19. பொன்னும் உன்னிடம் தோற்றுவிடும்!
கலைச் சிலையே! ஒளிச் சுடரே!
புகழ் மலிந்த புதுக் கருத்தே!
புன்னகையால் மனதை அள்ளும்
பூந்தளிரே! புது மணமே!
வண்ணம் குவிந்த வான வில்லே! வளர் நிலவே!
வரலாற்றுப் பெருஞ் சிறப்பே!
வாழ்க அய்யா! வாழ்க பல்லாண்டு!
உலகப் புதுமையாய் ஒரு நிகழ்வு நடந்த நாளில்
உன்னைக் காண ஓடி வந்தேன்!
அமெரிக்காவின் அதிபராக
அடிமையென்று இகழப்பட்ட
கறுப்பினத்தில் பிறந்த மகன்
பராக் ஒபாமா என்ற உயர் மனிதன் வெற்றி பெற்றான்!
வரலாற்றின் சிறப்பாக
அதிக மக்கள் ஆதரவுடன்
அமெரிக்கத் தலைவரானார் ஒபாமா
அடிமைகளாய் நடத்தப்பட்ட
அமெரிக்க கறுப்பர்களிடம்
அன்பு காட்டும் நிலை தோன்றியது
அமெரிக்காவில் புதுமைதான்!
இனிய நிலை தோன்றிய இந்நாளில்
இதயத்தி“ல ஒரு காட்சி ஒடத் தொடங்கியது
கடந்த காலம் கண்ணில் தோன்றியது
கறுப்பர்களின் கடின வாழ்வை
காட்டு விலங்காய் நினைத்த நாளின்
காட்சிகள் கண் முன்னே விரிகிறது
அடிமைகளின் விலங்கொடித்த
ஆபிரகாம் லிங்கன் எனும்
அன்பு சுரக்கும் அருளாளனை
அமெரிக்க நிற வெறிக் கொடுமை
கொன்று குவித்தது
அறநெறிக்கு மாறுபட்ட
நிலை மாற்ற நெடுநாட்களாக
நிறை மனிதர் பலர் போராடினர்
மார்ட்டின் லூதர்கிங் எனும்
மாண்பு நிறை மாமனிதர்
கல்வியிற் சிறந்த கலைவாணர்
அருள் நிறைந்த பேரறிஞர்
கறுப்பர்களின் துயர் நீக்க
காலமெல்லாம் கவலை கொண்டார்
அடிமைகளின் நிலை உயர்த்த
ஆன மட்டும் போராடினார்
கழிகின்ற ஒவ்வொரு நொடியையும்
கறுப்பு மக்களின் உயர்வுக்கே கழித்தவர்
நெஞ்சமெல்லாம் அறநெறியை
நிறைத்து வைத்த நேர்மையாளர்
காந்தி மகான் வழித் தடத்தில்
கண் பதித்து வழி நடந்தார்
உலக மக்களின் உள்ளத்தில்
ஒளிச் சுடராய் பரவி நின்றார்
உரிமைக்கே போராடிய
உத்தமர் லூதர்கிங்கின்
உயிர் பறித்தார் அன்பு நெறி மறந்து
அந்த உத்தமர் வழித் தோன்றல்
அமெரிக்க அதிபரானார் இன்று!
அனைத்து அமெரிக்கர்களின்
அமோக ஆதரவோடு
அரியணை மீதமர்ந்து
ஆளப்போகிறார் ஒபாமா!
இர்விங் வாலஸ் எழுதிய
தி மேன் எனும் நூல் ஒன்றை
வெள்ளை மாளிகையில் கறுப்பு
மனிதர் என்று
கனிச் சுவையை விஞ்சுகின்ற
ஏடு ஒன்றைத் தந்தார் தமிழில்
தமிழருக்கு ஏற்றமளித்த இதய வேந்தன்
புகழ் உலகில் ஒளி வீசும்
அறிஞர் அண்ணா!
வெள்ளை மாளிகையில்
கறுப்பு மனிதன் பெற்ற
வேதனைகளை வெளிப்படுத்தினார்
கற்றவர்தாம் அவர் என்றாலும்
கடமை தவறாவதர் என்றாலும்
கண்ணியமுள்ளவர் என்றாலும்
கட்டுப்பாட்டின் சின்னம் என்றாலும்
நிற வெறி உணர்வாளர்கள்
அவர் நெஞ்சை புண்ணாக்கினர்
என்றெல்லாம் குறிப்பிட்டு
இங்குள்ள கொடுமைகளையும்
எடுத்துச் சொன்னார் அண்ணா
பிறந்தபோது ஒருமை உள்ளவரை
பிரித்தாண்டு கொடுமை செய்தார்
மேல் என்றும் கீழ் என்றும்
பேதப்படுத்தி வேதனை தந்தோர்
முகத் திரையைக் கிழித்தார் அண்ணா!
அண்ணா காட்டிய கறுப்பு மனிதன் போல்
பராக் ஒபாமா நடத்தப்படுவாரா?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மாற்றங்கள் எங்கும் மலர்கின்றன
மாறும் நிலை ஒன்றே மாறாதது
மற்றதெல்லாம் மாறும் என்றான் மார்க்ஸ்
வளரும் நோக்கில் எதுவும்
மாற வேண்டும் என்பதே நமது ஆசை
எரிமலையின் வாசலில் நிற்கும்
ஈழத் தமிழர் நிலை மாற வேண்டும்
இந்திய அரசால் அது ஆக வேண்டும்
தமிழனுக்கென்று ஒரு அரசு இல்லைஅது
இந்தியாவில் இணைந்திருக்கின்றன
தமிழனுக்கென்று ஒரு படை இல்லைஅது
இந்தியாவோடு பிணைக்கப்பட்டிருக்கிறது
இலங்கையில் இனப் படுகொலை நடக்கிறது
இனத்தைக் காப்பாற்ற வக்கில்லை வழியில்லை
இந்திய அரசோ தமிழருக்கு
எதிர் அரசாய் இயங்குகிறது
அமெரிக்கக் கறுப்பருக்கு
அரசுரிமை கிடைத்திருக்கிறது
அந்தோ ஈழத் தமிழன் நிலை என்ன?
இதயம் அழுகிறது, இமைகள் மூட மறுக்கிறது
என்ன செய்வோம்? எங்கு செல்வோம்?
உரிமைப் போராளிகளே உங்களுக்குத் தெரியாதா?
உலக அரசுகளே உறங்குவது சரி தானா?
உயிர் பறிக்கும் செயலுக்கு
ஊக்கம் அளிக்கலாமா?
உலகோரே உணர்வீர் இன்றே!
இனிமையின் ஊற்றே!
இலட்சியப் போர் பாட்டே!
இசை வடிவே! எழிலே!
தூயவராம் உன் தாயின் தாத்தாவை
ஆர்த்தி மருத்துவமனையில்
பார்க்க வந்த போது உனைப் பார்த்தேன்
போர் நெறி காட்டும் தோள்களில்
பொன் மாலை அணிந்திருந்தாய்!
புன்னகையில் ஒளி சிந்தும் பேரழகே!
பொன்னும் உன்னிடம் தோற்று விடும்!
உன்னாலே பொன்னொளி அழகு பெற்றது
புது மலராய் உன் முகம் ஒளி காட்டியது.
No comments:
Post a Comment