Monday, 14 November 2016

பெண்ணியம் - பல்வேறு நிலைகள்

பெண்ணியம் - பல்வேறு நிலைகள்
(2010 சூனில் கோவையில் நடந்த உலகச் செம்மொழி மாநாட்டில் அம்மூவனார் அரங்கில் வாசித்த கட்டுரை)
தோற்றுவாய்:
பெண்ணியம்... பெண்ணுரிமையை, வளர்ச்சியை வலியுறுத்துகின்ற சொல் என்றே கூறலாம். பெண்களின் இரு வேறு நிலைகைள எடுத்துக் காட்டி நிகழ்கால - எதிர்காலத்தின் ஏற்றத்திற்கு இனிய செய்திகளைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புராண இதிகாசங்களில் பெண்ணின் நிலை:
வடமொழியிலும், கிரேக்க மொழியிலும் தோன்றிய புராண இதிகாசங்களில் பெண்களைப் பெரிதும் இழிவுப்படுத்தியே படைத்திருப்பதைக் காணலாம்.
அரியின் அவதாரக் கதையான இராமாயணத்தில் காவியத் தலைவனும், அவனது இளவலும் பெண்ணின் மார்பகத்தை அறுத்து மானபங்கப்படுத்தி - மூக்கறுத்து மூளியாக்கினார்கள்.
அதே தலைவன் ஊரான் சொல் கேட்டு தன் மனைவி மீது அய்யம் கொண்டு கர்ப்பினி நிலையிலுள்ள சீதையைக் காட்டில் விடும் கொடுமையும் நிகழ்கிறது.
கடும் இன்னலுடன் வாழ்ந்த சீதை குழந்தையைப் பெற்றப் பின்னரும் அவளுக்கு இரு குழந்தைகள் எப்படி என்ற அய்யத்தோடு அவளை தீயில் இறங்கித் தூய்மையை நிலை நாட்டச் சொல்லி இராமன் கொடுமை செய்தததை புராணம் சொல்கிறது.
இன்று கூட அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடும் தாடகை நாச்சியார் எனும் பெண்ணரசியை இராம-இலட்சுமணர்கள் கொன்றதாக இராமாயணம் ஓங்கி அறைகிறது.
இந்திரனின் உடல்பட்டு கற்பிழந்தாள் என்று சபிக்கப்பட்ட அகலிகை இராமனின் கால் பட்டு கற்பரசியானாள் என்று பெண்ணை புரட்டி, புரட்டி புண்ணாக்குகிறது புராணம்.
போர்க்களத்தில் தன் உயிரைக் காத்த வீராங்கனையான் கைகேயிக்கு தசரதன் கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு கேட்ட கைகேயியை கொடுமைக்காரி என்கிறது இராமாயணம்.
அதுபோல் மற்றொரு புராணம் மகாபாரத்தில் மணமாகாத குந்தி, மந்திரக் குளிகையின் மூலம் வானத்து கதிரவனோடுக் கூடிக் கர்ணனைப் பெற்றாள் என்று காட்டி பெண்ணைக் களங்கப்படுத்து­கிறார்கள்.
அதே குந்தி மணமான பின்னும் குழந்தையைத் தர இயலாதத் தன் கணவனுக்காக சில வானவர்களோடு கூடிக் குலவிக் குழந்தையைப் பெற்றதாகக் கூறி கொச்சைப்படுத்தினார்கள். அதில் அவள் சக்களத்தியையும் ஈடுபடுத்தினாள் என்கிறார்கள்.
ஒரு போட்டியில் வெற்றி பெற்று தன் மகன் பரிசாகக் கொண்டு வந்த பெண்ணை அதே குந்தி தன் பிள்ளைகள் அனைவரையும் மணந்து அனுபவிக்கச் சொன்னாக எழுதி இழிவுபடுத்தினார்கள்.
அண்ணன், தம்பியான பாண்டவர் அய்வருக்கும் பொதுவான அவர்களின் மனைவி பாஞ்சாலியை சொக்கட்டான் எனும் சூதாட்டத்தில் தோற்றான் மூத்தவன் தர்மன். சூதாட்டத்தில் வென்ற துரியனின் கூட்டம் அந்தப் பாஞ்சாலியை ஆடைய அவிழ்த்து விட்டு பிறந்த மேனியோடு மக்கள் கூடும் மன்றத்தில் காட்டி அவள் மானத்தைப் பறித்தார்கள்.
குந்தியின் மூத்த மகன் கர்ணன் என்று அறிந்த துரோபதை ஆறாவதாக அவனையும் அடைத்திட ஆசை கொண்டாள் என்றும் புராணத்தில் பெண்ணைப் களங்கப்படுத்தினார்கள்.
அரசர் குடி என்றாலும், அறிவாளி என்றாலும், பெண்ணை ஆணுக்கு இணையாகக் கருதாது அகங்காரிகளாகவே சித்தரிக்கின்றது இதிகாசம். ஆம். ஆற்றல் நிறை அல்லி அரசியை ஆணவம் பிடித்தவள் என்று சொல்லி அர்ச்சுணன் வஞ்சகத்தால்தான் மனைவியாக்கினான் என்கிறது மகாபாரதக் கதை.
அல்லி அரசாண்ட மதுரையின் வளம் எப்படியிருந்தது என்பதை அல்லி அரசாணி மாலை பாடி மகிழ்ந்ததை படித்து மகிழ்வோம்.
வாழை வடக்கீனும் வான்கழுகு தெற்கீனும்
கரும்பும் இளநீரும் கண் திறந்து மடை பாயும்
கட்டுக் களங் காணும் கதிர் உழக்கு நெற்காணும்
அரிதாள் அறுத்து வர மருதாள் பயிராகும்
அரிதாளின் கீழ் அய்ங்கலத் தேன் கூடு கட்டும்
மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென் மதுரை.
தொழு நோய் கண்ட தன் கணவனை கூடையில் தூக்கி வைத்து அவனது ஆசை நாயகியின் வீட்டில் கொண்டு இறக்கி வைத்து விட்டு அவன் வரும் வரை காத்திருந்து மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து பணிவிடைகளை நளாயினி செய்ததாகவும், அதனால் நாளும் உடல் இன்பம் பெற இயலவில்லையாதலால் அடுத்து பிறவியில் அதிகமான ஆண்களை மணந்து சுகம் பெறுவாயாக என்று ஆன்றோர் அருள் பாலித்தனர் என்று சொல்லி பெண்ணின் மானத்தையும், கற்பு நெறியையும், உரிமையையும், விழிப்புணர்வையும் தன் காலில் போட்டு மிதிக்கிறது வடமொழி புராண இதிகாசம்.
கோபியர் வீடெல்லாம் கொஞ்சிக் கிடந்தான் கிருஷ்ணன் என்று கூறிய புராணம் கோபியர் குலத்தையே கொச்சைப்படுத்துகிறது.
குளிக்கின்ற பெண்களின் ஆடைகளை அள்ளிக் கொண்ட கிருஷ்ணன் மரத்தின் மீது அமர்ந்து பெண்களை தண்ணீரை விட்டு வெளியே வந்து முழு உடலையும் காட்டினால்தான் தருவேன் என்று கிருஷ்ணன் உரைத்ததை லீலா வினோதம் என்று கூறி புராணம் கிலுகிலுப்பு அடைகிறது.
ஆண்டவன் அருள் பெற வேண்டி காட்டில் கடும் தவம் புரிந்த தவசி ஒருவன் காட்டில் கண்ட, பெண்ணோடுக் கூடிக் களித்துக் குழந்தைப் பெறக் காரணமாகி விட்டுப் பின் அந்தக் பெண்ணையும், குழந்தையையும் கைவிட்டவனை பிரம்மரிஷி என்று போற்றிப் புகழ்கிறது புராணம்.
சமயச் சார்புடன் வாழ்ந்த மன்னர்களின் காலத்தில் பெண்களை ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைத்து வைப்பது போலவே அந்தப் புரங்களில் அடைத்து வைத்தார்கள்.
அரசன் தசதரனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அக்பர் பாதுஷாவிற்கு பன்னிரெண்டாயிரம் பத்தினிகள் என்று வரலாற்றுப் பதிவுகள் கிசுகிசுக்கின்றது.
ஸ்பார்ட்டா நகரத்து மன்னனின் மனைவியை ட்ராய் நகர காவலன் தூக்கிச் சென்றான். (அதுபோல இராமனின் மனைவியை இராவணன் தூக்கிச் சென்றான்). மூண்டது போர் - எரிந்தன நகரங்கள் - அழிந்தன நாடுகள் - மடிந்தனர் மக்கள் என்று பெண்ணாசையால், பெண்ணைப் போகப் பொருளாக கருதிய அசிங்கங்கள் - அவலங்களை எல்லாம் காவியங்களாகக் கருதும் வடமொழி - கிரேக்க புராணப் பற்றாளர்களின் சிந்தை சீர்பட வேண்டும்.
மன்னா! உனக்குப் பிறந்த இந்தக் குழந்தை வளர்ந்து வாலிபனாகி உன்னைக் கொன்று விட்டு உன் மனைவியை மணந்து கொள்வான் என்று நிமித்திகன் சொன்னதைக் கேட்டு அந்தக் குழந்தையைக் கொல்லச் சொல்கிறான் மன்னன்.
ஆனால் அவனதுக் காவலன் குழந்தையைக் கொல்லாது காட்டில் மறைத்து வைத்து வளர்க்கிறான். மன்னன் காட்டுக்கு வேட்டைக்கு சென்ற போது அந்த வாலிபனோடு மோதல் ஏற்பட மன்னனைக் கொன்று விட்டு நிமித்தகன் (சோசியன்) சொன்னதுபோல் வாலிபன் பெற்ற தாயை மணப்பதாகக் ஒடிபஸ் எனும் கிரேக்க புராணம் ஓங்கி அறைகிறது.
சங்கக் காலத்திலிருந்து தமிழ்பெண்களின் நிலை:
ஆனால் தமிழ்க் காப்பியங்களில் பெண்களின் நிலைப் பெருமைக்குரியதாக சித்தரிக்கப்படுகின்றது.
உரைசால் பத்தினியை உயர்ந்தேத்திய சிலப்பதிகாரம், தன் கணவனைக் கொல்ல ஆணையிட்டவன் அரசன் எனினும், “என் கணவன் கள்வனல்லன், அவனைக் கள்வன் என்ற நீயே கள்வன்” என்று அரசனை உணர வைத்து அவன் ஆவியைத் துறக்க வைத்த கண்ணகி நெடுங்காலமாய் நீதியின் குரலாகவே போற்றப்படுகிறாள்.
கணவனைப் பிரிந்து வாடிய கண்ணகியிடம் அவளது ஆரியத் தோழி பூம்புகாரில் இருக்கின்ற தெய்வ சன்னிதானத்திற்கு சென்று வந்தால் உன் துயர் தீரும் என்று சொன்னபோது கண்ணகி “கணவனிருக்க கோயிலுக்கு செல்வது கற்புடைய பெண்ணுக்கு பெருமையாகாது” என்று கூறி தன் இல்லறத் துணைவனை எந்த நிலையிலும் தன் இதயத்தில் இருந்து இறக்கி வைக்காத தூய மகளாக கண்ணகியை சித்தரிக்கிறது சிலப்பதிகாரம்.
கணிகையர் குலத்தில் பிறந்தாலும், ஒருவனையே நினைத்தாள், இணைந்து வாழ்ந்தாள், கணவன் மறைந்த போது துறவு கொண்டாள் என்றே மாதவி உயர்த்தப்படுகிறாள்.
ஆராய்ந்து பாராது, அறம் மறந்து, நீதி வழங்கிய நெடுஞ்செழியன் கண்ணகியின் கனல்விழி கண்டு உண்மையை உணர்ந்து, பின் உயர் துறந்த போது அவனுடனேயே ஆவியைப் போக்கினாள் கோப்பெருந்தோவி என்று அன்றில் பறவையை நினைவூட்டுகிறது சிலப்பதிகாரம்.
கணிகையர் குலத்தில் தோன்றினாலும் கற்பரசியாய் கோவலனுடன் வாழ்ந்து மாதவி பெற்ற மகள் மணிமேகலை, மெய்மைக்கோட்பாடுகள் அனைத்தையும் பழுதறக் கற்று பல்வேறு கருத்துக் கொண்டவர்களுடன் வாதிட்டு, தான் ஏற்றுக் கொண்ட கொள்கை கருத்துகளை நிலை நாட்டி அறத் தொண்டில் ஈடுபட்டு பசித்தோர்க்கு உணவளித்து உயிர் காக்கும் உன்னதச் செல்வியாகவே ஒளி வீசுகிறாள்.
சங்க காலத்திலிருந்தக் கவிஞர்களில் அய்ம்பது பெண் கவிஞர்களின் கவிதைகள் பெருமையுடன் பேசப்படுகிறது. அருமையான அகவுணர்வுக் கவிதைகளையும், புகழ் பெற்றப் புறப்பாடல்களையும் புனைந்து தங்களது புலமையைப் பதிவு செய்திருக்கிறார்கள் சங்க காலத்து மகளிர்.
இட விரிவு அஞ்சி இரு பாடல்களை இதயத்தில் பதிய வைத்து ஏனைய பாடல்களை உள்ளத்தில் பயிர் செய்வோம்.
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
- (இது அறிவார்ந்த பெருமாட்டி, அறச்செல்வி அவ்வையார், அரசின் - அரசியலின் அடிப்படைத் தத்துவத்தை நமது நெஞ்சில் பதிய வைக்கிறார்)
“யாயும் ஞாயும் யாரோ கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!”
- இதயங்கள் இணைவதை எடுத்துக்காட்டும் செம்புலப் பெயல் நீரார் பாடும் பாடல் இது.
“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே!
மூதில் மகளிராதல் தகுமே!
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருநல் செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிலை விலங்களி ஆண்டுப்பட்டனனே
இன்னும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடிஇ
பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோன்
செருமுனை நோக்கி செல்க என விடுமே!”
(இந்தக் கவிதையை எழிலூட்டும் எளிய விளக்கத்தோடு கலைஞர் அவர்கள் ராஜா ராணி திரைப்படத்தில் எழுதி நடிகர் திலகம் சிவாஜி பேசி நடித்தார்)
மானத்தை நிலைநாட்டும் போர்க்களத்தில் தன் தந்தையையும், கணவனையும் இழந்த பெண் தனது இள வயது மகனை போர்க்களத்திற்கு அனுப்புகின்ற ஒக்கூர் மாசாத்தியாரின் புறப் பாடல்.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே! சான்றோனாக்குதல்
                        தந்தைக்கு கடனே
வேள் வடித்து தருதல் கொல்லர்க்கு கடனே! நன்நடை நல்கல்
                        வேந்தருக்கு கடனே!
ஒளிறுவாள் அரும் சமம் முறுக்கி களிறு எறிந்து பெயர்தல்
                        காளைக்கு கடனே
இது பொறுப்புகளை உணர்த்துகின்ற பொன்முடியாரின் கவிதை.
தமிழ் மகளிரின் உள்ளம் மாண்புகள் நிறைந்தது. இயற்கை நல்கிய இனிய நிலை பெண்களுக்கே உரித்தானது. ஆம். மனிதர்களை கருவில் தேக்கி வைத்து வளர்த்து தீதற்ற மழலைச் செல்வமாக மண்ணிற்கு வழங்குவது மகளிரின் சிறப்பாகும்.
தாய்மை உணர்வின் சிறப்புகள் தழும்பி நிற்க உயிர்த்துடிப்போடு அந்தக் குழந்தைச் செல்வத்தைப் பாதுகாத்து, வளர்த்து ஒவ்வொரு நொடியும் தன் குழந்தையின் நலன் நாடும் நல்ல உள்ளத்துடன் விளங்குவது பெண்ணினம்தான். அது மட்டுமின்றி இல்லறமே நல்லறம் எனும் இனிய மொழிக்கேற்ப இல்வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பங்கெடுத்துப் பணியாற்றும் பாங்கு பாவையர் குலத்துக்கே உரித்தானது ஆகும்.
அரசர் குடியில் பிறந்த சோழர் நாட்டு இளவரசி அரசியல் அறிவு படைத்த குந்தவை நாச்சியார் காதல் திருமணம் செய்தவர். பிற்காலச் சோழர் வரலாற்றில் புகழ் பெற்ர இராசராசனை வளர்த்து, ஆளாக்கி மாமன்னன் ஆக்கியவர்.
விடுதலைப் போரில் வியத்தகு வீரம் காட்டி வீராங்கனைகளாக விளக்கியவர்கள் தமிழகத்தில் நிறையப் பேர் உண்டு. மறவர் சீமை தந்த வீரமங்கை வேலு நாச்சியார் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்தார். அந்தப் போர் நாளில் பதினாறு வயது குயிலி ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழித்து விட்டு உயிர் துறந்தாள்.
முரட்டுக்காளை ஒன்றை வளர்த்து அந்தக் காளையை அடக்குபவனையே மணப்பேன் என்று சூளுரைத்த வெள்ளையம்மாள் அடக்கிய வெள்ளையத் தேவனை மணந்தாள். போர்க்களத்தில் தன் கணவனைக் கொன்றவனை கொன்று விட்டு கணவனின் மார்பில் யர் துறந்தாள்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள வயதான பெண்கள் அந்தக் குடும்பத்தின் பெருமைக்குரியவராக உயர்த்தப்படுவர். கற்பின் நெறி உணர்ந்து ஒருவனையே நேசிக்கும் பண்பாட்டுக் கோட்பாடுகளை வழி வழியாகக் கடைப் பிடித்தார்கள் தூய தமிழ்ப் பெண்கள்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பல்வேறு நோய்க் கிருமியிலிருந்து காக்கின்ற மருந்துகளை தாங்களே உருவாக்கும் திறன் பெற்றிருந்தார்கள். பல்வேறு மூலிகைகளை பக்குவப்படுத்தும் மருத்துவ முறைகளை வழி வழியாகப் பெற்றிருந்தார்கள். அதுவே சித்த மருத்துவமாக உருப்பெற்றது. சோற்றுக் கற்றாழை, துளசி, தூதுவளை, பிரண்டை, நிலவாகை, மணத்தக்காளி, தும்பை, துத்தி என்றும் விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, மிளகு, சீரகம், இஞ்சி, சுக்கு என்றெல்லாம் எளிதான முறையில் மருந்தின் வடிவமாக்கி அதை பாட்டி வைத்தியம் என்று பெயர் வைத்து நலமளித்தார்கள் - பிறருக்கும் மருந்தை உருவாக்கும் முறையையும் இலவசமாகவே வழங்கினர்.
உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் தமிழர் வாழ்க்கை அமைந்ததற்கு சமையலில் மருத்துவத்தை இணைந்த இல்லத்தரசிகளே காரணமாகும்.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் நாளெல்லாம் ஓய்வின்றி உழைப்பது, பல்வேறு உறவுகளை பாசத்துடன் ஒன்றாக்குவது, செலவுகளை நெறிப்படுத்தி சிக்கனமாக குடும்பத்தை நடத்துவது, தன் கணவன் குழந்தைகளுக்காக தன் தேவைகளை தியாகம் செய்வதில் மகளிரின் தொண்டு குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிர்கிறது. அத்தோடு நினைவாற்றலும், நேச உணர்வும் மிகுந்த நெஞ்சத் தூய்மையைப் பெற்றது பெண்கள் இனம்.
ஏழைக் குடியில் பிறந்த பெண்கள் கூட தன் இனத்தின், தன் இல்லத்தின் மேன்மைச் சிறப்பை எடுத்துச் சொல்லும் இனிய தாலாட்டுகளையும், இரங்கல் ஒப்பாரியையும், இசைக் கூட்டிப் பாடும் எழிலைப் பெற்றிருந்தார்கள்.
தாலாட்டும்போதும், இரங்கல் நிகழ்வின் போதும் இசையோடு செய்திகளைச் சொன்னார்கள். எடுத்துக்காட்டாக இரு பாடல்கள்.
“கடல் அளந்து கப்பலிட்டு கப்பலிலே தோணியிட்டு
துறையறிஞ்சுத் தோணியிடும் சோழருட வம்முசமோ”
இது தாலாட்டு. சோழர்களின் கடற்செலவு அது வணிகத் துறையானாலும், போர்த் துறையானாலும் உலகப் புகழ் பெற்றது. அதைத் தமிழ்ப் பெண்கள் தன் கண்மணிக்கு உணர்த்துகின்றார்கள்.
வங்காளஞ் சிட்டு வயலிறங்கி மேயுதுன்னு
சிங்கார வில் எடுத்து தெறிக்கப் பிறந்தானோ       (எனது தாய் பாடியது)
வடவரின் பகைமையை தன் செல்வனுக்கு செய்தியாக சொல்லும் தாலாட்டு இது.
ஆத்தாள் மடிதனிலே அம்மான் அருகினிலே
காத்திருக்கும் பாலகரும் கண்ணான மங்கையரும்
போர் மேவிப் புறப்படுவார் பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்
யார் வருவார்? யார் மடிவார்? யாரறிவார் கண்மணியே!
பூம்புகாரின் மருவூர்பாக்கம் மறவர் குடியிருப்பிலும் மறமைச் சீமை மட்டுமல்லாது மானம் காப்போர் இல்லமெல்லாம் ஒலித்தது இந்த தாலாட்டு.
“காடு வழி நடந்தாலும் கங்கை வழி போனாலும்
கண்ணாகக் காத்தவரே கன்னியழிச்ச மன்னவரே
தனியாகப் போனீரே தவிக்க விட்டு போனீரே”                     (எனது தாய் பாடியது)
இது ஒப்பாரி. தன் இறந்த கணவனை நினைத்து இதயம் உருகிடும் இப்பாடலில் “கன்னியழிச்ச மன்னவரே” என்பது தன்னைத் தாயாக்கிய பெருமை தன் கணவரைச் சாரும் என்பதை “மன்னவரே” என்ற கூறி வாழ்க்கைத் தத்துவத்தின் வாய்மைப் பொருளை உணர்த்துகின்றார்கள்.
வரலாற்று காலத்திலிருந்து வழங்கி வரும் மேற்கண்ட பெண்ணியச் சிறப்புகளைத் தாங்கி நிற்கும் தமிழ் வியத்தகு விஞ்ஞான காலத்திலும் செம்மொழிச் சிறப்பை பெற்றிருக்கிறது என்பதை உணர முடியும்.
உலகில் எழுந்த பெண்களின் எழுச்சி:
பதினைந்து வயதே நிரம்பிய ஜோன் ஆப் ஆர்க் தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் எழுச்சி கொண்டு போராடினார். பத்துக்கு மேற்பட்டோர் அந்த பசுங்கிளியை பாலியல் பலாத்காரத்தில் பந்தாடி, தீ வைத்து எரித்துக் கொன்றனர்.
தொழிற்புரட்சித் தோன்றிப் புதிய நிலை உருவாகிய நாட்களில் அறிவியல் விழிப்புற்ற பகுதிகளில் பெண்களின் உரிமைப் போராட்டம் வெடித்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன. முப்பது வயது நிரம்பிய, சொந்த வீடுள்ள பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1853இல் நைட்டிங்கேல் பிளாரன்ஸ் செவிலியர்களுக்கான சங்கத்தை உருவாக்கினார். 1945இல் உருவான அய்நா மன்றம் பெண்களின் நிலையை ஆய்ந்து பெண்களுக்கு சொத்தில் சம உரிமையைத் தர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. பல நாடுகளில் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டது.
பல்துறைத் தகவல்கள்:
மனித குலத்தின் ஆதிநாட்களில் பெண்களே இல்லத் தலைமைப் பொறுப்புகளில் இருந்தார்கள் என்று கார்ல்மார்க்சு கூறுவதாக கார்ல்மார்க்சை ஆய்வு செய்யும் நூல்கள் கூறுகின்றன.
பெண்ணைப் பின்னுக்கு தள்ளும் நோக்கில் அறிஞன் அரிஸ்டாட்டில் கூட அவளுக்கு முப்பது பல் என்றே அறுதியிட்டான். அதை மாமேதை கலிலியோதான் உடைத்து எறிந்து, எண்ணிப் பார்த்து உண்மையைச் சொல்லி பெண்ணும் ஆணைப் போலத்தான் என்றான்.
நாடு கடத்தப்பட்டு பாரிசில் வாழ்ந்த காதல் கவிஞன் பைரன் இறந்த போது லண்டனில் நடந்த அவனது பிண ஊர்வலத்தில் தங்களின் கணவர்கள் மார்பில் பல பெண்கள் இறந்து கிடந்தனர் எனும் வரலாற்றுச் செய்தி கவிதையில் பெண்களின் ஈடுபாட்டைக் காட்டியது.
பல்வேறு படையெடுப்புகளால் விளைந்த பாழ்நிலைச் சூழல்களில் பெண்களே பெரிதும் பலியானார்கள். பழைய காலத்தில் மட்டுமல்லாது நவீன காலப் போர் வீரர்கள் தங்கும் கண்டோண்மெண்ட் பகுதிகளில் கூட தந்தைகளற்ற அனாதைப் பிள்ளைகளை அதிகம் காணலாம்.
சம்பல் கொள்ளைக்காரர்களைப் பற்றி ஸ்டேட்மெண்ட் பத்திரிக்கையின் நிரூபராய் பணியாற்றிய திரு. அருண்குமார் தத்தா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் சம்பல் கொள்ளைக்காரர்கள் உருவான சூழலை எழுதியிருக்கிறார்.
மேல்சாதிக்காரர்களின் ஆணவம், அட்டூழியங்களை எதிர்த்து தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் கிளர்ந்து போராடியதன் விளைவே அங்கே இருப்பவர்களை கொள்ளையர்களாக, கொடூரவாதிகளாக உருவாக்கியது என்கிறார். அந்த சம்பலில் ஒரு பெண்ணும் கொள்ளைக்காரியாக பூலான்தேவி வருகிறார். அவர் மனம் திருந்தி அரசியலில் ஈடுபட்ட பின்னரும் சாதி ஆதிக்கம் அவரை அழித்து விட்டது என்கிறார்கள்.
அதே தாழ்த்தப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக செல்வி மாயாதேவி, உ.பி-யில் ஆதிக்க சாதியை அன்போடு இணைத்து கொண்டு ஆளுமை செய்கின்ற ஆற்றலை இந்திய அரசியல் அரங்கம் வியந்து பார்க்கிறது.
அறவியல் ஆய்வுகளிலும், நிகழ்வுகளிலும் பெண்களின் ஈடுபாட்டிற்கு எடுத்துக்காட்டாக மேடம் கியூரி, வாலெண்டினா தெரசுக்கோவா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
அதுபோல் அரசியல், எழுத்து, கலை, அறிவியலில் வளர்ந்த மருத்துவம், பொறியியல் விளையாட்டுத் துறைகளில் புகழ் நிலை மேவிய புத்துலக தாரகைகளின் பட்டியல் மிக நீண்டு வருவதைக் காணலாம்.
பெருமைக்குரிய பெருமாட்டிகள்
காந்தியார் நடத்திய கள்ளுக்கடை போராட்டத்தை நிறுத்தச் சொல்லி அரசு கேட்ட போது காந்தியார் தன் கையில் இல்லை - ஈரோட்டில் உள்ள, இரண்டு பெண்களிடமே இருக்கிறது, அவர்கள் சொன்னால் போராட்டத்தை நிறுத்தத் தயார் என்று பெரியாரின் துணைவியார் நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மாவையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார்.
காந்தியாரோடு தென் ஆப்பிரிக்காவில் போராடி உயிர் நீத்து தியாகம் செய்த தில்லையாடி வள்ளியம்மையை பெருமைக்குரிய பெருமாட்டியாக போற்றினார் காந்தியார்.
இங்கிலாந்தில் விக்டோரியா, எலிசபெத், ஸ்பெயின் இசபெல்லா ஆகிய அரசிகளின் பெயரால் அரசுகள் நடந்தாலும் மக்கள் ஆட்சி முறையில் நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு இலங்கை பிரதமராக திருமதி. சிறிமாவோ பண்டாரநாயகா, அவரது மகள் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோர் இலங்கை பிரதமர்களாகவும், திருமதி. இந்திராகாந்தி அவர்கள் இந்திய பிரதமராகவும் நாடாண்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வளர்த்தனர்.
முடைநாற்றமெடுத்த மூட நம்பிக்கையிலும் முழுதாக மடமையிலும் ஆழ்ந்து கிடந்த தமிழர்களை மாற்றி மறுமலர்ச்சி கொள்ளச் செய்ய அறிவியக்கமான பெரியார் இயக்கத்திலும், அதன்வழி வந்த இயக்கமாம் தி.மு.க.விலும் தீரமுடன் பணியாற்றிய மூவலூர் மூதாட்டி இராமாமிர்த்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், குஞ்சிதம் குருசாமி, சத்தியவாணிமுத்து, வெற்றிச்செல்வி அன்பழகன், அருண்மொழி வில்வம், புதுக்கோட்டை தமிழரசி மற்றும் தேசிய இயங்களிலும் பொதுவுடமை இயக்கங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரிய பெருமாட்டிகளையும், மறைமலை அடிகளின் திருமகள் நீலாம்பிகையையும் வரலாறு வாழ்த்தியபடி இருக்கும்.
பாகிஸ்தானுடன் போர் நடத்தி தோற்கடித்து பங்களாதேசத்தை உருவாக்கிய திருமதி. இந்திராகாந்தி ஆற்றல்மிகு வீராங்கணையாக உலகமே போற்றி மகிழ்ந்தது.
பர்மாவில் மக்களாட்சி முறைகளைக் கொண்டு வர போராடி பல்லாண்டுகளாக சிறையில் வாடிய ஆங்சாயி சூயியை உலகம் மதித்து வருகிறது. மகா அலெக்சாண்டர் உலகம் புகழும் வீரனானது அவளது தாய் ஒலிம்பியாவின் வள்ப்பினாலேதான். மராட்டிய அரசை நிறுவிய மாவீரன் சிவாஜியின் வீரமும், திறமும் அவனது தாய் ஜீஜிபாயின் வளர்ப்பிலேதான். நெப்போலியனின் நெஞ்சில் ஜேசபைன் இருக்கும் வரைதான் வெற்றிகளைக் குவித்தான் என்கிறது நெப்போலியனின் வரலாறு.
இந்திய மதவாதிகள் வெறுக்கும் கறுப்பு நிறத்தில் ஒளிர்ந்த எகிப்திய கிளியோபட்ரோவைத்தான் அழகின் சிகரம் என்று உலகம் உச்சி மீது வைத்து மெச்சுகிறது.
தூக்கலிடப்பட்ட தன் தந்தையின் முடிவு தெரிந்தும் ஒதுங்கி வாழாமல் ஊருக்கு உழைத்த உயர் மங்கை பாகிஸ்தானின் பெனாசீர் பூட்டோ வெடி குண்டுக்கு தன் உயிரை விருந்தளித்து தனது காவலர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு தன்னை ஈந்த இந்திரா காந்தியை நினைவுபடுத்தினார்.
பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப்புலிகள், தங்கள் மக்களின் உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி உயிர் துறந்த போராளிகள் என்று உளம் திரந்த ஹிலாரி கிளிண்டன் நம் நெஞ்சில் நிலை கொள்கிறார்.
வெள்ளையர்களின் ஆட்சிக்கு அடங்கி நடக்க மறுத்த நெல்லை மாவட்டம், சிவகிரி பாளையத்தைச் சேர்ந்த வீரம்மாள் எனும் வீராங்கணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டிய கோட்டையை காத்து நிற்க பல நாட்கள் போராடினார். சூழ்ச்சிகளாலும், துரோகத்தாலும்தான் அவரை வீழ்த்த முடிந்தது.
அதே சிவகிரியைத் சேர்ந்த ஜமீன்தாரினி திருமதி. வெள்ளைத்துரைச்சி நாச்சியார் அவர்கள் திராவிட இயக்கத்தில் பெண் பெரியார் என்று போற்றப்பட்ட மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் எழுதிய “தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” எனும் நூலுக்கு செலவையும் ஏற்று அணிந்துரையும் தந்து வாழ்த்தினார்.
மாவீரன் மருது சகோதரக்களின் போர் நாட்களிலும், ஈழத்து விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் ஆயுதமேந்தி போராடிய பெண்களின் நாட்டுப் பற்றும், வீரமும் உலகம் காணாதது.
தான் சார்ந்த இயக்கத்தின் வரலாற்றை தெளிவாகத் தெரிந்து அதன் கொள்கை ஆழத்திலிருந்து கருத்து முத்துக்களை எடுத்து அளித்து சமூக எண்ணங்களையும், நடப்புகளையும் விளக்கும் ஆற்றலும், திறனும் இன்றைய இளைய சமுதாயத்தில் கவிஞர் திருமதி. கனிமொழி அவர்களுக்கு நிறைந்திருப்பதை அவரது பொழிவுகளில் காண முடிகிறது.
செல்வக் குடும்பத்தில் பிறந்த சீமாட்டி அழகிலும் அதைப் போலவே, கார்ல் மார்க்ஸை காதலித்து மணந்தார். கடும் வறுமையைச் சுமந்தார். உழைப்பவன் உயர்வுக்கு உன்னத வழி சொல்லி உலகப் புகழை அள்ளிக் கொண்ட மார்க்ஸ் திருமதி. சென்னியின் கணவன் என்ற பெருமையையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
சுயமரியாதைக் கொள்கையை கடைபிடித்து நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில் முதல் கலப்பு மணம் புரிந்த திருமதி. மஞ்சுளாபாய் அவர்கள் அந்த இயக்கத்தில் வாழ்வின் இறுதி வரை பாடுபட்டார்.
தந்தை பெரியாரின் பெண்ணியச் சிந்தனையும், தொண்டும்:
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது பெண் அடிமையும் ஒரு வகை சூத்திரத் தன்மைதான் என்பதை உலகுக்குச் சொல்லி, பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட்டார். பெண்களின் சமத்துவத்தை நிலை நிறுத்த சுய மரியாதை பெண்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி தூய தொண்டாற்றினார்.
மக்களைப் பெறும் பெண்களது நிலை பலவீனமாகவே இருக்கும். ஆகவே, அதைத் தடுத்து நிறுத்த பெண்களை ஆணுக்கு சரி சமமாக ஆக்குவதற்காக குழாய்க் குழந்தைச் சிந்தனையை 1927லிலேயே உலக மருத்துவர்களுக்கு தோன்றாத காலத்தில் வெளியிட்டார். பெண்களின் நிலை பற்றி பெரியார் நிறைய நிறையவே எழுதினார்.
தொடர்ந்த, தொய்வற்ற பரப்புரையால் பெண்களிடையே விழிப்புணர்வு தோன்றியது. பற்பல மகளிர் பெரியாரைப் பின்பற்ரி மகளிர் நலனுக்காக உழைத்திட முன் வந்தனர். பெரியார் எனும் சிறப்பு பட்டத்தை ஒரு மகளிர் மாநாட்டில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு வழங்கினார்கள்.
சுயமரியாதை மாநாடுகளில் பெண்களின் சமத்துவத்திற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தை மணம் தவிர்ப்பது, விதவைத் திருமணம் நடத்துதல், தேவதாசி முறை ஒழிப்பு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தால் பொட்டுக் கட்டும் வழக்கத்தை எதிர்த்து போர் முழக்கம் ஒலித்தது. பெரியாரைப் பின்பற்றிய மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் பல இடங்களில் போர்க்குரல் எழுப்பினர்.
பெரியாரின் ஆதரவைப் பெற்ற நீதிக் கட்சி தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்து வேதங்களால் வீழ்த்தப்பட்ட பெண் உலகுக்கு விடியலைக் காட்டி தன் நெஞ்சுரத்தை வெளிப்படுத்தியது.
மூட நம்பிக்கைகளை மூழ்கடித்து மகளிர் உள்ளத்தில் மாற்றங்கள் தோன்ற மாசற்று பணியாற்றிய வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களை எளிதில் மறக்க முடியாது.
அண்ணாவின் படைப்புகளில் பெண்கள்:
அண்ணாவின் படைப்புகள் மனதை அள்ளுவதாகவே அமைந்திருந்தது. பெண்களின் நிலை பற்றி நெஞ்சக் கவலையோடு அண்ணா எழுதிய பல்வேறு படைப்புகள், படிப்பவர்கள் உள்ளம் பெண்களிடம் பரிவும், பாசமும் காட்டுகின்ற வகையில் சிறந்திருந்தது.
பார்வதி பி.ஏ. எனும் படைப்பு பெண் கல்வியை, பெண் கல்வியால் ஏற்படும் மன உறுதியை, மாற்றத்தையும் படம் பிடித்தது.
“வேலைக்காரி”யில் ஏழையாய்ப் பிறந்த ஆண், பெண் பணம் படைத்த ஆண், பெண்ணிடையே காதலைப் புகுத்தி சமத்துவ நிலைகளை வெளிப்படுத்தினார்.
பணக்கார வாலிபனால் ஏமாற்றப்பட்டு கைக் குழந்தையோடு தவித்த ஒரு பெண்ணுக்கு அவளின் தாய் தாலி ஒன்றைக் கட்டி அவளை ஊருக்குத் திருமணமானவள் என்று தாய் மகளுக்குக் கட்டிய தாலி எனும் படத்தில் போற்றினார். இந்த சிறுகதை எழுத்துலகில் ஒரு புதுமையானது (தலைப்பு சொல்லாதது).
சல்லாப வெறி கொண்ட சமீன்தாரரிடம் சலனத்தால் ஏமாந்த பெண்ணின் வேதனைகளைக் காட்டி, நெஞ்சுரம் கொண்ட பெண்களை நிமிர்ந்து நடை போடச் சொன்னார் ஒரே இரவில் எழுதிய “ஓரிரவு” படத்தில் அண்ணா.
மற்றும் பல்வேறு படைப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமை - வளர்ச்சிக்கு வாதாடி வஞ்சியர் வாழ்வில் பாசமிகு சூழலை உருவாக்கப் பாடுபட்டார் அண்ணா அவர்கள்.

புகழ்பெற்றப் “பாரசக்தி”யில் ஓர் இடர்பாடான சூழலில் ஏமாந்த அந்த இளைஞன் தன் தங்கை கல்யாணியின் நிலை கண்டு தவறு செய்யத் தூண்டப்படுகிறான். ஆனால் அவனைத் திருத்தி சமூகப் பொறுப்புகளை உணர்த்தி, சிதைந்து திசை மாறிய அவனது குடும்பத்தையும் விமலா என்ற பெண் ஒன்று சேர்த்ததாகக் காட்டி நம்மைக் களிப்படைய வைத்தார்.
“மனோகரா”வில் தாய்மைச் சிறப்புள்ள பத்மாவதி என்னும் பெண்ணைப் படைத்து விலங்குகளால் பிணைக்கப்பட்ட தன் மகனுக்கு வீரச் சொற்களால் உணர்ச்சியூட்டி, விலங்குகளை உடைத்தெறியும் வலிமையைக் கொடுத்தார் கலைஞர் அவர்கள்.
“திரும்பிப் பார்” எனும் படைப்பில் அழகிய பெண்களை, மலர்களைக் கசக்கி பிழிவது போல அலங்கோலப்படுத்திய ஒரு கேடு கெட்ட கீழ்மகனை அவனது சகோதரியே “உனக்கு பெண் தானடா வேண்டும், இதோ என்னை எடுத்துக் கொள்ளடா இழிந்தவனே” என்று கேட்டு அந்த அயோக்கியனை திருந்தச் செய்தார்.
தனது திரைப்படங்களிலும் பல்வேறு படைப்புகளிலும் பெண்ணைப் பெருமைப் படுத்திய கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் பற்பல சட்டங்களை இயற்றி பெண் குலத்தின் உயர்வுக்கு பெரும் பணியாற்றினார்.
காவல் நிலையங்களில் பல்வேறு கற்பழிப்பு நிகழ்வுகளை தடுக்க மகளிர் காவல் நிலையங்கலை முதன்முதலில் உருவாக்கினார். பெண்களின் துயர் நீக்கம் பொறுப்பை பெண்களுக்கே உரியதாக்கினார்.
பெண்களின் பேறுகாலத்திற்கு முன்பும், பின்பும் தாயும், சேயும் நலம் பெறும் வகையில் உதவித் தொகை வழங்கி மகளிர் இனத்தை மகிழ்வித்தார்.
உள்ளாட்சித் துறையில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, எட்டாவது - பத்தாவது - பன்னிரெண்டாவது வரை படித்த பெண்களுக்கு திருமண  உதவித்தொகை வழங்கி வாழ்வில் இருள் சூழாமல் ஒளியேற்றினார்.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை தந்து 1989இல் சட்டம் இயற்றினார்.
1929இல் அதாவது அய்நா மன்றம் தீர்மானத்திற்கு முன்பே சுயமரியாதை இயக்கத்தின் “செங்கல்பட்டு தீர்மானம் இது” என்று தனது மனத் தித்திப்பை வெளிப்படுத்தினார் கலைஞர்.
ஒரு முறை கலைஞர் அவர்கள் ஒரு கவிதையைப் படித்து விட்டு எழுதினார்: “விதவை என்ற சொல்லுக்குக் கூட பொட்டில்லையே என்று வருந்தினான் ஒரு இளங்கவிஞன்”. “கைம்பெண் என்று தமிழில் எழுதிப் பார் தம்பி ஒன்றுக்கு இரண்டு பொட்டு கிடைக்கும்” என்றார்.
தற்கால உலகில் தமிழ்ச் செம்மொழி என்பதற்கு பெண்ணியத்தைப் பெருமைப்படுத்தும் கலைஞரின் இந்தக் கருத்தே போதுமானது.
பாவேந்தரின் கவிதைகள்:
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணின் சிறப்புகளை ஒரு சிறந்த காவியமாகவே படைத்திருக்கிறார். அதிகாலை எழுந்து இரவு வரை தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு பெண் ஆற்றுகின்றப் பணிகளைப் பட்டியலிட்டு அந்தப் பெண்ணை குடும்ப விளக்கு என்கிறார். அந்தக் குடும்ப விளக்கின் முதிய நிலையை மிக அழகுபட, அதே நேரம் பாசம் இழைத்தோடும் பாவத்தோடு நம்மிடையே பதிவு செய்கிறார்.
காதலித்து, கருத்தொருமித்து வாழ்ந்த அந்த இருவரின் வாழ்வின் இறுதி நாளில் வழிந்தோடும் அன்புப் பெருக்கைக் காட்டுகிறார்.
ஏறத்தாழ நூறு வயதைத் தொடும் அந்தக் கிழவர் இருமுகிறார். அவருடன் வாழ்ந்த அந்த பெருமாட்டி அதைக் கேட்டு தவழ்ந்து, தவழ்ந்து அருகே வந்து அமர்ந்து பார்ப்பதை பாவேந்தர் பாடுகின்றார். அதன் அழகைப் பார்ப்போம்.
“காற்றில் சருகு போல் தவழ்ந்து வந்தாள்
அருகருகே இருவர் செயல்தான் இல்லை
இருப்பினும் இவள் இருப்பதொன்றே எனக்கு இன்பம்!”
பெண் கல்வியை இப்படிக் கூறுகிறார்.
“தலைவாரி பூச்சூட்டி உன்னை பாடசாலைக்கு போ என்று
            சொன்னாள் உன் அன்னை
மலை வாழைகுலையல்லவோ கல்வி வாயார அள்ளி
            உண்ணுவாய் என் புதல்வி”
“தெய்வம் தொழ அர் கொழுநன்தொழுதெழுவாள்ஞ
பெய்யெனப் பெய்யும் மழை”
இந்தக் குறளுக்கு,
விரும்புகின்ற நேரத்தில் மழை பெய்தால் எவ்வளவு நலன் தருமோ அந்த மழையைப் போல் பயன் தருபவள் பெண் என்றார் பாவேந்தர்.
“காதலுக்கு வழிவகுத்து, கருப்பாதை சாத்துததற்கு வழி ஒன்றுகண்டறிவோம் வாழ்வதற்கே பிள்ளை சாவதற்கோ பிள்ளை”
என்று பெண்களின் பாதுகாப்பைப் பாடினார் பாவேந்தர்.
முடிவுரை
பெண்ணின் வளர்ச்சி:
அறிவியல் பெருமளவு வளர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பும், வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும், நியாயமான வழிகளில் அவர்களது உரிமைகள் காக்கப்படவில்லை என்ற நிலை நீடிக்கவே செய்கிறது.
இயற்கையில் பெண்ணுக்குள்ள இடையூறுகள் கருத்தில் கொண்டு குறிப்பாக மகப்பேறு நிலையைக் கருதி, பரம்பரைச் சொத்தில் ஆண்களை விட 10 விழுக்காடு அதிகம் தர வேண்டும்.
பெண்களை இழிவுபடுத்தும் புராண இதிகாசங்கள், காவியங்கள், படைப்புகளை எல்லா நாடுகளும் தடை செய்ய வேண்டும். பெண்ணியத்தின் சிறப்புகளை சித்தரிக்கும் காவியங்கள் படைப்புகளை உலக தேசிய இனங்கள் தங்களுடைய உடமையாக்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களை உலகப் பொதுவுடைமையாக்கி அ.நா. மன்ற் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பாலியல் உணர்வு பெண்ணுக்கு அதிகம் என்பதால் விபச்சார வழக்கில் அவளை விடுவித்து விட வேண்டும்.
பெண்ணுரிமை என்பது மதத்திற்கு மதம், நாட்டிற்கு நாடு வேறுபடாமல் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக அமைந்திட எல்லா நாடுகளும் சட்டம் இயற்றுவது அவசியமாகும்.
பெண்ணுரிமையைப் பேணாது, பெண்ணுரிமையைப் பறிக்கின்ற நாடுகள் மீது மற்ற நாடுகள் படையெடுத்து பணிய வைக்கும் நிலை தோன்றுவது நலமாகும்.
மனித குலம் தழைத்திட பெண்ணும், அவள் உரிமைகளும் காக்கப்பட வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.
பெண்ணியச் சிறப்பை பேசுவோம் - பேணுவோம்

வாழ்க பெண்ணியம்!

No comments:

Post a Comment