Thursday, 17 November 2016

பகையற்ற நாடு வேண்டும்

பகையற்ற நாடு வேண்டும்
உறு பசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராதியவ்லலது நாடு
- என்றான் வாழ்க்கை நெறிகளுக்கு வளம் சேர்த்த வள்ளுவப் பேராசான்.
வள்ளுவன் கூறும் நாடு காண மாசற்ற அறிஞர் பெருமக்களின் அறிவார்ந்த கருத்துகளை எண்ணி பார்ப்போம்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
கோல் உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்.
என அரசியல் அறிவு நிரம்பிய பெருமாட்டி அவ்வையார் குடியும் அரசும் உயர உணவுப் பொருள் நிரம்ப வேண்டும் என்றார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நோதனும் தணிதலும் அன்னோரன்னே - என உலக மாந்தர் உறவைப் போதித்த உத்தமன் கணியன் பூங்குன்றன்  இதய இயக்கத்தையும் எடுத்துச் சொன்னான்.
உண்பது நாழி உடுப்பது இரண்டே
மற்றெல்லாம் ஓரொக்குமே
செல்வத்தின் பயன் ஈதலே
துய்ப்பேன் எனின் தப்புன பலவே.
என்று பொதுஉடைமைப் போக்கோடு சொல்லிச் சென்றான் புறநானூற்றுப் புலவன் ஒருவன்.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
என்று ஓங்கியறைந்தான்  சங்க காலத்து சாகாப் புகழ் கொண்ட பாவலன் ஒருவன். அனைத்தும் ஆளுமைத்திறன் கொண்ட ஒரு அரசின் தலைவனாலேயேதான் சீர்நிறைந்த சிறந்த உலகம் புதுமைப் பூந்தோட்டமாய் இந்த பூமி ஒளிரும் என்றான் அந்த இனிய கவிஞன். உலக இயற்கையை எண்ணிப் பார்க்கின்றபோது இரண்டு மணி நேரம் மனிதர்கள் உழைத்தாலே போதும் எல்லா வகையான வளத்துடன் வாழ முடியும் என்றார் அறிவுலக மேதை அறிஞர் அண்ணா அவர்கள். எட்டு மணி நேரம் உழைத்தும் எழில் வாழ்வைக் காணாததற்கு இடைத்தரகர் முறையே காரணம் என்றார் அண்ணா அவர்கள்.
பசியும் பிணியும் பகையும் பல்வேறு நாடுகளில் பற்றி எரியும் தீயாய் பரவி வருகிறது. வீசிய வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறி, கூட்டம் கூட்டமாய் மனிதர்களைக் கொல்வது என்பது நாளும் ஒரு புது நாடகம் போல் அரங்கேறி வருகிறது. குற்றம் புரிதல், கொல்லுதல் போன்ற கொடூரங்களைக் குணமாகக் கொண்ட இளைஞர் கூட்டம் நாடுகள் தோறும் பெருகிவரும் அவலத்தை நாளும் காணமுடிகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று தேடுவது ஒன்றும் கடினமல்ல. வரலாற்றுப் பாதையை கவனித்தாலே உண்மைக் காரணங்கள் உள்ளத்தில் ஒளிவீசத் தொடங்கி விடும். இன்று மட்டுமல்ல கடந்த நூற்றாண்டுகளிலும், இந்த இரத்தக் களரிகள் நடந்த வண்ணமே வரலாறு தன்வழித் தடத்தில் பயணித்திருக்கிறது. ஒருகுலப் பங்காளிகளாக குடிபிறந்து கிறித்தவர் முஸ்லீம்களாக மாறி நூற்றாண்டு காலங்கள் போர் நடந்து மடிந்த மக்கள் எண்ணிலடங்காது.
அறியாமையில் விளைந்த எண்ணங்கள், பின் அயோக்கியர்கள் உருவாக்கிய கொள்கைகள் அதன் செயல் வடிவத்தால் உருவான மூளைச் சலவை அதன் காரணத்தால் வளர்ந்த மதவெறி இவைகள்தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே மனிதக்குருதியை ஆறெனப் பெருகச் செய்கிறது. ஒரேவழிப் பாட்டுத் தலைவரை வணங்குவோர் தங்களுக்குள் பிளவுகண்டு மனம்கெட்டு மோதி மண்டை உடைபடுவதும், மரண ஓலமிடுவதும் உலகம் முழுதும் உள்ள நல்லவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. ஏசுவை வணங்குபவர் இரண்டு மூன்று பிரிவாகி பிளவுபட்டுக் கிடக்கின்றனர். அல்லாவின் வழி நடப்போர் சன்னி-ஷியா என்று இருவேறு நிலைப்பட்டு தங்களை அழித்துக் கொள்ளும் நிலை நாளும் நிகழ்கிறது. புத்தனை வழிபடும் நாடுகள் கூட தங்களுக்குள் வேறுபட்டு, தாங்கள் ஒரே இனம் என்பதைக் கூட மறந்து மோதி அழிகின்ற காட்சியைக் காண முடிகிறது.
எங்கள் மதம், இனிய மதம், அன்பு மதம் ஆதி நாளில் தோன்றிய அர்த்தமுள்ள இந்து மதம் என்றெல்லாம் புகழ்பாடியவர்கள், சைவம், வைணவம், அத்வைதம், துவைதம் மற்றும் பல்வேறு பிரிவுகளாக மக்களைப் பிரித்து மதவெறியூட்டி சண்டையிட்ட காட்சிகள் ஆயிரம் ஆண்டிற்கு முன்பிருந்தே கண்ணில் விரியத் தொடங்குகிறது. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்த அளவில் நெடுங்காலமாகவே நடந்த போர்களின் உணர்வுகள் போன்றே அறிவியல் வளர்ந்த இந்த ஆக்கமிகு சூழலிலும் மதவெறி ஆளுமை செய்வது வெட்கப்படக் கூடியதாகும். இந்து முஸ்லீம் வேற்றுமை, சிந்தாந்த சிதைவுகளால் ஏற்பட்ட சீர்கேடுகள். அறியாமையில் உருவான ஆதிக்க உணர்வுகொண்ட அரசியல் தலைவர்களால் ஏற்பட்ட சமத்துவமற்ற நிலைகளால் சனநாயகச் செழுமையற்ற நடப்பினாலும் இந்தியத் துணைக் கண்டம், பற்பல இன்னலுக்கு ஆளாகி வருவதைக் காண்கிறோம். பல்வேறு இனம், மொழி, பண்பாட்டுப் பழக்க வழக்கம் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் எதற்கும் சமத்துவம் வழங்கப்படவில்லை.
மாநில சமத்துவம், மதச் சமத்துவம், மொழிச் சமத்துவம் என்பதெல்லாம் இங்கே வழங்கப்படவில்லை. ஜனநாயகத்தில், எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றார் மகாகவி பாரதி. ஆனால் மக்களாட்சித் தத்துவத்தில் ஆண்டான் அடிமை உணர்வு மலைபோல் வளர்வதை நாளும் நாம் அறிய முடிகிறது. மரியாதையும் சமத்துவமும் எங்கு இல்லையோ அங்கு உரிமைப் போர் வெடிக்கும் என்றார் தந்தை பெரியார் அவர்கள். அது உண்மை என்பது இங்கு கண்கூடாகக் காட்சியளிக்கிறது. மாவோயிஸ்டுகள் அவர்களைச் சார்ந்த பிற நக்சலைட்டுகள் பிரச்சனை பொருளாதாரச் சமத்துவமற்றதால் எழுந்த பிரச்சனை என்கின்றனர். அதவும் பொருளாதாரப் புலிகளாக தங்களை சித்தரித்துக் கொள்ளும் பொதுஉடமைக் கட்சியின் நீண்ட ஆட்சியில் தானே இந்த மாவோயிஸ்டுகள் உருவானார்கள். இங்கே ஏழைகள் இன்னும் இருக்கிறார்கள். அதனால் இலவசங்கள் தேவைப்படுகிறது. இல்லாமையார் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஏற்ற தாழ்வும் அதனால் தோன்றிய ஏமாற்றுமுறைகளும் மனநோய்களை உருவாக்குகிறது. மதவெறி, மனவேறுபாட்டால் நாட்டின் நாற்புறமும் பகை மேகம் சூழுகிறது. இதற்கெல்லாம் விடிவு, தமிழ்கூறும் நல்லுலகத்தின் அடித்தளத்தை தெரிந்து கொண்டால் அவலங்கள் நீங்கும். பகையற்ற நாடென்ன உலகமே உருவாகும்.

No comments:

Post a Comment