Thursday 31 December 2015

நெஞ்சைத் தொடுங்கள் பின்
நீட்டுங்கள் நா...பேனாவை?
ஈழப்புலிகள் ஈழப் போராட்டத்தில் இறக்க நிலை கண்ட நாளிலிருந்து இங்கொரு அவலம் சூழ்ந்த அருவெறுக்கத்தக்க சொற்கள் சுற்றிவருவதைக் காண்கிறோம்.
திராவிடக் கட்சிகள், திராவிட மாயை, என்று எதற்கெடுத்தாலும் இந்த திராவிடத்தை தொடக்கமாக்கி, ஓலமிடும் - ஊளையிடும் போக்கை அது ஏன்? என்று உணர முடிகிறது.
இந்தியாவில் ஆரிய திராவிடம் எனும் கருத்தாய்வு அதன் காரண காரிய முடிவுகள் என்பது பற்றி நேரு உள்ளிட்ட ஆய்வாளர்கள் அறிவாளர்கள் அறைந்தே வந்திருக்கிறார்கள். ஆரியம் என்பது வேதம் சார்ந்த ஆய்வற்ற ... கற்பனை வடிவ கருத்தியலாளகவும், திராவிடம் என்பது பொருள் முதல்வாத இயற்கை ஆய்வுப் பின்னணயில் உருவாகி வந்ததாகவும் ஓங்கி முழங்கி வந்திருக்கிறார்கள்.
திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதன் திரிந்த சொல்லே தவிர வேறு பொருள் கொண்டதல்ல. இதை இன்றுள்ள அழுக்காறு மனம் கொண்டவர்களுக்கும், அநாகரிக  அனாமதேயங்களுக்கும் விளங்க முடியாது; விளங்கவும் விளங்காது. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல பாவனை செய்பவர்களை எழுப்ப முடியாது. கிடைத்தவரை லாபம் தொடையில் திரித்த வரை கயிறு எனும் போக்கில் இயங்கும் தமிழ் எதிரிகள் அல்லது விளையாகிப்போன சுகபோகிகள், விலை மகளை பத்தினி எனக் கருதுபவர்களிடம் பண்பாடு பற்றிக் கேட்க முடியாது.
நடக்கின்ற குறைபாடுகளுக்கு திராவிடக் கட்சிகளின் கொள்கையும் ஆட்சியும்தான் காரணம் என்று அந்தக் கட்சியில் அங்கம் வகித்தவர்களும் அதனுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உடனிருந்தவர்களும் ஆதாயம் பெற்றவர்களும் அய்ம்பது ஆண்டுகளாக சமூக, பொருளாதார வளர்ச்சி நிலைகள், வளங்களை ஆய்வு செய்யாமல் மனச்சாட்சி, மனச்சான்று கிஞ்சிற்றும் இல்லாதவர்கள் தித்திக்கும் திராவிட சித்தாந்த எதிரிகளின் சதிவிலையில் சிக்கி சிறுநரியின் ஊழைக் கூச்சலால் மக்களை திசை திருப்பப் பார்க்குகிறார்கள்.
திராவிட இயக்கம் தொடங்கிய காலமுதல் இன்றுவரை உள்ள நூறாண்டு பணிகளை பத்துப்பத்து ஆண்டு காலமாக உற்றுப் பார்த்தால் உண்மை எதுவென்று உணர முடியும். 1910 களில் இங்குள்ள சமூக நிலைகளை எண்ணிப் பார்த்தால் அந்த இயக்கத்தின் இனிமையும் வலிமையும் எளிதில் விளங்கும். ஆட்சி நிலையை ஆய்வு செய்தால் வெள்ளையர் காலம் இந்திய விடுதலைக்குப்பின் ஆண்ட காங்கிரசு நிலையும் எத்தனை விழுக்காடு இந்த மக்களுக்கு ஏற்றம் தந்தன என்று எண்ணிப் பார்த்தால், 1970 வரைக்கும் பஞ்சமும் பட்டினியும், நோயும் நொடியும் உடுத்தும் உடுப்பின்றி வேறு என்ன இங்கே வளம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஆண்டுகளுக்கு இருமுறை தானே பெரும்பாலோர் அரிசிச்சோறும் கறியும் கோழியும் தின்னதேயன்றி வேறு செழுமை என்ன நிறைந்து கிடந்தது. மூன்று, நான்கு கோடிப்பேருக்கே இருந்த நிலை, ஆனால் இதற்குப் பின்னர் இங்கு ஏழரைக் கோடி பேராக எகிறி நிற்கும் நிலையில் இங்கே எல்லாத் துறைகளிலும் உள்ள நிலைகளில் இதயம் உள்ளோர் எண்ணிப் பார்க்கட்டும். வரலாறு பொருளாதார அறிவுள்ளோர் புள்ளி விபரங்களை முன் வைக்கட்டும். எதிலும் துல்லியமான புள்ளி விபரங்களைத் தந்து பேச வேண்டுமே தவிர பொய், புனைவு, புழுதி மனத்திலிருந்து புலம்பலாக கதற்வது பொதுவாழ்வு, பொது அறிவுக்கு கேடானதாகும்.
பெரியார் சொன்னார், வைதீகர்களை நம்பலாம், லவ்கீகர்களை நம்பக் கூடாது என்றார். எதிரில் நிற்கும் பகைவனை அடையாளம் காணலாம். மறைந்திருக்கும் துரோகிகளை அடையாளம் காண்பது கடினமாகும். அடுத்துக் கிடக்கும் துரோகிகளால் ஆயிரம் பேர் பொதுவாழ்வில் நுழைந்து தமிழ் சமூகத்தில் அவல நிலைகளை அடைகாத்து அருவருப்பை பொரித்து வருகிறார்கள்.
திராவிடம் எனும் சொல் ஒரு இனத்தின் குறியீடு. இந்த இனத்தில் பல மொழிகள், திசை மொழிகள் விரிந்து பரந்து கிடக்கின்றன. அதுகூட தமிழ்ச்சொல்தான். இந்த இனிமையும் புகழும் மட்டுமல்ல. உலகில் எல்லா மொழிகளின் தாய்மொழி, மூலமொழி தமிழ்தான். ஆனால் அதை ஆரியர்களும், அரேபியர்களும், அய்ரோப்பியர்களும் அவர்களது நாவில் உச்சரிக்கும் வளம் இல்லாததால் தமிழை டமில், திரமிளம், திராவிடம் என்று உச்சரித்தார்கள். அப்படித் திரிந்த சொல்தான் திராவிடம் ஆகும். அத்தோடு பல மொழிகள் கொண்ட இனத்தின் பெயராகவும் விளங்குகிறது.
அப்படிப் பார்த்தால், இங்குள்ள எல்லாருமே திராவிடர்கள்தான், இங்குள்ள எல்லாக் கட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான். இதில் அந்த இனத்தின் பெயரைத் தாங்கிய கட்சிதான் இந்த இனத்தின் உண்மையான பொதுநல அமைப்பாக கருத  வேண்டும். இதில் தி.க. தி.மு.க மட்டும் திராவிடம் என்று தோன்றுகிறது. மற்ற கட்சிகள் முன்னும் பின்னும் அடைமொழிகளால் அதன் தூய்மையைக் கெடுத்து விடுகிறார்கள்.
அதன் பெயரில் மட்டுமல்ல அதன் கொள்கை, கோட்பாடு, நடைமுறைகள் கூட கோளாறுகள், குறைபாடுகள், குன்றளவு கோணல்முறையும் குடிபுகுந்து விட்டன. ஆரியமாலா தலைமை தாங்கும் ஒரு கட்சியை அண்ணா பெயர் சூட்டி, அவர் கண்ட கட்சியை நினைத்து நடத்தினாலும் அதற்கு திராவிட செழுமை கொண்டது என்று எப்படிச் சொல்ல முடியும். நான்  பாப்பாத்திதான், என்னை ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்ற ஆணவ மங்கையை அறமறியா ஆரநங்கை, ஆசைகளின் வடிவமான ஒரு நடிகையை எப்படி திராவிடத் திருமகள் என்று எப்படி அழைக்க முடியும். அதுவும் அறிவுள்ளோர் பொதுவாழ்வு புழுதியில் குளிக்காதவர்கள், பித்தம் பிடிக்காதவர்கள், பேராசை இல்லாதவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
சரி, அது போகட்டும் இந்த எதிர் கட்சிகளின் தரவுகள், நிகழ்வுகள், நிலைபெற்ற வளர்ச்சி வடிவங்கள், பயன்படும் காட்சித் தொகுப்புகளை ஆராய வேண்டுவது ஊடகங்களின் பொறுப்பாகும். பொதுவாழ்வுப் பணியாளர்களின் பொறுப்பு, உழைப்பு, செயல்நிலை, தியாகநிலை நேரம் பார்த்து மக்களின் நினைத்துப் பார்க்கும் நெஞ்சமெது என்று துல்லியமாக ஆராயந்து மதிப்பெண் போட்டு மக்களுக்குச் சொல்வது ஊடகங்களின் கடமையாகும் அல்லவா?
ஊளையிடும் ஊழல் நரிகளெல்லாம் ஊராண்டால் என்னவாகும் என்பதற்கு தழில் பழைய மொழி பழமொழி ஒன்று உண்டு. நரிக்கு நாட்டாமை கொடுத்தால்; கிடைக்கு ரெண்டு ஆடு காணாமல் போகும் என்பதுதான் அந்த இழிந்தமொழி.
வணிகத்தனம் இல்லாத வாய்மை சார்ந்த பத்திரிக்கைகளை மற்ற ஊடகங்களை நினைத்து வைத்து, பாடுகிறார் இனிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்,
அறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே என்றும்,
நறுமலர் இதழ் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் என்று அறைகிறார். அதை இங்கேயுள்ள அனைவரும் நினைத்துப் பார்ப்பார்களா?
உலகில் உள்ள அனைத்து மதங்களான சமணம், புத்தம், சைவம், வைணவம், இசுலாம், கிறித்தவம், ஆசிவகம், லோகாதயம் அனைத்துச் செழுமைகளும் திராவிடம் தான். அறிவு, ஆய்வு, தூய்மை சார் அனைத்தும் திராவிடம் தான். அவற்றில் தூய்மை கெட்டிருக்கலாம், துல்லியம் இல்லாதிருக்கலாம். ஒரு கருத்து தொலைதூரங்களுக்குப் போகின்றபோது இடையூறுகள் தோன்றி இடைச்செருகல் ஏற்பட்டிருக்கலாம். பகுத்தறிவு பாழ்பட்டு பயனற்ற நிலை கண்டிருக்கலாம். இவைகளில் சில சில அம்சங்களை நீக்கிவிட்டார். அறம் சார்ந்த நெறிகள் அனைத்துமே திராவிடம் சார்ந்ததுதான்.
கிரேக்க, ரோமானிய, எகிப்தின் நல்ல சிந்தனைகள் கூட திராவிட அடித்தளம்தான். இந்த வேத நிலைகளில் கூட, அறம் சாராத, அறிவியல் சாராத, ஆய்வுக் கலப்பில்லாத சில மவுடீக நிலை பிறவிப் பேதங்களையும் நீக்கி விட்டு, அதன் இயற்கை வர்ணனைகளை ஏனையவற்றை எண்ணிப்பார்த்தால் அதுவும் திராவிடம் தான். தங்களை பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் நாங்கள் ஆரியர்கள். தங்களை மட்டுமே அறிவாளிகள் என்ற இருமாப்புக் கொண்ட வைதீகர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் திராவிடர்கள்தான்.
தங்களின் மொழி சமஸ்கிருதம் என்று எண்ணுகின்ற மொழிகூட திராவிடத்தின் இன்னொரு மொழிதான். அதை தமிழ் அறிஞர்கள் வடமொழி என்றார்கள். விந்தியத்திற்கு வடக்கிலும் தெற்கிலும் வழங்கியதை வடமொழி, தென்மொழி என்றார்கள். வடமொழி என்பது மற்றவர்களுக்கு புரியக் கூடாது என்பதற்காக அறிவாளிகளுக்கிடையே உறவு கொண்ட சிந்துவெளித் தமிழர்கள் கண்ட மறைமொழியானது. அதனால் அதை உயர்மொழி என்று உரைத்துக் கொண்டார்கள். அதனிடையே புகுந்த தீமைகளை நீக்கிவிட்டால்  அதுவும் திராவிடம் தான்.
ஆரியம் - திராவிடம் பற்றிய அண்ணாவிடம் வினவினார்கள். அவர் சொன்னார் உலகம் முழுவதுமே ஆரிய, திராவிடர்கள் இருக்கிறார் என்று கூறிவிட்டு, உழைத்து உண்மை உணர்வோடு வாழ்பவர்கள் திராவிடர்கள். உழைக்காது, ஊரை ஏய்த்து, உல்லாச நிலையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவர்கள் ஆரியர் என்றொரு ஆய்வுக் கருத்தை விளக்கினார்.
திராவிடம் சார்ந்த திராவிடத் தரவுகளை பெருமளவு தனது ஆட்சியில் நிலைநாட்டியவர் கலைஞர் அவர்கள். உள்ளத்து உணர்வுகளில் ஊக்க நிலையை உணர்த்தியவர் கலைஞர். புற நிலையில் பொருளாதார நிலையில் ஏறத்தாள ஒரு புரட்சியில் நடத்தியவர் கலைஞர். அவரது ஆட்சியின் நிதி நிலை அறிக்கைகளையும் அவரது ஆணைகளையும் வருவாயில் அவர் காட்டிய ஆற்றலும் நிலையும் அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அதன் விளைவுகளும் பயனும் வானைத் தொடும் ஒன்றாகும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை திராவிடக் கட்சியின் ஆட்சி என்பது உண்மைக்கு மாறானது, உளத் தூய்மை இல்லாதது, உதவாக்கறைகளின் புலம்பலை ஒத்தது. இந்தத் தீமை கருத்துக்களை தந்தவர்களை திட்டத் தொடங்கினால் ஒரு படத்தில் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்கள் உன்னைத் திட்டித் திட்டியே என் நாக்கு தேய்ந்து விட்டது என்பதுபோல உன்னைத் திட்டுவதற்கு ஒரு நாக்கு போதாது. ஆதிசேசன் கற்பனை போல் ஆயிரம் நாக்குகள் வேண்டும்.  ஆகவே, மக்களிடம் முகம் காட்டும் மகானுபாவர்கள் முதலில் உங்கள் நெஞ்சைத் தொடுங்கள். பின் நீட்டுங்கள் நா.. பேனாவை.

கண்ணியத்தை இழக்கலாமா?

கண்ணியத்தை இழக்கலாமா?
கடந்த 1965ம் ஆண்டு நிகழ்ந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு புதுமைப் போர் ஆகும்.
பல்வேறு கருத்துக்கள் கொள்கைகளுக்காக பல்வேறு புரட்சிகள் நடத்திருந்கின்றன. மன்னர்களின் கொடுமைகளை எதிர்த்து தங்களின் வாழ்வை நிலைப்படுத்துவதற்காக புரட்சிகள் பூத்திருக்கின்றன. உழைப்பவன் தனது உரிமைகளுக்காக போராடி மடிந்த நிகழ்சிகள் வரலாற்றில் புரட்சிகளாக வர்ணிக்கப்படுகின்றன.
மயக்கம் தரும் மதக் கருத்துகளில் மாற்றம் வேண்டும் மாண்பு வேண்டும் என்று மார்ட்டின் லூதர், ராமானுசர் போன்றோர் புதுமையாக போராடிப் புரட்சி கண்டதாக புகழக் கேட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் நாவிலும் உணவிலும் இணைந்த தாய்க்கு இணையாக மொழியைக் காக்கப் போராடி உயிர்விட்டு ஏற்படுத்திய புரட்சியை இங்கேதான் இந்த தமிழகத்தின் தான் நிகழ்ந்தது.
இந்தப் புரட்சி இயற்கையாகவோ தன்னெழுச்சியாகவோ நடந்துவிடவில்லை. அண்ணாவின் பொதுவாழ்வின் நுழைவுக்குப்பின் அவரும் அவரது அன்புத் தம்பிகளும் உழைத்த உழைப்பின் விளைவாகவும் தொய்வற்ற பல்வேறு நிலைகொண்ட பரப்புரைகளின் பயன்களாகவும் மாணவர் மத்தியில் ஏற்படுத்திய வீரம் சார்ந்த வேட்கையால்தான் இந்தப் புரட்சி இங்கே நிகழ்ந்தது.
இந்தப்போரை நடத்துவது தி.மு.க. தான் என்றாலும் பொதுநிலை பெற வேண்டும் என்று முத்தமிழ் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை இந்தப்போரை அறிவிக்கச் சொன்னார் அண்ணா அவர்கள். அறப்போராகத்தான் அறிவித்தார் திரு. கி.ஆ.பெ. ஆனால் கழகத் தோழர்கள் ஆர்ப்பரிப்பைத் தாங்க முடியாத அன்றைய முதல்வர் திரு. பக்வத்சலம் அவர்களும் மத்திய அரசும் ஆணவப் போக்கோடு தோழர்களை கொன்று குவித்த நிலையை ஏற்படுத்தினர்.
தென் வியட்நாம் புத்த பிட்சுகளைப் போலவே உடலை தீ நாக்குகளுக்கும் இரையாக்கினர் திரு. சின்னச்சாமி, திரு. சிவலிங்கம், திரு. அரங்கநாதன், திரு. வீரப்பன், திரு. முத்து, திரு. சாரங்கபாணி ஆகிய கழக மாவீரர்கள்.
இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி நின்ற மாணவன் சிவங்கை ராஜேந்திரன் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த, கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளம் காளை.
அன்றைய போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் திரு. பே. சீனிவாசன், திரு. எல்.கணேசன், திரு. துரைமுருகன், திரு. வேடச்சந்தூர் முத்துச்சாமி, திரு. ஜீவா கலைமணி, திரு. ரஹ்மான்கான், திரு. ஆலடி அருணா, திரு. மு.பி. மணிகண்டன், திரு. அமுதன் போன்ற மாணவத் திலகங்கள் ஆகும்.
தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் உயிர்களை இழந்தவர்களும் கழகத் தோழர்கள்தான். சிறைக் கூடத்தில் நிரப்பப் பட்டவர்களும் சித்திரவதைக்கு ஆனானவர்களும் தி.மு.க. தோழர்கள்தான். அதுமட்டுமின்றி, இங்குள்ள எல்லா மக்களையும் தரமாகவும், திறமாகவும் அழகு நடையிலும் அணி நலம் சார்ந்த, எழில் நடையிலும் பேச வைத்தது தி.மு.க.தான்.
ஒருவன் அழுத்தமாகவும், அழகாகவும் தமிழை உச்சரித்தாலே அவன் தி.மு.க காரன்தான் என்று அழைக்கின்ற, மதிக்கின்ற நிலை பெற்றது தி.மு.க. தான்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போருக்கு, புரட்சிக்கு இதயமாய் நின்று இயக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதனால்தான் பக்வத்சலம் அரசு அவரை மட்டும் தனிமைச் சிறைக்கு பாளையங்கோட்டைக்கு கொண்டுசென்றது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் நடந்த அந்த ஆண்டிலிருந்து போர் அறிவித்த நாளில் வீர வணக்கம் நாள் கூட்டம் நடந்து மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு இன்றுவரை வீரவணக்கம் செலுத்துகின்ற இன்றைய தித்திக்கும் தி.மு.க தான்.
அதுமட்டுமல்ல தமிழினம் தோன்றிய நாளிலிருந்து காணாத தமிழக காட்சிகளை எல்லாம் கலைவடிவத்தோடு கட்டமைத்து அதைப் போற்றி மகிழும் கட்சியாக தி.மு.க. மட்டுமே இருக்கின்றது. உலக விந்தைகளில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், வானளந்த தென்குமரி முனையில் வள்ளுவர் சிலை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி, பாவாணரின் அகரமுதலி தொகுப்பு, திரு.கீ.இராமலிங்கனாரின் ஆட்சி மொழி அகராதி அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடமை, அனைத்துக் குறள்களையும் மனப்பாடம் செய்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் நிறைய நிறைய தமிழ்த் தரவுகளை உருவாக்கி தமிழர்களின் உள்ளத்தை உவகையில் ஊஞ்சலாட வைத்தவர், தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ் வாழ்த்தாக மாற்றித் தந்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்.
ஏற்கனவே, அண்ணா காலத்தில் நிலைநாட்டிய, மதராஸை தமிழ்நாடு ஆக்கியது, தமிழ் ஆட்சிமொழி என்று நடப்பில் சாத்தியமாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் தமிழ்ச் சான்றோருக்கு சிலை வைத்தது, உலக மொழி ஆங்கிலத்தோடு தமிழையும் சேர்த்து பாடமொழியாக ஆக்கியது தி.மு.க. தான். எத்தனை பெருமைகளை அறிந்தும் அறியாதது போல, உணர்ந்தும் உணராதவராக இங்குள்ளோர் இருப்பது பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் இதையெல்லாம் செய்த தி.மு.க.வையும் கலைஞரையும் காய்ந்து கொண்டே தமிழ் மீது தணியாத காதல் கொண்டவர்களாக காட்டிக் கொள்வதைப் பார்த்தால், இவர்கள் மீது கசப்புணர்வு மட்டுமல்லாமல் கடுமையாக சாடவேண்டும் என்று தோன்றுவது என்பது உண்மையாக உள்ளம் உள்ளவர்களுக்கு உறுதியாக கருத முடியும்.
தமிழ் உணர்வையும் தமிழனத்தையும் காப்போம் என்று ஒற்றை மனிதராக ஊடக வெளிச்சத்தில் முகம் காட்டும் மணியரசன், தமிழரசன், தமிழறிவு மணியன், சீமான் வணிக மனம் கொண்டோரால் நடத்தப்படுகின்ற பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓங்கி முழங்கும், உள்ளத்தில் உண்மை உணர்வற்றோரை நினைக்கின்ற போது மனதில் மாறாத நகைச்சுவை காட்சிகளே தெரிகிறது.
இயல்பாக ஓர் ஆயிரம் பேரை கூட்டமுடியாத சில அரசியல் பொதுநல நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்வது என்பது ஏ, தமிழகமே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இழிவுகளைத் தாங்கப்போகிறாயோ என்ற எண்ணமே இதயத்தில் எழுகிறது.
இதில் ஏடு நடத்துவோர், எழுத்தாளர்கள், தங்களை இனம் காட்டுவோர், பதிப்பகச் சான்றோர் என பகட்டுமொழி பேசுபவர் எல்லாம் கூட தி.மு.கவின் தமிழ்ப் பெருமைகளைச் சுட்டாமலேயே தவறான தகவல்களை வெளிப்படுத்துகின்றனர்.
தற்போது ஒரு செய்தி, ஆழி.செந்தில்நாதன் எனும் பதிப்பாளர் பொள்ளாச்சியில் ஒரு நிகழ்ச்சியை முடித்திருக்கிறார். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் அதிகம் உயிர் இழந்தவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்காக அங்கே ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அவரது ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து அதை இவர் நிறைவேற்றியிருக்கிறார். இதில் ஒரு செய்தியைப் பார்க்க வேண்டும். இந்தித் திணிப்புப் போர் முடிந்து அய்ம்பதாவது ஆண்டில் இங்குள்ள சில ஏடுகளும் தொலைக்காட்சிகளும் கூட புரட்சி என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். போர் நடந்த நாளில் போரையும் தி.மு.க வையும் இகழ்வாகப் பேசிய பத்திரிக்கைகள் இந்தப் புரட்சி என்று சொல்வது மகிழ்ச்சிதான். தி இந்து தமிழ் நாளிதழ் அய்ம்பதாவது நினைவு நாளில் ஒரு முழுப் பக்கத்தில் ஆழி. செந்தில்நாதன் அவர்கள் தொகுத்த செய்திகளை அழகுபட சொல்லியது.
அதில் கடைசிப் பகுதியில் திரு. செந்தில்நாதன் இந்தப் போரின் விளைவுகளை அறுவடை செய்தவர்களும் திராவிடக் கட்சிகள்தான். ஆட்சியிலிருந்த தி.மு.கவும், அ.தி.மு.க.வும் தான் என்றார். அந்தப் போர் நடந்தபோது அ.தி.மு.கவே பிறக்க வில்லை. அ.தி.மு.க.வை உருவாக்கிய திரு. எம்.ஜி.ஆர். அவர்கள், செல்வி ஜெயலலிதாவுடன் கோவாவில் ஒரு படப்பில் டூயட் பாடிக்கொண்டிருந்தார். மொழிப்போரில் புரட்சியின் பயனை அறுவடை செய்தவர்கள் என்பது இந்தப் புரட்சியினால் ஆட்சியில் அமர்ந்தது தி.மு.க. என்பதற்காக சொன்னதாகும். அந்தப் புரட்சியை உருவாக்கிய தி.மு.க அந்தப் புரட்சி நடக்கவில்லை என்றாலும் ஆட்சியை அமைத்திருக்கும்.
வளர்ந்த நிலையில் நடந்து வந்த தி.மு.க. 1957யிலிருந்து சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று வந்தது. விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் 1967ல் ஆட்சிக்கு வந்தேயிருக்கும். விதைத்தவன், விளைவித்தவன், அறுவடை செய்தால் கூட அது தவறல்ல. ஆனால் வீதியில் நின்றவன், வீட்டுக்குள் அடைந்தவன், வீணாய் போனவன் எல்லாம் இந்தப் போரின் புகழை அறுவடை செய்வது எந்த வகையில் நியாயம். இதயமுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும் அண்ணாவின் மறைவிற்குப் பின், கலைஞர் காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் 1971ல் வரலாறு காணாத 184 இடங்களில் வெற்றி பெற்றது தி.மு.க. ஆனால் அதற்குப் பின் வந்த மேட்டுக்குடி சூத்திரதாரிகளின் சதி வலையில்கீழ் கட்சி பிளவுபட்டது. அதனால் நிலை மாற்றம் கண்டது. மேட்டுக் குடியினர் அ.தி.மு.கவை தங்கள் அதிகார வலைக்குள் வளைத்துப் போட்டனர். அவர்களின் பிடியில் அப்போது இருந்த தமிழர்களும் அடங்கி விட்டார்கள். இருப்பினும் தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து தமிழ் வளர்க்கும் தரவுகளை தவறாது நிலைப்படுத்தி வருகிறார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கணினி விசைப்பலகை அமைக்கும் ஆய்வரங்கம், அதற்குமுன் நடந்த தமிழ்நெட் 99 எனும் கருத்தரங்கம், அது மட்டுமல்லாது ஆட்சியில் இருந்த போதும் இல்லாதபோதும் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர்களை திரட்டி வைத்து தமிழ் தரவுகளை ஒப்பிப்பது, உருவாக்குவதுமான நிகழ்வுகளை நிறைய நிறைய செய்தவண்ணம் இருக்கிறார்.

இது ஒரு துளி அளவு கூட செய்யாத ஜெயலலிதா ஆட்சியில் அமர்த்த மேற்கொண்ட தனிமனிதர்களும் அரசியல் அமைப்புகளும் தமிழை விரும்பாதவர்களும் துணை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும். ஆனால் எத்தனைதான் சொன்னாலும் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். மக்களை மயங்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகிக்கொள்ள மாட்டார்கள், எதைச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள் என்றால் கணியன் பூங்குன்றன் சொன்னது, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போல இவர்கள் மூட்டுகின்ற தீய நிலைகளில் பொசுங்கி புகையாகிப் போவார்கள். இது போன்ற எத்தனையோ நிகழ்வுகளை வரலாறு சந்திருக்கிறது.

Tuesday 29 December 2015

கவிதை

கவிதை
வஞ்சத்தால் வீழ்த்தினர்
வேதமோதிகள் இங்கு வந்து
விதிவினையென வித்தை காட்டி
வீரனாய் வாழ்ந்தவனை
விழிமறைத்து வீழ்த்தினர்.


சீர்மலிந்த செல்வங்களை
சிந்தனைச் செழுமைகளை
சிறுமைக்குள் சிறை வைத்து
சீரழித்து மகிழ்ந்தனர்.


பலவேறு மதங்களில் உட்புகுந்து
பாழ்படுத்தி, சீர்கெடுத்து
பண்பாட்டு நிறையளித்து
பரவசம் அடைந்தனர்.


வீரர்களின் விழிபறித்து
விந்தியப் பண்பாடுகளை
நிலைமாற்றி நிற்கவைத்து
நித்தம் மனம் பூரித்தனர்.


துணைக்கண்டம் முழுமையும்
துலங்கிநின்று ஒளிரவைத்த
தூய்மைநிலை தனையழித்து
துன்பமே தந்தனர்.


தும்பை மலர்போன்ற
தூய மொழிகளோடு
வேற்றுமொழி சொல் கலந்து
வேதனையை விதைத்தனர்.


மண் மணந்த முறைகளையும்
மணம் தூவும் நெறிகளையும்
புண்ணான செய்திகளால்
புரையோட வைத்தனர்.


தேன்போன்ற தேசியமும்
தெவிட்டாத கலைவுணர்வும்
ஆகாத மனிதர்களால்
அழிந்த நிலை தோன்றியது.


வேகாத பொருள்களையும்
வீணான முறைகளையும்
வீதியிலே முரசறைந்து
விற்று நலன் பெற்றனர்.


பழந்தமிழர் சீரழித்து
பண்பாட்டை சிறைவைத்து
பாவடிவம் பல தந்து
பார்சிரிக்கச் செய்தனர்.


கலை வடிவ எழில்சூழ்ந்த
கவிதைமண நிலை கண்ட
தன்மானத் தமிழர்களை
தாழ்ந்திடச் செய்தனர்.


வேதமோதி வந்தவரை
விருந்தினர் எனக் கருதி
வரவேற்று மகிழ்ந்தவனை
வஞ்சகத்தால் வீழ்த்தினர்.
குறிஞ்சி முல்லையின் விழாக்காலம்
புள்ளினங்கள் இசைபாடும்
பூவினங்கள் மணம் தூவும்
பூமியின் செழுமையெல்லாம்
பூரித்து மகிழ்ந்தாடும்


அருவிகள் ஆலோலம் பாடும்
அரிமாக்கள் அரசநடை போடும்
ஆனைக்கூட்டம் அசைந்தாடும்
அழகனைத்தும் ஆட்சி செய்யும்


மரங்களில் கனிகுலுங்கும்
மந்திகள் அங்குவரும்
கனிபறித்து உண்டபின்னே
கவலையின்றி இளைப்பாகும்


மலர் குலங்கும் குளிர்மண்ணில்
மானினங்கள் மருண்டோடும்
மாண்புள்ள மனிதர்களாம்
மலைக்குறவர் கலைபடைப்பர்


பச்சைக் கொடிகள் எல்லாம்
பற்றிப் படர்ந்திருக்க
அருகிலுள்ள கொம்புகளை
ஆரத் தழுவி நிற்கும்


பாருக்குள்ளே உயர்ந்து நிற்கும்
பசுமை நிறை குறிஞ்சி நிலம்
மாசுகளை துடைத்துவிடும்
மக்கள் மனம் கூத்தாடும்


விலங்கோடு பறவைகளும்
விளைந்திருக்கும் உணவுகளை
உண்டு மகிழ்ந்த பின்னே
ஊடல்கொண்டு உறவாடும்


கானகமென்று சொல்லப்பட்ட
கலைசிந்தும் மண்வளத்தை
காவியம் பாடிவைத்தார்
கபிலர் எனும் பெருமகனார்


ஓவியமாய் ஒளிர்கின்ற
ஒப்பிலாக் காடுகளை
ஏடுகளில் எழுதிக்காட்டி
இலக்கியமாக்கி வைத்தார்


இயற்கையின் எழிலெல்லாம்
இங்கேதான் தழைக்கிறது
கானகத்தின் புகழ்பாடும்
கவிதைகளை படைத்திடுவோம்


வானமளந்த மலைமுகடை
வளம்தரும் குறிஞ்சி என்று
மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்க
மாண்புரைத்தார் பாவலர்கள்


காடுகளை அழிக்கின்ற
கயவர்களை சாடிடுவோம்
குறிஞ்சி முல்லை காக்க
கூடிக் குரல் கொடுப்போம்


விளையாடும் விலங்கினங்கள்
வீசுமணப் பூவினங்கள்
கலைசிந்தும் கானகக் காட்சிகளை
கண்ணில் நிறைத்து வைப்போம்


குறிஞ்சி முல்லை திணை வாழ்வை
குறையாமல் காத்திடுவோம்
குளிர் நிறை செழுமைகளை
குறையாது தழைக்கச் செய்வோம்


குளிர்முக குறிஞ்சிக் கலியும்
முறுவலிக்கும் முல்லைக் கலியும்
முத்தமிழின் எழில் காட்டி
மூவேந்தர் புகழ் பாடும்.


முழுதான அழகமைந்த
முல்லையின் இனிமையும்
புதுமையின் எழில்காட்டி
பூமியில் புகழ் சேர்க்கும்.

ஊர்களின் விழாக்கள்
ஒருநாளில் முடிந்துவிடும்
காடுகளின் விழாக்காலம்
காலமெல்லாம் நிலைகொள்ளும்.

Monday 14 December 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அழகை விரும்புவோரையும், அவர்களுக்கு மறுப்புச் சொல்வோரையும் முகம் பார்க்க வைத்து, உள்ள உணர்வுகளை உலகம் காண வைத்த நீயா? நானா? பல்சுவை உணர்வுகளை படைப்பது போல் இதிலும் தன் அழகைக் காட்டி நின்றது.
இருதரப்பும் நிறையச் சொன்னார்கள். அதோடு ஆசையும் தேவை என்றார்கள். அலங்காரம் அவசியமென்றும் அறைந்தார்கள். சிலர் மன அழகுதான் தேவை என்றார்கள் அறிவாளர்கள் நிறைந்த நிலைகளை அழகாகச் சொன்னார்கள்.
அழகு என்பது இயற்கையோடு இணைந்திருப்பது, அதை இருவகை என்பார்கள். இதை தமிழில் எழில் என்றும் அழகு என்றும் இனம் பிரிப்பார்கள். இயற்கையில் காணும் காட்சிகளை மூளையின் செழுமைக்குத் தக்கவாறு இரசிக்கச் சொல்லுவதை எழில் என்றார்கள்.
தன் முகத்தைக் காட்டும் கண்ணாடித் தன்மைக்கு முன்னர் நிற்கும் உயிரினங்களில் அதே மூளைச் செழுமைக்குத் தக்கவாறு ஒப்பனை செய்யச் சொல்லும். அதற்கு அழகு என்று பெயர் வைத்தார்கள்.
மனஅழகு, உடல் அழகு என்றும் பலர் கூறுவதுண்டு. இயற்கையில் தோன்றும் கருமேகத்தை எழில் என்று சொன்னான் இனிய வள்ளுவன். மலரும் கொடியும் எழில்தான். அதற்கு ஒப்பனை தேவையில்லை. ஆனால் அந்த மலரும் பிறவும் ஒப்பனைக்கு பயன் படுகின்றன.
ஆண்களின் அழகு, மிருகங்கள் பறவைகளுக்குத்தான் உண்டு என்பார் கவிஞர் வைரமுத்து. சிங்கம், கோழி, மான் போன்றவற்றைக் குறிப்பிடுவார் அழகின் சிரிப்பு என்று புரட்சிக் கவிஞர். இயற்கையின் எழிலையெல்லாம் எழுத்தில் வடித்து நமது இதயத்தில் நிரம்பி வைத்தார்.
எல்லை தாண்டும் போது அன்பழகு அறிவழகு இயலழகு கெட்டு ஆணவப் போக்கும் ஆசை நினைப்பும் மேலோங்கி அவலங்கள் தோன்ற காரணமாகி வருவதை உணர முடிகிறது.
தமிழர்களில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாகவே உடைகளையும் அணிகலன் வகைகளையும் உடலோடு இணைத்து வைத்திருந்தார்கள். தலைமுடி கொண்டையும் அதில் பூச்சூடி காதில் தோடும், தொடியும் (பிரைஸ்லெட்) கையிலும் காலிலும் வீரக்கழல் என்று கால்தண்டையும் கைத்தண்டையும் அணிந்து அழகுப்படுத்திக் கொண்டார்கள். இப்போது கூட இந்த தெலுங்கு வழி வந்தவர்கள் இன்னும் அணிகிறார்கள்.
தமிழர்கள் உடை அணிவதில் ஒரு பாதுகாப்பு இருந்தது. பின்கொசுவம் வைத்து கட்டும் சேலையை எளிதில் யாரும் அவிழ்க்கவோ, உருகவோ, மேலே தூக்கவோ இயலாது. இன்னும் சொல்வதென்றால் பாலியியல் முயற்சியின் போது சோர்ந்து போக வேண்டும் அல்லது அவள் உடன்பட வேண்டும்.
ஆனால் இங்கு மன்னர்களுக்காகவும் மைனர்களுக்காகவும் பொட்டுக்கட்டப்பட்டு  தேவதாசிகளாக விளங்கியவர்களில் பலர் ஊர்மேய வேண்டிய ஒப்பனைகளில் ஒன்றுதான் இந்த நாட்டியக்காரிகளின் ஒப்பனை உடையழகுதான் இங்குள்ள பெண்களால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிலப்பதிகாரத்தில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களெல்லாம் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஒப்பனை அழகு என்பது தன் நிலை தாண்டுகின்றபோது தான் ஆணவத் திமிர் ஆசை அழுத்தம் கூடி, அறிவழகு, அன்பழகு, இயல்பழகு இயற்கையழகு கெட்டு அவலங்களும், அசிங்கங்களும் ஏற்பட்டு அறம் அழித்து விடும் நிலைகாண்கிறது என்பதை உற்றுப் பார்த்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
*****
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள். நினைத்திடும் போதெல்லாம் இனித்திடும் நீயா? நானா? நிகழ்வில் சித்த மருத்துவத்தின் சீர் செழுமைகளையும் புதுமைக்குள் புகவிடாத புண்ணான நிலைகளையும் விரிவாகவே விவாதித்தார்கள்.
கோபியின் குளிர் முகத்தில் குறுந்தாடி பயிராகி, பசுமை காட்டி நிற்கிறது. நிகழ்ச்சியின் நேரத்தையும் குறள் வடிவில் கொண்டுவந்து, வீண்விவாதங்களைத் தவிர்த்து, அதாவது பயினில சொல்லாமை என்பதுபோல் பார்ப்பவர் சலிப்படையாத நிலையை உருவாக்கியது உண்மையில் உவகை தரும் ஒன்றுதான்.
சிந்தனையில் பூத்த கருத்துக்கள் பலவற்றை இருவேறு நிலைகளிலும் எடுத்து வைத்தார்கள். இதில் இன்னும் பல செய்திகளைச் சொல்லியிருந்தால் மகிழ்வாக இருந்திருக்கும். மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள் இன்னும் கூட விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கலாம். அதாவது இது மருத்துவமாக மட்டும் பார்க்கவில்லை. இதில் மதக் கருத்துக்களும் வழிபாட்டு உணர்வுகளும், ஆதிக்க உணர்வுள்ள குரு-சிஷ்ய நிலையும் சூழ்ந்திருக்கிறது. தி.மு.க. அரசைத் தவிர வேறு எந்த அரசும் எல்லாக் காலத்திலும் ஆதரவு அளிக்காததும் காரணம். இதை வணிக நிலைக்குள் கொண்டு வரக் கூடாது அப்படி செய்தால் அது பாவம் என்ற போதனையும் தான் காரணம் என்று அவர் விளக்கியிருக்கலாம்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பது அடுப்படி அஞ்சரைப் பெட்டியை ஆய்வுக் கூடமாக வைத்து, அன்னையர் குலம் உருவாக்கியது. அந்நிய மோகத்தில் அனைத்தையும் இழந்த தமிழன் இந்த இனிய மருத்துவத்தின் மகத்துவம் மாண்பையும் கூட இழந்து வந்தான், வருகிறான்.
மருத்துவர்களை தனித்தனியே குற்றம் சொல்வதோ மொத்தமாக குறை சொல்வதோ கூட அறம் ஆகாது. பொதுவாக இந்தியா என்று சொல்லப்படும் இந்தப் பகுதியில் ஆய்வு, அறிவுணர்வில் எந்த அரசும் இருந்ததில்லை, இயங்கியதில்லை. ஒரு ஆராய்ச்சி கூடத்தையோ கல்லூரிப் பல்கலைக் கழகத்தையோ உருவாக்கித் தரவில்லை. இதில் ஆயுர்வேதம் என்பது ஆரிய வேதமாகக் கருதி அதற்கு மட்டும் அரசுகள் ஆதரவிட்டன. இந்த சித்த மருத்துவம் என்றால் சித்தர் நாத்திகர்கள் என்று கருதி, அதை அழித்திடவும் முனைந்தன.
ஞானம் என்பது பொதுவானது, விஞ்ஞானம் என்பது அதை விஞ்சிய ஞானம். விஞ்ஞான மருத்துவம் தான் அலோபதி மருத்துவம். ஆய்வுக்கூடங்களில் அலசப்பட்ட முடிவுகள் தான் அலோபதி. அதுபோல இல்லாமல் அய்ன்ஸ்டீன் போல ஆய்வுக்கூடம் இல்லாமல் கண்டுபிடித்ததுதான் இந்த நாட்டுப்புற மருத்துவம். தமிழ் மருத்துவம் தான் இந்த சித்த மருத்துவம். ஆதிக்கம் செலுத்தாமல் அரசுகளின் ஆதரவு இருந்தால் உலகின் முதல் நிலைக்கு உயர்ந்து ஒளிவீசும். அமெரிக்காவில் அண்ணா சொன்னார் எங்கள் அன்பழகனுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தபோது, குப்பைமேனி இலையை வைத்து நோய் தீர்த்தோம். ஆனால் எங்களிடம் எல்லாமே கச்சா பொருளாகவே இருக்கிறது என்றார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த கலைக்கதிர் இதழ் ஒன்றில் படித்த நினைவொன்று கண்முன் விரிகிறது. அதில் சித்த மருத்துவம் வெள்ளை பாசானம் என்று பழிக்கின்ற இந்த சுகர் (வெள்ளை சீனி) என்பது தூய்மைப் படுத்துகின்ற போது அதிலுள்ள வேதிப்பொருட்கள் (மொலாசஸ்) வெளியேறி விடுகிறது. அதனால் அந்த சீனியில் சமச்சீர் இல்லாது போய்விடுகிறது. அது குடலுக்குள் செல்லுகிறபோது வேறுபல வேதிப்பொருட்களை சுரண்டுகிறது. அதனால் இந்த சமச்சீர் கெட்டு சக்கரை நோய் வந்து விடுகிறது. ஆனால் இதை உணர்ந்த நாடுகளில் கூட நானூறு மடங்கு விரும்பப்படுகிறது என்றது அந்தக் கட்டுரை.
வெல்லம், கரும்புச்சாறு, பழங்கள், பழச்சாறு, பனைவெல்லம் போன்றவற்றை உண்டால் நோய் வராது என்று விளக்கப்பட்டிருக்கிறது. உலகில் எல்லாத் தரவுகளையும் ஒன்றுபோல் பார்ப்பதோ அது ஆகாது என்று உதறி விடுவதோ அறிவுடைமை ஆகாது. அதனதன் நிலைக்குள் இயங்க வேண்டும். இதை மனித அறிவு உணர்ந்து, மதித்து, உள்வாங்கி துய்க்க வேண்டும். அது ஊருக்குச் சொல்லி உணர்த்துவது அறிவாளிகளின் மக்கள் நலம் நாடுவோரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
நேரத்தை சுருக்கிய நீயா? நானா?மேலும் மேலும் கூர்மையான அதுவும் தமிழின் உண்மைப் பெருமைகளை உலகிற்கு உரைக்கும் நிகழ்வுகளை இன்னும் இன்னும் தெளிவாகப் பேசுகின்ற ஆய்வாளர்களை, அறிவாளர்களை, நல்லுணர்வாளர்களை திரட்டி நடத்த வேண்டுகிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி

Saturday 5 December 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
ஊரிலுள்ள உண்மைகளை உற்றுப் பார்த்து உலகிற்கு உணர்த்தும், ஊடக நிகழ்வில் ஒரு மைல் கல்லாக நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வொன்றை தந்த நீயா? நானா? உயர்ந்து உயர்ந்து நின்று உள்ளத்தில் நிறைந்திருக்கின்றது.
பொதுநல உணர்வாளர்கள் பலர் கண்ணில் படாத கருத்தில் உணராத, உறையாத காட்சிகளைக் காட்டி கருத்தில் நிறைய வைக்கும் நிலையை தன் கடமையாகச் செய்கிறது நீயா? நானா?
பெண்களின் உழைப்பை குறிப்பாக உடலை வருத்தி உருக்குலைக்கும் உள்ளத்தை ஊனப்படுத்தும் இழிந்த வேலைகளைச் செய்வோரின் உடமைகளை உறிஞ்சும் வஞ்ச நெஞ்சம் கொண்டவர்கள் மனித உருவில் உலவுகின்ற ஓநாய்க்கு ஒப்பானவர்கள்.
உதிரத்தை உறிஞ்சும் அட்டையைப் போல உழைப்பவர்கள் உரிமையை, உடமையை கொள்ளையிடும் கொடூரன்களை எதிர்த்துப் போராடிய அண்டை மாநிலத்துத் அருமைத் தமிழ்ச்சிகளைக் கண்முன் காட்டியதை என்றும் மறக்க முடியாது.
என்றென்றும் போர்களத்தில் நின்ற தந்தை பெரியார், ஆயிரம் பத்தாயிரம் பேர் போராட்டத்தில் உயர் விட்டால்தான் புரட்சி வெடிக்கும், உரிமை கிடைக்கும் என்றார்.
ஊன்தின்று உடலெடுத்து இன்று ஏழு கோடிப்பேராக பெருகி நிற்கும் தமிழன் தமிழச்சிகள் போராட்ட உணர்வு இல்லையே என்று கோபி கேட்ட போது கஞ்சி காய்ச்சி குடித்துவிட்டு கழிவறைக்கு சென்று வந்து கணப்புத் தணிக்க குட்டிகளை போட்டுக் குடும்பத்தைப் பெருக்குவதுதான் தனது வாழ்வு என்று கருதும் நிலையை எங்கும் காணுகின்ற போது கண்கள் பனிக்கிறது பின் மனம் கடுப்பாகிறது.
மானத்தை நிலைநாட்டும் போர்களங்கள் நிறைந்த தமிழ் நிலத்தில், மாவீரர்கள் உலவிய இந்தக் திருவிடத்தில் மனித உணர்வில் கூர்மையும் மனதில் செழுமையும் நிலைபெறவில்லை. இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்ற இங்கு கல்லும் மண்ணும் அருள்தரும் உணர்வுகள் என்று கருதி அதுதான் கடவுள் என்று ஊராரையும் நம்ப வைத்து, கண்மூடி நின்று கைவித்துத் தொழும் அவலம் இன்றுவரை இருக்கக் காண்கிறோம்.
இருப்பது என்னவென்று எண்ணிப்பார்காத இயல்பு கொண்ட, இகம்பர சுகம்பெற ஏதேதோ நினைத்து எதிர்பார்த்து ஏமாறும் மனநிலையில் இந்த நிகழ்வைத் தந்ததற்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
குறிப்பு: இந்த அமைப்புச்சார தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியதும் பெண்கள் பலருக்கு உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்தவர் கலைஞர் என்பதையும் குறிப்பிட்டிருந்தால் மேலும் மகிழ்வூட்டியிருக்கும்.
நன்றி
*****
பெற்றோரை தன் அருகில் வைத்து பேண வேண்டும் என்று கருதுகின்ற பிள்ளைகளையும் அவர்களின் விருப்பத்தையும் மறுக்கும் பெற்றோரையும் எதிரெதிராக வைத்து நடத்திய நிகழ்வு மிக நன்றாகவே இருந்தது.
மனத்திற்குள் மறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் வித்தையை நீங்கள் இருவரும் எங்கு கற்றீர்களோ வியப்பாக இருக்கிறது.

நன்றி
*****
அறிவாளரோடு உறவாடும் மடல்
வடஇந்தியா - தென்னிந்திய வாழ்க்கை நிகழ்வுகள் வேறுபாடு கொண்டது மட்டுமல்ல முரணும் கொண்டதாகும். இதை கிமுவிலிருந்து இன்று வரை இந்த ஆரிய-திராவிடப் போர் என்றார்கள் ஆய்வாளர்கள். உலகிலேயே நீண்டகாலம் நடக்கின்ற போராகவும் இருப்பதாக அறைகிறார்கள்.
அண்மைக் காலத்தில் அயத்துப் போன (மறந்துபோன) நேரத்தில் அதை நினைவூட்டும் வகையில் நீயா? நானா? நிகழ்வொன்றை நிகழ்த்தி உணவுச் சுவையின் வழியாக இருவேறு நிலைகளை ஒன்றாக்கி மகிழ்ந்தது.
வடஇந்திய-தென்னிந்திய உணவுகளை உயர்வை இருதரப்பினரும் தங்களின் இயல்பான உணர்வுகளுடன் எடுத்து விளக்கினார்கள். தாங்களே வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கிலும் பேசிக் கொந்தளித்தார்கள்.
இருப்பினும் உச்சக் கட்ட நிலையில் உணவின் சுவையோடு உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்ட நிலையில் நிகழ்வை நிறைவு செய்தீர்கள்-பாராட்டுகள். ஆனால் எப்போதுமே வடவர்களும் சரி தென்னவர்களில் பலரும் சரி வடக்கு வெற்றி பெறும் நிலைக்கே தங்கள் கருத்துக்களை தருகிறார்கள் என்பதற்கு நீயா? நானா?வும் ஒரு சான்றாக அமைந்தது. விருந்தினராய் வந்த நால்வருமே செய்திகளை சேகரிக்காமல் நடுநிலையைத் தாண்டி வடவரை வாழ்த்தும் செய்திகளைச் சொல்லிப் பூரித்தார்கள்.
இந்தியாவெங்கும் பயணித்த எழுத்தாளர் சாருநிவேதிதா உணவுகளில் நாற்பது வகை என்றார். அவர் வடக்கைச் சொன்னாரா? தெற்கைச் சொன்னாரா தெரிவில்லை. ஆனால் உலகிலேயே உணவானாலும், உணர்வுகளனாலும் சொல்லும் பொருளும் பிறந்தது இந்த தென்னிந்திய திராவிட மொழிகளின் தாயகமான தமிழில்தான் என்பது முழு உண்மையாகும். சொல்லுதல் என்பதற்கு அதாவது தனித்தனியே பொருள் கொண்ட சொற்கள் நாற்பதிலிருந்து நூறுவரை இருப்பதாக ஆய்வாளர்கள் அறைகிறார்கள்.
இந்த பிரியாணி, குலாப்ஜாமூன், புரோட்டா என்பதெல்லாம் இஸ்லாமிய உணவுகள் என்று சொல்வார்கள். ஆனால் பிரியாணியை சங்க காலத்தில் கறி விரவு, நெய்ச்சோறு என்று குறிப்பிட்டார்கள். குலோப் ஜாமூன் என்பதை கழுநீர்  உருண்டை என்று இன்றும் நடைமுறையில் உள்ளதாகும். அதுபோக அரிசி களைந்த நீரின் அடிமண்டியை எடுத்து மண்டி என்று புளிக்குழம்பு ஒன்றை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
சமைப்பதற்கு 22 சொற்களும் உண்பதற்கு பன்னிரண்டு சொற்களும் சமைத்து உண்ணும் பண்டங்களின் பெயர்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாக தமிழில் இருந்தது, இருக்கிறது.
அருந்துதல், உண்ணல், உறிஞ்சுதல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல், துகைத்தல் ஆகிய பன்னிரெண்டு.
அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளரல், சுடுதல், திரித்தல், நனைத்தல், துவட்டல், பிசைதல், பிழிதல், பொங்கல், பொரித்தல், மசித்தல், வடித்தல், வதக்கல், வறுத்தல், வாட்டல், வார்த்தல், வேகவைத்தல் வெண்ணீர் படுத்தல் ஆக 22.
உண்ணும் பண்டங்களின் வகைவகையான எண்ணிக்கை நாற்பதிலிருந்து நூற்றுக்கு மேலே இருப்பதாக சான்றோர் சா. கணேசன் சொல்லியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் நடுவர்கள் சொல்லுகின்ற செய்தியைத் தாண்டி தமிழில் மலையென குவித்துக் காட்டுகிறது.
நன்றி

Tuesday 1 December 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அருமைத் தங்கை அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள், இணையதளப் பதிவிலிருந்து தாங்கள் தந்த இரு செய்திகளை என் நண்பர் ஒருவர் கூறிய நேரத்திலிருந்து என் சிந்தை மகிழ்ந்து உள்ளம் சிலிர்த்த நிலையில் இதை எழுதுகிறேன்.
புத்தர், இயேசுவை பல நூல்களில் படித்த எனக்கு தாங்கள் குறிப்பிட்ட செய்தி என்னை வியக்க வைத்தது. புத்தர் தமிழ் படிக்க முயன்றார் என்று இரத்தின விகாரம் எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டியதாகவும், இயேசுவைப் பரப்ப மொழி பெயர்ப்புக்கு தேர்வு செய்த அறுபத்துமூன்று மொழிகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ் ஒன்றுதான் என்று தகவல் தந்ததாகவும் நண்பர் சொன்னதும் என் மன உணர்வுகள் அண்ணன் தங்கப் பாண்டியனின் அவர்களின் பால் சென்றது.
ஆய்வாளர்கள் போற்றிப் புகழ வேண்டிய செய்திகளைத் தரும் அன்பு மகளையும் அரசியல் அரங்கில் தி.மு.க. மதிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் அருமை மகனையும் ஈன்று வளர்த்த என் அண்ணன் என் மீது வைத்திருந்த அதீத அன்பின் காரணமாக நெஞ்சின் உணர்வு அலைகளில் அவர் நினைவு நீந்தி மகிழ்கிறது.
அன்பானவர்களுக்கு அடிக்கடி நலன் கேட்டு வாழ்த்து சொல்லும் வழக்கம் உள்ள எனக்கு, நேரில் வரும் நிலையுமில்லை. தங்களுக்கும் தம்பிக்கும் வழங்கும் வாய்ப்பை அலைபேசியும் தரவில்லை. ஆனால் அம்மாவுக்கு மட்டும் அடிக்கடி வாழ்த்துச் சொல்லி நலன் கேட்டுக் கொள்வேன்.
அக்டோபர் 30ம் நாள் தமிழ் இந்து ஏட்டில் தங்களின் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்கள். தங்களை வாசிப்புக்கு தாயும் தந்தையும் வழங்கிய நூல்களைக் குறிப்பிட்டுவிட்டு ஆங்கில இலக்கியம் போதித்த ஆசிரியர் சுப்பாராவையும் குறிப்பிட்டிருந்திருந்தீர்கள்.
நாத்திய சிந்தனையை நட்டு வளர்த்தது அப்பா தந்த நூல்கள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். இதைச் சொன்ன தாங்கள் நாத்திகத்தை விதைத்து விளைவித்து தமிழர்கள் நலம் பேண உலகிலேயே ஓர் இயக்கம் கண்ட தந்தை பெரியாரை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
பெரியாரின் பேரறிவுக் கொள்கைகளை பேரளவுக்கு இங்கே பதிவு செய்து ஆங்கில இலக்கியத்தை அறிவியல் வரலாற்றின் மூலை முடுக்கெல்லாம் முற்றாக படித்து அறிந்துணர்ந்து படித்ததை அப்படியே ஒப்பிக்காமல் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு எந்த வகையில் உரம் சேர்க்கலாம் என்று கருதி அணுகி ஆராய்ந்தறிந்து அறிவு நிலையில் செயல்பாட்டுத் தளங்கள் அத்தனையிலும் புகுத்தி புரிய வைத்து இங்குள்ள இளைஞர்களுக்கு உலகத்தை எழுச்சி கொள்ள வைத்த அறிஞர் அண்ணாவைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதினேன்.
அண்ணாவின் அருமைத் தம்பிகளில் ஒருவரான இனமான பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் சொற்பொழிவு சுருக்கத்தை எடுத்துக்காட்ட விழைகிறேன். ஆங்கிலப் பேரறிவாளர் கவிஞர் ஷெல்லியின் கவிதைக் கருத்துக்களிலிருந்துதான் உலகில் நடந்த பெரும் புரட்சிகள் எல்லாம் உருவானது என்கிறார் பேராசிரியர். கவிஞனின் கருத்தை உள்வாங்கி வால்டேரும், ரூசோவும் பிரஞ்சுப் புரட்சிக்கான விதைகளை நட்டு வளர்த்தார்கள் என்கிறார்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சி வீரர்கள் தலைமறைவாகயிருந்த எல்லையோர ஜெர்மன் பகுதியில் தான் காரல் மார்க்சும், ஏங்கல்சும் வாழ்தார்களாம். அந்தத் தலைமறைவு வீரர்களின் உறவும் நட்பும் தான் பொதுவுடைமைச் சித்தாந்தம் பூப்பதற்கு உதவியதாம். அவைகளை உட்கொண்டதால்தான் இலியோவினிச், லெனின் சோவியத் புரட்சியை முன்னெடுத்தாராம்.
அமெரிக்க உள்நாட்டுப் புரட்சிகளுக்கும் கருப்பர் கிளர்ச்சிகளுக்கும் கூட கவிஞனின் கருத்து காரணமானதாம். வாஷிங்டனும் அவரது நண்பர்களும் ஆப்ரகாம் லிங்கனும் கூட ஷெல்லியின் கவிதையை நேசித்தவர்களாம். பேராசிரியரின் பொழிவு சுருக்கத்தை நான் உணர்ந்தவரை சொன்னேன்.
இந்து நாளிதழில் இன்னொரு குறிப்பும் ஒளிர்ந்தது. பக்தி இலக்கியங்களை முற்றாக மறுதளிக்க முடியாது என்பதாலும் பக்தி என்பதின் அடித்தளம் பயம் என்கிறார்கள். பயபக்தி என்பது மதம் போதித்த வகைகளை பயபக்தியுடன் மதித்து மகத்துவமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இவற்றில் ஆய்வுகள் கூடாது, ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக் கூடாது என்றும் பறைசாற்றுகிறார்கள்.
அஃறிணைப் பொருள்களையும் வழிபாட்டுத் தரவுகளாகச் சொல்கிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை இருண்ட காலம் என்றார்கள் சில ஆய்வாளர்கள். ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற பல்வேறு உயிரினங்களை மக்கள் வணங்கி வழிபட வேண்டும் என்று வல்லாண்மை நிலை காட்டி, வணங்கச் சொல்கிறார்கள். மறுப்பவர்களை கொன்று குவிக்கிறார்கள்.
சோவியத் நூலொன்றின் சான்றுப்படி, பனிக்கரடியை வணங்கச் சொல்லி மறுத்த பத்தாயிரம் மக்களைக் கொன்று குவித்தான் சைபீரியர் பகுதியைச் சேர்ந்த மன்னனின் செயல் அறியப்படுகிறது. இங்குள்ள சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் கூட அத்தகைய நிலையை பேரொரு வகையில் செயல்படுத்த சொல்கிறது.
இதையெல்லாம் மறந்துவிடுவோம் இந்த பக்தி இலக்கியங்கள் தமிழ் சார்ந்ததா என்றால் இல்லையென்கிறார்கள் பகுத்தறிவு ஆய்வாளர்கள். இனிமையாளர் பாக்களில் எடுத்தாளப்படும் இந்த பக்தி இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்களின் உள்ளமும் நடப்பும் அவர்களு புகழ்பாடும் கதைகளிலிருந்து பார்த்தால் கண்ணியம் உள்ளதாகத் தெரியவில்லை. தமிழ் தரும் அறம்சார்ந்த அறிவுசார்ந்த நிலைகளுக்குள் அடங்கவில்லையென்றே அறைகிறார்கள்.
கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சோதிடம், மந்திரம் மற்றும் பல மாயாவாத கருத்துக்களுக்கு தமிழில் சொற்கள் இல்லை என்கிறார் தந்தை பெரியார். இதுபோல் எதுவும் இல்லையென்பது சில இடைச்செருகள்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் தெளிவாகத் தமிழ்நிலையை தெரிந்து கொள்ளலாம்.
உயிர்கள் தோன்றுவதற்குக் காரணம் ஆதிமூலம் எதுவென்று கேள்விக்கு உலகம் முழுவதும் இருந்த மதவாதிகள், சிந்தனையாளர்கள், மேதைகள் அனைவரும் கடவுள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் காட்சிபூர்வமாக, கருத்துபூர்வமாக நிரூபிக்க முடியாது என்றார்கள். ஆனால் உயிர் தோன்றியதற்குக் காரணம் ஆதிநிலை, நீர் தழுவிய நிலமென்று தமிழ்தான் சொன்னது, தமிழன்தான் சொன்னான். திணைக் கோட்பாடுகளில் தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.
இங்கும் சரி, ஈழத்திலும் சரி தமிழர் ஏற்றம் பெறாததர்க்கு உலகளாவிய நிலையில் ஒளிரும் புகழ் பெற்றவர்கள் இல்லையென்பது வருத்தம்தோய்ந்த என் கருத்து. மறைதூதர் தனிநாயகம் அவர்கள், உலகநாட்டு மொழி ஆய்வாளர்களைக் கண்டறிந்து, முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தினார். அதன்பின் சென்னையில் அண்ணா நடத்தினார்.
கடந்த நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பு என்பது அளப்பறிய ஒன்றாகும். இங்குள்ள எல்லாவகை இளைஞர்களையும் எல்லாவகைகளிலும் எழுச்சி ஏற்றம் கொள்ள ஓர் இனிய சூழலை இலட்சிய வடிவங்களை ஏற்படுத்தியவர் அவர். குறிப்பாக, மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய ஆசிரியப் பெருமக்களையும் கவர்ந்து அவர்களுக்கு ஆக்கமிகு நிலைகளை நிலைப்படுத்தியுவர் அவர்.
அய்ரோப்பாவின் எல்லாவகை அறிஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் இதயத்தில் வைத்து, இங்குள்ளவர்களுக்கு தமிழ் நிலைக்கேற்ப, இயக்கி வழி நடத்தினார்.
தமிழ் நடையில் எழுத்திலும், பேச்சிலும் தண்ணொளி சிந்தும் தன்னிகரில்லாத தனிநடை கண்ட அவர் தமிழ் இலக்கியங்களை, தனித்துவத்தை இங்குள்ள தமிழ் அறிஞர்களை விட ஆழமாக உணர்ந்து, உணர்த்தியவர் என்பதற்கு ஒரு நிகழ்வை நினைவு படுத்துவது கடமையென்று கருதுகிறேன்.
இந்திய அரசின் நிதியமைச்சராகப் பொறுப்பு வைத்த திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அடிக்கடி அண்ணாவிடம் ஆங்கில இலக்கியத்தின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே இருப்பாராம். அதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா அவர்கள். ஆர்.கே.எஸ். அவர்களிடம் தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் அதன்பின் ஆங்கில இலக்கியம் பற்றிக் கூறுங்கள் என்று கூறிவிட்டு படிக்கின்ற முறைகளைச் சொன்னாராம்.
தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கற்றுணர்ந்த ஆர்.கே.எஸ். அவர்கள் அண்ணாவிடம் தமிழ் இலக்கியங்கள்தான் நம்பர் ஒன் என்று புகழ்ந்தாரம். எங்கள் ஊரில் சில மாதங்களுக்கு முன் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் எந்தஓர் உலக இலக்கியவாதியும் தமிழ் இலக்கியங்களைப் படித்து உணரவில்லையென்றால் அவன் இலக்கியவாதியே இல்லை என்றார்.
அண்ணாவின் ஆங்கிலப் புரிதலுக்கும் உரைநடைக்கும் சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்க மனம் விழைகிறது. 1962ல் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, மேலவையில் முதல் பேச்சை நிகழ்த்தினார். நேரம் நிறைவடைய இருந்த சூழலில் அவர் பேச்சை சிலர் குறுக்கிட்டார்கள். அப்போது அருகிலிருந்த திரு. வாஜ்பாய் அவர்கள் அவருடைய கன்னிப்பேச்சு இது. யாரும் குறுக்கிடாதீர்கள் என்றார். பண்டிதர் நேரு அவர்களும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களும் அவர் பேச்சில் யாரும் குறுக்கிடாதீர்கள். அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்றார்கள். பின் தன் நண்பர்களிடம் அண்ணாவுடைய ஆங்கில நடையை நேரு பெரிதும் புகழ்ந்தாராம்.
அப்போதே வாஜ்பாய் அவர்கள் அண்ணாவின் நெருங்கிய இனிய நண்பரானாராம். பிறிதொரு முறை பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு. பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவின் கையைப்பற்றி குலுக்கியவாறு நான் பீகாரைச் சேர்ந்த திராவிடன் (ஐ ச்ட் ஈணூச்திடிஞீச்டிதூச்ண ஞூணூணிட் ஆடிடச்ணூ) என்றாராம்.
இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த கால்பிரெய்த் அவர்கள் டெல்லியிலிருந்தபோது அண்ணாவின் நெருங்கிய நண்பரானார். அண்ணா அமெரிக்க சென்றபோது கால்பிரெய்த் விருந்து அளித்து மகிழ்ந்தார். அடுத்த வந்த அமெரிக்கத் தூதர் செஸ்டர்போல் என்பார் ஒரு நிகழ்வில் அண்ணா பேசியதைக் கேட்டுவிட்டு இப்படியொரு ஆங்கிலப்பேச்சை அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கேட்டதில்லை என்றார். நான் சில நேரங்களில் அண்ணாவின் ஆங்கிலச் சொற்பொழிவை குறுந்தகடுகளில் கேட்பதுண்டு. அதுபோல திரு. ஓசோவின் புத்தர் பற்றிய ஆங்கில சொற்பொழிவைக் கேட்டபோது அறவே ஆங்கிலம் தெரியாத நான் அந்த ஓசை நயத்தோடு அண்ணாவின் நினைவோடு துள்ளிக் குதித்து ஆடி மகிழ்ந்திருக்கிறேன்.
தமிழும் தமிழனும் தான் உதித்த தாய் மண்ணிலும் பரவிய இடங்களிலும் ஆதரவற்ற அனாதைகளாய், உரிமையற்ற அடிமையாய் வதிகின்ற நிலை காண்கிறோம். அடிமை நிலையை அகற்றி, உரிமை நிலையை நிலைநிறுத்த உலகளாவிய நிலையில் குறிப்பிடத்தக்க நிலையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அறிஞர் அண்ணாவை யேல் பல்கலைக்கழகம் சிறப்பித்ததும் அந்த சிறப்பை ஏற்க அண்ணா சொன்ன காரணங்களையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு வேலை இருந்திருந்தால் தமிழரின் உரிமையை நிலைநாட்டும் நிகழ்வுகள் நடந்து நேர்நிலை கண்டிருக்கலாம். யேல் கல்விக்கூடம் அழைத்தது போல உலக நாடுகளில் உள்ள உயர்நிலை அழைப்புகள் அழைத்து மதிப்பளித்திருக்கலாம். விளைவு தமிழரின் நிலை மேலோங்க பல்வேறு நாடுகளின் ஆதரவும் பெருகியிருக்கலாம் என்று தமிழர்கள் பலவற்றை இழந்து வாழும் இந்நாளில் இதயம் எண்ணி ஏங்குகிறது.
நூலறிவு நிறைகொண்டு நுண்ணறிவு நுண்மாண் நுழைபுல செழுமையோடு இயங்கும் பேராசிரியப் பெருமாட்டியான தங்களுக்கு எழுதுவதற்குக் காரணம் அண்ணா போன்று அனைத்துவகைக் செழுமையும் உளத்தூய்மையும் ஆங்கிலத் திறனோடும் உலகெங்கும் தென்னகப் பண்பாடுகளையும் திராவிட இயக்கச் சிந்தனைகளையும் கடந்த நூற்றாண்டுகளின் தமிழகத்தின் நிகழ்ச்சி வடிவங்களையும் அதன் விளைவுகளையும் தமிழ் காட்டும் குறள் வழங்கும் சங்க கால இலக்கியங்களை வரிசைப்படுத்தி இயற்கை ஆய்வு அறிவியல் உணர்வுகளையும் உரத்துச் சொல்லும் உயர்வினைத் தாங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை அண்ணாவின் மாணவப் பாசறையின் படைவீரன் என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற அண்ணனின் அருமைச் செல்வி என்பதும்தான்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சற்றுத் தெளிவடைந்து தி.மு.கவில் இணைந்திருக்கின்ற தங்களை நிறைய அழைப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வலிந்து வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு தித்திக்கும் திராவிட இயக்கச் சிந்தனைகளை விதைத்துவரவும் வேண்டும் என்பதுதான்.
சாமானியன் எனச்சொல்லி வரலாறு காணாத சரித்திரம் படைத்த அண்ணாவையும் அனைத்துவகை ஆற்றலையும் பெற்றுத்தர தந்தை பெரியாரின் தொண்டனென்று பெருமைகொண்ட அண்ணாவின் தலைவர் தந்தை பெரியாரையும் அண்ணாவின் வழி நடந்த கலைஞர், நாவலர், பேராசிரியர், தங்களின் தந்தை, அண்ணன் தென்னரசு போன்ற பெருமக்களையும் உலக முழுவதும் எடுத்துக்காட்டி தமிழன் யாரையும் தாழ்த்தான், யாருக்கும் தாழான் என்ற அண்ணாவின் உரிமைச் சமத்துவத்தை உரக்கச் சொல்லுங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ் உள்ளங்கள் தங்கள் வாழ்த்துக்களை வழங்கியவண்ணம் இருக்கும்.
நன்றி
பெறுநர்

பேராசிரியை, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்,
சென்னை.

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பின் தளபதி அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள். விடியல் மீட்புப் பயணம் நல்ல விளைவுகளை விதைத்து வருகிறது. தங்களது ஓய்வு பெற்ற உழைப்பிற்கும் கருத்து விதைப்பிற்கும் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் பாராட்டு மொழிகள் மலரெனத் தூவப்படுகிறது.
கடந்த காலத்தில் கிளைக் கழகத் தோழர்களையும் அதில் ஈடுபாடு காட்சி கழகத்தை வலிவுபடுத்தும் நிகழ்வுகள் நிகழ வேண்டும் என்று வேண்டியிருந்தேன். அதுபோலவே மாணவ, மாணவியரையும் கழகத்தில் ஈர்க்கும் வழியாக அவர்களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுகிறேன்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களை அந்தந்த ஊர்களிலும், மற்ற மாணவர்களை மாவட்டத் தலைநகரங்களிலும் கலந்துரையாடல் நிகழ்வை நடத்த வேண்டுகிறேன்.
அடுத்த நிலையில் தமிழகமெங்கும் உள்ளவர்களுக்காக ஒரு சிறப்பு மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்தலாம். அதில் ஆர்வமுள்ள மாணவர்களைப் பேச வைத்து உலக வரலாற்றை விளக்க வைக்கலாம். அண்ணா காலத்தில் இருந்த அவருக்கும் மாணவர்களுக்கும் இருந்த உறவைச் சொல்லலாம்.
1965 மாணவர் உலகம் நடத்திய மொழிப்புரட்சியை பேச வைக்கலாம். அந்த மொழிப் புரட்சியை முழு வெற்றி பெரும் வகையில் இயக்கிய இனிய தலைவர் கலைஞரைப் போற்றச் செய்யலாம். அண்ணா கொண்டுவந்த இருமொழித் திட்டத்தால், சட்டத்தால், மாணவர்கள் அடைந்த பயன்களைப் பட்டியலிடலாம்.
கலைஞர் ஆட்சியில் கல்வியும் அதன் உயர்வையும் உச்சநிலையாக கணிணிப் புரட்சியை விளக்கலாம். 1999ம் நடந்த தமிழ் நெட்டையும் 2010ல் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கணிணிக் கருத்தரங்கங்களையும் அதில் கணிணி இயக்க விசையையும் உருவாக்கியதையும் அதன் விளைவுகளையும், உலகளாவிய நிலையில் மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்பும் பயனும் நிகழ்ந்ததை நிதர்சனப் படுத்தலாம்.
சமச்சீர்க் கல்வி என்பது கல்வி வரலாற்றில் ஓர் புதுமைப் புரட்சி என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்வாக அது இருக்கலாம். மாணவர் உலகில் மகத்துவம் என்பது தாங்கள் அறியாதது அல்ல. தலைவரைப் போலவே தாங்களும் மாணவ நிலையிலேயே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்று அமைப்பு வைத்து அண்ணா, இராஜாஜியை அழைத்து பேச வைத்தது நெஞ்சின் நினைவில் ஒளிர்கிறது.
உயர்நிலைப்பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவத் தோழர்களை ஆங்காங்கே கூட்டி வைத்து விளக்கம் தருகின்ற நிகழ்வை நிகழ்த்த வேண்டுகிறேன். அது இன்றைய பயன் என்பதுமட்டுமல்ல எதிர்கால கழக வலிமைக்கு பொதுவாழ்வு தொண்டர் பெருக்கத்திற்கும் வழி வகுக்கும். பின் வரும் பேராளர்கள் பலரும் தளபதியால் இந்த நிலை அடைந்தேன் என்று சொல்லும் நிலை வரும்.
பட்டமளிப்பு விழா போல மாணவர்களுக்கு பாடம் நடத்தி போதிப்பது என்பது மாணவர் உலகில் தங்களுக்கென்று தனிஇடம் பெறவும் கூடும். கழகத்தைச் சொல்வதற்கென்றே இருபத்துநாலு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி முப்பதாயிரம் பிரதிகளை இலவசமாக வழங்கி ஏறத்தாள பல்வேறு தலைப்புகளில் ஒரு இலட்சம் துண்டு வெளியீடுகளை மக்களிடம் விதைத்த கழகத்தை உயிரணுக்களில் ஊன்றி வைத்திருக்கும் இந்த எளிய தொண்டனின் எண்ணத்தை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். ஏற்றுக் கொண்டால் திட்டமிடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
2016 தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழகத்தில் நெறி சாரா நிலையில் இயக்கும் நிறைய இருக்கின்றன. ஆதாரமற்ற பொய்களை அழகிய வடிவத்திலெல்லாம் காட்டி மக்களை அலைக்கழிக்கின்ற ஊடகங்கள் வேறு ஊதுகுழலாக ஒத்து ஊதுகின்றன.
காட்சி மயக்கத்தில் நீண்ட காலமாகவே கனவில் நீந்துகின்ற மக்களாக நமது மக்கள் இருக்கிறார்கள். வேறு சில சிக்கல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி தமிழகத்தை தலைநிமிர்த்த தளபதியின் உழைப்பை தலைமையில் ஏற்று, நடைபோட்டு, வெற்றிச் சிகரத்தை எட்டுவீர்கள் என்றாலும் அதற்குத் தங்களோடு உடல் வலிமையும் உள்ள உணர்வும் கொண்ட அனைவரும் உழைத்தாக வேண்டும். அதற்கான ஊட்டச் சத்தை ஏற்கனவே வழங்கியிருக்கிறீர்கள். இருப்பினும் அதில் சோர்வு சிறிதும் அடையாதிருக்கு அவர்களை இயக்க வேண்டுகிறேன். கழகத்தின் நூற்றுக்கணக்கான சிறந்த பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படிப் பேச வேண்டும் என்று நெறிப்படுத்தி செலவில்லாத தெருமுனைப் பரப்புரையை மேற்கொள்ள வேண்டுகிறேன். அடைமழை போல் ஆறேழு மாதங்களில் மக்களை அணுகுவது வாக்குகளைக் குவிக்க உதவும் என்று கருதுகிறேன்.
நன்றி

பெறுநர்
தளபதி, மு.க.ஸ்டாலின் அவர்கள்,
கழகப் பொருளாளர், அண்ணா அறிவாலயம்,
சென்னை.

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
பேரன்புடையீர் வணக்கம், வாழ்த்துக்கள். முன்னர் எழுதிய மடல்களில் சங்கக் கட்டிடம் பற்றியும் நடிகர்களின் நிழற்படக் காட்சி பற்றியும் மற்றும் சில செய்திகளை சொல்லியிருந்தேன்.
அதில் படக் கண்காட்சியில் 1931ல் வெளிவந்த முதல் தமிழ்ப் பேசும் படத்தில் நடித்த டி.பி. இராசலட்சுமிலிருந்து இத்துறைக்கு வந்தவர்களை வரிசையில் அமைக்க வேண்டுகிறேன்.
அதுபோல் நாடக நடிகர்கள், வில்லன், வில்லிகள், நகைச்சுவை நடிக நடிகையர், குணச்சித்திர நடிகர், நடிகைகள், குழந்தை நடிகர், நடிகைகள் நடித்த விலங்குகள், பல்வேறு நாட்டு மொழிப்படங்களின் நடித்த நடிகையர்களை வரிசைப்படுத்தலாம். பார்க்கவரும் இரசிகர்களுக்கு கட்டணம் வைத்து ஒழுங்குபடுத்தலாம்.
அடுத்து சினிமா பற்றிய செய்திகளை தாங்கிய நூல்களை மட்டும் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை ஆய்வு மாணவர்களுக்கு அமைக்கலாம். புதுப்படங்களின் முதற் காட்சியைப் பார்க்க பிரிவியூ தியேட்டர் ஒன்றை சிறிய அளவில் உருவாக்கலாம்.
மூன்றாயிரத்திற்கு மேல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகமாகிக் கொண்டே வர ஏற்பாடுகளை செய்யலாம். பம்பாயில் சண்முகானந்த சபாவில் 1973லேயே ஆறாயிரத்திற்கு மேலான உறுப்பினர்கள் இருந்த நினைவொன்று வருகிறது. இப்போது அது அதிகமாயிருக்கலாம். ஆசியாவிலேயே பெரிய நாடக அரங்கம் என்ற முத்திரை பதித்தது அந்த அரங்கம். அது தமிழர்களால் அமைக்கப்பட்டது. அண்ணன் டி.கே. சண்முகம் அவர்கள் மாதக்கணக்கில் அங்கே நாடகம் நடித்தி பொருள் சேர்த்து தந்ததால் அவர் பெயரிலேயே அழைத்தார்கள்.
தங்கள் மீது பொறுப்பின் பழு மிகுதியாகவே இருக்கும் கலை உணர்வு கொண்ட உளத்தூய்மையுடன் உற்ற நண்பர்களின் துணையுடன் அந்தப் பழுவை பஞ்சாக மாற்றலாம்.
ஒருவரை பார்த்தவுடன் தோழரே என விளிக்கும் முறையை மனத்தூய்மையுடன் இயன்றால் பரவலாக்கலாம். பயனுடையதாக்கலாம். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சங்கம் சார்பில் நடிகன் குரல் என்று ஏடொன்று நடந்து வந்தது இன்று இருக்கிறதா நடக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நடிகர்களுக்கு பயனுடையதாக வந்த நாட்களில் பார்த்த நினைவுப் பசுமையாக இருக்கிறது.
படத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களின் சங்கங்கள் பல இருக்கின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், வினியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் சின்னத்திரை கலைஞர்கள் என சங்கங்கள் இயங்குவதாக அறிகிறேன்.
உங்கள் ஆட்சி ஆளுமையில் ஒரு புதுமையாக இந்தச் சங்கங்களோடு நேச உறவுக்கும் தொடர்புக்கும் தூதர்களை நியமிக்கலாம். அது போல மத்திய மாநில அரசுகளின் உறவு, தொடர்புக்காக உரியவர்களை தூதர்களாக நியமிக்கலாம். ஊடகச் செய்தி தொடர்பாளராக அறிவும் நுட்பமும் வாய்ந்தவர்களை நியமிக்கலாம் ஏனெனில், இந்த ஊடகங்கள் இருக்கின்றதே இந்த ஊர்க்குசும்பு என்பார்களே அதுபோல உலகக் குசும்புகளின் உறவுக் கூடமாகவே விளங்குகிறது. அந்த ஊடகங்களில் உறவாடும் சங்க தொடர்பான சமயோகிதம் உள்ளவராக இருப்பது நலம் இல்லையெனில் ஏதாவது சிக்கலில் மாட்ட வைத்து விடுவார்கள்.
நிறைவாக உங்கள் உயர்வில் நினைவில் ஒன்றைப் பதிய வைக்க விழைகிறேன். உங்கள் அணிக்கு பாண்டவர் அணி என்று ஏன் பெயர் வைத்தீர்கள் என்று தெரியவில்லை, புரியவில்லை. அய்வர் அணி என்றோ, அய்ந்திணை அணி என்றோ தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கலாம். பாண்டவர்களில் மூத்தவன் சூதாட்ட வெறி கொண்டவன், சொக்கட்டான் ஆட்டத்தில் மூழ்கிக் கிடந்தவன். இதையறிந்த சகுனி அவனை சூதாட அழைக்கிறான். அந்த ஆட்டத்தில் அவன் தன்னையும் இழந்து விடுகிறான். மீண்டும் அவனது மனைவியை வைத்து ஆடி அவளையும் இழந்து விடுகிறான்.
பாஞ்சாலியை துகில் உறிய துச்சாதனன் முன்வந்த போது பாஞ்சாலியே கேட்கிறாள். என்னையிழந்து தன்னை இழந்தானா? தன்னை இழந்து என்னை இழந்தானா? என்று. தன்னை இழந்த அவனுக்கு என்னை வைத்து சூதாடும் உரிமையில்லை. அது மட்டும் அல்ல நான் மற்ற நால்வருக்கும் உரியவள் அவர்களின் சம்மதத்தைக் கேட்டானா அவர்கள் ஒத்துக் கொண்டார்களா என்றும் அறைகிறாள்.
கட்டிய மனைவியைப் பணயப் பொருளாக வைத்து பந்தயம் கட்டிச் சூதாடிய தருமனையும் அவனது தம்பிகளையும் மகாகவி பாரதியார் தனது பாஞ்சாலி சபதத்தில் மிக்க கேவலான சொற்களால் சாடுகிறார்.
ஊன் திண்று உடலெடுத்தவர்களை சோற்றுப் பிண்டங்கள், சொரணையற்றவர்கள், மான உணர்ச்சி சிறிதும் இல்லாத மரக்கட்டைகள், மதோன்மத்தர்கள், கேடிகள், தடியர்கள் என்று தரமற்ற சொற்களால் சாடுகிறார். அது மட்டுமல்ல மகாபாரதக் கதையும் எழுதியவனின் பிறப்பும் மிகவும் அருவருப்பான கற்பனையாகும்.
பாண்டவர் அணி என்பதால் மேலும் சில செய்திகளை கண் முன் வைக்க விரும்புகிறேன். மகாபாரதக் கதை கூறுவதுபோல அஸ்தினாபுரம் அரசு பாண்டவர்களுக்கு உரியதல்ல. அரசகுல வழக்கப்படி முதல் பிள்ளைதான் அரசனாக வர முடியும். அவனுடைய தயவின் கீழ்தான் மற்றவர்கள் இருக்க முடியும். அந்த வகையில் அந்த அரசு திருதராஷ்டிரனுக்கு உரியதாகும். அவன் குருடன் என்பதால் அவன் தம்பி பாண்டு அரசை ஆழ்கிறான். ஆனால் அவனது பிள்ளைகளால் கூறப்படும் இந்த பாண்டவர்கள் பாண்டுவின் குருதி வழி குழந்தைகள் அல்ல. அவர்கள் வானுலகத் தேவர்களின் வாரிசுகளாவார். இவர்களுக்கு உரிமையற்ற அரசை திருதராஷ்டிரனின் மூத்த மகன் துரியோதனிடமிருந்து பாண்டவர்களுடைய நண்பன் பின் உறவினன் கிருஷ்ணனின் சூசு வலை சூழ்ச்சி நிலைகளால் பறிக்க முயல்வதுதான் பாரதக் கதையின் அதன் 18நாள் குருசேத்திரப் போரின் மையப் புள்ளியாகும். அதுமட்டுமல்ல காலம்தோறும் கதைசொல்லிகள் புனைந்த பொருத்தமற்ற புதுப்புதுப் கதைகள் செருகப்பட்ட குப்பை நூலாகும் மகாபாரதம்.
இந்தப் பாண்டவர்களின் வெற்றி என்பது பாரதப் பாண்டவர்கள் பெற்ற வெற்றி போன்று சூதுநிலை, சூழ்ச்சி வலை கொண்ட, கடவுள் நிலை கொண்டவனின் வெற்றியல்ல. உண்மை, உழைப்பு, ஒற்றுமை மக்களாட்சியின் மாண்பு ஆகியவற்றின் மூலம் பெற்ற வெற்றியாகும். பெயர் என்பதைத் தவிர மற்றப்படி பெருமைக்குரிய வெற்றியாகும் இது.
நால்வரோடு அய்வரானோம் என்று படகோட்டி குகனைக் குறிப்பிட்டான் அயோத்தி இராமன். இந்தப் பாண்டவர் அய்வர் அணி என்பது அதுபோல் அல்ல. தூய நிலைக்காக உழைத்தவர்கள் இந்த அய்வர்கள் ஆகும். ஆயினும் இந்த அய்வரில் பாரதப் பீமனாக திரு.விஷால் அவர்கள் உணர்ச்சி வயப்பட்டு வெடிப்பதைக் காண முடிகிறது. பீமன் உணர்ச்சி வேகத்தினால் பலவித சிக்கல்களுக்கு ஆளானதாக கதைகள் கூறுகிறது. மற்ற நால்வரைப் போல விஷாலையும் நிதான நிலைக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.
ஊடகக்காரர்கள் முன் செய்திகளை வெளிவிடும்போது மிக நிதானமாக வெளியிடுவது நலம். இல்லையெனில் பொய்களையும் புறம் கூறும் செய்திகளையும் விற்றுப்பிழைக்கும் இந்த ஊடகக்காரர்கள் வேண்டாத விளைவுகளை விதைத்து விளைவித்து அறுவடையும் செய்து விடுவார்கள். (பாரா உஷார்)
சமத்துவம், சுதந்திரம், சகோரத்துவம் என்னும் மக்களின் உறவு, உரிமைகளுக்கான உன்னத சொற்களை உச்சரித்து, சமத்துவம் சனநாயகத்தையும் தந்த சொற்களை உச்சரித்து, பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட மாமேதை ரூசோவும் உழைப்பின் வடிவே உலகின் உன்னதக் காட்சி என்று உலகிற்குச் சொல்லி உழைப்பவனை தோழன் என்றழைத்த சான்றோன் காரல் மார்க்சும் உரைத்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தோளுக்கு மேல் தோழன் என்று மொழிந்த தமிழ்ச் சீர்மையோடு தோழர் என்று அழைக்கும் தங்களுக்கு சொல்ல நினைத்தேன் சொன்னேன் வேறொன்றுமில்லை.
நன்றி
பெறுநர்
நடிகர் நாசர் அவர்கள்,
தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்.