Friday 30 January 2015

மாலையில் வீசிய மறுமலர்ச்சிப் பூங்காற்று

மாலை நேரத்துக் கல்லூரியாக மகத்தான வரலாறுகளையும், இனம் மொழி பண்பாடு அது சார்ந்த அனைத்து நுட்பங்களையும் விளக்கும் மாசற்றப் பல்கலைக் கழகமாக, ஓர் அமைப்பு ஏறத்தாழ அறுபத்து ஆறு ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்திற்கோர் எடுத்துக்காட்டாக, ஏன் உலக நாடுகளுக்கோர் முன்னுதாரணமாக நல்ல பல சாதனைகளைப் புரிந்து நடைபோட்டு வருகிறது.

நாடு போற்றும் நல்லதோர் இயக்கத்தை உருவாக்கியவரும், அவரைப் பின்பற்றியவர்களும் உலகத்தின் ஒட்டு மொத்தச் செய்திகளை அறிந்தோராக, அதை வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்கோராக, நுண்மான் நுழைபுலம் என்பார்களே அதுபோல அனைத்து அறிவு பெற்ற சான்றோர்களாக விளங்கினர்.

ஈடில்லா மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கிய அந்த இனமான அமைப்பை தோற்றுவித்த தலைவர் அறிவுலக மேதையாக விளங்கினார். அவரைப் பின்பற்றிய இளைஞர்களை தம்பி, என அழைத்து அவரைப் போலவே அனைத்து ஆற்றலையும் பெறும் வகையில் வழி காட்டினார்.

இனிய தமிழகத்தின் இடைக்கால இழிவு; அது இருபதாம் நூற்றாண்டின் கால் பகுதியின் முடிவுவரை இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிட , மாசற்ற உள்ளத்தோடு மக்களைத் தொடுகின்ற வகையில் அந்த இயக்கத்தின் இயலை ,- இயங்கும் முறையை அமைத்தார் அந்த மாசில்லா மாமேதை அண்ணா அவர்கள்.

தமிழனின் பொற்காலம் என்று கருதுகின்ற சங்ககாலச் சிந்தனைகளின் ஒளியை மறைத்த பண்பாட்டுப் பகைவர்கள் அன்னியத் தன்மைகொண்ட, அறிவுக்கு மாறான கொள்கைகளை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழர்களின் உள்ளங்களில் புகுத்தி வரலாற்றில் வற்றாத சோகத்தை உருவாக்கி விட்டார்கள். தமிழனும் அதற்கு உடந்தையாகி விட்டான்.

தொல்காப்பியம் ஆய்ந்த அறிவியல் சார்ந்த அய்வகை நிலை, ஆறறிவு உயிர்கள், உடலிள்ள அய்ம்பொறிகள், இயற்கையின் அய்ந்து பூதங்கள் என்றெல்லாம் அறிவுக் கருத்துகள் மனித வளர்ச்சிக்கு பயன்படாது போயிற்று.

சங்க காலத்தில் உருவான வாதப்பிரதிவாத முறைகள் மறைக்கப்பட்டு ஆணையிட்டால் அடங்கும் நிலை தோன்றி வளர்ந்தது.

சங்க காலத்தில் தோன்றிய பல நூல்கள் காணாமல் போனது. முதுநாரை - முதுகுருகு எனும் இசையோடு கூடிய இலக்கியங்களை இல்லாமலே ஆக்கி விட்டார்கள். மதிவாணர் நாடக நூலின் தோற்றத்தை தொலைத்து விட்டார்கள்.

அன்னியத் தன்மைக்கு ஆட்பட்டு அடிமையாகிப் போன தமிழனின் அக்கறையற்ற தன்மையால் முடிந்தளவு அறிவார்ந்த நிலைகொண்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்குகளில் சில, அய்ம்பொரும் காப்பியங்கள் எல்லாம் பயன்படாத பண்டமாக ஆகிப்போனது.

தமிழனின் இயல்புக்கு மாறான இதிகாசங்கள், இலக்கியங்கள், அதன் புறக் காட்சிகள் எல்லாம் அவனை வளரவிடாத வடிவங்களாகவே அமைந்து விட்டன.

உலகில் எல்லாவகையிலும் முன்னோடியிருந்த தமிழன் இருபதாம் நூற்றாண்டு தொடங்கும்வரை ,ஏழையாய் ஏதுமறியாத அப்பாவியாகவே வதிந்தான்.

அகம், புறம் அறம், பொருள், இன்பம், இயல்-, இசை,-நாடகம். நாட்டின் கொடிச் சின்னம் வில்,- புலி, -கயல் என்று அரசமைத்து வாழ்ந்தவன். மானத்தை நிலைநாட்டும் போர்க்கள வீரனாக விளங்கியவன் பசனை பாடி பகுத்தறிவற்றவனாக, பக்குவமே இல்லாதவனாக, அறியாமையில் ன்ற அப்பாவியாக உலக மொழி அகராதிகளில் கூலியென்று குறிப்பிடுத்தக்கவனாகவே இருந்தான்.

தமிழுக்கு தொடர்பு இல்லாத சாதி மத சாஸ்திரம், சோதிடம், கடவுள் ஆகிய தன்மையோடு தலையால் பிணைக்கப்பட்டு கிடந்தான். அகம், புறம் என் வாழ்ந்தவன் இகம்பர சுகம் தேடும் சோம்பேறியாய் மாறிப் போனான்.

இதையெல்லாம் மாற்றும் நோக்கத்தோடு தமிழனை சுயமரியாதைக்காரனாக உருவாக்க தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தில் பல பேர்கள் பணியாற்றினார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரி, கி..பெ. விஸ்வநாதம், ஜீவானந்தம் போன்றவர்கள் பணியாற்றிய அந்த இயக்கத்தில் முப்பது வயது இளைஞனாக சேர்ந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பெரியாருடன் இணந்த அண்ணா அவர்கள் அந்த இயக்கத்தில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அவருடைய பேச்சையும் எழுத்தையும் அமைத்துக் கொண்டார்.

பொதுவாகக் கருத்துகளை சிந்தனைகளை வெளிப்படுத்தும் நேரம் மாலை தொங்கி நள்ளிரவு வரை என்பது வழக்கமாக இருந்தது. கல்வியோ தெளிவோ இல்லாத நாட்களில் இதயத்தில் எழும் எண்ணங்களை, கருத்துகளை பல்வேறு வகையில் வடிவங்களில் வெளிப்படுத்தும் நேரம் மேற்கண்ட நேரங்கள்தான்.

விஞ்ஞானம் வளரா நாட்களில் வெயில் காலங்களில்தான் கோவில் கொடைகள் கொண்டாட்டங்கள். அது தொடர்பான் கலை நிகழ்ச்சிகள் காட்சிகள் எல்லாம் நிகழும். வெயிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்து கொட்டுவதை வீட்டிற்குள் முடங்கி தாங்க முடியாமல் தவிக்கின்ற நாட்களில்தான் நள்ளிரவு தாண்டி, கடற்காற்று எழும்வரை நிகழ்ச்சிகள் தொடரும். ஆனால் இந்தக் கருத்துரைகள் எல்லாம் வாழ்க்கை வளத்திற்கு பயன்படுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மையாக இருந்தது.

இதுபோன்ற நேரங்களில்தான் சுயமரியாதை இயக்க நாட்களிலும் பின்னர் திமுக உருவான காலத்திலும் அண்ணாவும் அவரைப் பின்பற்றும் தோழர்களும் தமிழரிடையே ஓர் அமைதிப் புரட்சியை உருவாக்கினார்கள்.

வெப்பத்தால் வியர்த்து புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு மாலையில் தென்றல் வந்து தழுவினால் மகிழ்ச்சியடைவதைப் போல பலவேறுப் புழுக்கத்தில் கிடந்தவனுக்கெல்லாம் அண்ணாவின் மாலைநேரத்து மேடைப் பேச்சு மகிழ்ச்சியை மனமாற்றத்தை உருவாக்கத் தலைப்பட்டது.

அண்ணாவும், அவரைப் போன்றே அச்சான அருமைக் கலைஞரும், அன்புப் பேராசிரியரும், அந்தநாள் நல்ல நாவலரும், நாஞ்சிலார் போன்ற நாவுக்கரசர்களும் ஆசைத்தம்பி, மதியழகன், சிற்றரசு போன்ற நாவளம் கொண்டவர்களும் இன்னும் ஏராளமான பேச்சாளர்களும் மாலை நேரத்தை மாசற்றக் கொள்கை கருத்தை பரப்புகின்ற மகத்தான் நேரமாக்கினர்.

அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்பட்ட பல்வேறுச் சிந்தனைகள் கருத்துக்களையெல்லாம் இங்குள்ள, நகரங்கள், பேரூர்கள், சிற்றூர், பட்டி தொட்டி, ஊர்களில் உள்ள தெருக்கள், சந்தைக் கூடங்கள், சந்து முனைகள் எல்லாம் தரம் குறையா வகையில் பேசப்பட்டன.

பெருமைக்குரிய நாடகாசிரியரான சேக்ஸ்பியர் பெருங்கவிஞன் ஷெல்லி, பெருமகன் பெர்னாட்ஷா, பெட்ரானட் ரஸ்ஸல், இனிய கருத்தாளன் இங்கர்சால், பிராட்லா, லியார்னாடோ - டாவின்சி, லியார்னோடா புருனோ, வொர்ஸ்வொர்த், கிப்பன், ஆல்வா எடிசன் மற்றும் பலப்பல அறிவியல் மேதைகள்.

பொது உடைமைப் புதுமை தந்த கார்ல்மார்க்ஸ் மற்றும் பல பொருள்தந்த பெருமக்கள், புதுமைக் கருவிகளைப் பொங்கித் தந்த புதுமையாளர்கள், புகழ் மனிதர்கள் பிரஞ்சுப் புரட்சி, தொழிற்புரட்சி, அமெரிக்க உள்நாட்டுப் புரட்சி, சோவியத்தின் தொழிலாளர் பெரும்புரட்சி, துருக்கியின் கமால்பாட்சா சீனத்தின் சன்யாட்-சென் என்றெல்லாம் தமிழரின் ஏற்றத்திற்கான எடுத்துக் காட்டுகள் எண்ணற்ற வகையில் எடுத்துரைக்கப்பட்டன.

உலக இலக்கியங்கள் உலகப் புரட்சிகள், புதுமைகள், மதம் கண்ட மகான்கள், மதம் கொன்ற மகான்கள், மாசற்ற போர் வீரர்கள், ஒப்பில்லாத தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியங்கள் எனவும் கலை வடிவ இன மொழித் தளைகளையெல்லாம் மீட்டெடுத்து தமிழனை ஓர் எழிலார்ந்த மனிதனாக மாற்றுகின்ற முயற்சியில் முடிந்த அளவு அண்ணாவின் உண்மைத் தம்பிகள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.

அண்ணாவை அணு அணுவாய் புரிந்து புகழ்மிகு தொண்டாற்றிய தலைவர் அண்ணாவின் எண்ணங்களை நிறைவு செய்ய போராடி வருகிறார். மொத்த தமிழர்களும் முழுமையாகப் புரிந்து கொண்டால் (அவரது பிள்ளைகளையும் சேர்த்துதான்) எழிலார்ந்த தமிழகம், ஈடில்லா தமிழகம், எழுச்சி கொண்ட தமிழகம், ஏற்றமிகு தமிழகம், மானமிகு தமிழகம், மாசில்லா தமிழகம் மிக அருகில் தோன்றுவது எளிதாகும்.

    அண்ணாவை அண்ணாவாகவும் தலைவர் கலைஞரை கலைஞராகவும் நாளும் நாளும் உணர்ந்து வந்தால், அண்ணாவும் அவரது இயக்கமும் பலவேறு மேடைகளில் விதைத்த விளைவித்த கருத்துகள் - கொள்கைகள் மாலை நேரத்தில் வீசிய மறுமலர்ச்சி பூங்காற்று என்பதை உணர முடியும், உணர வேண்டும்.