விளையாட்டுகள்
மனிதர் மட்டுமல்ல உயிரினம் தோன்றிய
நாளிலிருந்தே விளையாட்டு என்பது வாழ்வோடு இணைந்த இனிமையான ஒன்றாகவே காணலாம். உள்ளம்
மகிழும் போது அதனதன் உடல் வாகுக்கு உகந்தவாறு உணர்வுகளை வெளிப்படுத்துவது உயிரினங்களின்
வாடிக்கையாகும். மயில் ஆடுவதும் குயில் பாடுவதும் கிளி பேசுவதும் மானும் குதிரையும்
காளையும் துள்ளுவதும் யானை அசைவதும் பறவைகள் குக்கூ கிக்கீ என்று இசை மீட்டுவதும் அதனதன்
இயல்பான விளையாட்டுத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். விளையாட்டுகள் பலவகை என்றாலும்
குறிப்பாக பந்தை மய்யமாக வைத்து விளையாடுவதுதான் பார் முழுக்கப் பரவியிருந்ததென்று
அறியப்படுகிறது.
இயல்பான விளையாட்டாக இருந்த நிலை
மாறி அதில் ஆற்றல் திறனைத் காட்டுகின்ற போட்டிகள் தோன்றி முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக
விளையாட்டு மாறி மகிழ்வித்தது. உலகில் சிறந்திருந்த
இருபகுதிகளில் உள்ள நிலையை எண்ணிப் பார்ப்போம் பண்பாட்டுச் சிகரங்களாகத் திகழ்ந்த கிழக்கு
மேற்கு நாடுகளைக் காண்போம். நமது தமிழகம் ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும்
பரவியிருந்தது. ஆரியர்கள் இந்நாட்டிற்குள் நுழையுமுன்னர் நுண்மாண் நுழைபுலம் என்பார்களே.
அதுபோல அறிவும் ஆற்றலும் நிரம்பியதாக இருந்தது. தமிழும் அதன் திசைமொழிகளும் ஆண்ட அனைத்துப்
பகுதிகளிலும் அன்றிருந்த உலகின் சிறந்த நிலமாக எல்லா திசைகளிலும் சிறந்திருந்தது. ஆணையிடும்
அதிகாரம் திட்டமிடும் நிர்வாகம் தூய்மை கொண்டு வாழ்கின்ற நெறிகள் எல்லாம் நிறைந்த இடமாக
அமைந்திருந்தது.
மக்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சி
வெள்ளம் அலை பாய்ந்தது. உழைக்கும் நேரத்தில் கூட இசைபாடி மகிழ்ந்தவன். ஊருக்குள் வந்து
ஓய்வெடுத்து உறங்குமுன்னர் விளையாட்டுகளோடு இணைந்த பின்னரே வீட்டிற்குள் சென்றான் விழிமூடி
தூங்கினான். சிற்றூர் பேரூர் நகரங்களின் தெருக்கள் தோறும்,வீதிகள் எங்கும் நாளும் நலன்
தரும் விளையாட்டுகள் நடந்தபடியே இருந்தது. நிலாக் காலங்களில் நெஞ்சை மகிழ்வித்துத்
தாலாட்டும் நேர்த்திமிக்க விளையாட்டுகளில் ஈடுபட்டு இளைஞர்களும் இளம் மங்கையர்களும்
இதயம் களித்திருந்தார்கள். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி விளையாட்டுகள் சிறப்புற்றிருந்தது.
பந்து விளையாட்டில் எத்தனை வகையிருந்தாலும் பெண்களின் தலைக் கொண்டையால் பந்தைத் தட்டி
விளையாடும் விளையாட்டை குற்றாலக் குறவஞ்சி நமக்கு விளக்குகிறது. பாட்டுப் பாடிக் கொண்டே
அதன் தாளத்திற்கு தகுந்தவாறு பந்தை அடிக்கும் விளையாட்டு பாவையருக்கு பரவசத்தை உருவாக்குமாம்.
சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து தொன்னூற்றாறு விளையாட்டுகள் அறியப்படுவதாக அறிஞர்கள்
கூறுகிறார்கள். அவை ஒருகாலத்தில் தமிழர்களிடம் தழைத்துச் செழித்து கிடந்ததாக ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள். தமிழர்களின் வீர விளையாட்டுகள் என்று அறிஞர் ரா. பி.சேதுப்பிள்ளை நூலொன்றைத்
தந்து நம்மை மகிழ்விக்கிறார். சோழமன்னன் இளஞ்சேட் சென்னி (கரிகாலனின் தந்தை) குதிரைபூட்டிய
தேரை காற்றைப்போல் செலுத்தி போட்டியில் வெற்றி பெற்றான் என்று வரலாறு வாழ்த்துகிறது.
கிரிக்கெட், ஹாக்கி, கோல்ப்,
அலைச்சறுக்கு, படகு விளையாட்டு, குத்துச் சண்டை, மல்யுத்தம் மற்றும் பல விளையாட்டுகளுக்கு
தாயகம் தமிழகம் என்கிறது ஆய்வாளர் குறிப்புகள். இன்னும் சொல்வதென்றால் இங்கிருந்துதான்
எங்கெங்கும் ஏற்றுமதியாகி இருக்கும் என்பதற்கு சான்றாக பெரிப்புளுசு எனும் உலகப் பயண
நூல் கிரேக்கத்தின் தாய் பாண்டிய நாடு என்பதால் விளையாட்டிற்கும் தாயகம் தமிழமாகத்தான்
இருக்க வேண்டும். தமிழகத்தைப் பற்றி பேரறிஞர் அண்ணா குறிப்பிடும் போது சொல்கிறார்.
“மருத்துவம் உள்ளிட்ட எல்லாம் இருந்தது. ஆனால் அது கச்சாப் பொருளாகவே இருந்தது” என்கிறார்.
சீனாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் புத்தத்துறவிகள் மூலம் பரவிய கலைகள்தான் குங்பூவும்,
கராத்தேயும், சிலம்பு, வர்வம் ஆகிய கலைகளின் மறுவடிவமே மேற்கண்ட இரு கலைகளும் என்கிறார்கள்.
புகழ்பெற்ற மாமன்னன் கரிகாலன்
மகள் ஆதிமந்தியும் ஆடற்கலைவல்லான் ஆட்டனத்தியும் நீர் விளையாட்டில் ஈடுபட்ட போது காவிரி
வெள்ளம் அடித்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆய்ந்தறிந்து,
அழகுபடுத்தி விதிவகுத்து பதிவு செய்து நுட்பமாக வளர்ப்பதில் அய்ரோப்பியத் தாயகமான கிரேக்கம்
மிகக் கீர்த்தியுடன் விளங்கியது. கி.மு. 500க்கு முன்னரே மற்றத் துறைகளைப் போல விளையாட்டுத்
துறையையும் விரிவாக விருத்தி செய்தது கிரேக்கம். கிரேக்கத்திலுள்ள ஒலிம்பஸ் மலையடிவாரத்தில்
ஒலிம்பஸ் மலைத் தெய்வமான ஒலிம்பியாவின் பெயரால் எல்லாவித கலைகளையும் அரங்கேற்றம் செய்வது
வழக்கமாக இருந்தது. குருட்டுக் கவிஞன் ஹோமர் தனது காவியங்களான “இலியட்”, “ஒடிசி” இரண்டையும்
இங்கேதான் பாடி அரங்கேற்றினான். அதுபோல் எல்லாத் திறமையாளர்களும் இங்கேதான் தங்களது
திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இன்றைய உலகிற்கு எல்லாம் தந்த அய்ரோப்பா இன்றிருக்கின்ற
விளையாட்டையும் தந்தது. எல்லாவற்றையும் வணிகமாக மாற்றிய அய்ரோப்பாதான் விளையாட்டுகளையும்
வணிகமாக மாற்றியது. ஆலயங்களைக்கூட நிறுவனமாக்கிய அய்ரோப்பா ஆக்கமிகு சூழலோடு அவலங்களைப்
புறக்காரணமாகி விட்டது. மனித குலத்தை வாழ்விக்கும் வழிகளையும், முறைகளையும் கொடையாக
வழங்கிய தமிழகம் எல்லாவற்றையும் வணிக வலைகளுக்குள் சிக்கவைத்து சீரழிகிறது. தன்மொழி, தன்நாடு தன்அரசு, தன்இனம் எதுவென்று தெரியாது.
தலைசிறந்த தன்வரலாறு தலைதாழ்ந்த நிலை அறியாத, தன்கலைகளின் சிறப்பை தீர்க்கமாக பாராது,
இன்று ஒளிரும் எல்லா கலைகளும், நிலைகளும் ஈராயிரம் ஆண்டிற்கு முன்னர் தன்இனத்தான் வடித்தான்
என்பதை உணராது கல்வி கற்றவனும் மற்றவனும் கஞ்சிகாய்ச்சி குடிப்பது, கழிவறைக்குச் செல்வது.
குட்டிப் போட்டு குடும்பத்தை பெருக்குவது என்றே வாழ்ந்திடும் தமிழினிடம் உலகில் ஒளிரும்
விளையாட்டெல்லாம் உன் சொத்து என்றால் சொரணையுடன் நிமிரவா போகிறான்?
No comments:
Post a Comment