Thursday, 24 November 2016

அன்றொருநாள் இதே ஊர்...

அன்றொருநாள் இதே ஊர்...
இராசபாளையம்.... வணிகமும் தொழிலும், வேளாண் பெருக்கமும் கொண்டு வளமிகு ஊராக விளங்குகிறது. பஞ்சாலைகளும், நூற்பாலைகளும் மற்றும் பற்பல சிறு, குறு தொழில்களாலும், வணிக வளாகங்களாலும் அதனால் விளைந்த பொருள் வளத்தாலும், மாளிகை போன்ற வீடுகளும், வண்டி, வாகன வசதிகளும், பல்வேறு வணிக வளத்தால் பெரும்பான்மை மக்கள் பெருமித வாழ்வு வாழ்கின்ற சூழ்நிலையை காண முடிகிறது. நகரின் நாலாபக்கமும் தொழில் கூடங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்ற ஒளிமிகுந்த காட்சிகள் நம்மை மகிழ வைக்கிறது. ஊரைச் சுற்றிலும் பள்ளி கல்லூரிகள் தோன்றி புதிய சமுதாயத்திற்கு உரமூட்டி வருகின்றன
மாமன்னன் இராசஇராசன் கூட வாழாத வசதிகளுடன், இன்றைய கூலித் தொழிலாளி வாழ்கின்ற வகை காண மனம் மகிழ்ச்சியின் உச்சியில் நின்று கூத்தாடுகின்றது. மின்சாரம் தந்த பயனால் விசையில் ஓடும் வண்டிகள், டி.வி, டெக், ரேடியோ, டிரான்சிஸ்டர், கணிணி, பிரிட்ஸ், வாசிங்மெசின்கள், போம் மெத்தை போன்ற வசதிகளுடன் இராசஇராசன் வாழ்ந்தான் என்று வரலாறு கூறவில்லை. சுவிட்சைப் போட்டால் தொலைதூரகக் காட்சிகளை பார்க்கவும், அங்கிருப்போரின் பேச்சைக் கேட்கவும் இராச இராசனுக்கும் வாய்ப்பில்லை. தன் மகனோடு தொடர்பு கொள்ள ஆறுமாதங்கள் ஆனது. ஆனால் இன்று உலகின் எந்தப் பகுதியையும் உடனடியாக பார்க்கின்ற வாய்ப்பை இங்குள்ள ஏழைகள் கூடப் பெற்றிருக்கின்றார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பயன்மிகு பற்பல பாடசாலைகள், பயிற்சிக் கூடங்கள், இருபத்து நாலு மணிநேரமும் இயங்குகின்ற மதுக்கடைகள், கறிகோழி, மீன் உணவுடன் புரோட்டாக் கடைகள், இரவு பகல் இயங்கும் ஆணையும் பெண்ணையும் எந்த நேரமும் வேலை வாங்கி தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன.
இன்றைக்கு இருக்கின்ற இராசை நகரம் பழைய நிலை எப்படியிருந்திருக்கும், சற்று வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போம்...
இன்றைய இராசபாளையத்தின் பெயர் அன்றிருக்கவில்லை. இவ்வளவு பரந்து விரிந்த ஊர்கள் அன்று இல்லை. ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் சிறு சிறு பகுதிகள். ஆவரம்பட்டி, சம்மந்தபுரம், தோப்புப்பட்டி, சங்கரலிங்காபுரம் ஆகிய பெயர்களில் இருந்தது. அன்று கார், வண்டி, இரயில் இல்லை,  சினிமா இல்லை, மாளிகை போன்ற வீடுகள் இல்லை. அடுக்குமாடி வீடுகள் அறவே இல்லை. தண்ணீர் குழாய், ஜெட் மோட்டார்கள் எதுவுமே இல்லை. நாளும் நல்ல சுவைமிகு உணவுகளை பெரும்பாலோர் உண்டதாக செய்திகள் இல்லை. அரிசி, சோளம், நீரில் நனைத்து ஆட்டுவதற்கு ஆட்டுஉரலும், பொடியாக அரைப்பதற்கு திருகையும், குத்தி அரிசியாக்குவற்கு உரலும் உலக்கையும் தவிர வேறு எந்த கருவியும் இல்லை. கிரைண்டர், மிக்ஸி என்பதெல்லாம் கற்பனையில் கூட காணாத நாள் அந்ந நாளாகும். இன்று கிடைக்கின்ற அனைத்து வசதிகளும் சிறிதும் இல்லையென்றாலும் சக்திமிக்க தெய்வங்கள் மக்கள் நம்பிய மகத்தான கடவுள்கள் அவர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் பல உறவுகளோடு ஆலயங்களில் அடைந்தே இருந்தார்கள். ஆறுகால பூசையும், உற்சவம், ஊர்வலம் போன்ற கோலாகலங்கள் நடந்து கொண்டு இருந்தது.
அப்போது இந்த ஊர் இருக்கும் பகுதிகள், வெள்ளையர்களுக்கு வரிவசூல் செய்து கொடுக்கும் ஜமீன்தார்கள் ஆட்சியின் கீழ்தான் மக்கள் வாழ்ந்தார்கள். வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற விரக்தி எண்ணங்களோடு தான் மக்கள் வாழ்ந்தார்கள். இந்த ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள சில இடங்களின் பெயர்களை வைத்து வாழ்ந்து மறைந்த வயதான பெரியவர்கள் கதை ஒன்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது கதை அல்ல உண்மை நிகழ்வென்றே சொன்னார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த ஊரின் தென்பகுதி சேத்தூர் ஜமீனையும், வடபகுதி வேப்பங்குளம் ஜமீனையும் சார்ந்தது என்றும் சொன்னார்கள். அதில் வேப்பங்குளம் ஜமீனில் இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் என்றும், அண்ணன் தம்பிகளுக்கிடையில் வேற்றுமனம் கொண்டவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பகையை மூட்டி விட்டார்கள். அதன் விளைவு அந்தச் சகோதரர்களிடையே சண்டை மூண்டது.
அப்போது கார், பைக் கிடையாதல்லவா? மாட்டு வண்டி, குதிரை, கழுதைகளில்தானே பயணிக்க வேண்டும். துப்பாக்கி இல்லாத நாட்கள் அது. அரிவாள், கத்திகளால்தானே தாக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அந்தச் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்காக போராடுகிறார்கள். உடல் வலிமைகுறைந்தவன் உயிரைக் காத்துக்கொள்ள ஒடினான், ஓடினான், ஆன மட்டும் ஓடினான். உடன்பிறந்தவனைக் கொல்வதற்கு விரட்டினான் - விரட்டினான் வேகம் கொண்டு விரட்டினான். ஒருவனை துரத்திய சகோதரன் அவனைக் குத்துவதற்கு பாய்ந்த இடம் தான் இன்று ஊரின் பக்கத்தில் உள்ள குத்தப்பாஞ்சான் என்ற இடம். அதிலிருந்து தப்பி ஓடிய சகோதரன் மறித்துக் கட்டி போரிட்டான். அந்த இடம் மறிச்சிக்கட்டி என்று வழங்கப்படுகிறது. உயிருக்குப் பயந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் ஓடினான். ஓடியவனை ஓரிடத்தில் பிடித்து குத்தி அவன் குடலெடுத்து அவனுக்கே மாலையாகப் போட்டான். என்னே கொடூரம்? குடலை மாலையாகப் போட்ட இடம் இன்று மாலையிட்டான் என்று வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணப்பெயர் கொண்ட இடங்கள் ஆங்காங்கே இருப்பதாக கூறுகிறார்கள்.
சிறுசிறு பகுதியாக இருந்து பற்பல பகுதிகளாகி தெருக்களும் சிறு சாலைகளாகவும் பெரு குடியிருப்புகள் நிறைந்த ஒரு நகராட்சியானபின் கூட இது ஒரு கிராம அடிப்படையிலே இருக்கக் காண்கிறோம். திட்டுத்திட்டாய் தீவுகள் போல் ஒவ்வொரு சாதிக்காரர்கள் அருகருகே அமர்ந்து அவர்களுக்கென்று ஊர்ச் சாவடிகளை அமைத்துக் கொண்டிருப்பதைக் காணும்போது வளர்ந்த நகராக இல்லாது மாறாக சிற்றூர் போலவே தோன்றுகிறது. எல்லாக் கட்சியிலிருந்து தனி, பொது தொகுதிகளில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தாலும் அவரவர் சாதியை பெரிதாகக் கருதும் மனோ பாவம் மட்டும் நீங்கியதாகத் தெரியவில்லை. இதில் புதுமை என்னவென்றால் கிராமப் புறங்களில் இருந்து வந்தவர்கள் எல்லாக் கட்சிகளிலும் நகர அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மை.

சாதிகளுக்குள் சண்டை என்று சில ஆண்டுகள் இராசபாளையம் அல்லோலப் பட்டுக் கிடந்தது. இந்நகரின் சாதிய மோதல்கள் தமிழ்நாடு பூராவிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது சாதிகளுக்கிடையே சாதி காரணமான நடந்த சண்டையல்ல. சாதிகளில் உள்ள இரவுடிகள் -சல்லிகள் சண்டை என்பதுதான் உண்மை. ஆனால் சாதி மேல் கொண்டபாசம், பற்றுக் காரணமாக எல்லோரும் பயமும் கவலையும் கொள்ள நேரிட்டது. இன்று எல்லா வகுப்புகளும் சற்று தெளிவடைந்திருப்பதால் சாதியக் கட்டுகள் அறுந்து வருவதை எல்லாச் சாதிகளிலும் காண முடிகிறது. பொதுவாக ஒரு சண்டை மோதல்கள் தோன்றியபின் சமத்துவத்தை உருவாக்கும் என்பார்கள். அது ஓரளவு சரியாக இருக்கிறது.

3 comments:

  1. விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, சில இடங்களுக்கான பெயர் காரணங்கள், இராசபாளையம் மக்களுடைய வாழ்க்கை முறையையும், சாதிய மோதல்களையும் அதன் பின் ஏற்பட்ட மாற்றங்களையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் மிக்க நன்றி

    ReplyDelete