Sunday 3 June 2018

காலின் மெக்கன்சி இங்கிலாந்தின் காலனி நாடான ஸ்காட்லாந்தின் லூவித், தீவில் பிறந்தவன் காலின் மெக்கன்சி அவர்கள். அறுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவையாகும். இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள இங்கிலாந்தின் போர்ப்படையில் ஒரு பொறியாளராக பொறுப்பேற்றிருந்தார். திப்புச்சுல்தானுடன் நடந்த போரில் பங்கு கொண்டார். திப்புச் சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டிருந்த இந்தியா, வங்கதேசம், பர்மா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் நில அளவை செய்து நிர்வாகத்திற்கு உதவி செய்த நேர்மையாளர் அவர். இந்தியத் துணைக் கண்டத்தில் அறிவியல் கணித அடிப்படையில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற புராண இதிகாசங்களே வாழ்க்கையில் எல்லாம் தரும் என்ற எண்ணத்தை ஆரிய வேதம் ஓதிய வேதியர்கள் அவர்களில் உள்ள செப்படிவித்தை விற்பன்னர்கள் மக்கள் மனதில் மாசுபடிந்த எண்ணத்தை இருக்கமாக பிணைத்துவிட்டுருந்தார்கள். அறிவியல் மொழியான தமிழில் உள்ள ஆக்கமிக செய்திகளை நிலைகளை கூட நிர்மூலம் செய்து விட்டார்கள். இந்திய மொழிகளில் தேதிவாரியாக நிகழ்வுகள் நிரந்தரமாய் இல்லாது செய்து விட்டார்கள். கடவுள், மதம், சாஸ்திரம். சடங்குகள் மூலமாக சபலமனம் உடைய மன்னர்களின் துணையோடும் வரலாற்று நிகழ்வுகளை வரிசைப்படுத்தி இயலா நிலைக்குள் இழுத்துச் சென்று இருட்டறையில் அடைத்து விட்டார்கள். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கிரேக்க மாமேதைகளின் அறிவார்ந்த படைப்புகளை அழித்தோ மறைத்தோ அமுக்கியது போல் பழைய இந்தியாவின் பண்பாடுகளை வாழ்வியல் இணைந்த வரலாற்றுச் சிறப்புகள், கல்வெட்டுகள், பட்டையங்கள் பல்வேறு அருமைகளை புத்த சமண தூய தமிழ் வடிவங்களை புதைத்தும் புகைய வைத்தும் மண்ணுக்குள் மறைய வைத்து விட்டார்கள் வேதம் ஓதிய பார்ப்பன வேதியர்கள். மன்னனை மயக்கிய மதகுருவாகவும், மன்னன் அருகில் இருந்து அவனையொத்த அதிகாரம் படைத்த அமைச்சர்களாகவும் இருந்த வேதியப் பார்ப்பனர்கள் வஞ்சக உள்ளத்தோடு சீர் நிறைந்த இந்த மண்ணின் சிறப்புகளையெல்லாம் சிதைத்து சீரழித்து சின்னாபின்னப் படுத்தி விட்டார்கள். பாகவதமும், இராமாயணமும், பாரதமும் தான் இந்தியா என்று எல்லா நிலைகளிலும் நிலைப்படுத்திவிட்ட இந்த கொடியவர்கள் உண்மையை பொய்யாற்றில் தூக்கியெறிந்து துடிதுடிக்க வைத்தார்கள். புதைந்து போனது பகைப் புகையால் நிறம்மாறியது. மடைமாற்றம் செய்தது. திரித்து - சிதைத்த இலக்கியம், வட்டார வரலாறு மற்றும் பல உண்மைகளெல்லாம் கடந்த 18ம் நூற்றாண்டு இறுதிவரை தேடுவார் யாருமில்லாமல் தேம்பியழுது கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் தான் ஸ்காட்லாந்தில் பிறந்த காலின் மெக்கன்சி வெள்ளை அரசில் பணியாற்ற இங்கு வருகிறார். நில அளவையாளராக நிலத்தை அளந்து ஆவனப்படுத்துகிறார். அந்தப் பணியில் கிடைத்த அனுபவத்தில் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. தன்னார்வ உணர்வில் தன் சொந்தச் செலவிலேயே தொல்பொருள் ஆய்வில் ஈடுபடுகிறார். குமரியிலிருந்து டெல்லிவரை உள்ள நிலப்பகுதிகளில் உள்ள தரவுகளை திரட்டுகிறார். இலக்கியம், கல்வெட்டு, தொல்பொருள், மதங்கள் ஆதிவாசிகள் எல்லாவற்றையும் திரட்டி தொகுத்து ஆவணப்படுத்துகிறார். அரசின் உதவியின்றி தனி மனிதனாக ஒரு முப்பதெட்டு ஆண்டுகளில் அவர் திரட்டிய பல்வேறு பொருட்களின் பட்டியிலைப் பார்த்து இமயமும் வானமும் கூட அவரின் கீழ்தான் தெரியும். அப்பப்பா ஒரு மனிதனின் ஆர்வமும் உழைப்பும் கணக்கில் அடங்காத பிரமிப்பாகும். அதைவிட சிறப்பு என்னவென்றால் எங்கோ ஒரு தீவில் பிறந்த அவர் அவரது நாட்டின் அடிமை நிலப்பகுதியின் சிறப்புகளை தேடித்திரட்டிய மனித நேயமும் அறிவுப் புலமும் வியப்பில் விந்தையால், விழிமலர்கள் விரிந்திடக் காண்கிறோம். அவர் சமண மதத்திலிருந்துதான் சைவமும் வைணவமும் புத்தமும் சாங்கியமும் தோன்றியது என்று நிறுவுகிறார். அதனால் அந்த மதங்களில் கூட ஒரு சீர்மைகள் இருக்கக் கூடும். ஆனால் மேற்கண்ட மதங்களெல்லாம் நலிந்தும் மறைந்தும் போனதற்கு யார் காரணமாக இருப்பார்கள்? அறிவுசார்ந்த அருமையான எல்லாவற்றையும் இல்லாமல் செய்தவர்கள் இழிவு படுத்தியவர்கள் யார் எனில் வேதமெனும் விசத்தை தன் நெஞ்சில் வைத்து திட்டமிட்டு பல வேடங்களில் பங்கெடுத்து அடுத்துக் கெடுக்கும் வேத விற்பன்னர்கள். வேதத்தை விரிவாக்கம் செய்யும் பிரச்சாரர்கள் பொய்யை புதுநிலைகளில் புகுத்தி புண்ணாக்கிய எழுத்தாளர் பாவலர்கள் அனைவருமே வரலாற்றில் ஆரிய வேதப் பார்பனர்களாகவே இருக்கிறார்கள். அடுத்து இவர்களால் ஏதாவது ஒரு ஆதாயம் பெற்ற அடிமைகள் இவர்களுக்கு துணையாக பெரும்பான்மை மக்களை பித்தர்களாக ஆக்க துணை புரிந்தார்கள். காலின் மெக்கன்சி திரட்டிய பல்வேறு பொருட்களின் பட்டியலைப் பார்த்து வியப்பின் விரிவானமாய் விந்தை பெருவெளியாய் தோன்றி நம் உள்ளத்தை உற்சாக வெள்ளத்தில் நீந்தச் செய்கிறது. திரு காலின் மெக்கன்சி திரட்டித் தொகுத்து வகுத்து வழங்கிய சுவடிகளின் எண்ணிக்கை 52663 ஆகும். இதுபோக மேலும் பலவற்றை ஆய்வுகளில் ஈடுபடுத்தி திரட்டித் தந்திருக்கிறார். கல்வெட்டுகள்-8076, மொழிப் பெயர்ப்புகள்-2150, வரைபடங்கள் -2630, நாணயங்கள்-6218, உருவங்கள் -106, தொல்பொருட்கள்-40 என்று பட்டியல் நீள்கிறது. ஏறக்குறைய 20மொழிகளில் விளக்கியிருக்கிறார். நேருவால் நேசிக்கப்பட்ட மாமன்னன் அசோகனின் சிங்கத்தூண் உள்ளிட்ட மண்ணில் புதைந்ததையெல்லாம் வெளிக்கொணர்ந்தவர் காலின் மெக்கன்சி. சமணத்தைச் சாய்த்தவர்கள் புத்தர் மீது புகைமூட்டம் போட்டவர்கள், தமிழின் தூய்மையை தூர்த்தவர்கள் ஆரிய வேதத்தை இன்னும் போற்றிப் புகழ்ந்து இன்றும் பொழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆரிய வழி வந்த வேதியர்களும் அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட அடிமைகளும் தான் என்பது வெள்ளிடை மலையாகும். இயற்கை வழியில் எழுந்த இந்தியாவின் எழிலையெல்லாம் இழிவுப் படுகுழியில் தள்ளியவர் இன்றும் மேனியில் பூணூலை போட்டுக் கொண்டு ஆரியச் சாதிகளை நிலைப்படுத்துவர்களும் இவர்கள்தான். வெள்ளையனே வெளியேறு விடுதலைப் போராட்டத்தின்போது தந்தை பெரியார் ஒரு வினா எழுப்பி விளக்கம் தந்தார். யார் இங்கே அன்னியன்? கண் பட்டால் தீட்டு, தெருவில் நடக்காதே என்பவன் அன்னியனா? தனது அடிமைகளை சமைக்கச் சொல்லி அவனை சரிசமமாக மேசையில் அமரவைத்து உணவருந்தி அவர் தோளின்மீது கைபோட்டு தோழமை கொள்பவன் அன்னியனா? என்றார் பெரியார். தென்னிந்தியக் குலங்களின் குடிகளின் உண்மை நிலைகளை உலகுக்கு சொன்ன, இங்கே இரயில் பாதை போட வந்த பொறியாளர் எட்கார் தர்ச்டன். சிந்து சமவெளி மேடுகளைத் தோண்டி உண்மை இந்தியாவை ஓவியமாய் காட்டிய ஜான் மார்ஷல், கன்னி காம் பிரபு, மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்டு உண்மைகளை ஓங்கி உரைத்த இராபர்ட் கால்டுவெல், காலின் மெக்கன்சி மற்றும் பல ஆளுநர்கள், அதிகாரிகள், பாதிரியார்கள் எல்லாம் இங்கே மறைக்கப்பட்ட உண்மைகளைச் சொன்னவர்கள். இவர்கள் அன்னியர்களா? இந்திய கல்வெட்டுகளில் 65 விழுக்காடு தமிழில் இருக்கிறது. அதை அழிக்கும் முயற்சியில் பாடுபடும் இந்திய அரசாங்கத்தின் உயர் நிலைகளில் நிறைந்து இருக்கின்ற வேதியர் வீட்டு விற்பன்னர்களா? கல்லூரி மாணவ மாணவிகளாக இளைஞர்களை வேண்டுவதெல்லாம் உங்களிடம் நண்பர்களாக இருக்கின்ற வேதியர் வீட்டுப் பிள்ளைகளை இப்படிக் கேட்ட வேண்டும் என்பதுதான். சாதி உயர்வைக் காட்டுகின்ற பூணூலை சட்டையில்லா காலத்தில் அணிந்தீர்களே அதே பூணுலுக்கு ஒரு விழா ஏன்? சட்டைக்குள்ளே பூணூல் போடுவது ஏன்?நாங்கள் மேல் சாதிக்காரர்கள் என்று இந்தப் பூணூல் நினைவு படுத்த வேண்டும் என்றா? என்று கேட்ட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள் பல்வேறு நிலையில் ஆய்வுகள் செய்வோருக்கு காலின் மெக்கன்சி உறுதுணையாக இருக்கிறார் என்பதுதான் உண்மையாகும். ஆராய்ச்சி மாணவர் அருமைத் தம்பி தே. சிவகணேஷ் அவர்கள், ம.இராஜேந்திரன் அவர்களின் காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் என்ற நூலினை, ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம், வில்சன் தி ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஆகியவற்றின் குறிப்புகளில் இருந்து தொகுத்து வழங்கிய கட்டுரையை படித்த நாளிலிருந்தும் பல்வேறு திசைகளில் வரலாற்று நிகழ்வுகளில் மனம் பயணித்து கொண்டே இருக்கிறது. (குறிப்பு காலின் மெக்கன்சியின் தேடல், திரட்டல் போல் உலகில் யாரும் செய்யவில்லை. அதனால் அவர் பணி உலகின் உச்சத்தில் ஒளிரும் உன்னதப் பணியாகும்.