Tuesday 20 September 2016

பரத்தையரின் இதழ்ச் சுவையில் பரவசமடைந்த பாவலர்கள்

பரத்தையரின் இதழ்ச் சுவையில் பரவசமடைந்த பாவலர்கள்
நிறைய நூல்களைப் படித்து நெஞ்சில் பதிய வைத்து நினைக்கின்ற போதெல்லாம் இதயத்தை இனிக்க வைக்கும் இயல்புகள் என் விழிமுன் இரண்டு நூல்கள் தன் முகம் காட்டி முறுவல் செய்தது.
மணிமேகலையை ஆய்வு செய்த அறிஞர்களின் கட்டுறைகளைத் தாங்கிய மணிமேகலை ஒரு மக்கள் இலக்கியமென்ற நூலொன்று வரலாற்றில் தேவதாசிகள் என்று நிறைய நிறைய செய்திகளைச் சொல்லும் நூல் மற்றொன்று.
தமிழை தமிழகத்தைப் பற்றிய எத்தனையோ நூல்களை படித்து மகிழ்ந்த எனக்கு இந்த இரண்டாவது நூல் தரும் செய்திகள் அகம் முழுவதையும் அவலத்தில் ஆழ்த்தி அழுத்தி அழ வைத்தது.
ஆண்டாண்டு காலமாக நின்று நிலைபெற்ற பரதத்தை உலகத்தை ஒட்டு மொத்தமாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்கிறார் இதன் ஆசிரியர்.
எல்லா நாட்டு இலக்கியங்கள் வரலாற்றில் பதிந்து நீக்கமற நிறைந்திருப்பதை நிரல் படுத்திக் காட்டுகிறார் இந்த ஆய்வாளர்.
அதில் குறிப்பாக தமிழகத்தின் பரத்தையர்களை காட்சிப் பொருளாக்கி இந்தப் பரத்தையர் உலகம் உருவான காரணிகளையும் அதன் தோற்றங்களையும் தொட்டுக் காட்டுகிறார்.
வேதமோகிகள் இங்கு கற்பனையாய் கற்பித்த இந்திரலோகத்தில் நிகழ்ந்த ஒரு விளைவாகத்தான் இந்த தேவதாசிகள் எனும் நிலை தோன்றியது. அது பின் பரத்தை உலகமாக உருவெடுத்து என்று ஆதராங்களை அள்ளித் தெளிக்கிறார்.
பின் கற்பனை வடிவான சைவ மதத்தின் நாயகன் சிவபெருமானின் ரிஷிபத்தினிகளின் காமசேட்டையால் பல்கிப் பெருகி ஒரு குலமாகி பின் பிறவிச் சாதியானது என்கிறார்.
அதில் சில மாமேதைகளையும் பரத்தையர் இல்லத்தின் மாசு நீக்க அந்தக் குலமங்கையரின் தொண்டறத் தூய்மையை நிலை நாட்டுகிறது.
சங்க காலத்திற்கு பின் வந்த மன்னர்களும் புலவர்களும் பரத்தையர்களின் பாதத்தில் தலை வைத்து அவர்கள் அங்கம் முழுவதையும் அணு அணுவாய் சுவைத்து அதன் சுகானுபவன்களை மக்களும் துய்த்து இன்புற கோவில்களையும் அதன் தல புராணங்களையும் உருவாக்கி மானத்தோடு வாழ்ந்தவனை மடமைப் படுகுழியில் தள்ளி மகிழ்ந்தார்கள்.
இந்த நூல்தரும் செய்திகளை விரித்து விவரிப்பதென்றால் நீட்டோலைகள் நெடிதுயர்ந்து குவிந்து விடும்.
ஆகையால் சில செய்திகளை சொல்வது நினைவில் நிற்க உதவும் என்று கருதுகிறேன்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே இந்தத் துணைக் கண்டம் முழுவதும் நிறைந்திருந்த சைவ மதத்தைப் பின்னுக்குத் தள்ள வைணவ பார்ப்பனர்கள் பல்வேறு முயற்சிகளை தொடங்கி தொடர்ந்தார்கள்.
புத்த சமண சமயத்தை புதைகுழியில் போட்டு புதைத்த வைணவப் பெரும்புலவர்கள் சைவத்தையும் ஓரங்கட்ட ஓயாது சதி செய்தனர்.
திருக்கோட்டியூர் கோபுரத்தில் இருந்து குதித்து உயிர் விட்ட இராமானுஜர் இதற்கான தொடக்கப் புள்ளியாய் திகழக் காணலாம்.
இங்குள்ள சைவச் சின்னங்கள் பலவற்றை மாற்றியவர் அவர்தான் என்கிறது பல்வேறு ஆய்வுச் செய்திகள்.
பல்வேறு மன்னர்கள், சிற்றரசர்கள் நில உடமையாளர்களை தம் வசப்படுத்தி ஊர்தோறும் இராமாயணச் சாவடிகளை உருவாக்கி அதில் இராமாயணப் பாரதம் பாகவதத்தை பரப்பி நின்றார்கள்.
ஏற்கனவே பகவான் கிருஷ்ணன் போதித்த நால்வகை சாதியை நாலாயிரச் சாதியாகப் பல்கிப் பெருக்கச் செய்தவர்கள் (இந்தியாவில் எட்டாயிரம் சாதிகள் இருப்பதாக டாக்டர் மா.இராசமாணிக்கனார் கூறுகிறார்) இந்தப் வைணப் பிரச்சாரர்கள்தான் என்பதை ஆய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இந்த வைணவ பரப்புரைகள் இன்றுவரை ஏராளமாக இடம் பிடித்திருக்கக் காணலாம்.
அறிவியல் பூத்த இந்தக் காலத்தில்கூட பிழைப்புணர்வு கொண்டவர்கள் பித்தம் மனம் படைத்தவர்கள் பேரளவுக்கு ஈடுபாடு காட்டி பரப்புரை செய்வதை நாளும் பார்க்கிறோம்.
இதில் சுட்டப்பட வேண்டியது என்னவென்றால் இந்த வைணவப் படைப்புகளான இராமாயணம், பாரதம் ஆகியவற்றை ஆகாயமளவு புகழ்ந்து போற்றுவதும் அதைப் படைத்தவர்களை பல்வேறு நிலைகளில் பாராட்டி மகழ்வதையும் நாளும் இங்கே காண முடிகிறது.
வால்மீகியின் ஆக்கத்திறன், வியாசரின் வித்யார்த்தி வித்தகம் இவர்களின் பாத்திரப் படைப்பு, கம்பனின் கவித்திறன், காவிய உத்தி என்ற நூல்களை மட்டுமல்லாது அதை படைத்தவர்களின் பெயர்களில்கூட அன்பு வைத்து ஆனந்தம் கொள்கிறார்கள்.
அரசியலின் ராஜ தந்திரங்கள், போர்முறைகள் பகவானின் பகவத்கீதையில் உள்ளடங்கிய உண்மைகள் என்றெல்லாம் ஓங்கி ஒலித்திடக் காண்கிறோம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்றும் அடுத்தவன் மனைவி மீது ஆசை வைத்தால் அவனை அழிப்பது தர்மம் என்றும் தந்தை சொல் மிக்கது ஏதுமில்லை என்றும் பூமியில் தோன்றும் புண்ணான நிலை மாற்ற வானலோகத்தின் கடவுள்கள் வருவார்கள் என்றும் ஒவ்வொரு நாளும் ஓயாது ஓலமிடக் காண்கிறோம்.
ஆனால் மேற்காணும் இலக்கியங்களை படைத்தவர்களின் உள்ளமும் நடப்பும் எப்படி இருக்கிறது என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் பெரிதும் வெளிப்படுத்துவதில்லை என்பது வேதனையான ஒன்றுதான்.
இதில் கொடுமையும் என்னவென்றால்,
பெண்ணின் பெருத்தக்கயான கற்பெனும்
திண்மை உண்டாக்கப் பெரின்.
எனும் குறள் வழங்கும் மண்ணில் பிரண்மனை நோக்கா பேராண்மை எனும் வாழ்வறிஞர் வள்ளுவன் தோன்றிய நாட்டில்
மங்கல என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
என்றெல்லாம் இயம்பிய இனியமொழி தமிழைக் கையாண்ட கம்பரும் காளமேகமும் பட்டினத் தடிகளும் அந்த பட்டினத்தடிகளின் விந்தை உணவாக வாய்வழியாக உண்டதால் பிறந்த அருணகிரிநாதரும் பரத்தையர்களின் பாதம் தாங்கி பல்லிளித்து கிடந்தார்கள் என்று வரலாற்றில் தேவதாசி என்ற நூல் வருந்திச் சொல்லி வாய்விட்டு கதறியழுகிறது.
பல்லாண்டு காலமாக தமிழின் செழுமையை - தூய்மையை சிதைத்து, சீரழித்து நடந்த படையெடுப்புகளுக்கும் பெரிதும் துணை செய்த பாதகர்கள் தமிழ்த்தாய் வயிற்றிலுதித்த பல பாவலர்கள் தான் என பற்பல ஆய்வாளர்களின் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 1000 ஆண்டுகளாகவே தமிழ் இன - மொழி, பண்பாடுகளை சீரழித்து அழித்து வரும் ஆரிய வழிக் கருத்துக்களை வழங்கியவர்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் அந்தக் கருத்துக்களை மொழிப்பெயர்ப்பு முலாம் பூசி மினுக்குக் காட்டி இங்குள்ள அதிகார வர்க்க மன்னர்களை ஆலயங்கள் கட்ட வைத்த அறிவு ஜீவிகளை மன்னித்ததுதான் மக்கள் செய்த மாபெரும் தவறாகும்.
அறநெறியை போதித்த காவியங்களைத் தந்தவர்களின் உள்ளம் கள்ளத்தனமில்லா கண்ணியம் மிக்கதாக இருக்க வேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் பிழையுள்ளவர்களாக இருந்தால் பிள்ளைகளும் மாணவர்களும் நல்லவர்களாக வளர்வார்களா?
நாங்கள் ஒரு காலத்தில் நாட்டைக் கெடுத்த நால்வர் என்றொரு நிகழ்வை நடத்தியிருக்கிறோம். அதில் அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் - மணிவாசகர்களின் படைப்புகளை விரித்து விமர்சிப்பதுண்டு.
பின்னர் கம்பர் அருணிகிரிநாதர், பட்டிணத்தார், வில்லி ஆயோரையையும் விமர்சித்த பேசுவதுண்டு.
இந்தக் காவியப் படைப்பாளர்களில் பலர் விலை மகளிரின் தழுவல்காக தவம் கிடந்தார்கள். பொன்னி என்ற வேசிக்கு அடிமை முறி எழுதிக் கொடுத்து அங்கேதான் வாழ்நாளைக் கழித்தான் கம்பர் என்கிறார் இந்த ஆய்வாளர்.
இதழ் சுவைத்து எச்சில் குடிப்பதில் யார் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்று கம்பர் காளமேகப்புலவர் பட்டிணத்தார் அருணகிரிநாதர் ஆகியோர்களை சந்தியில் நிறுத்துகிறார்.
இதுபோக மன்னன் குலோத்துங்கனும் ஒட்டக்கூத்தரும் கம்பர் சுவைத்த பெண்ணோடு ஏற்கனவே இணைந்திருக்கிறார்கள் என்று குறிப்பையும் தருகிறார்.
வேசியான தாசிகள் எழுவகையாகப் பிரித்துக் காட்டுகிறார்.
ஒருவன் தாம் கற்ற கல்வி
எழுமையும் ஏமாப்புடைத்து
என்ற குறள் ஒலித்த நாட்டில் வேசிகளை ஏழுவகை என்றனர்.
தத்தை, விக்ரிதை, ப்ருகிரீதை, பக்தை, ஹரிதா, அலங்காரை, உத்ரகணிகை - என்ற ஏழுவகை என்கிறார் இந்த ஆய்வாளர்.
காமசூத்ரா எழுதிய வாத்சாயனர் அரசியல் சட்டப்பிரிவு போல பரத்தையரை மூன்று பிரிவுகளாக காட்டுகிறார். தேவதாசி, இராஜதாசி, சமூக தாசி என்று துறையை ஏற்படுத்துகிறார்
அதில் சமூகதாசிகளை ஒன்பது உட்பிரிவுகளாகப் கிளைப்படுத்துகிறார். கும்பதாசி, அழகுதாசி, கணிகை, சேடி, விபசாரி, பிரகாசபினெஸ்டை, குலசில்பகாரிகை, நடிகை என்பதோடு இவர்களின் வேலைத் திட்டத்தையும் அதன் வரையரை எல்லைகளையும் வகைப்படுத்திக் காட்டுகிறார் வாத்சாயனார்.
ஏற்கனவே எட்டு வயதிலே இறைவனோடு இணைந்த பெண் (அதாவது கற்சிலைக்கு மணமுடித்து வைத்து) உந்திய இயற்கை உணர்ச்சியை அடக்க இயலாமல் ஊர்மேயும் நிலை கண்டதால் அவர்களை சமூகம் வேசி-தாசி, விபச்சாரி, கூத்தி, வைப்பாட்டி, தேவடியாள், விலைமகள், கொண்டி மகள், பொருட் பெண்டு, பொட்டி மகள், கணிகை, பரத்தை வரைவுமகளிர், கள்ளப் பொண்டாட்டி என்று பல்வேறு இழிமொழிகளால் இழித்து கீழ்மைப் படுத்துகிறது.
கேரள மன்னர் குலசேகர வர்மன் தன் அன்பு மகளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தேவதாசியாக்கினான் வில்லிபுத்தூர் பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை அதே கோவிலில்தான் சாய்ந்துறங்கும் சயனக் கடவுளுக்கு கட்டி வைத்தார் என்றெல்லாம் செய்திகள் நமது செவிப்பறையைக் கிழிக்கிறது.
வால்மீகியின் ஹோமரின் காவியங்களை ஆய்வு செய்தவர்கள் அந்தக் காவியத் தலைவி பரத்தை மனம் கொண்டவர்கள் என்றே உறுதிப் படுத்துகிறார்கள்.

பல மனைவிகள் கொண்டவர்களை பலரும் அறிவார்கள். ஆனால் பல ஆண்களை மணந்த பெண்ணாக பாஞ்சாலியைத் தான் வேதமோதிய வியாசர் முதன் முதலாக நமக்குக் காட்டுகிறார். அதிலும் ஒரு வேசியின் மனோபாவமாக கர்ணனின் மீதும் காதல் கொண்டாள் பாஞ்சாலி என்று பாருக்கு பறை சாட்டுகிறார்.

Friday 16 September 2016

முகநூல் நண்பர்களுக்கு

முகநூல் நண்பர்களுக்கு
பேரன்புடையீர் வணக்கம். நலம்சூழ நல்வாழ்த்துக்கள்.
பெரியார் விருதுகளை, பெரியார் தி.மு.க., தி.மு.க இணையதள பணிக்குழு, மக்கள் ஜனநாயகம் மற்றும் பல அமைப்புகளின் தனி மனிதர்களின் படைப்புகளை முகங்களை  மற்றும் சில செல்லப் பெயர்களும் சிந்தையில் பதிந்து மகிழ்வூட்டிக் கொண்டிருக்கிறது. இதில் பெரியார் விருது என்பது என்னை பெரிதும் ஆட்கொண்டது. முகநூலில் விழிவிரித்துப் பார்க்கின்ற வாய்ப்பு என் மகன் வழங்கிய அலைபேசி வழியாகக் கிடைத்தது. அதில் என்னில் இணைந்த நண்பர்களின் படங்களையும் அவர்கள் படைத்ததையும் பார்க்க முடிந்த போது பரவச உணர்வுகள் பற்றிப் படர்ந்து அந்தப் பாசமிகு உடன் பிறப்புகளை உள்ளத்தின் உயர்வான இடத்தில் உறைய வைத்துக் கொண்டேன்.
நீதிக்கட்சியின் நிலைகளில் சில பெரியாரின் நெஞ்சைத் தொட்டதால் அவர் காங்கிரசில் இருந்து விலகினார். உழைத்துப் பாடுபட்டு காங்கிரசை மக்களின் உள்ளத்தில் பதியவைத்த பெரியாரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை. காரணம் அது ஆரியமாயைக்குள் கிடந்த பார்ப்பனத் தலைமைக்கு பயந்து கிடந்தது.
இயல்பிலேயே நெஞ்சத் தூய்மை கொண்ட பெரியார் நீதிக்கட்சியின் பார்ப்பனல்லாதார் அவர்களுக்கான சமூக நீதிக்கான கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வெகுவேகமாக பரப்பும் நிலையை மேற்கொண்டார். அது மட்டுமல்ல பார்ப்பனல்லாதாரின் இழப்புக்கும் தாழ்வுக்கும் காரணமே பார்ப்பனர்களின் பாதக கொள்கையான பிறவிச் சாதிமுறையை ஏற்றதனால்தான் இத்தகைய இழிவுகளை சந்திக்க நேர்ந்தது என்று கருதி மேற்கண்டவற்றோடு இதையும் இணைத்துக் கொண்டார். சாதிய முறைகளை ஏற்று சுயமரியாதையை இழந்ததற்குக் காரணம் பகுத்தறிவில் ஏற்பட்ட பாழ் நிலையே காரணம் என்றுகண்டறிந்த பெரியார் 1925ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பகுத்தறிவு நிலையை பக்கத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட பிறவிச் சாதி முறையை சுயமரியாதையை இழந்த நிலையை கல்வி கற்று தெரிவதாலேயேதான் வளம்பெறும், வலிமைபெறும் என்று மேற்கண்டவற்றுக் கெதிரான கடவுள், மதம், சாத்திரங்களை தோலுரித்துக் காட்டி துணிந்து நின்று நாத்திக உணர்வுகளை நாட்டில் பரப்பினர்.
ஒற்றை மனிதராக இயக்கத்தைத் தொடங்கிய அவர் பின்னால், மெல்ல மெல்ல வந்து பலரும் இணைந்து இன்று பெரிய ஓர் ஆலமரமாக வளர்ந்து படர்ந்து இருக்கிறது.
படிப்பை முடித்த மாணவனாக அவருக்கு உயர்ந்த பதவிகளை பெற்றிருக்க வேண்டிய சூழலில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் கொள்கைகளை சாதனைகளைச் சொல்லும் தூதுவராக தொண்டாரக விரும்புகிறேன் என்று சொல்லி பல ஆண்டுகள் அவருடன் காடு மேடு,  பட்டி தொட்டி, சிற்றூர் பேரூர் என இமயம்வரை அவருடன் சென்று மக்களின் மனதில் உள்ள மாசுகளை அகற்ற அந்த மக்களின் எதிர்ப்புக்கிடையே பெரியாரின் கொள்கைகளை அனைவரின் நெருஞ்சிலே பதியவைத்தார்.
இறுதிநாள் வரை தன்னை தலைவர் என்று அழைக்காத நினைக்காத அண்ணா அவர்கள் தான் கண்ட திமுகவை பெரியார் விழுதாகவே இந்த மண்ணில் பதியவைத்தார். அறிவியல் மொழி என்று பெரியாரால் போற்றப்பட்ட தமிழை தன் இயக்கத்தின் இதயமாய் பொறித்து வைத்தார். தமிழின் செழுமைகளை குருதியோட்டமாக சுழலவைத்தார்.
அண்ணாவின் வியப்பூட்டும் உழைப்பும் பிற ஆற்றலும் இங்குள்ள அனைத்து அமைப்புகளும் மக்களும் பெரியாரின் விழுதுகளாகவே அந்த ஆலமரத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிலத்தில் பதிய வேண்டும் என்பதுதான்.
தாழ்ந்த தமிழகம் தலைநிமிர பெரியார் கண்ட கொள்கையும் கோட்பாடும் முக்கியம் என்று கருத்தை அத்துடன் சங்ககால அறிவார்ந்த இலக்கிய சூழலும் இன்றைய அறிவிப்பு தந்த - தருகின்ற புதுமைப் பயனும் தமிழகத்தை தழுவி உலகளாவிய நிலைக்கு சான்றுகளாக உயர்த்த வேண்டும் என்று விரும்பி பல நிலைகளால் ஒளி மிகுந்த உணர்வுகளை உருவாக்கினார். இளைஞர்களை ஊக்குவித்து இலட்சிய வரலாற்றை உருவாக்கு முறைகளை திரட்டி தந்தார்.
அவரின் ஆற்றல் மிக்க தம்பியாக அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தின் தலைவர்கள் அவர் கண்ட ஆட்சியின் முதல்வராக ஒவ்வொரு வினாடிதோறும் தன் முன்னோர்களை மறக்காத நிலையில் ஓய்வின்றி உழைக்கின்ற உழைத்துவரும் கலைஞரும் கூட பெரியார் விழுதுதான். அதுமட்டும் அல்ல அண்ணா வழிநின்று உழைத்த தம்பியரில் சிலர் உளுத்துப் போனாலும் இன்றுவரை இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் அனைவருமே பெரியாரின் விழுதுகள் தான்.
என்றாலும்கூட என்னுடைய நெடுநாள் வலியுறுத்தலே தி.மு.கவின் எல்லாம அமைப்புகளும் அணிகளும் கருத்துக்களும் பெரியார் விழுதுகளாகவே விளங்கவேண்டும் என்றும் விரும்புவதுதான்.
ஆரியர்களை நம்பி நமது கொள்கைகளை இதயத்திலிருந்து அறவே அகற்றிவிட்டு தமிழ் செழுமைகளை மனதில் ஊன்றி விதைத்து பயிராக்கி பயன்காண மற்றவர்களும் உதவ வேண்டும் என்றும் விரும்புகிறேன் முகநூல் வலைத்தள தோழர்களை வேண்டுகிறேன்.
ஏனெனில் ஆரியச் சிந்தனைகளை அறவே அகற்றாது போனால் தொற்று கிருமிகளைப் போல் பற்றிக் கொண்டு உணர்வுகளை உரம்பெற விடாது நிலைத்துவிடும் ஆக உள்ள உறுதியோடு உண்மைத் தன்மையோடு உறுதி நிறைந்த மனதோடு ஆரியத் தொடர்புகளை அறவே அறுத்துவிடும் துணிவைப் பெற வேண்டுகிறேன். மொத்தமாக முடியவில்லை என்றால் சிறுசிறுக சிந்தையை விட்டு வெளியேறும் நிலையை மேற்கொள்ள வேண்டுகிறேன். பெரியார் விழுதுகளும் திமுக அணிகளும் தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன். அவர்களை தங்கள் வழிக்கு அழைத்துவர மென்மையும் அன்பையும் அருகில் வைத்து கொண்டு முயல வேண்டுகிறேன்.

பெரியார் கொள்கையைப் பேசும் புத்தகம்

பெரியார் கொள்கையைப் பேசும் புத்தகம்
ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்த பேரறிஞர் அண்ணாவின் கலிங்கராணி எனும் நாவல் வடிவான நூல் அதில் பார்ப்பனியத்தைப் பதிய வைத்து தமிழர்களைப் பாழ் படுத்திய பாவிகளின் செயல்களை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
நான் இளமை நாளிலிருந்தே சரித்திர நாவல்களை வாசிக்கும் வழக்கமுள்ளவன். வார இதழ்களில் வந்த என்னற்ற நாவல்களை படித்திருந்தாலும், அண்ணாவின் கலிங்க ராணி போன்ற தான் சார்ந்த கொள்கைகளை விளக்கி மக்களிடம் மாற்றங்களை விதைத்த ஒரு நாவலை இன்றுவரை படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
கல்யாண கிருஷ்ணமூர்த்தி (கல்கி), பாஷ்யம் அய்யங்கார் (சாண்டில்யன்), நா.பார்த்தசாரதி, அசோக்மித்திரன், விக்ரமன், கோவி.மணிசேகரன், ஜெகசிற்பியன் மற்றும் பலரின் கதைகளையெல்லாம் ஆய்வு செய்தால் பெரிதும் தமிழில் உள்ள சிறப்புகளை சொல்வதுபோலக் காட்டி, அதில் ஆரியக் கருத்துக்களை புகுத்துவதை நோக்குமாகக் கொண்டே எழுதியிருக்கிறார்கள் என்றே கருதத் தோன்றகிறது.
ஆனால், அண்ணா ஆரியமாயை, சூழ்ச்சியை பக்கத்துக்குப் பக்கம் படம் பிடித்துக் காட்டி, தன்மான தமிழர்களை தலைநிமிர வைக்கிறார். நாவல்முழுவதும் விரிவாக விளக்க வேண்டுமென்றால், பக்கங்கள் பலவாகும். தமிழர்களின் செழுமையான உள்ளங்களில் சந்தேகங்கள் கொள்ள வைத்து, குழப்பி, தங்கள் பிழைப்புக்கா எத்தனை வேடங்கட்டி நடித்தார்கள் இந்த வேதமத வைதீக பார்ப்பனர்கள் என்பதை அழகிய எழுத்து நடையில் அணிவகுத்து சொல்கிறார் நமது அண்ணா அவர்கள்.
இந்த நூலைப் படித்தால் தமிழர்தம் பெருமைகளை எப்படியெல்லாம் தாழ்த்தினார்கள் சூழல்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் நமது பண்பாட்டை நலிவுறுச் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர் என்று விளங்கிக் கொண்டு உறுதிமிகு உள்ளத்தை பெறலாம். படியுங்கள் பகுத்தறிவும் பண்பாடும் கொண்ட திராவிட சீர்மைகளை சிந்தையில் கொள்ளலாம்.

கலிங்கராணியை கையிலெடுத்தால் கீழே வைக்க தோன்றாது, பசி, உறக்கத்தை மறந்து நாவல் முடிகின்ற வரை தடையில்லா வாகனம் போல செல்லும் சுகத்தை அவருடைய அழகு நடையால் பெறலாம். படியுங்கள் பயன்பெறுங்கள்.

Sunday 11 September 2016

பெரியார் பிறவாதிருந்திருந்தால்?

பெரியார் பிறவாதிருந்தால் என்ற வினாவிற்கு விடை அளிப்பதென்றால் நீட்டோலைகள் நிறைந்து மலை எனக் குவிந்துவிடும். அவருடையது எல்லாம் இங்கே நிறைந்த பதிவுகள் குவிந்து கிடக்கிறது.
அவர் பிறவாதிருந்தால் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் இன்னும் அதே நிலையில்தான் கிடந்து அமிழ்ந்திருப்பார்கள்.

ஆரியப் பார்ப்பனர்களின் சதி வலைகளில் சிக்கிச் சிதைந்து சீரழிவில் உழன்று கொண்டிருந்திருப்பார்கள்.

அவர் பிறவாதிருந்திருந்தால் வேதத்தின் விசம் முறிந்திருக்காது. பார்ப்பனர்களின் சதிச்செயல்கள் அம்பலத்திற்கு வந்திருக்காது. அவர் பிறவாதிருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட பிரிவினர் தலைதூக்கி இருக்க முடியாது. நிமிர்ந்து நேர் நின்று நெஞ்சுயர்த்தி நடந்திருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பெருமளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.

அவர் பிறவாதிருந்திருந்தால் வைதீகர்களின் வித்தைகள் இங்கே விலகி இருக்காது. எல்லாருக்கும் எல்லாம் என்ற இனிய நிலைகள் இல்லாமலேயே போயிருக்கும்.

அவர் பிறவாதிருந்திருந்தால் இந்து மத ஆதிக்கவாதிகளின் அயோக்கியத்தனம், அடாவடிச் செயல்கள் அடங்கி இருக்காது. அவர்களின் ஆளுமைகள் அருகியிருக்காது. தாழ்ந்த வீழ்ந்த தமிழர்களுக்கு விடுதலை கிடைத்திருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் தூய கொள்கை கோட்பாடுகளை எடுத்துச் சொல்லும் எண்ணற்ற ஆற்றலாளர்கள் உருவாகி இருக்க முடியாது. குறிப்பாக பட்டுக்கோட்டை அழகிரி, தோழர் ஜீவானந்தம், வீரமங்கை முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரின் இடி முழக்கக் குரல் இங்கே ஒலித்திருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் படித்த நிலையில் அவருடைய கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு ஏழை வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் வேலை அதனால் வாழ்வில் வளம் என்ற எண்ணங்கள் இல்லாமல் மக்கள் எதிர்த்த நிலையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முன்வந்த உலகம் போற்றும் உன்னதமான அறிவாளி பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்.

அவர் பிறவாதிருந்திருந்தால் அண்ணாவின் பின் அணிவகுத்த ஆயிரமாயிரம் அருமைத் தம்பிகளின் ஆற்றல் திறம் ஆய்வு நெறி உள்ளிட்ட வெளிப்பாடுகளை வழங்கி ஒளி வீசி இருக்க மாட்டார்கள். பாவேந்தர் பாரதிதாசனும் அவருடைய புரட்சிக்கவிதைகளும் அவருடைய பரம்பரையில் வந்த கவிஞர் படையும் கிடைத்திருக்காது.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் தமிழர்கள் தன் சாதி வால்களை அறுத்தெறிந்திருக்கமாட்டார்கள். பிறவிச் சாதி உணர்வுகள் சாட்டையடிபட்டிருக்காது. ஒரே இடத்தில் கூடி வாழும் சூழல் ஆடிப்போயிருக்கும்; அற்றும் போயிருக்கும். உணவகங்களில், ஆலயங்களில் மற்ற இடங்களில் எல்லாச் சாதியானரும் ஒட்டி உரசி நடக்கும் நிலை நேராது போயிருந்திருக்கும். மேல் சாதிகளைச் சேர்ந்தவர்கள், கீழ்சாதிகளாக இருப்பவர்கள், எல்லா வித உறவுகளுக்கும் உடன்படும் நிலை தோன்றி இருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாதாரின் நிலையை உயர்த்திய கல்வி இடஒதுக்கீடு பெண்ணுரிமை கிடைக்காமலேயே போயிருந்திருக்கும். அரசு நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நிரம்பி இருக்க மாட்டார்கள். இந்தியப் பார்ப்பனர்களின் எல்லா வகைச் சதிச் செயல்களும் இடுப்பொடிந்து போய் இருக்காது.அவருடன் அண்ணா கலைஞர் ஆனைமுத்து போன்றோர்களின் பரப்புதலால் ஏற்பட்ட அகில இந்தியாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை எழுச்சி கொண்டிருக்காது.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் 100 க்கு 97 மனிதர்களுக்குச் சுயமரியாதை என்பதும் பகுத்தறிவுச் சிந்தனை என்பதும் துளி கூடத் துளிர்க்காது போய் இருந்திருக்கும். புதுமை எண்ணங்களும் புத்தெழுச்சி உணர்வுகளும் புது மணம் வீசும் செயல்களும் பூக்காமலேயே போயிருக்கும்.

அவர் பிறவாதிருந்திருந்தால் பொதுவாழ்வில் புகைமூட்டம் கலையாது காரிருள் சூழ்ந்திருக்கும். மக்களை கவலைகள் கப்பி இருக்கும். வெளிச்சக் கோடுகளே தெரியாத இருட்டறைக்குள் இந்நாடு முடங்கி இருக்கும். மடமை,  மதமயக்கம், மூடநம்பிக்கை,  முட்டாள்த்தனம், முடைநாற்றச் சிந்தனைகள் முழுமையாக ஆட்சி செய்திருக்கும். வாழ்வில் உயரும் வழிகள் எல்லாமே அடைபட்டிருக்கும். எதையும் ஏன் எதற்கு என்று கேட்ட சிந்தனைச் சிற்பி கிரேக்கத்து சாக்ரட்டீஸின் குரல் நமது காதில் விழாமலேயே போய் இருந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் விழி இருந்தும் பொட்டைகளாய், முடி இருந்தும் மொட்டைகளாய், உணர்விருந்தும் கட்டைகளாய் விழுந்து கிடந்தவர்கள் சற்றும் விழிப்புணர்வும் விடுதலை எண்ணமும் பெற்றிருக்க மாட்டார்கள். இன்னும் நிறைய நிறையச் சொல்லி நெஞ்சை மகிழ்விக்கலாம். மேலே காணும் எதுவும் கற்பனையல்ல; கதையல்ல; துதியல்ல; துயர் துடைத்த தூய உணர்வுகள். இதை உணராதோர் பெரியார் பிறவாதிருந்த காலத்தில் கண்மூடி துயில்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம். பெரியாரைப் பற்றி அண்ணாவின் கருத்தோவியம் கலை கொஞ்சும் சொல் ஆரம் நெஞ்சில் நிறைந்து இருக்கிறது.

பெரியார் தனி மனிதரல்லர்; அவரோர் சகாப்தம். அவர் கண்ட களங்கள் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் இன்னும் அவர் போர்க்களத்தில்தான் நிற்கிறார். அறுபது ஆண்டுகள் அவரது பேச்சும் பிரச்சாரமும் அருவியாய் விழுந்து ஆறாகப் பெருகி ஓடுகிறது. அவரை வெறுத்த பலர் வெட்டுவேன்; குத்துவேன் அவரை; கொல்வேன் நான் என்று கொக்கரித்தவர்கள், சூளுரைத்து வாள் ஏந்தியவர்கள் எல்லாம் அவரவர் நிலை தானே மாறிடக் கண்டனர் என்று சொன்னார். இன்னும் நிறைய நிறையச் சொன்னார்.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் என்னைப் போன்ற மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே தோன்றியவர்கள் மேட்டுக்குடி மக்களோடு சமமாக அமர்ந்திருக்க முடியாது; ஒன்றாக உணவு அருந்தி இருக்க முடியாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் தலை தூக்கி இருக்க முடியாது என்றார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவர் பிறந்தநாளை வீடு தோறும் வீதி தோறும் ஊர் நாடு நகரம் எல்லாவற்றிலும் கொண்டாட வேண்டும. ஆனால் நன்றியை வாழ்வின் நிலையாக, வழிபாட்டு உணர்வாகக் கொண்ட தமிழர்கள் நன்றி மறந்த, நாகரிகம் இழந்த வேதனை மிக்க நாட்களில் வாழ்வதால் எதிர்பார்ப்பு இல்லாத உள்ளத்தோடு அவரை நினைப்பதுதான் மகிழ்வானதாகும்.