Wednesday, 23 November 2016

மணம்... திருமணம்...

மணம்... திருமணம்...
திருமணம் எப்போது தோன்றியது என்று ஆராய்ந்தால்...
பொய்யும் வழுவும் தோன்றியபின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்று
            - தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது.
அதாவது பொய்யும் ஏமாற்றுச் சிந்தையும் புரையோடிய காலத்தில் அய்யர் (பெரிய மனிதர்கள்) திருமண முறைகளை உருவாக்கினார் என்று தொல்காப்பியர் விளக்குகிறார்.
மாமுது பார்ப்பான் மறைமொழி ஓத தீவலம் வந்து மங்கள நாண் சூடி மணமுடித்துக் கொண்டனர் என்று கோவலன் கண்ணகியின் மணவிழாவைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
இவை இரண்டிற்குமுன் திருமண வழக்குகளை இலக்கியங்கள் இயம்பவில்லை. சங்க இலக்கியங்களில் களவு மணம், கற்பு மணம், உடன்போக்கு என்றெல்லாம் இணைந்து வாழ்ந்ததை பேசப்படுகிறது.
இதயங்கள் இணைந்து இல்வாழ்க்கை தொடங்குவதை ஊரார் உற்றாரிடம் சொல்ல, உறவும் நட்பும் ஒன்றாகக் கூடி, ஆடிப்பாடி அவர்களை வாழ்த்தி ‘மொய்’ செய்து தனி வீட்டில் குடிவைக்கும் முறை சங்ககால மக்களிடம் சிறந்து இருந்தது. உலகில் நாத்திகம் தோன்றா நாளில் பகுத்தறிவு பயன்படா சூழலில் உறவு முறைகளை உணரா சூழலில் ஆண் பெண் இருவரும் யாரும் யாருடனும் கூடி சுகம் பெற்றார்கள் என்பதை மாமேதை இராகுலசாங்கிருத்தியாயன் வால்கா-விலிருந்து கங்கை வரை என்ற நூலில் விளக்குகிறார். அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பிகளை மணப்பது அரச குலங்களில் வழங்கமாக இருந்தது. உலக பேரழகி கிளியோபாட்ரா தன் இரு உடன் பிறந்த தம்பிகளை மணந்ததாக எகிப்திய வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
அரசர்களுக்கு சாதியில்லை உறவு முறை இல்லை என்பதெல்லாம் இங்குள்ள நடைமுறையாகும். கேரளத்து அரசர் குலங்களில் திருமணம் நடந்த பின் அந்தப்பெண் முதலில் கூடுவது திருமணத்தை நடத்தி வைத்த நம்பூதியிடம் என்பது கேரளத்து வரலாகும். முண்டு அவிழ்த்தல் எனும் சடங்கோடு முதலிரவில் நம்பூதிரிதான் இன்பத்தை அனுபவிப்பான்.
திருமணங்கள் எல்லாம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று மதங்கள் கூறுகின்றன. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணத்தை செய்தவர்களின் வாழ்க்கை நிறைவாகத்தானே இருக்க வேண்டும், சுகமாகத்தானே பொழுது போகவேண்டும். ஆனால் நடப்பும், நிலையும் அதுபோல் இல்லை.
திருமணத்திற்குப்பின் அது ஆணோ பெண்ணோ அவர்கள் படும் பாடும், கொடுமையும் சிக்கலும் சீரழிவும் கொஞ்ச நஞ்சமல்ல. மணமாலை சூடி மகிழ்வோடு உறவும் நட்பும் சூழ நின்று வாழ்த்தளிக்க மூன்று முடிச்சி போடுபவனும் அதை தாங்கி நிற்பவளும் எழிலும் அழகும் தாலாட்ட இதய நிறைவு கொண்டு நாளும் நாளும் மகிழ்கின்றார்களா?
பெரும்பாலான திருமணமானவர்களின் வாழ்க்கையில் பொழுதைக் கழிப்பற்கே போராட வேண்டியிருக்கிறது. மகிழ்வோடு இணைந்தவர்களுக்குள் ஏற்பட்ட மன வேறுபாடுகள், புரிந்து கொள்ளும் திறனின்மை, பலவித வேதனைகளை ஏற்படுத்துவதை காண்கிறோம். அறிவியல் வளர்ந்து, பொருள் குவியாக் காலங்களில் இல்லற வாழ்க்கையில் எரிச்சல் கொண்டு, காவி கட்டி சாமியார் ஆகி, கமண்டலமும் திருவோடும் ஏந்தியவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஒரு முறை மணமுடித்தவர்களின் நிலை என்றாலும் மனிதர்களுக்கு அருள் வழங்குவதாக நம்பப்படும் ஆண்டவர்களுக்கு ஆண்டுதோறும் திருமணம் நடத்தும் நிகழ்வுகள் ஆலயங்களில் அல்லோல கல்லோலப் படுகிறது.
சீதாராமக் கல்யாணம், சீனிவாசக் கல்யாணம், சொக்கர் மீனாட்சி கல்யாணம் என்றெல்லாம் நடத்தி, பக்தர்களைப் பரவசப் படுத்துவோர்கள் சென்ற ஆண்டு கல்யாணம் நடத்தினால் இந்த ஆண்டு குழந்தைகள் உண்டா மனிதர்களைக் கேட்பார்கள். ஆண்டவனைக் கேட்கும் உணர்வுக் கூர்மை தோன்றவில்லை. மதம் தந்த சாதிகளில் திருமணங்கள் பலவிதங்களாக நடக்கின்றன. சடங்குகளும், சம்பிராயங்களும் விருந்தும் வரவேற்பும் கூட பலவித நிலைகளில் நடக்க காண்கிறோம். திருமணத்தில் பெண்ணுக்கு கட்டுகின்ற தாலிகள் கூட சாதிகளுக்கு உகந்தவாறு பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. யானை மண்டை தாலி, சிறு தாலி, சொக்கர் மீனாட்சி தாலி என்றெல்லாம் மணமகளுக்கு சூட்டப்படுகின்றன. தாலி பற்றிய சிந்தனை இல்லாத பகுத்தறிவாதிகள் கூட ஏதாவது ஓர் அடையாளச் சின்னத்தை பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள். மணமகளுக்கு தாலியைப் பூட்டுகின்ற போதே தாலியைப் புனிதமென்று கூறி அவளை சிறையில் பூட்டி விடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டுதோறும் திருமணங்கள் ஆண்டவனுக்கு நடந்தாலும், நாள்தோளும் இறைவனை இறைவியை புனித நீராட்டி பூப்பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்று பள்ளியறையில் பால் பழம் வைத்து படுக்கச் செய்கின்ற நிகழ்சிகள் ஆலயங்களில் நடக்கக் காணலாம்.
உலகம் முழுவதும் திருமணங்கள் பல்வேறு நிலைகளில் நடக்கின்றன. பதிவு திருமணம், பால்ய விவாகம், காதல் மணம், கலப்பு மணம், மறுமணம். அறுபதாம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு திருமணம் என்றெல்லாம் நடத்தி இனிமை கொள்கிறார்கள்.
நாடெங்கிலும் இப்போது திருமண மண்டபங்கள் கொத்துக்கொத்தாய் உருவாகி விட்டன. சிற்றூர்களிலிருந்து வந்து நகரங்களில் திருமணங்கள் நடக்கின்றன. திருமண மண்டபங்கள் பெருகும்போது மகப்பேறு மருத்துவமனைகளும் பெருகி வருவதைக் காண்கிறோம்.
எளிய நிகழ்ச்சிகள் மூலம் இருவரையும் இணைத்து வைக்கலாம் என்றாலும் ஆடம்பரங்களோடு பொருள் இழப்பையும் ஏற்படுத்தும் நிகழ்வும் பல்கிப் பெருகி பரவி வருவது இந்தியா போன்ற ஏழ்மையில் இருந்து விடுபடும் நாடுகளுக்கு ஆகாது ஒன்றாகும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மேலைநாட்டு மதவாதியின் கருத்து. ஆனால் திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடு சொர்க்கம் உன்னிடம் தஞ்சம் அடையும் என்பது தமிழ் பாவலனின் கருத்தாகும்.
மென்தோல் தழுவி, மேனி சுகம் காண்பதை விட சொர்க்கம் என்ன பெரிதா என்றான் இனிய தமிழ் கவிஞன் ஒருவன்.
மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க பல்வேறு வழிகளில் முயலும் அரசு திருமண ஆடம்பரங்களை தவிர்க்க முயன்றால் வருமானம் குறைந்தவர்களின் கையிருப்பு வலுப்படும். திருமணச் செலவுகளை எண்ணி இதயம் திறந்த கவிஞர் வைரமுத்து
“செல்வந்தராய் மண மண்டபத்திற்குள் நுழைகிறான்
 ஏழையாய் வெளியேறுகிறான்” என்றார்.
மேற்கண்ட கவிதையில் கண் விழிப்போம், கவலைகளைத் துடைப்போம்.

மணக்களுக்கு இருமாலைகள், வாழ்த்த ஒரு பேச்சாளர் இதுபோதும் திருமணத்திற்கு என்றார் பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர்  அவர்கள். இந்த முறையைக் கடைப்பிடித்துப் பார்ப்பாமோ.

No comments:

Post a Comment