திருப்புமுனை கண்ட
திருத்தூதன்
இன்றைய உலகில் வளர்ச்சி நிலையில்
வானளாவிய புகழ் கொண்ட பகுதியாக விளங்குவது சீனநாடு ஆகும். கணினிப் பொறிகளையும் கண்கவர்
அழகு கொண்ட எண்ணற்றப் பொருள்களையும், மலிவு விலையில் வழங்கி உலகச் சந்தையை தன்வசமாக்கி
வரும் மாபெரும் நாடு சீனா.
விளையாட்டுத் துறையில் வல்லமைமிக்க
அமெரிக்காவையும் - இரஷ்யாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பீடு நடைபோடும் பெருமைமிகு
தேசம் இன்றைய சீனாவாகும்.
சீனாவின் வரலாற்றைப் பின்னோக்கி
பயணித்துப் பார்த்தால் சிந்தையெல்லாம் இனிக்கின்ற மண் அது என்பதை இதயம் உணர முடியும்.
ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டிற்கும்
மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட அந்தநாடு முழுதாக எந்த நாட்டிற்கும் அடிமையாகாத நாடு என்று
வரலாற்றில் முத்திரைப் பதித்த நாடு சீனா!
வலிமைமிக்க சின்-மிங்-மஞ்சு வம்ச
அரசர்கள் ஆண்ட நாட்களில் கூட விஞ்ஞான வெளிப்பாடுகளை வழங்கிய மேதைகள் வாழ்ந்த நாடு சீனா.
பிறநாடுகளின் ஆதிக்கத்தில் சிக்கி சீனத்தின் சில பகுதிகள் சீரழிந்தாலும் முழுச்சீனாவும்
அடிமையாகத ஆண்மைகொண்ட நாடு சீனா ஆகும்.
தொல்லியல் காலத்திலேயே வெடிமருந்து
- பட்டு - பீங்கன் - பேப்பர், அச்சுப்பொறி ஆகிய இன்றைய உலகை ஆளுமைசெய்து அடிமைப் படுத்தும்
பொருட்களைக் கண்ட நாடு சீனா!
கலாச்சாரச் சீர்மை கண்ட கீழ்த்திசை
நாடான சீனா உலகின் எல்லாப் பகுதிகளையும் போல எண்ணற்ற வழிப்பாட்டு முறைகளையும் கடவுள்
வடிவங்களையும் கொண்டிருந்தது. குழுக்குழுவாக மதவாதச் சக்திகள் சண்டையிட்டு சீன மண்ணை
குருதியால் சிவப்பாக்கிய வரலாறும் அந்த நாட்டுக்கு உண்டு.
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாக
கொலை விழாத நாளில்லை, குருதி கொட்டாத நிகழ்ச்சியில்லை என்ற நிலை கொண்ட நிலம் சீனநிலம்.
இந்த நிலையில்தான் சீனத்தைச் சீர்படுத்தலாமென்று ஒரு சீராளன் அங்கே தோன்றினான்.
நெடிய வரலாறு கொண்ட சீனத்தில்
நேர்த்திமிக்க நிலையும் நிலையான வளர்ச்சியும் இல்லையே அது ஏன் என்று எண்ணிப் பார்த்தான்.
சீரற்ற நிலையும் சிந்தனை கூரற்ற
கொள்கைச் சிதைவுமே சீனத்தின் வளர்ச்சிக்கு தடை என்று எண்ணி அதை நேர்படுத்தும் நோக்கில்
இதயத்தை இயக்கினான் அந்த இனிய பேராளன்.
வளர்ச்சிக்கு கேடு செய்யும் வழிபாட்டுச்
சிந்தனைகளும் முறைகளுமே என அறிந்த ஆற்றல்மிகு சீராளன் உள்ளத்தில் ஓர் உறுதியான முடிவெடுத்து
செயல்படுத்தத் தொடங்கினான்.
சீனா முழுவதிலும் உள்ள கடவுளர்களை
கணக்கெடுத்தான். பெயர்களை வரிசைப் படுத்தினான். சீனா முழுவதிலும் உள்ள அறிஞர் பெருமக்களுக்கெல்லாம்
அந்த கடவுள் பட்டியலை அனுப்பி தங்களுக்குப் பிடித்த கடவுளை குறிப்பிடுமாறு வேண்டினான்.
அறிஞர்கள் தங்களுக்குப் பிடித்த
கடவுளை சொன்னார்கள். அதில் அதிகப்பேர் விரும்பிய ஒரு கடவுளை வைத்துக் கொண்டு மற்ற கடவுள்
சிலைகளையெல்லாம் வீதியில் போட்டு உடைக்கச் சொல்லி ஆணையிட்டான்.
இது கண்ட மக்கள் பயந்து நடுங்கினர்.
கடவுள்களுக்கு கோபம் வந்து காற்றை, மழையை, இடியை, கடலை ஏவி விட்டு சீனாவை அழித்து விடுவர்
என்று கதறினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்து எண்ணிய போல் ஏதும் நடக்கவில்லை எப்போதும்
போலவே சீனா இருந்தது. ஆனால் மக்கள் இதயங்களில் மாறுதல் விளைந்தது.
சீனத்தைச் செம்மைப் படுத்திய
சன்-யாட்சென்னால் சீனாவின் அறிவியல் உணர்வுகள் ஆக்கம் பெறத் தொடங்கின. வளர்ச்சிக்கான
வடிவெடுக்கத் தொடங்கின தொடர்ந்தன.
சன்யாட்சென் போட்டப் பாதையின்
பயனால் மாசேதுங்சின் செம்படை செஞ்சீனத்தை படைத்தது. வறுமை சூழ்ந்த நாட்களில் கூட உலகில்
கடன் வாங்காத மானமிகு நாடு என்று சீனா மார்தட்டி நிற்கிறது.
நீண்ட நெடு நாட்களாகவே அன்னிய
உணர்வுகளுக்கு அடிமையாகாது சீன இனம், சீன மொழி, சீனக் கலாச்சாரத்தைத சிந்தையில் இருந்து
இறக்காத மக்கள் சீனமக்கள்.
எத்தனையோ கொள்கைகள் என்ற ஏற்ற
இறக்கத்தோடு வாழ்ந்த சீனா இன்று வளர்ச்சியில் எழுச்சியின் வடிவாக ஏறுநடைபோடுகிறது.
இந்தியாவின் மீது படையெடுத்து
பதினைந்தாயிரம் சதுரமைல் நிலப்பரப்பை பிடித்துக் கொண்டது என்பதைத்தவிர மற்ற செயல்களில்
சீனாவை இந்தியா எண்ணிப் பார்க்க வேண்டியது கடமையாகும்.
No comments:
Post a Comment