு பாவாணர் ஆய்ந்தறிந்த கருத்தை வெளியிட்டுக் களிப்பூட்டினார்.
சிந்து வெளித்தீரத்தில் சீர்மலர்ந்த
தமிழ், கங்கைக் கரைப் பகுதிகளிலும் கவிதை பாடி கலாச்சார விதை தூவி கலை மணக்கச் செய்தது.
எகிப்திய நதிப்புறத்தில் எழில்
சிந்திய தமிழ், ஈழத் தீவிலும் சுடர் முகம் காட்டியது.
கங்கை கொண்ட தமிழ் - கடாரம்,
சாவகம், சுமத்ரா உள்ளிட்ட பல கீழத்திசை நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டுத் தடம் பொறித்து
வரலாற்றிற்கு வளம் கூட்டியது.
எண்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னர்
இலமூரியாவில் தமிழ் மக்கள் எழிலோடு வாழ்ந்து கவின்கலையோடு சிறந்திருந்து, வானில் பறந்து
வளம் செறிந்து வரலாறு படைத்ததாக அய்ரோப்பிய ஆவியுலக மாயாவதிகள் கருத்தொன்றை முன் வைத்து
தமிழை வாழ்த்தினார்கள்.
அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்
தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கண நூள் படைத்து நம்மைப் பரவசப்படுத்தினார். தனது நூலுக்கு
முன் பல நூறு இலக்கியங்கள் இருந்ததாக அவரே கூறி நம்மை வியப்பிலாழ்த்துகின்றார்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த
பாண்டிய மன்னர்கள், தொடர்ந்தாண்ட பல்வேறு தமிழ் வேந்தர்கள், காலத்தில் பல்வேறு மாமேதைகளால்
உருவான அறிவான வடிவங்களை பகைவர்கள் அழித்தாலும் பல நூறுப் பாவலர்கள் தமிழைப் பயன்படுத்தி
கவிதைகள் வழியாக உயிர்க் கருத்துக்களை உலவ விட்டு உலகைக் களிப்படையச் செய்தார்கள்.
உலகெங்கும் இல்லாத மாந்த உறவை,
மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும் வாழ்க்கை நெறிகளை வழங்கினார்கள்.
கணியன் பூங்குன்றன் வழங்கிய
“யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உறவு மொழியை” வாழ்த்தி வணங்கினால் உலகு வளம் பெற்று
மகிழும், மறந்தால் மனித குலம் மாய்ந்து மறைந்து போகும்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,
பதிணென்கீழ்க்கணக்கு, அய்பெருங் காப்பியங்கள் எனவும் காதல், வீரம், கருணை, கொடை, ஆட்சி,
அதிகாரம், அரசுகளின் செயல்பாடுகள், வாழ்வியல் ஒழுக்கம், மானத்தை நிலை நாட்டும் போர்க்களங்கள்,
வரலாறு, இயற்கை அழகு, எழிற் கலைகள், ஆள்வினை உடமை, ஆளுமை ஆற்றல், இதயத்தை எழில்படுத்தும்
இயற்கை நுகர்வு, தென்றல் வீசும் சந்தனக் காடு, தேன் பிழியும் மலர்ச்சோலை என்று இயற்கையை
நேசித்து, நிலத்தை அய்ந்தாக்கி அதன் இயல்பை பிரித்து, அதற்குரிய தாவரங்கள், விலங்குகள்,
உணர்வுகள், குணங்கள்,வணிகம், தொழில்களை வகுத்து வகைப்படுத்தி மலையிலிருந்து கடல் வரை
உள்ள மண் வளம் கண்டு வாழும் நிலையை வரிசைப்படுத்தி, பெரும் பொழுது, சிற பொழுது என்றும்,
தலைவன், தலைவி தோழி, பாங்கன் என்றும் எடுத்து விளக்கி இறைவனிலிருந்து இசைக் கருவிகள்
வரை அறிவியல் முறையில் ஆய்ந்து வரையறை செய்து வாழ்ந்து காட்டி சங்க காலத் தமிழர்கள் பின்பற்றி சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் தமிழை
ஒளிரச் செய்தார்கள்.
சிந்தனைச் செல்வன், சீர் நிறைந்த
பேரறிஞன் வள்ளுவன் குறளை வடித்து தந்து தமிழை கோபுர விளக்காக்கினார்.
கண்ணிய மிக்க காப்பிய உலகில்
ஈடற்ற இலக்கிய பேராளன் சேரத்து இளவரசன் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனும் எழிலோவியம்
தீட்டி தமிழை பல்வேறு கலைகளில் பதிவு செய்து நம்மைப் பரவசப்படுத்தினார். மனித குலம்
காக்க, சிறக்க மாமனிதன் புத்தனின் வழி நின்று உணவையும், உணர்வையும் முன் நிறுத்தி உருவாக்கிய
சீத்தலைச் சாத்தனாரின் செழுமைக் காப்பியம் மணிமேகலை, தமிழ் வாடாது தழைக்கச் செய்யும்
தண்ணீர் என்றால் அது மிகையாகாது.
இனமானப் பற்றும் மொழி மீது பாசமும்
வைத்து அந்த இனத்தை, மொழியை இழுவு செய்தோரை இடுப்பொடித்துப் போடும் போர்க்களத்தில்
மானத்தை நிலை நாட்டி மரணத்தைத் தழுவிய மாவீரர்கள் தமிழ் தரும் வீரத்திற்கு சான்றாக
விளங்கினார்கள்.
இலக்கிய வெளிப்பாடே இல்லை என்று
போலி வரலாற்று ஆசிரியர்களால் புனையப்பட்டதுதான் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற
சொற்சொடர். அந்தக் கால கட்டத்தில்தான் இலக்கிய செல்வங்கள் ஏராளம் மலர்ந்து குவிந்தன
என்கிறார் மயிலை சீனி.வேங்கிடசாமி அவர்கள்.
போர் நெறிகளை உணர்த்துகின்ற புறப்பொருள்
வெண்பா மாலையும், காரைக்கால் அம்மையாகும். இன்னா நாற்பது, இனியவை நாற்பதும், இறையனார்
அகப்பொருள் உரையும், திணைமாலை நூற்றைம்பதும் ஆகியவை தமிழுக்கு அணி செய்தன என்கிறார்
மயிலை சீனி.வெங்கிடசாமி அவர்கள்.
மதவாதக் கருத்துக்களை பரப்ப வந்த
மகான்கள் கூட தமிழில் நிறைந்து கிடக்கும் அழகுமிகு சொற்றொடர்களையே பயன்படுத்தினார்கள்.
இறைவன் புகழ் பாட வந்த இறைத் தூதர்கள் கூட இயற்கையை நேசித்த தமிழ் மொழியின் மலரையும்,
கொடியையும், நிலவையும், ஒளியையும் காட்டி இதற்கு ஈடானவர் என்றே கூறினார்கள்.
இறைவன் புகழ்பாட வந்த மணிவாசகர்
கூட தமிழில் உள்ள அறிவியலை மறக்காது பாடி மகிழ்வடைந்தார்.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
நீராகி உண்மை“”யுமாய் இன்மையுமாய்
கூத்தாட்டுவோனே”
என்று பாடித் தொடங்கினார்õ -
தமிழுக்கு பாமாலையும் சூடினார்.
அன்னிய மண்ணில் பிறந்த அதவாது
அயோத்தி இராமனைப் பாட வந்த இனமான இயக்கத்தின் எதிர்நிலைக் கருத்தாளன் கம்பன் கூட தனது
காவியப் பாயிரத்தில்,
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை பெருத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையோனே”
என்று தமிழ் கூறும் பிரபஞ்ச பெருவெளியின்
அமைப்பைக் கூறி என்றுமுளத் தென்றமிழ் என இதய வாழ்த்தைக் கூறி உலகத்தை மகிழ்வித்தார்.
அய்ரோப்பாவிலிருந்து இங்கு வந்து
இங்குள்ள மக்களுக்கு தங்கள் மதக் கருத்தை போதிக்க வந்தவர்கள் கூட தமிழின் ஆற்றலில்,
அழகில், அமைப்பில் மனம் பதித்து ஆராய்ந்து புதிதான பல உண்மைக் கருத்துக்களை உலகோர்க்கு
வழங்கினார்கள்.
மறையோத வந்த கார்ல்வெல்டு தமிழின்
தனித்தன்மையை ஆய்ந்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண் தந்து உலகில் தமிழை புதுப் பார்வைக்கு
உள்ளாக்கினார்.
கிறித்துவ பெருமை கூற வந்து ஈரசுப்
பாதிரியார் சிந்துவெளி தந்த தமிழின் சீர்மைகளைச் சிந்தைக் குளிரக் குளிரக் கூறி வியந்தார்
- மகிழ்ந்தார்.
பைபிளைச் சொல்லி சமயம் போதிக்க
வந்த சான்றோன் சி.யு.போப் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தன்னை ஒரு
தமிழ் மாணவன் என்றே தன் கல்லறையில் பொறிக்கச் சொன்னார்.
பெருமகன் ஏசுவின் பெருமை சொல்ல
வந்த பெஸ்கி தமிழ் மீது கொண்ட தணியாக பற்றுச் பாசத்தால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று
மாற்றிக்கொண்டு ஏசுவின் இலக்கியம் படைத்ததோடு தமிழ் எழுத்தில் திருத்தமும் செய்து மகிழ்ந்தார்.
தமிழின் கட்டமைப்பும் ஆளுமையுணர்வும்
அறிவியலோடு இணைந்திருந்ததை பல அறிஞர் பெருமக்கள் ஆய்ந்து வெளிப்படுத்தினார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
தோன்றும் அறிவியல் கருவிகளுக்குப் பொருத்தமான சொற்களைத் தாங்கி நிற்கிறது தமிழ் என்று
குறிப்பாக கணினிக்கு பொருத்தமான மொழி தமிழ் ஒன்று தான் என்று கணினித் துறை வல்லுநர்
பொறியாளர் சீரங்கத்துச் சுஜாதா எடுத்துக் கூறி நம்மை இனிக்க வைத்தார்.
சங்க காலத்திற்குப் பின் வந்த
பக்தி இலக்கிய காலத்தில் கூட பாவலர்கள் பலர் இசை மயப் பாக்களில் தமிழைப் பதிவு செய்து
மொழி வளர்ச்சியில் முனைப்புக் காட்டினார்கள்.
சோழர்களின் கலிங்கத்து வெற்றியை
“கலிங்கத்துப் பரணி” என்ற அழகிய தமிழ்க் கவிதைச் சிமிழைப் படைத்தார் பாவலர் செயங்கொண்டார்.
பலப்பல நூற்றாண்டுகளாக பல்வேறு
கருத்துக்கள், கொள்கைகளில் தன்னை பதிவு செய்து டி.என்.ஏ. - ஆர்.என்.ஏ, என்ற உயிர் மூலக்
கூறுகள் போல தொடர்ந்து சிறப்புற வாழ்வது தமிழின் பெருமை ஆகும்.
தமிழின் விழி வழி மொழி என்றே
ஆங்கிலத்தை ஆய்வறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆங்கில சொற்களின் உச்சரிப்பு தமிழை ஒட்டியே
இருக்கும் என்று அறிந்தோர் சொல்வது தமிழுக்கு பெருமை ஊட்டுவதாகும்.
“தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்
நேர்”
என்றும்,
“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
என்று தனது இதயத் கருத்தை வெளிப்படுத்தினார்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
“வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழ்
வாழிய வாழியனே”
என்று வாழ்த்தினார் மகாகவி பாரதியார்.
தமிழின் தனித் தன்மையைக் காக்க
மறைமலையடிகள் போராடி நம்மைப் பூரிக்க வைத்தார்.
தமிழின் பெருமைகளை தமிழ்த் தென்றல்
திரு.வி.க. அவர்கள் எங்கெங்கும் எடுத்தோதினார்.
பதிப்புச் செம்மல் வை.சி. தாமோதரனார்
அவர்களும், திரு.உ.வே.சா. அவர்களும் தமிழ் இலக்கியங்களை அச்சேற்றி அழகையும், பாதுகாப்பையும்
உருவாக்கி உள்ளம் நிறைவு கொண்டனர்.
ஆய்வு நிலையை மேற்கொண்டு பல அரிய
செய்திகளை ஆப்ரகாம் பண்டிதர், மாணிக்க நாயகர் ஆகியோர் அள்ளி வழங்கினார்கள்.
தனிநாயகம் அடிகளார் தமிழை உலகமெல்லாம்
உருப்பெருக்கி காட்டி உண்மைகளை எடுத்துச் சொல்லி உணர வைத்து முதல் உலகத் தமிழ் மாநாட்டை
கோலாலம்பூரில் நடத்தி தமிழின் வளர்ச்சிக் கொடியை ஏற்றி வைத்து எழுச்சியூட்டினார்.
அண்ணா, கலைஞர், பாவேந்தர், கல்கி,
சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, அசோக்மித்ரன், விக்ரமன், செகசிற்பியன், கோ.வி.மணிசேகரன்,
கண்ணதாசன் ஆகியோர் சரித்திரப் புதினங்களை எழுதி எல்லார் இதயத்திலும் தமிழை இடம் பெறச்
செய்தனர்.
வேதநாயகனாரில் தொடங்கி அண்ணா,
கலைஞர், டாக்டர் மு.வ., ஜீவா, புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள்
தற்கால சமூகம் சார்ந்த புதினங்கள், கதை, சிறுகதை, கட்டுரைகள் அள்ளி இறைத்து தமிழ்ப்
பற்றாளர்களை தரணியெங்கும் உருவாக்கினார்கள்.
தமிழ் தந்த திருக்குறளுக்கு மாநாடுகள்
நடத்தி வள்ளுவனை வாழ்த்திய தந்தை பெரியார் குளறுபடிகள் கொண்ட தமிழ் எழுத்துக்களை நேர்
செய்து சீரமைத்தார்.
தமிழின் சிறப்புக்களை ஆய்ந்தறிந்த
தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலத்தை விட எளிய அருமையான மொழி தமிழ் என்ரு மொழிந்ததோடு
புதுமை உலகிலும் தமிழ் பூத்துக் குலுங்கிடும் வழிகளையும் வரையறுத்தார் பெரியார் அவர்கள்.
இதுவரை யாரும் சொல்லாத வகையில்
அழகோடு எடுத்துச் சொன்ன அறிஞர் அண்ணா அவர்கள் தமிழின் எல்லா வகையான ஆற்றலையும் பயன்படுத்தி
இளைஞர்களை எழுச்சி முரசமாக்கினார்.
படிக்காதவன் கூட தமிழின் வரலாற்றைத்
தெரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்தும் அளவுக்கு ஏழை, எளியவர்களின் இதயத்திலும் ஒளிரும்
நிலைக்கு தமிழை உயர்த்தினார் அண்ணா அவர்கள்.
தமிழை அண்ணா ஓவியமாய் ஒளிரச்
செய்து உயிர் உவக்கும் பாவியமாய் எல்லார் உள்ளத்திலும் உறைய வைத்தார். தமிழை விரும்பாதோர்,
வெறுத்தோரைக் கூட தனது எழுத்தால், பேச்சால் அந்த இனிய மொழியோடு இணைய வைத்தார்.
தான் கண்ட அரசியல் இயக்கத்திற்கு
தமிழை இதயமாய் ஆக்கி வைத்தார் அண்ணா அவர்கள்.
என்றுமே வரலாற்றில் இல்லாத நிலை
மாற்றி ஓர் அரசின் ஆட்சி மொழியாக்கி தமிழுக்கு சட்ட வடிவம் கொடுத்தார் அண்ணா அவர்கள்.
ஏற்றமிகு எழுத்து நடையால், எழுச்சிமிகு
மேடைப் பேச்சால், தமிழ் காக்க தன்னுயிரை இழக்கும் உறுதியை, துணிவை தமிழர்களுக்கு தந்தார்
அண்ணா அவர்கள்.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு
நடத்தி சென்னைக் கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை வைத்தார் அண்ணா அவர்கள்.
நாம் பிறந்த மண்ணுக்கு தமிழ்நாடு
என்று பெயர் வைத்து வரலாற்றில் என்றும் மறையாத பேரொளியாய் ஒளி வீசுகிறார் அண்ணா.
அண்ணாவின் வழி நடந்து அழகுத்
தமிழை ஆக்கமிகு உணர்வோடு அலங்காரமாய்ப் பேசிய நாவலர் நெடுஞ்செழியன், இனமானப் பேராசிரியர்
அன்பழகன், மாணவர் உலகில் பற்பலர் குறிப்பாக அண்ணா, கலைஞரால், பேராசிரியரால் பாராட்டப்பட்ட
முனைவர். காளிமுத்து போன்றவர்களின் பயன்மிகு பணிகளாலும் தமிழ்த் தனித்தன்மை பெற்று
பெருமை கொண்டது.
அண்ணாவின் அடியொற்றி நடந்து அனைத்து
ஆற்றலையும் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் எழுத்துத் துறையில் தமிழில் எண்ணற்ற வடிவம்
காட்டி, ஏராளமான படைப்புகளைப் படைத்தளித்தார்.
சமூக சிந்தனைகளை சரமாரியாக எழுதிக்
காட்டி இலக்கியத் தொண்டாற்றினார். ஆட்சிக்கு வருகின்ற போதெல்லாம் தமிழுக்கு உயர்வூட்டும்
ஆணைகளை இடுவார். மத்திய அரசால் அவரது ஆட்சிக் கலைக்கப்படும் வரலாறும் நிகழ்ந்தது.
கலைஞர் அவர்கள் தமிழை ஆலய மொழியாக்கி
- நீதிமன்ற மொழியாக சட்டமியற்றி தன் நெஞ்சுரத்தைக் காட்டினார்.
அவரது அரசியல் சாதுரியத்தால்
இன்று அதே மத்திய அரசில் தமிழை செம்மொழி என்று அறிவிக்கச் செய்து சீரான நிலையைத் தோற்றுவித்திருக்கிறார்
கலைஞர்.
இன்று நீண்ட இடைவேளைக்குப் பின்னர்
உலகத் செம்மொழி மாநாட்டை நடத்தியிருக்கும் கலைஞரால் தமிழுக்கு புதிய வரலாறும், பெருமையும்
கிடைக்கவிருக்கின்றது.
இந்த வியப்பூட்டும் கணினியில்
இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது தமிழ்தான்.
இது தொடர்ந்து ஆய்வின் வளர்சியால்
குறைந்த எழுத்தில் ஒளிரும் சொல்லழகு தூய்மையும் இதில் மனதில் பதியும் இனிமையும் எதிர்கால
மொழியுலகில் தமிழ் உலகில் முதலிடத்தில் இருக்கும்.
மத்திய அரசில் தமிழ் ஆட்சி மொழி
நிலையை எட்டும்.
ஆதி நாளில் உலகில் நாகரிகம் அடைந்த
நாடுகள் அய்ந்தாறு தான். அதில் தமிழைத் தவிர, தமிழனைத் தவிர மற்றவர்கள் தங்களையன்றி
மற்றவர்களை வெறுத்தார்கள். கிரேக்கம், ரோமானியம், எகிப்து, சீனம் இந்தியாவின் வடமொழியாளர்கள்
ஆகியோர்களெல்லாம் மற்றவர்களை வெறுத்தார்கள்.
பகைவர்கள், சைத்தான்கள், வேற்றார்கள்,
இழிந்தவர்கள் (மிலேச்சர்) எதிரிகள் என்றே குறிப்பிட்டார்கள்.
ஆனால் தமிழ் மட்டுமே “யாதும்
ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி உலகோரெல்லாம் தமது உறவினர் என்று தமிழன் மட்டுமே
சொன்னான்.
அத்தகைய தமிழ் கலைஞரால் செம்மொழியாக
ஏற்கப்பட்டு, எழில் நடை போடுகிறது. தமிழின் பெருமைகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment