எழுவாய் நீ இளைஞனே!
சுதந்திரம் எனும் தூய காற்றை
இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் சுவாசிக்கத் தொடங்கி அறுபத்து ஏழு ஆண்டுகள் முடிந்து
போய் விட்டது. தூயவர் காந்தியாரின் தலைமையில்
எண்ணற்றத் தியாகிகளின் உழைப்பால், தியாகத்தால் எல்லா உரிமைகளையும் பெற்றவர்களாக மக்கள்
வாழ்கிறார்கள். நூற்றைம்பது ஆண்டுகளாக வெள்ளையருக்கு அடிமைப்பட்ட நாடு விடுதலை பெற்று
மெல்ல மெல்ல நல்ல நிலை கண்டு இன்று சற்று வேக நடைபோட்டு சிறிது வளர்ச்சியை அடைந்து
வருகின்றது. அய்ரோப்பிய தொழிற்புரட்சியால் விளைந்த புதுநிலையை, அறிவியல் ஆக்கத்தின்
முறைகளை விடுதலை பெற்ற நாளிலிருந்து மக்கள் உணர்வில் புகுத்தி ஆட்சிமுறையாக்கியிருந்தால்
இந்தியா ஆகாயமளவு உயர்ந்திருக்கும்.
நாத்திகம் குடிகொண்ட நல்ல நெஞ்சத்தைப்
பெற்ற நாட்டின் நாயகனாகத் திகழ்ந்த பண்டித நேரு இந்த நாட்டை ஒரு சனநாயக நாடாக்கினார்.
நேருவின் தலைமையில் அரசமைத்து நடந்தாலும் ஆயிரமாண்டுகளாக மதச் சேற்றில் மக்கள் விழுந்து
கிடந்ததால் விழிப்புணர்வை உருவாக்குவது என்பது இடர்ப்பாடான ஒன்றாகவே இருந்தது. அதுவும்
ஓர் ஆட்சியில் அங்கம் வகிப்போர் அறிவாளிகளாகவும் மானமுள்ள மாமனிதர்களாகவும், மாசுமருவற்றவர்களாகவும்,
தன்னலம் இல்லாதவர்களாகவும் மக்களின் வளர்ச்சியில் தங்களின் வளமும் அடங்கும் என்ற எண்ணம்
கொண்டவர்களாக இருந்தால் அந்தநாடு எழில் பூத்ததாக இன்பம் நிறைந்தததாக அமையும். ஆனால்
மதகுருவின் பிடியில் மன்னர்கள். அந்த மன்னர்களின் அறிவு சாரா ஆணவ ஆளுமையில் அதிகார
மமதையில் அடங்கிய அடிமைகளான மக்கள், எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எழுச்சி கொள்ளவிடாத
புராண, இதிகாச, இலக்கியங்களில் அது சார்ந்த புறத்தோற்றங்கள், அதாவது கோவில்கள், கோபுரங்கள்,
நினைவுச்சின்னங்கள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நல்லநாள் கெட்ட நேரம் எனும் போதனைகள்
இங்கு உழைப்பை இழிவு படுத்தும் உதவாதக்கரை எண்ணங்களாகிய இரும்புச் சங்கிலிகள் அனைத்தும்
உலகின் பிற பகுதிகளில் போல உயர விடாது தடுத்து நின்றது.
ஒருநாட்டின் வளர்ச்சி எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு அமெரிக்கா ஓர் உதாரணமாக விளங்குவதைக் காணலாம். அந்த நாடு
ஒரு நூற்றாண்டு காலம் அந்த நாட்டின் விவசாயத்தை புதுமைப்படுத்தி புதுக்கோலம் கொள்ள
வைத்தது. வேளாண்மை பெருக்கம் நிலைத்தபின் தொழில்களைத் தொடங்குவதில் முழு ஆற்றலையும்
பயன்படுத்தியது. அதன்பின் அறிவியலின் அனைத்து ஆய்வுகளிலும் நிகழ்வுகளிலும் பங்கெடுத்தது.
முறையான இந்த வளர்ச்சி உலகின் முதல் நாடாகி விண்வெளியில் பிற கோளில் மனிதனை இறக்கிய
மகத்தான நாடாக மாற்றியிருக்கிறது. ஆனால் இன்று கூட இந்தியாவில் விவசாயிகள் விசம் குடித்து
மாளும் நிலைநீடிக்கிறது. எண்பது விழுக்காடு ஏழை விவசாயிகளைக் கொண்ட இந்தியாவில் விவசாயம்
முழு விஞ்ஞானமயமாகாமல் நாட்டுப் புற நிலையிலேயே தவிக்கிறது.
பகுத்தறிவு நெறியில் வளர்ந்த
தலைவர் கலைஞர் அவர்களால் ஏழாயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ததாலும், இலவச மின்சாரம்
வழங்குவதாலும் மேலும் பல திட்டங்களாலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் சாவு தவிர்கப்பட்டு
வளம் கூடி வருகிறது. அதுபோல கலைஞர் சார்ந்த இயக்கம் மத்திய அரசில் பங்கு கொண்டதால்
கலைஞரின் நடவடிக்கையில் உள்ள நல்ல நிலையை உணர்ந்ததால் மத்திய அரசு எழுபதாயிரம் கோடி
ரூபாயை தள்ளுபடி செய்து இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள விவசாயப் பெருமக்களை சாவின்
பிடியிலிருந்து தப்புவித்திருக்கிறது. விவசாயத்தை விஞ்ஞானம் சார்ந்த தொழிலாக மாற்றவியலாத
சங்கடம் இங்கே நிலவுவதை காணலாம். அமெரிக்காவில் தந்தையும் மகனும் இரண்டாயிரம் ஏக்கரில்
வேளாண்மை செய்கின்ற முறை இருக்கிறது. ஆனால் இங்கு அரைக்காணி, கால்காணி நிலத்தை வைத்துக்
கொண்டு தன்னை ஒரு மிராசுதார் என்று எண்ணுன்ற சுபாவம் நீண்ட நாளாய் நிலவுகிறது.
இங்குள்ள நிலங்களை பிரிக்கும்
வரப்புக்களை எடுத்தால் பல இலட்சம் ஏக்கர் விளைநிலமாகும். இங்கு களங்களை குறைத்தாலே இன்னும் பல இலட்சம் ஏக்கர் நிலம் வளம்
பெறும். உணவைப் பதப்படுத்தும் வாய்ப்பு உருவானால் பலகோடி பொருள்கள் கெடாது இருக்கும். உழைக்கின்ற நேரத்தில் உழைக்காத மனிதர்களும் கொடுக்கின்ற
கூலியை கொடுப்பதற்கு மனமில்லாத நில உடமையாளர்களும் இருப்பதால் விண்ணளவு வளர வேண்டிய
விவசாயம் வேதனையைத் தாங்கிக் கிடக்கிறது. ஆயினும் இங்குள்ள நிலவளம் நீர்வளத்தால் இன்று
உணவில் தன்னிறைவை எட்டியிருக்கின்றது. உழவனின் உழைப்பின் பயனால் அவனுக்கு உரித்தான
செல்வத்தை தான் உலகம் முழுவதும் உள்ள உயர் பதவியில் இருப்பவர்கள் உல்லாச வாழ்வு வாழ்கிறார்கள்.
அதைத்தான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார்
வள்ளுவர். ஆனால் உண்டு கொழுத்தவர் அந்த உழவனை உள்ளத்தில் வைத்து வணங்ககிறார்களா?
நமது அருமை சி.சுப்பிரமணியத்தின்
பசுமைப் புரட்சித் திட்டம் உணவு தன்னிறைவு அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால்
அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் உள்ள நிலை இங்கு தோன்ற வேண்டும். ஆம் அங்கு இருபது
விழுக்காடு விவசாயிகளும் எண்பது விழுக்காடு சேவையாளர்களும் இருப்பது போல் இங்கு மலர
வேண்டும். இங்குள்ள எண்பது விழுக்காடு விவசாயிகள் ஏற்ற நிலை பெற்று சமூக சேவர்கர்களாக
மாறினால் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளும். 1947 ஆகஸ்டு 15 கணக்குத் தீர்த்தநாள்
அடுத்து வரும் ஆகஸ்டு ஒவ்வொன்றும் கணக்குப் பார்க்கும் நாள் என்றார் அறிவுலகச் சிற்பி
அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். நாம் மட்டுமல்ல நாடும் வளர வேண்டும் என்ற நல்லெண்ணம்
மக்களிடம் வளர்வது நல்லது. ஆனால் இன்று மக்களிடமும் மக்களை வழி நடத்துவோர் பலரிடமும்
பேரளவுக்கு அந்த எண்ணம் இல்லை என்பது வேதனைக்குரியது. தன் நாடு நன்றாக இருந்தால் நமது
வீடும் நலம் பெறும் எனும் எண்ணம் வளர்ந்து நிலைபெறுவது அனைவருக்கும் மிக நல்லது.
வீட்டில் பொருளைக் குவித்து வைத்துவிட்டுத்
திருடர்களையும் வளர்த்துவிட்டால் சேர்த்த பொருளுக்கு சேதாரம் விளையும் என்பதை உணர்வது
மக்கள் கடைமையாகும். நல்லோர் பலர் போராடி தங்கள் நலன்களை இழந்து பகத்சிங், திருப்பூர்
போன்ற பலர் உயிர்களை இழந்தும் வ.உ.சி. போன்றோர் தங்கள் செல்வத்தையும் இழந்து நலிந்து,
நேதாஜி, நேரு போன்றோர் தங்கள் இளமை, வளம் அனைத்தையும் ஈந்து மனிதப் புனிதன் காந்தியாரின்
தலைமையில் போராடிப் பெற்றச் சுதந்திரம் பொல்லாதவர்களின் கைகளிலும், பொறுப்பற்றவர்களின்
ஆளுமையிலும் பொருள் வளக் கொள்ளையர்களின் பிடியிலும் சிக்கிச் சீரழிந்து போகாதவாறு பார்த்துக்
கொள்வது பொறுப்புள்ள நல்லவர்களின் கடமையாக வேண்டும்.
நாட்டு நிலையென்ன? நமதரசின் கொள்கை
என்ன? நாளும் நிகழும் நிகழ்வுகளின் தரம், தகுதி என்ன? அதில் நமது பங்கு என்ன என்று
இன்று இந்தியாவில் அதிக எண்ணிக்கைகள் கொண்ட இளைஞர்கள் சிந்தித்தால் கிடைத்தச் சுதந்திரம்
இனிக்கின்ற ஒன்றாக இருக்கின்ற நிலை தோன்றும் மக்களின் நெஞ்சம் மகிழும் இனிய சுதந்திரத்தை பேணிக்காக்க
எழுவாய் நீ இளைஞனே!
No comments:
Post a Comment