மடங்கள் – மர்மங்கள்
மடங்கள் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில்
பல்வேறுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு உருவாக்கிய இடங்கள்தான் இன்றிருக்கின்ற பல்வேறு
மடங்கள் ஆகும். காவி கட்டி - சடை முடி வளர்த்தவனையெல்லாம் மகான் - மகானுபாவன், மாமேதைகளாக
அறியாமையில் மக்கள் நினைத்ததால் தகுதியற்றவனயெல்லாம் தடியர்களெல்லாம் பல மடங்களில்
மடாதிபதியானார்கள்.
சில மடங்கள் சைவசித்தாந்த நெறிகளை
மக்களிடம் பரப்ப பல்வேறு மன்னர்களால் அமைக்கப்பட்டன. அதில் அந்த சமயத்தின் அனைத்து
நெறிகளை அறிந்தவர்களே, அதுவும் மிக இளவயதில் இருந்தே ஓதி உணர்ந்தவர்களே சன்னிதானங்களாக
உருவாக்கப்பட்டுகின்ற மரபு நிலவி வந்தது. ஆயினும் பிரச்சினையில் சிக்கித்தவித்த-தவிக்கின்ற
சங்கரமடங்கள் உள்ளிட்ட பல மடங்களில் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால் சுவையும் சோகமும்
கொண்ட பல பொருட்கள் காட்சிக்கு வர நேரிடும். தமிழ் வளர்ச்சிக்கு தூய உணர்வோடு அமைந்த
பல மன்றங்களின் தலைவர்கள் மன்னர்களை மிஞ்சிய ஆணவம் அதிகாரம் ஆடம்பர ஆர்ப்பாட்டங்களோடு
பவனி வருவதை பல காலமாகவே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் பெருமையை எடுத்துச்
சொல்லி மக்களிடம் இதயத்தூய்மையை நிலை நாட்ட வேண்டியவர்களின் உள்ளமும் எண்ணமும் இழிதகை
கொண்டிருப்பதைப் பலர் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.
விளைவதற்கு நிலமும் விளைவிப்பதற்கு
மனித அடிமைகளையும் மன்னர்கள் வழங்கியதால் மடாதிபதிகள் கொழுத்த நிலையடைந்து பற்பல குற்றச்
செயல்களில் ஈடுபடும் நிலையடைந்தார்கள். சமீபமாக அய்ம்பது அறுபது ஆண்டுகளில் மக்களின்
மதநம்பிக்கையைப் பயன்படுத்தி புற்றீசலென பல்வேறு மடங்கள் தோன்றி மக்களை மடமைப்பள்ளத்தில்
ஆழ்த்துகின்ற நிலை காண்கிறோம். மதவேற்றுமை - மதவெறியை ஊட்டுகின்ற உபன்னியாசர்கள் நிறையப்பேர்
உருவாகி மதநல்லிணக்கத்தை கெடுத்து விடும் கேடுகளை நிலைநாட்டி வருகிறார்கள். வளர்ந்து
வரும் வாழ்க்கைக்கான வசதிகளை அறிவியல் வாரி வழங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு
எந்த நன்மையும் செய்யாத மதங்களின் பின், செக்குமாட்டுச் சுபாவத்தோடு சுற்றுவதை காண்கிறோம்.
முழு நாத்திகராக விளங்கிய நரேந்திரன்
அவர்கள் இராமகிருஷ்ணரின் நட்பினால் கருத்துச் சமரசம் செய்து விவேகானந்தனாக ஆகி சமயங்களில்
உள்ள நல்ல அம்சங்கள் சிலவற்றை உலக நாடுகள் மன்றத்தில் ஓங்கி முழங்கினார். ஆனால் ஆனந்த
மடங்களில் ஏற்பட்ட அமளியும், கேடும் இன்றுவரை தொடர்ந்து வருவதைக் காணலாம். பிரமச்சரியம்
சிறந்ததென்று வாதிடுவோரெல்லாம் தூயவர் - துறவிகள் என்று எண்ணி மக்கள் அவர்கள் பின்னால்
செல்வதைக் காணமுடிகிறது.
துறவு என்பது மனத்தூய்மையுடன்
கடைப்பிடித்து வாழ வேண்டிய இனிய வாழ்க்கை நெறியாகும். எளிய உணவுண்டு இல்லற சுகமின்றி
இதயத்தெளிவோடு நாளெல்லாம் மக்களுக்கு நலன் தேடும் தொண்டில் ஈடுபட வேண்டும். ஆனால் ஒருபடி
பாலை உழக்காக காய்ச்சி அதில் பிஸ்தாவும், முந்திரியும் பிறவும் கலந்து உண்டால் உடல்
விறைப்பேறி ஊர் கெடுக்கும் செயலில் தானே ஈடுபடத் தூண்டும். புத்தனின் துறவு உலகப்புகழ்
கொண்டது. ஆணையிடும் அரசு அதிகாரத்தைத் துறந்து இல்லறத்தில் இனிதாய்ப் பங்கெடுத்த உயிரணைய
துணைவியையும் துறந்து, இன்பத்தில் விளைந்த எழிற் குழந்தையையும் துறந்து அறியாமையில்
உளன்ற மக்களை அன்பு நெறியோடு நல்வழிப்படுத்த ஆசைகளை விட்டொழித்து துறவியாகி உலகிலொரு
புதுமையை உருவாக்கினார் புத்தர்.
பிரேமானந்தா, நித்யானந்தா, சாயிபாபா
மற்றும் ரவிசங்கர் போன்றவர்களை பெருங்கோடீஸ்வரர் ஆக்கியது மக்களின் மடமை என்றால் அது
வேதனைதானே! அதிலும் பெண்கள் துறவிளை வணங்கி
பிள்ளைவரம் கேட்டது என்பது நகைப்புக்குரியது அல்லவா? பொட்டு வைத்து பூமுடித்து புன்னகை
சிந்திவள் அருகில் அமர்ந்திருக்கக் கண்டால் ஆண்டிக்கு ஆனந்த சுகம் காண வேண்டுமென்ற
ஆசை தோன்றாதா? பிரச்சினையில் சிக்காத மடங்களே இல்லை எனலாம். மெய்வழிச்சாலையில் தொடங்கி,
பிரேமானந்தா, காஞ்சி சங்கரமடம், திருப்பனந்தாள் மடம், நித்தியானந்தா மடம், சாயிபாபா
மடம், இரவிசங்கர் மடம், உடுப்பி மடம், ராம்தேவ் மடம் மற்றும் பல மடங்களில் குற்றச்
செயல் நடந்ததை நாடறியும் அத்தோடு மேலும் பல மர்மங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா
மடங்களிலுமே அரசாங்கத்தை ஏய்க்கும் வரிமானவரி மோசடிகள் மலையளவு நடப்பதாக சோதனைகள் உணர்த்துகின்றன.
ஆண்டவனைப் போதிப்பதற்கு பதிலாக இலட்சங்களை கோடிகளை கொட்டி வைத்து மூடிபோட்டு பூட்டி
மோசடிகளில் ஈடுபடுவது ஏன்? மதங்கள் மாசற்ற உணர்வற்றதென்றால் மடத்தலைவர்களிடம் மர்மங்கள்
இருப்பது ஏன்? கடவுள் உயர்ந்தவன் என்றால் கணக்கற்றச் சொத்துகளை மறைத்து வைத்து அரசாங்கத்தை
ஏமாற்றுவதை கடவுள் காட்டிக் கொடுக்க வேண்டாமா? மாபெரும் கடல்களில் அறியப்படாத மர்மங்கள்
இருக்கலாம். ஆனால் மடங்களில் இருக்கலாமா? பல்லக்கில் பவனி வந்த மடாதிபதிகள் படகுக்
கார்களிலும், பறக்கும் வானூர்திகளிலும் வருவது சரியா? கடல்தாண்டாக் கூடாது என்ற மதவிதியை
மடாதிபதிகள் மீறுவது முறையா? காலில் கட்டைச் செருப்பைத் தவிர வேறு போடக் கூடாதவர்கள்
இன்று நவீன பாட்டா செருப்பை மாட்டுவது முறைதானா? வேதங்கள் பெற்றெடுத்த இந்த வீணான மடங்களால்
மக்களின் வறுமை விடுபட்டதாக வரலாறு இல்லை. வாழ்க்கை வளம் பெற்றதாக சான்றுகள்ள் இல்லை.
இந்த அனைத்துலக மதவாதிகளையும் எதிர்த்துப் போராடி, விஞ்ஞானிகள் தங்கள் உயிர்களை இழந்து
உருவாக்கியதுதான் இன்றைய அறிவியல்.
இந்த அறிவியல் தான் இன்றைய உலகில்
வாழ்க்கைக்கு பயன்படும். அத்தனைப் பொருள்களையும் வசதிகளையும் வழங்கியது என்பதை மக்கள்
கூட்டம் முழுதாக உணர்ந்தால் மடமை - மவூடிகத்தை விதைக்கும் இந்த மதவாதிகளும் மடங்களும்
மறையும் நாள் உருவாகும். மடங்களையும் அதிலுள்ள மர்மங்களையும் விரித்து விவரித்து எழுதுவதென்றால்
நீட்டோலைகளின் எண்ணிக்கை பெருகிவிடும். பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒன்றில் கண்பதித்தால்
மதங்களில் மனம் பற்று வைக்காது.
இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதென்னாள்.
மனிதர்களின் மனங்களை அறிவும்
ஆய்வும் ஆரத்தழுவினால் மதங்களும், அதன் மடங்களும் தானாகவே மாய்ந்து மடிந்து மறைந்து
விடும். மடங்கள் ஒழியுமா? மர்மங்கள் அழியுமா? மக்களின் உள்ளம் தெளிவு பெறுமா?
No comments:
Post a Comment