Saturday 7 May 2016

அறிவாளரோட உறவாடும் மடல்

நீயா? நானா?
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள்.
ஏழெட்டு மாதங்களுக்குப் பின் இனிய தலைப்பு ஒன்றில் கருத்துகளைத் தெரிவிக்க அழைத்த நீயா? நானா?வுக்கும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தங்கள் முன் நிறுத்துகிறேன்.
நினைத்ததெல்லாம் பேசமுடியாத நிலைக்குள் நீயா? நானா? நிறுத்திவிடும் நிலை இருக்கிறது. பேசியதெல்லாம் முழுமையும் ஒளிபரப்ப இயலாத சூழலும் நீயா? நானா?வை சூழ்ந்து நிற்கிறது.
இதுபோன்ற நல்ல நிகழ்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தினால், நீயா? நானா? காலத்தால் அழியாத காவியமாய், வரலாற்றை வண்ணப்படுத்திக் கொண்டிருக்கும்.
கருத்துகளை வெளியிடும் உரிமைக்கு விஜய் டிவியில் தடையில்லையென்றால் வேறுவகை சிரமம் இல்லையென்றால் தங்கள் இருவரின் உள்ளத்தில் உறைந்திருக்கின்ற உணர்வுகளை உண்மைகளை இன்னும் தெளிவாகவும், வலிவாகவும் வெளிப்படுத்தலாம் என்று கருதுகிறேன்.
நிகழ்ச்சிக்கு முன் நெஞ்சோடு தழவி வாழ்த்துச் சொன்ன தாங்கள், மொழிந்த சொற்றொடரை எண்ணிப் பார்க்கின்றேன். இதய நன்றியைப் பதிவு செய்கிறேன்.
ஆம் பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற பொய்மையை உடைத்தெறிய வேண்டுமென்று தாங்கள் கூறியது செவியில் தேன்பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
அரிவிந்த் நீலகண்டனுக்கு பதில் சொன்னபோது திரு.கோபி அவர்கள் அமர்ந்த நிலையில் தன் இடது கை ஆட்டி ஆட்டி இன்னும் வேகமாக கடுமையாக சொல்லும்படி சைகை காட்டியது நினைவில் நிறைந்த மறக்கமுடியாத ஒன்றாகும்.
உங்கள் அனுபவத்தில் உள்ளதைச் சொல்லுங்கள் என்று ஆணையிட்டதால் என்னைப் பற்றி அனைத்தும் சொன்னேன். தி.மு.க.வில் பல பொறுப்புகளில் இருந்து உழைத்த நாட்களில் மூன்ற உணவகங்களை மாற்றுக் கட்சிக்காரர்கள் சூரையாடினார்கள். அதற்காக கட்சியில் எந்த உதவியையும் கேட்டதில்லை. கடன்பெற்று மீண்டும் தொழில்நடத்தி வளர்ந்தேன் உயர்ந்தேன் ஆயினும் கட்சி ஆர்வத்தால் ஈட்டிய பொருளையெல்லாம் இழந்தேன். எனினும் இன்றும் தி.மு.கவைச் சொல்வதற்கு செலவழித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் மகிழ்வையும் நிறைவையும் நிறுத்தி வைத்து நாளும் மகிழ்கிறேன்.
******
         அறிவாளரோட உறவாடும் மடல்

அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். நெஞ்சில் நிலை பெறும் நிகழ்வொன்றை நீயா? நானா? நிகழ்த்தி மகிழ்வித்திருக்கிறது.
ஏற்கனவே கேரளாவில் தமிழ்ப் பெண்கள் நடத்திய தங்கள் தேவைக்கான உரிமைப் போராட்டத்தை ஒரு நீயா? நானா?வில் குறிப்பிட்டு பதிவு செய்ததை மைய இழையாகக் கொண்டு போராட்ட உணர்வைப் பொங்க வைக்கும் நிகழ்வு மனதில் பூரிப்பை ஏற்படுத்துகிறது.
கோமதி என்னும் என் தாயின் பெயர் தாங்கிய அந்த அருமைத் தங்கையின் போராட்டம் சோவியத் புரட்சியை தூண்டும் ஒன்றாக துலங்கும் மக்சிம் கார்க்கியின் நாவல் தலைவி, இளைஞன் பாவலைப் பெற்ற தாயின் நினைவை நெஞ்சில் கொண்டு வந்தது.
திராவிட இயக்கங்கள் நடத்திய பொது உரிமைப் போராட்டங்களில் பெண்கள், அதுவும் கைக்குழந்தையை கையில் ஏந்திய பெண்கள் சிறையேகிய பெருமை நிகழ்ச்சிகள் இங்கே வரலாற்றில் பதிவாயிருக்கிறது.
போராட்ட உணர்வு இங்கு ஏன் தலைதூக்கவில்லை என்பதற்கான அடிப்படை காரணங்களை இந்த நிகழ்வில் யாரும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் திராவிட இயக்கப் பிரச்சாரத்தில் தெளிவாக முன் வைக்கப்பட்டன.
மதம் சார்ந்த எண்ணக் குப்பைகளை குவிந்து கிடக்கும் உள்ளங்களில் உரிமைப் போராட்ட வாசம் இடங்கொள்ள இயலாது என்று உரிமைப் போராளி தந்தை பெரியாரின் வழிநடந்த பேரறிஞர் அண்ணாவின் வெளிப்பாடுகள் இங்கே இருளகற்றும் ஒளிக்கற்றையாக உலா வந்தது.  இந்தியாவின் உண்மையான பொதுவுடைமை இயக்கம் தி.மு.க. தான் என்று 1953லே தோழர் ஜீவாவை அருகில் வைத்துக் கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரகடணப் படுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் இரண்டொருவர் இனிய செய்திகளைச் சொல்லி இன்புற வைத்தார்கள். கருத்தியல் அடிப்படையில் போராட்டங்கள் நடந்தால் அது வெற்றி பெரும். நல்ல விளைவுகளைத் தரும் என்றார்கள்.
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நீண்ட நாட்களுக்குமுன் வைத்த கருத்தொன்று நெஞ்சில் நிலைகொண்டிருக்கிறது. சம்பவங்களால் ஏற்படும் பிரச்சாரம் விரைவில் மறைந்து விடும். கருத்துக்களால் ஏற்படும் பிரச்சாரம் நெஞ்சில் நிலை கொள்ளும், உணர்வில் கூர்மையேற்றும், உள்ளம் உரம் பெறும் என்றார் அவர்.
உலகில் நடந்த - நடக்கின்ற போராட்டங்கள் புறத்தேவையான பொருள் பெரும் நோக்கங்களுக்காகவும் நடக்கிறது. உளம் சார்ந்த, உணர்வின் உயர்வு சார்ந்த, உரிமை சார்ந்த தரவுகளுக்காகவும் நடந்து-நடக்கிறது. இதில் நீண்ட நாட்களாக நடக்கின்ற போர் இயற்கை தந்த இனம் சார்ந்து நடக்கின்ற ஆரிய-திராவிடப் போராட்டமாகும்.
இந்தப் போர் புறத்தேவை, பொருள் தேவைகளுக்காகவும் போதை தரும் போதனையான மதவாதம், மதவாத மயக்கத்தினாலும் மங்கி விடுகிறது, மறைந்து கொள்கிறது. ஆயினும் மறையாத, மடிந்து போகாத வேதிநிலை போல மீண்டும் மீண்டும் உயிர் பெறும் உரிமைகளைப் பெற்றுத் தரும். அதற்கு நீயா? நானா?வில் தெளிவு தரும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும், துணிவு தரும் என்ற நம்பிக்கை நல்லோர் நெஞ்சை நாளும் மகிழச் செய்யும்.
மதிப்புநிறை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம்சூழ நல்வாழ்த்துக்கள்.
ஏறத்தாழ நூறாண்டுகால பெரியார் சிந்தனை செயல்நிலை பெற்று, சீர்கண்டு, மாற்றம் கண்டு, மறுமலர்ச்சி பெற்று வளர்ந்துவரும் சூழலில், ஆரிய சார்புகொண்டோரும், அவரது அடிமைகளும், பெரியார் கண்ட பெருமாற்றச் செழுமைகளை சிதைக்கின்ற முயற்சியில் இன்று பல்வேறு காட்சிகளைக் காட்டி, மக்களை குழப்பி வருகிறார்கள்.
அண்ணா பெயர் கொண்ட கட்சி ஆரியமாலாவின் பிடியில் சிக்கியபின்னர் முழு அடிமைத்தனத்தை நீக்கமுடியாதவாறு நிலைப்படுத்தி விட்டார். இதை முற்றாக எதிர்த்துப் போரிட வேண்டியவர்களையும் ஆரியம் தனது கைப்பிடியில் சிறை வைத்தது போன்று சிதைத்து சீரழித்து விடுவதைக் காண்கிறோம்.
இந்த நிலையில் காய்தல், உவத்தில் இன்றி பெரியார் இயலைப் பேரளவுக்குச் சொல்லி பதிவுசெய்து பயன்நிறைய வைப்பதாகச் சொல்லும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடப்பது சரியா? என்ற எண்ணமே எழுகிறது.
கொள்கை ஒன்றென்றால் குழுக்கள் பல எதற்காக? புரியவில்லை. தலைமைச் சிந்தனையென்றால்கூட ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி குறு மதியாளர்களை எதிர்த்துப் போரிடம் சூழலை ஏற்படுத்தலாம் என்று மனம் கருதுகிறது.
ஆரியமாலவைத் தவிர மற்றவர்கள் தங்கள் பெருமைகளுக்காக பெரியாரின் புகழ் பாடத் தயங்குவதில்லை. ஆனால் பெரியாரின் மய்யக் கொள்கைகளான சாதி மதக் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றவும் மறப்பதில்லை. இந்த முரண்பாட்டை தோலுரித்துக் காட்டவேண்டிய பெரியார் இயலாளர்கள் ஒருங்கிணைந்து போரட வேண்டிய சூழலில் பெரிதும் உறக்கத்தில் இருப்பதாக÷ தோன்றுகிறது.
பெரியார் இயல் உணர்வுகள் பெருகி வருகிறது.  சிந்திப்போர், சீர்நிலைப் பெறுபவர், நல்லுணர்வான நாத்திகத்தைத் தழுவி வருவோர் நாட்டில் சிறுக சிறுக பெருகி வரும் சூழல் நிலவுகிறது. இந்த இனிமையை மேலும் மேலும் பெருக வைக்கவும், தங்களைப் போன்றோரை ஆயிரக்கணக்கில் பெருக வைக்கும் முயற்சியாக, தாங்கள் தான் திட்டமிட்டு தாய்மையுணர்வோடு பிரிந்து கிடப்போரை ஒருங்கிணைத்து, ஓர் செயல் அளவுத் திட்டத்தோடு, எங்கும் பெரியாரை பேருருவாகக் காட்டும் முயற்சியை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இழிவும் குழப்பமும் தன்னலமும் பின்னிக் கிடக்கும் சூழலில் இது முக்கியம் என்று கருதுவீர்கள் என்று எண்ணி வேண்டுகிறேன்.

Wednesday 4 May 2016

மகிழ்வோடு விடைபெறுவேன்
அனைத்து நாட்டு பொதுமக்களே, அன்பார்ந்த தமிழர்களே வணக்கம். எந்த நாளும் மகிழ்வோடு இருந்திட இதய வாழ்த்துகள்.
இந்த உலகில் இருந்தும், உங்களிடம் இருந்தும் விடைபெறும் நாள் நெருங்கி வருவதை உணர்வதால் உங்களிடமிருந்து விடை பெற விரும்புகிறேன். ஏழையாய் பிறந்த நான் இல்லாமையில் வதிந்த நான். ஒரு சிற்றூர் பள்ளியில் ஒன்றரை ஆண்டுகளே படித்தேன். அதற்கு மேல் பள்ளியில் கல்வி பெறும் வாய்ப்பை வறுமை எனக்கு வழங்கவில்லை.
உயிர்வாழ உடல் தேவை உடல் நிலைக்க உணவு தேவை. இது இயற்கை. எட்டு வயதில் பள்ளியில் இருந்து வெளிவந்த நான் சிற்றூர் ஒன்றில் இடிப்பொடிய உழைத்தும் இரைப்பையை நிரப்ப முடியாத நிலையே நீடித்தது. உடல் வளர்க்கும் உணவுக்காக நான் பார்க்காத வேலை இல்லை. படாத துன்பமில்லை. உணவோடு ஆண்டுக்கு முப்பது ரூபாய் ஊதியத்திற்கு மாடு மேய்க்கும் கொத்தடிமையாக ஓராண்டு காடு மேடு மலைகளில் காலம் கழித்தேன்.
உணவோடு மாதம் மூன்று ரூபாய் ஊதியத்திற்காக ஒரு பணக்கார வீட்டில் எடுபிடியாக ஒராண்டு காலம் உழன்றேன். தன்னோடு தன் தாய் தந்தை உடன் பிறந்தவர்களைக் காக்கும் நிலை வந்த யாரானாலும் துன்பங்களை சுமப்பதைத் தவிர வேறு கதியில்லையே.
உலகில் உருவாகும் எந்த உயிரும் சாக்காட்டில் சங்கமிப்பது என்பது தான் இயற்கை வகுத்த நியதி. ஆக சாவது என்பது தவிர்க்க முடியாதது என்பது தான் உண்மை. சாவது புதிதல்ல என்றான் இனிய பாவலன் சங்க காலத்துக் கணியன் பூங்குன்றன். நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதுதான் இந்த உலகின் சிறப்பு என்றான் நல்லறிவாளன் நமது வள்ளுவன்.
சாவது என்பது எப்போதும் நடக்கும் என்றாலும் அதையே நினைத்து வாழ முடியாது இருக்கின்றவரை இனிமையோடும் இலட்சியங்களோடும் வாழ்வது தான் வாழ்பவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் என் மனம் எப்போதும் மேற்கண்ட உணர்வுகளுடனே வாழ்ந்து வந்திருக்கிறது. இளவயதிலேயே என்னுள் பதிவான தித்திக்கும் தி.மு.க.வின் உணர்வுகளையே பதிவு செய்து பதியம் போட்டு பயிர் செய்து அதன் பயன்களை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன்.
வறுமை எனும் பறவை வானத்தில் வட்டமிடவில்லை தலையில் கூடு கட்டி வாசம் செய்தது. அந்தக் கொடும் பறவையை விரட்டி கூடுகளைக் கலைத்து சிறிது குளுமைச் சூழல் தோன்றுவதற்குள் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஓடி மறைந்து விட்டது.
பொருள் நிலையில் சற்று மேலேறிய நாளில் இருந்து சமூக உணர்வுடன் நாளும் என் எண்ணமும் நடப்பும் நடைபோட்டபடியே இருந்தது. நடைபாதை வியாபாரியாக தொடங்கி ஒரு நல்ல உணவகத்தை முப்பத்து மூன்று ஆண்டுகள் நடத்திய நான் ஈட்டிய பொருளால் நாற்பது விழுக்காட்டை அன்றாடம் இல்லாதவர்களுக்கு வழங்கி வந்திருக்கிறேன்.
காய்கறி குழம்பு, இலவச உணவு, கடன் சொன்னதை பெறாதது எல்லா அமைப்புகளுக்கும் நன்கொடை நான் சார்ந்த தி.மு.க. வின் தொண்டர்கள் பலருக்கு உதவிகள் மட்டுமல்லாது தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு நாடெங்கும் நண்பர்களை திரட்டி அழைத்துச் செல்லும் செலவு என்றெல்லாம் இழந்து வந்திருக்கிறேன்.
அய்தாறுமுறை தி.மு.க. ஆட்சியில் இருந்த நாளில்கூட என்னுடைய மூன்று உணவகங்கள் மாற்று அரசியல்வாதிகளால் நொறுக்கப்பட்ட பின்னரும் கூட கட்சியிலோ ஆட்சியிலோ எந்தவகையான எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில்தான் இயக்கத்தில் பற்று வைத்து இயங்கி இருக்கிறேன்.
இயக்க வளர்ச்சி ஆர்வத்தில் இயக்க சிந்தனைகளை செழுமைகளை ஆட்சிச் சாதனைகளை எல்லார்க்கும் சொல்ல இருபத்து நாலு தலைப்புகளில் நூல்களை எழுதி முப்பதாயிரம் புத்தகங்களை இலவசமாகவே வழங்கியிருக்கிறேன்.
பல்வேறு தலைப்புகளில் ஒரு இலட்சம் துண்டு வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறேன். கட்சிக் கூட்டங்களுக்கு செலவுப் பொறுப்பேற்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் காசின்றி என் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
அய்ந்தாண்டுக்கு ஒருமுறை பொறுப்பேற்கும் இயக்கப் பொறுப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தமிழ் சார்ந்தவர்களுக்கும் ஏறக்குறைய ஏழாயிரம் மடல்களை எழுதியிருக்கிறேன். பத்து வயதில் படிப்பகங்களில் படிக்கத் தொடங்கிய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்லாயிரம் புத்தகங்களைப் படித்து அதிலுள்ள சாரங்களை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இன்றும் கூட இயக்கம் சார்ந்த கருத்துக் கொள்கை எண்ணங்களை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இணைய தள வலைப்பூவில் வழங்கி வருகிறேன்.
மேற்கண்ட உணர்வுகளில் இறுதிநாள் வரையில் இணைந்திருப்பேன் என்ற உறுதி என உள்ளத்தில் இருக்கிறது பலவிபத்துகளிலும் உடல் நலிவு காரணமாகவும் சற்று இயலாமல் இருந்தாலும் உற்சாகம் சிறிதும் குறையவில்லை. இன்று எழுபது வயது நெருங்குகின்ற நிலையில் வாழும் நாள் குறுகி வருகிறது. எந்தச் சூழலிலும் சாவதைப்பற்றி அஞ்சாத நான் இறுதி நாளிலும் அஞ்சாத மனத்தையே பெற்றிருப்பேன்.
மறைகின்றபோது கூட மகிழ்வாகவே மூச்சை நிறுத்துவேன். நல் உறவுகளையும் நண்பர்களையும் நெஞ்சில் நிலை கொண்ட தமிழையும் தித்திக்கும் திமு.கவையும் பிரிகின்ற நிலையில் நெஞ்சு வருந்தும் என்றாலும் நான் வாழ்ந்த காலத்தில் வளர்ந்த நிலைகளை எண்ணிப் பார்த்து என் உயிர் இறுதி முடிவைத் தொடும்.
உலகில் பிறந்த நாலாயிரம் கோடிக்கும் அதிகமாக மறைந்த மனிதர்கள்களை விட வளமான நிலைகள் கண்ட நாளில்தான் நான் மறைகிறேன். கடந்த காலங்களில் வாழ்ந்த மன்னர்கள், வளமான மனிதர்களைவிட வாழ்வு சார்ந்த வளமான புதுமைகள் பூத்துக் குலுங்கும் உலகில் வாழ்தேன். உலகோடு ஒவ்வொரு நாளும் உறவும் தொடர்பும் கொண்ட நாட்களில் நான் வாழ்ந்தேன். வளர்ந்த விஞ்ஞானம் தந்துள்ள செழுமைகளில் தோய்ந்தும் துய்த்தும் வாழ்ந்தேன் - வாழ்கிறேன்.
சாக்ரடீசின் பகுத்தறிவுக் கேள்விகளிலிருந்து நடந்து விடியல் கண்ட இந்த உலகை உற்றுநோக்கி உணர வைத்த பேரறிஞர் அண்ணாவின் வழிநடந்த அறிவுத் தம்பியாய் வாழ்ந்த நிறைவோடு மறையும் நாளை எதிர்நோக்கி நடக்கிறேன். சங்ககால இலக்கிய உணர்வும் புதுமைப் பயனும் உள்ளத்தில் பதிந்த திராவிட இயக்கத்தின் பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தம்பிகள் தகுதிசான்ற பலரையும் ஓவியமாய் உள்ளுக்குள் பதித்த உணர்வுடனேயே மறைகிறேன் - வருகிறேன்.

எதிர்வரும் விஞ்ஞானம் என்னவெல்லாம் விளைவிக்கும் சாதிக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடுதான் நான் மறைகிறேன். ஆகவே மகிழ்வுடனே விடை பெறுகிறேன் என்பதை இப்போதே தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

மீண்டும் மீண்டும் பீனிக்ஸ்

மீண்டும் மீண்டும் பீனிக்ஸ்
   கிரேக்க புராணத்தில் நமது வானம்பாடியைப் போன்ற வண்ணப்பறவை பீனிக்ஸ். அந்தப் பறவையின் பெருமை பேசும் குறிப்புகள் தென்படுகின்றன. பற்றி எரியும் தீக்குண்டத்தில் பாய்ந்த அந்தப் பறவை உயிர்பெற்று எழுவதாக கூறப்படுகிறது. எரிந்து சாம்பலாகி விட்டது என்று எண்ணப்பட்ட அந்தப் பறவை உயிருடன் பறப்பதாகச் சொல்லப்படுவதை உலக அரங்கில் தோல்வி கண்டு சோர்ந்து துவண்டு போனவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்து வந்ததிற்கு சான்றாக இந்தப் பறவையை அடையாளம் காட்டுவது உண்டு.
   இந்தப் பீனிக்ஸின் உதாரணம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ? இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாலப் பொருத்தமாகும்.
    1949ல் தொடங்கிய தி.மு.க. பல்வேறு தரவுகளை, தமிழ் தமிழர் சார்ந்த உணர்வுகளைப் பதிவு செய்து வந்தது. 1967ல் ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து ஏறுநடை போட்ட தி.மு.க. எம்ஜியாரை வைத்து கழகத்தை பிழந்ததால் அதுவும் தி.மு.க. போல கட்சியின் பெயரிலும் கட்சிக் கொடியிலும் ஒரு போலித் தோற்றத்தைக் காட்டியதால் மயங்கிய மக்கள் தங்களின் மனதை போலியான மினிமினுப்பில் வைத்தார்கள். விளைவு? நலிவுகளுக்குள் சிக்கிச் சிதைந்தார்கள்.
  காரணமில்லாத கவர்ச்சியில் சிக்கியதால் போலிகளின் பொய்யுரைகளில் மனம் பதித்தார்கள். கட்சியிலும் கொடியிலும் அண்ணாவை இணைத்த எம்ஜியாரை நம்பி பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியை ஒப்படைத்தார்கள். பழிவாங்கும் போக்குடைய அந்த நடிகர் தான் வளர்த்த தி.மு.க.வை ஒழித்திட தகாத வழிகளையெல்லாம் கையாண்டார்.
திராவிட இயக்க செழுமைகளை தன்னகத்தே கொண்ட தி.மு.க.வை ஒழிக்க இங்குள்ள பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகக் கருதுகின்ற கூட்டமும் வணிக மனம் கொண்ட - கொண்டவர்களின் குழுவும் நடத்துகின்ற ஊடகங்கள் இன்று போலவே அன்றும் இயங்கின. மிசாவின் கொடுங்கரங்களால் நெறிக்கப்பட்ட தி.மு.க. தீயில் கருகிய பொருளாக சித்தரிக்கப்பட்டது.
    அந்த ஊடகங்கள் தி.மு.க. எனும் கட்சி தீயில் விழுந்து எரிந்து சாம்பலாகி விட்டது என்றார்கள். இந்தியாவிலுள்ள நீதி, நிர்வாக அரசியல் ஊடகங்களில் உள்ள வெறிகொண்ட மேட்டுக்குடியினரின் பல்வேறு சதி முயற்சிகளை முறியடித்து, தலைவர் கலைஞரின் உழைப்பால், தியாகத்தால் தித்திக்கும் தி.மு.க.வின் தியாக தொண்டர்கள் கலைஞர் பின்னால் அணிவகுத்து நின்றதால் சாம்பலில் இருந்து சிறகடித்துப் பறந்த பீனிக்ஸைப் போல் 1989ல் பறக்கத் தொடங்கியது. மீண்டும் மத்திய அரசின் சட்ட விரோதப் போக்கால் ஜனாதிபதி வெங்கட்ராமனின் அறம் இல்லாத அடாவடித் தனத்தால் பீனிக்ஸைப் போல் மீண்டும் கழக ஆட்சி தீயில் எறியப்பட்டது. 1991ல் ராஜீவ் காந்தியின் கொலைக்குப்பின் நடந்த தேர்தலில் கழகம் தோற்றடிக்கப்பட்டது. கலைஞரைத் தவிர யாரும் வெற்றிகாண இயலாமல் போய்விட்டது.
     அப்போது தி.மு.க.வை நெருப்பில் எரிந்து விட்டதாகவே சொன்னார்கள். கலைஞரின் உழைப்பு முயற்சியால் அடுத்து வந்த அய்ந்தே ஆண்டுகளில் பீனிக்ஸைப் போல சிறகடித்துப் பறந்தது.
   அடுத்த அய்ந்தாண்டுகளில் பழைய பிரச்சாரமும் பிழைப்பு மனம் கொண்ட சில கட்சிக்காரர்களாலும் 2001ல் தி.மு.க.வை தோற்கடித்து தீயில் எறிந்து விட்டதாக கொக்கரித்தார்கள்.
   அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற புது வரலாறு படைத்தது. எரிந்து கொண்டிருந்த தீயிலிருந்து பீனிக்ஸ் போல அரசியல் வானில் ஆளுமை காட்டியது. அடுத்து வந்த 2006ல் மீண்டும் ஒரு அருமையாய் தமிழ்நாட்டு அரசில் அமர்ந்து வரலாறு படைத்தது. அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் பிழைப்பு மனம் கொண்ட கட்சிகளாலும் உறவாய் இருந்த சிலரது ஊடலாலும் மீண்டும் கழகம் தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி தகுதிகூட இல்லாத நிலை ஏற்பட்டது. மீண்டும் பழைய நிலையிலேயே தீயில் எரிந்து விட்டதாக கூறி மகிழ்ந்தார்கள்.
    இன்று நடக்கவிருக்கும் தேர்தலில் ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தால் இங்குள்ள பல கட்சிகளை வளைத்து ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்களால் உருவாக்கப்பட்ட புதுபுது உத்திகளால் வீழ்த்த திட்டமிட்டு நடக்கும் பிரச்சாரத்தைத் தாண்டி இன்று எழுந்திருக்கின்ற தி.மு.க.வின் ஆதரவு அலை பீனிக்ஸை மீண்டும் நினைவு படுத்துகிறது.
   நெருப்பில் எரிந்தாலும் நீரில் அமிழ்ந்தாலும் மண்ணில் புதைந்தாலும் மீண்டெழுந்து வானமளவு தனது வல்லமையை நிரூபித்து வந்திருக்கிறது, வருகிறது. இனிமேலும் இதுபோன்ற நிலைகள் வந்தால் அப்போதும் பீனிக்ஸ் எனும் வானம்பாடியாய் அரசியல் வானில் வலம் வரும்.
  காரணம் திராவிட இயக்கச் செழுமைக் கொள்கையையும் அதற்காக பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களைப் பின்தொடர்ந்த பேராளர்களின் உழைப்பும், உறுதியும் மக்களிடம் பதிந்த உணர்வும் என்றும் அழியாத இயற்கையின் வேதியைப் போல இந்த மண்ணில் நிலைகொண்டிருக்கும். நீடித்து வளர்ந்து கொண்டிருக்கும்.
    தீயில் எரிந்த பீனிக்ஸைப் போல மீண்டும் மீண்டும் தி.மு.க. உயிர் பெறும் உரம் பெறும் என்பதே வரலாறு. விழுவது எழுவதற்காகத்தான் என்பதும் விதையை புதைப்பது முளைப்பதற்காகத்தான் என்பதும் இயற்கையானதாகும். இயற்கையாகவே பிறந்து வளர்ந்த தமிழைப் போல அந்தத் தமிழை இதயமாகக் கொண்ட தி.மு.க.வும் எழில் இணைந்த இயற்கையான இயக்கமாகும். அந்த இனிய இயக்கத்தை சரியாக, முறையாக உளத் தூய்மையோடு புரிந்து கொண்டால் தமிழும் தமிழர்களும் புதிய உலகிலும் புகழ் பெறுவார்கள்.