Monday, 21 November 2016

ஊழலோ ஊழல்

ஊழலோ ஊழல்
ஊழல்... இந்தச் சொல் வழங்கும் இடங்களையெல்லாம் எழுதுவதென்றால் உலகில் உற்பத்தியாகும், தாளும் மையும் இதற்கே செலவாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். உள்ளாட்சி மன்றத்தின் கடைசிப் பணியாளரில் இருந்து உயர்நிலைப் பதவிகளில் இருக்கின்ற பெரும்பான்மை மனிதர்களின் உள்ளங்களில் குடியேறி உல்லாச வாழ்வைப் பெற்றிருக்கின்ற ஒன்றுதான் இந்த ஊழலாகும்.
ஊழல் என்பது முறையற்றச் செயல்களால் தன் நலம் தான் சார்ந்த நலம் என்று நியாயமற்ற நலன் தேடும் தவறான வழியென்பது தான் உண்மை. உள்ளூர் தெருக்களின் அமைப்புகளிருந்து உலகமன்றங்கள் வரை ஊழல் உறவாடாத இடங்கள் மிக குறைவானது என்றே நல்லவர்கள் நாளெல்லாம் ஓலமிடுகிறார்கள். ஓங்கியறைகிறார்கள்.
நாடே நடுங்கிப் போன நகர்வால ஊழல், அசகாய சூரன் அர்ஜத் மேத்தாவின் ஆகாயமளவு கொண்ட பங்குச்சந்தை ஊழல், தற்போது நாறிப் போய் நடமாடும் கிரிக்கெட் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுத்திடல் ஊழல் என்று எங்கெங்கும் ஊழல் ஊஞ்சலாடி மகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஊழலில் ஒருவகை கையூட்டுக் கொடுத்து காரியம் சாதிப்பது என்பதாகும். அந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால் எழுதும் நீட்யோலைகள் எண்ணற்றுப் பெருகிவிடும். அமைப்புகளின் அலுவலகங்கள் மட்டுமல்ல ஆட்சின் அலுவலகங்களில் எல்லாம் இந்த வகை ஊழல் நீக்கமற நிறைந்து நிற்கின்ற நிலையைக் காணலாம். யாரைப் பார்ப்பதென்றாலும் அன்பளிப்பு இல்லாமல் சென்றால் அது நாகரிகமில்லாத செயல் என்று எண்ணுகின்ற நிலை எல்லாரிடமும் இருக்கின்றது.
சால்வை துண்டு, வேட்டி, திருநெல்வேலி அல்வா, திருவில்லிபுத்தூர் பால்கோவா, இராசபாளையம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம் என்றெல்லாம் கொடுத்து பெறவேண்டும் என்ற எண்ணிய காரியங்கள் நடக்கின்றன.
இலஞ்சம் வாங்கியதாக ஒருவர் குற்றச் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் அதற்கான சான்று பெற எதாவது கொடுத்துத்தான் பெறுகின்ற இழிநிலை இங்குள்ள நீதிமன்றங்களில் நிலவக் காணலாம். உழுபவனின் உழைப்பவனின் பொருளைத்தான் உண்டு உடுத்தி உயர் வாழ்வை பெற்றிருக்கிறோம் என்பதை உணராதவர்கள்தான் இத்தகைய ஊழல் செயல்களில் ஈடுபட்டு மேலும் மேலும் நல்லவர்களுக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு மட்டுமல்ல உலகில் சிறந்த நாடான அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் என்று அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சனும் அவரது ஆலோசகர் ஹென்றி கீசீங்கரும் உலகம் முழுவதும் உவலைப்பட்டுக் கிடந்தார்கள். வல்லமைமிக்க வடஇந்திய அரசியல் வாதிகளும் தொழில் அதிபர்களும் மகா மெகா ஊழல்களில் ஈடுபடுவதில் இணையற்றவர்களாக விளங்குவதைக் காணலாம்.
இங்குள்ள நீதிமன்றங்களில் சாதாரணமாக ஒரு கெட்டவனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனைகள் வழங்குவதைப் பார்க்கிறோம். ஆனால் இலட்சக்கணக்கான மக்களை உயிரோடு வதைக்கும் பொருளாதாரக் குற்றவாளிகளை பல்லாண்டுகள் வழக்கை நடத்தி தண்டனைகள் வழங்கிய பின்னர் ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது பெற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்கும் நிலை நெஞ்சை வேதனைக்குள்ளாக்குகிறது.
நீதியற்ற நீதிமன்றங்களும் நேர்மையற்ற நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தைச் சேர்ந்த நெஞ்சமுள்ளவர்கள் சொல்கின்றபோது ஓவென்று அழாமல் வேறு என்ன செய்வது?
நாளும் நாளும் ஏடுகளில் இதழ்களில் வரும் செய்திகளை நாமறிவோம். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என்றெல்லாம் ஊழல் செய்து சேர்த்தவர்களை கைது செய்தார்கள் என்று செய்திகள் நமது கண்களில் விழுந்து மகிழ வைக்கிறது. ஆனால் அவர்களும் வழக்குகளில் இருந்து வெளிவந்து வெட்கமின்றி நடமாடும் நிலையிருப்பது நாட்டுக்கு கேடல்லவா? நாட்டின் அறிவாளர்கள் ஆய்வாளர்கள் பொது நலச் சிந்தனைப் பொறுப்பு உள்ளவர்களின் உள்ளங்களில் இழையோடும் கருத்து எண்ணிப் பார்க்கும் கருத்தும் கேள்வியும் இதுதான்.
என்னாடு, பொன்னாடு, எழில் நிறைந்த நாடு, இந்து மதம் ஆளும் நாடு, புவியில் சிறந்த புகழ்நாடு, ஆரியம் வாழும் அழகுத் திருநாடு, ஆன்றோர்கள் வாழ்ந்த நாடு, காவியுடை கண்ட நாடு, அருள் தரும் முனிவர்கள் சிறந்தநாடு, புனிதங்கள் நிறைந்த நாடு, காவியமும் கலையும் நிறைந்த நாடு. பலப்பலப் பொருள்களைப் பாடிய பாவலர்களைக் கொண்ட நாடு. வால்மீகியும் வியாசரும், வாத்சாயனரும், காளிதாசனும், ஆர்யபட்டரும், அபிராமி பட்டரும் வாழ்ந்த நாடு என்றெல்லாம் பெருமை கொண்ட நாடு.
இந்த நாட்டில் ஒரு புள்ளி விபரம், இன்று அறிவியல் உச்சக் கட்டத்தில் உள்ள நிலையில் நம்மை வேதனைகுள்ளாக்குகிறது. உலகில் அதிக நோயாளிகள் இங்குதான். கல்வியறிவுயற்றவர்களும் இங்குதான், கல்வியறிவு பெற்றவர்களில் புதுமையோ, பொதுச் சிந்தனையோ, பொறுப்போ இல்லாவர்களும் இங்குதான். ஆலயங்களும், கோவில்களும், ஆகாயத்தை தொடும் கோபுரங்களும், ஆன்மீக வாதிகளும் இங்குதான்  ஆறுகுளங்களில் நீராடி, நித்தம் நித்தம் வழிபாடுகள் நடத்தி நேர்த்திக் கடனும் செலுத்தி நாளெல்லாம் நல்லவை நடக்க ஊரிலுள்ள கடவுளை உள்ளம் உருகி வேண்டி நின்றும் நிலைமாற்றம் நிகழாததும் இங்குதான்.
உலகளந்த கடவுள், உடுக்கை அடித்து உலகை நடத்தம் கடவுள். தந்தைக்கே மந்திரம் சொன்ன அறிவார்ந்த அழகுக் கடவுள், அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் ஆதிபராசக்தியெனும், அம்மன் கடவுள் என்றெல்லாம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு ஆற்றல்மிகு கடவுள்களை வழிபாடு செய்த பின்னரும் இந்த நாட்டில் நோயும் நொடியும் இலஞ்ச லாவன்ய ஊழலும் அறியாமையும் அப்பாவித்தனமும் முறையற்ற செயல்களும் தவறுகளும் நடப்பது சரியா? நடப்பது ஏன்? தெளிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்.
இங்கு ஊழல் ஒழிந்தபாடில்லை, உயர் எண்ணங்கள் மலர்வதில்லை. கொள்ளையிடும் நிகழ்வுகள் நீடித்து நின்று நிலைபெறும் காட்சிகளைக் காணமுடிகிறது. காரணம் அதை ஒழிக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல இங்கு போதிக்கப்படும் எல்லாமே பொய்மையானது - போலியானது - உண்மையில்லாதது -ஏதும் செய்ய இயலாதது என்பதுதான் உண்மையாகும். 

மாசில்லாததாக மனம் மாறதவரை, உள்ளத்தை உண்மையும் ஊரார் நன்மையும் சூழாதவரை, ஊழலும் லஞ்சமும் ஒழியாது என்பதும் உண்மைதான்.

No comments:

Post a Comment