Monday 18 January 2016

ஊழல் - அரசியல் - ஊடகம்

ஊழல் - அரசியல் - ஊடகம்
ஊழல் என்பது ஒழிக்க முடியாத கொசுக்களைப் போல நோய் பரப்பும் ஒன்றாகும். கொசுக்களாவது பருவத்திற்குத் தக்கவாறு இயங்கும். காற்றுக் காலத்தில் தன்னை மறைத்துக் கொண்டு மழைக்காலத்தில் தனது சாம்ராச்சியத்தை அமைத்துத் தர்பார் நடத்தும். ஆனால் ஊழலில் உண்மையும் இல்லை, நன்மையும் இல்லை.
ஊழல் எல்லா இடங்களிலும் ஒளிந்தும் மறைந்தும் உல்லாச வாசிகளுக்கு உதவுகின்ற ஒன்றாகவே உயிர்வாழுகின்றது. பாடுபட்டவன் உரிமைப் பொருள்களை எல்லாம் பல்வேறு நிலைகளில் பறிக்கப் பயன்படும் இந்த ஊழல் எல்லா நிலைகளிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது.
அதுவும் இந்தியா போன்ற இதிகாச, புராண, புனைவுகளில் மனம்புதைத்து மகிழ்கின்றவரகள் உள்ளங்களில் ஊற்றெடுத்த வண்ணம் இருக்கக் காணலாம். கெண்டையை வீசி விறால் பிடிப்பதுபோல பத்து பைசா பத்தி, சாம்பிராணி, சூடத்தைக் கொழுத்திவிட்டு தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற அருள் கேட்கும் உணர்வு என்பது ஊழல்தானே. பக்தி மனம் கொண்ட எல்லா உள்ளங்களிலும் இந்த முறைகளும் எதிர்பார்ப்பும் என்பது ஊழல்களிலேயே மிக உச்சத்தில் இருப்பதாகும். உழைக்காது ஊரைச் சுரண்டி வாழும் அத்தனைபேரும் இந்த ஊழலில் ஈடுபடுவதை எந்நாளும் காண முடியும்.
அடுத்து வணிக நிலையிலுள்ள எல்லா நிலைகளிலும் இந்த ஊழல் உறவு கொண்டதாகவே தெரியும் காட்சிகளை எங்கும் காணலாம். ஊழல் பருவத்திற்குத் தக்கவாறெல்லாம் உருவெடுக்கும். விழாக் காலங்களில் திடீர் திடீரென்று விலைகள் கூட வேடங்கள் பல புனைந்து விளம்பரங்கள் பல செய்து வீணான பொருள்களை எல்லாம் விற்று எவன் தலையிலாவது மிளகாயை அரைப்பது வணிகத்தின் வழக்கமாகும்.
வருவாய்க்கு வரிகட்ட வேண்டியது அறம் முறையென்றாலும் அரசை ஏமாற்றுவதற்கு ஆயிரம் வழிகளை உருவாக்கித் தரும் ஊழல் திலகங்களாக ஆடிட்டர்களும் அனுபவ கணக்கர்களும் அணிவகுத்து நிற்பார்கள்.
ஒருவேளை உண்மையான அரசுப் பணியாளர்களால் கணக்குகளில் குறை கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கையென்று வந்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வரி ஏய்ப்பு செய்வதற்கு துணையாக துதிபாடும் வல்லமை மிக்க வழக்கறிஞர்கள் வரிசை வரிசையாய் வந்து கொண்டிருப்பார்கள்.
பெரும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மன்னர்களுக்கும் உழைப்பு சிறிதும் இல்லாமலேயே கோடிக்கணக்கில் பொருள் ஈட்டும் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் வரிஏய்ப்பு செய்துதரும் அக்கவுண்ட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் லாயர் மற்றும் பார்அட்லாக்களுக்கும் வாய்மையை புதைகுழியில் போட்டு அடைத்து வளநிலை சூழவேண்டிய நாட்டை வறுமைக்குள் போட்டு வதைக்கிறோம் என்று அவர்கள் உணர்வதில்லை. மக்களும் அதுபற்றி கவலை கொள்வதில்லை என்பது இங்குள்ள நிலையாக நீடிக்கிறது.
ஒருவேளை இந்த ஊழல் பெருக்கச் சொத்துகளில் இவர்களுக்கும் பங்கிருக்குமோ என்ற அய்யப்பாடு சிலபல ஆய்வாளர்களுக்கும் மக்கள் நலனையே நினைக்கும் மாண்புடையவர்களுக்கும் இருப்பதை அறிய முடிகிறது.
ஊர் நலனுக்கு உழைப்பதாக, ஓலமிடும் ஊழையிடும் ஊடகப் பெருச்சாளிகள் இது பற்றிய ஆய்வை நடத்துவதில்லை. விளம்பரத்தில் வரும் வருவாயை வீங்க வைப்பதிலையே தங்களின் முழுக்கவனத்தையும் வைப்பது என்பது அவர்களின் வாடிக்கையாகி விட்டது.
முதலீடு பெரிதும் இல்லாமல், ஆயிரக்கணக்கான ஊடகங்கள் உயிர்வாழ்வது எப்படி? இந்த ஊழல் வருவாயில் ஊரை எப்போதும் ஏமாற்றி வரும் மதவாத அமைப்புகள் தரும் விளம்பரப் பணம் ஒன்றினால்தான் என்பது முழு உண்மையாகும்.
இந்த நாளிதழ்கள் எத்தனை வகையான விளம்பரங்களைப் பதிய வைக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் ஆயிரம் முனைவர் பட்டங்களைப் பெற முடியும். சிறு விளம்பரம், வரி விளம்பரம், பத்தி பத்தியாக விளம்பரம், கால் பக்க, அரைப்பக்க விளம்பரம், முழுப்பக்கத்தில் முதற் பக்கத்திலேயே செய்திகள் ஏதுமில்லாத விளம்பரம் மற்றும் சிறு சிறு விளம்பரங்கள். தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சிக்கு ஊடே நிகழ்ச்சிகளை விட அதிக நேரம் விளம்பரம் அடியில் வரிகளாக ஓடிக் கொண்டிருக்கும் விளம்பரம், செய்திகளுக்கான நேரம் வரும்வரை ஒரு நிமிடத்திற்கான விளம்பரம் என்றெல்லாம் ஊடகங்களின் ஊழல்தானே. இவர்களது செயலால் நிறுவனங்கள் எல்லாம் மக்களிடம் மோசடி செய்த பணத்தோடு காணாமல் போய்விட்டார்களே, இதற்கு யார் பொறுப்பு. நினைக்க வேண்டியது நெஞ்சுள்ளோõர் கடமையாகும்.
இந்த ஊடகங்கள் அனைத்தும் ஊதிப்பெருக்கியது பெருக வைப்பது அரசியல் வாதிகளின் ஊழலைத்தான் என்பது நடைமுறை நடப்பாகும். அதிலும் வருவாய் கருதி அந்த ஊழல் உள்ளவர்களை ஊருக்குக் காட்டாமல் இவர்களது உணர்வுகளுக்கு ஒடுங்காதவர்கள் சிறு துளி அளவு ஊழல்களை அல்லது ஊழல் என்று உறுதிப் படுத்தாதவர்களை ஓங்கிப் பறையடிப்பது வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய சமூகத்தில் ஊழல் என்பது தனி மனிதன் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் நீக்கமற நிறைந்து கிடப்பதை உற்றுப் பார்க்காமல் இந்த அப்பாவி அரசியல் வாதிகளைப் பற்றி மட்டுமே அறைந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அரசியல், அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொள்வோர் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். ஓர் அரசியல் கட்சி, அது சிறிதோ பெரிதோ ஒரு கொள்கையை செயல்படுத்தும் நோக்கத்தோடுதான் ஆட்சியைக் கைப்பற்ற உழைத்துப் போராடுகிறது. அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க அந்தக் கட்சியில் ஈடுபாடு கொண்ட தொண்டர்கள் பசி, பட்டினி, சிறை, துன்ப துயரங்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இலட்சக்கணக்கான தொண்டர்கள் ஒரு கட்சியைச் சார்ந்த பல்வேறு நிலைகளில் மக்களுக்காக உழைத்துப் போராடி அந்த மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர்கிறார்கள். அவர்கள் அமைத்த ஆட்சியில்தான் நாட்டின் அனைத்து மக்களும் நலன் பெறுகிறார்கள்.
அரசில் பணியாற்றுவோர், அரசாங்க உரிமம் பெற்று ஆலை மற்றும் நிறுவனங்களை நடத்துவோர், பொதுமக்கள் எல்லாம் பல்வேறு சலுகைகளைப் பெறுகிறார்கள். மக்களின் அனைத்துப் பிரிவினரும் அரசின் சலுகைகள் வங்கிக் கடன்களையெல்லாம் பெற்று வளர்கிறார்கள். வாங்கிய கடன்களை கட்டாதவர்களும் நிறுவனங்களும் நிறைய இங்கு இருக்கின்றன.
ஆனால், இதில் ஏதாவது, ஆட்சி அமைத்த கட்சியைச் சார்ந்தவர்களுக்கு இருக்கிறதா? வங்கிக் கடன், அரசின் சலுகைகள் ஏதாவது கிடைக்கிறதா? என்றால், இல்லையென்பதுதான் உண்மையாகும். வென்றாலும், தோற்றாலும் அந்தக் கட்சியில் கொண்ட பற்றுப் பாசம், வேட்கையால் அந்தத் தொண்டர்கள் இழந்ததை இங்குள்ள யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. இங்குள்ள ஒட்டு மொத்த ஊழல்களிலேயே மிக சிறு ஊழல் என்பது இந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சிறு பகுதியினர் செய்யும் ஊழல்கள்தான். ஆனால் இதை மலையளவு, வானமளவு காட்டுபவர்கள் அனைவருமே ஏதாவதொரு ஊழலில் உறைந்து கிடப்பவர்கள்தான் என்பதை அவர்களுடைய உளவியல் உணர்வுகளை ஊன்றிக் கவனித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு அரசியல் கட்சியின் ஊழலைச் சாடுவதற்கு இங்குள்ள யாருக்கும் அருகதையில்லை. ஒருவேளை சாடுவதென்றால் அந்தக் கட்சியின் தொண்டர் களுக்குத்தான் அருகதை இருக்கிறது. அவன் தனது கட்சியின் முன்னோடிகள் வளம் பெற்றுவதற்காக வருந்த மாட்டான். காரணம் அவனுக்குத் தெரியும் அரசியல் கட்சியைச் சார்ந்தவனுக்கு ஊழலை சொல்லிக் கொடுத்ததே ஆசை மனமும் அடுத்தவருக்குரியதை அபகரிக்கும் எண்ணம் கொண்ட இங்குள் மக்களும் மனிதனர்களும்õதான் என்பதை அவன் உணர்வான். சரி, இவற்றோடு இன்றொன்றையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். எந்தவொரு நாடும் ஊழல் இல்லாததாக இருந்தாக வேண்டும் என்பதுதான் பொது நீதியாகும் நியதியாகும். ஆனால் அதற்கு அந்த நாட்டிலுள்ள பண்பாடும் சமூகத் தரவுகளும் தகுதியுள்ளதாக இருந்துவிடுவது அவசியம். மக்களின் மனதில் அந்தத் தரவுகள் ஆழ்மனதில் இருந்தாக வேண்டும். அதற்கு அங்குள்ள நிலைகளை உருவாக்கும் அறிவுடையோர் அறிவு ஆய்வு உணர்வுகளை அவர்கள் உள்ளத்தில் ஆளுமை செய்ய வேண்டும்.
அங்குள்ள மொழிகள் அதன் சொற்கள், சொற்கள் தரும் பொருள்கள், கருத்துக்கள் கண்ணியம் கொண்டதாக இருக்க வேண்டும். மக்களை வழிநடத்துவோர் வழக்கமான நடைமுறைகளில் வல்லாண்மை நிலை கொண்டவர்களாக இல்லாது பூத்துவரும் புதுப்புது உணர்வுகளை நுகர்பவர்களாக இருக்க வேண்டும். மக்களை நல்வழிப்படுத்த நல்லதோர் அரசியல் சட்டம், இறையாண்மை கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும். பல்லாண்டுகளாக பழகிவரும் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் பயனுடையதா, பயனற்றதா எனப் பாகுபடுத்தி, நல்லதை நிறுத்தி அல்லதை அகற்றிவிடும் ஆற்றலும் துணிவும் கொண்டு மக்கள் நலனைப் பேணுபவர்களாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது இங்கு இருந்ததா என்றால் பெரும்பாலும் இல்லையென்பதுதான் உண்மையாகும்.
இந்திய விடுதலைக்குப் பின் உருவான அரசியல் சட்டம்தான் உலகிலேயே கனமான சட்டப் புத்தகம் ஆகும். ஆனால் அதில் உள்ள சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள், ஓட்டை உடைசல்கள், ஊனங்கள், ஈனங்கள், ஒற்றுமைக்கு உதவாத நிலைகள் ஓராயிரம் இருப்பதாக ஆய்வாளர்கள் ஓங்கி அறைகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் தயாரித்தவர்களில் உணர்வுகளையும் எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.
அரசியல் நிர்ணய சபையில் மிகுவாக இந்து மத உணர்வுள்ள வடஇந்தியர்களே அதிக அளவில் இருந்தனர். அரசியல் அமைப்பை உருவாக்கிய குழுவில் அய்ந்து உறுப்பினர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இசுலாமியர், மற்றொருவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த திரு. அம்பேத்கார் அவர்கள். இவர் மெத்தப் படித்தவர் ஆயினும் ஒரு பார்ப்பனாரால் வளர்க்கப்பட்டவர். ஒரு பார்ப்பன மங்கையை மணந்தவர். ஆனால் அவர் இங்குள்ள இந்துத்துவா எனும் வேதக் கொள்கைகள் செய்த கொடுமைகள், குற்றங்கள், பிறவிப் பேதங்கள், இழிந்த தன்மைகளை எல்லாவற்றையும் அறிந்து உணர்ந்து இங்குள்ள வரலாற்றுச் சூழல்களையெல்லாம் இனம்பிரித்துக் காட்டி எதிர்நிலையில் நின்று போராடியவர்.
அடுத்தவர்கள் மூவரும் சென்னையைச் சேர்ந்த பிராமணர்கள். டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார், கோபால்சாமி அய்யங்கார் என்ற பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் வைணவ வழிவந்த வாழ்க்கை நிலைகளைக் கொண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதில் இசுலாமியர் எந்த நிலையிலும் இந்தப் பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை. மூவரும் கூட எந்த வகையில் முழு நேரப் பணிகளில் இருந்ததில்லை. அரசியல் சட்டத்தின் எல்லா அம்சத்திலும் டாக்டர் அம்பேத்கார் தனது இயல்புபடியே உருவாக்கி வந்தார். இந்தியாவை காலனி நாடாக்கிய இங்கிலாந்தின் அரசியல் சட்டத்தை அருகில் வைத்துக் கொண்டு இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்று எண்ணி அமைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், அடிக்கடி அவர் தயாரித்த அரசியல் அமைப்பில் பகுதி பகுதியாக சில பல திருத்தங்களை மட்டும் எடுத்துச் சொல்லி எழுத வைத்தார்கள் மேற்கண்ட மூவரும். அரசியல் அமைப்பு முழுமை பெற்ற போது, இசுலாமியர் சொன்னார், அழைத்தார்கள் வந்தேன், அமரச் சொன்னார்கள் அமர்ந்தேன், கையெழுத்துப் போடச் சொன்னார்கள் போட்டேன், வேறொன்றும் அறியேன். முழு நேரமும் பணியாற்றிய அம்பேத்கார் சொன்னார், எல்லாம் செய்தேன், அது என் இயல்பில் தான் செய்தேன், ஆனால் இந்த மூவரும் தந்த முன்னூறு திருத்தங்களால் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றார்.
இதை எழுதியது நான் என்றாலும் இந்த  அரசியல் சட்டம் எரிக்கப்பட வேண்டியது ஒன்றாகும். பின்னர் ஒருமுறை இந்தியப் பொதுஉடமைப் போராளி நம்பூதிரிபாத் எனும் பெயர் கொண்டவர் என்றாலும் தூய கம்யூனிஸ்டான தூயவர் இ.எம்.எஸ். சொன்னார் இந்த அரசியல் சட்டம் ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கப்பட வேண்டியது என்றார். இதைத்தான் இந்திய இறையாண்மை புனிதம் என்கிறார்கள். இந்த நாட்டை ஜனநாயக அதாவது டெமாக்கரசி என்று நேரு சொன்னார். அதற்குத் தந்தை பெரியார், இது ஜனநாயகமல்ல பிராமணியம்தான் ஆகும். டெமாக்கரசி அல்ல பிராமணோகரசி என்றார். அதுதான் இன்றைய நிலையாக பெரு விழுக்காட்டு காட்சி நிலைகள் கண்ணில் படுகிறது. ஊடகவியலில் உள்ளத்தைப் பதித்திருக்கின்ற நண்பர்களே ஊரில் ஒரு பழமொழி உண்டு. யானை போவது தெரிவதில்லை, ஆனால் சுண்டெலி போகிறது துல்லியமாகத் தெரிகிறது என்பதுதான் பழமொழி, பழையமொழி, பழிமொழி ஆகும்.
அதுபோல யானை போன்ற ஊழல்கள் ஊரெங்கும், நாடெங்கும் பெருகி, கெடு நாற்றத்தைப் பரப்பி வரும் வேளையில் அரசியல் அரங்கில் சிலரின் ஊழல்கள் மட்டுமே இருக்கிறதென்பதை உணர்ந்து பெருகி வரும் பெரும் பெரும் ஊழல்களை உருவாக்கும் தரவுகளை ஆய்ந்து தெளிந்து அதை அகற்றும் வழி எது என தேர்ந்து தங்களின் தொடர்பணிகளை ஆற்றுவது என்பதுதான் அறிவு நாணயம் ஆகும்.
இங்கு யார் யார் கிறித்தவர்கள் இல்லையோ, யார் யார் இசுலாமியர் இல்லையோ மற்ற அனைவரும் இந்துதான் என்று இந்திய அரசியல் சட்டத்தில் நிலைப்படுத்தியது ஊழல் இல்லையா, மோசடி இல்லையா? இங்கு சமணம், புத்தம், சைவம், வைணவம், சீக்கியம், சார்வாகம், அத்வைதம், துவைதம், லோகாதயம், நாத்திகம் ஆகிய அத்தனை பேரையும் இந்து எனப் பதிவு செய்ததைவிட ஊழல் மோசடி ஏதாவது இருக்க முடியுமா? இதில் இந்து என்ற கணக்கில் இணைந்தவர்களுக்கு இந்து என்பது என்ன? மதம் என்பது என்ன? இந்த இந்துவின் இயல்பென்ன, இலட்சியம் என்ன? அதன் முறைகள் என்ன? அதன் நோக்கம் என்ன? அதன் கீர்த்தி என்ன? அதனால் விளைந்த விளைவென்ன என்று கே.பி. சுந்தரம்பாளின் என்ன? என்ன? என்னென்ன பாட்டுப்போல நீழுகிறதே தவிர, இந்த நிலையில் இந்துமதம், இந்துப் புனிதம், இந்துக் கலாச்சாரம், இந்துப் பண்பாடு, இந்துக் கலைகள் என்பது பரவலாகப் பேசப்படுகிறது. இந்த ஊடகங்கள் ஊழலைப் பற்றி ஒரு விழுக்காடாவது மோசடிக்காரர்களாலும் ஊழல் முறைகளாலும் அரசியல் சட்ட வடிவமைப்பில் இருந்த மூவரின் மோசடி போல அவர்களின் வழிவந்தவர்களும் இங்குள்ளவர்களை ஏமாற்றிப் பிழைக்க வருகிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.
இந்தப் பூவாகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏற்கனவே அடிமையில் ஆழ்ந்திருந்தவர்களின் உள்ளத்து உணர்வுகள் இன்றும் எழமுடியாமலேயே இளைத்துக் கிடக்கிறது. இதையெல்லாம் உற்று நோக்கி மக்களுக்கு உணர்த்த வேண்டிய ஊடகங்கள் உறக்கத்தில் இருப்பதுபோல் இருப்பதற்குக் காரணம் இந்த ஊடகங்கள் ஊழலில் புழுத்த புழுக்கள் என்பதுதான்.

மக்களை எழுச்சிபெற வைத்து ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டிய அனைவரும் ஊழலில் மிதந்ததால் விதியே கெதியென்று வாழ்வதைத் தவிர இங்குள்ள நல்ல மக்களுக்கு வேறு என்ன தோன்றும்.

Monday 11 January 2016

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
நெஞ்சோடு நெருங்கிய நீயா? நானா?
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். நலம்சூழ வாழ்த்துகள்.
தமிழர் திருநாளாக தரணியில் ஒளிர்கின்ற தன் வாழ்வுக்கு உதவுகின்ற இயற்கைக்கும், ஏனையவற்றிற்கும் தன் இதய நன்றியை வெளிப்படுத்தும் இனிய நாளாக தை முதல் நாளில், அறுவடையில் கிடைத்த முதல் நெல்லை, அதாவது புதுநெல்லை புதுப்பானையில் புதுமஞ்சள், புது இஞ்சி இலை, குலைகளை சேர்த்துக் கட்டி, பாலூற்றி பொங்கல் வைத்து இல்லத்தார் அனைவரும் பொங்கலன்று பொங்கலோ, பொங்கலென்று ஒலியெழுப்பி உள்ளம் மகிழ்ந்து உவகையில் மிதந்த நாளிலிருந்து தொடரும் நாட்களின் உச்சம் தான் இந்தச் ஜல்லிக்கட்டு எனும் வீரவிளையாட்டு நிகழ்ச்சியாகும்.
இயல்பாய், இனிமையாய், இடையூறுகள் ஏதுமின்றி நடந்துவந்த நல்ல நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்ப் பண்பாட்டு பகைமனம் கொண்டவர்களின் மனதில் தோன்றும் வக்ரக் குணத்தாலும் பொறுப்புகளில் உள்ள புரியாதவர்களாலும் தடைபட்டு தமிழர்கள் தவிக்கின்ற நிலை நீடித்து வந்தது.
உட்பகையால் பல நிலைகளில் ஊனப்பட்ட உருக்குலைந்த தமிழர்கள் இதில் மட்டும் ஏனோ தனித்தனியாக என்றாலும் ஒருங்கிணைந்த ஆதரவை இந்தச் ஜல்லிக் கட்டு எனும் உடல் வலிமையையும், உள்ளச் செழுமையையும் உருவாக்கும் நிகழ்வுக்கு வழங்கினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ஊடகங்கள் பலவற்றில் உதவாக்கரை மனிதர்களால் உண்மைக்கு மாறானவற்றையெல்லாம் எடுத்துக் காட்டச் செய்தார்கள். இந்த நிலையில் நீயா? நானா? தன் இருப்பிடத்தில் இதை நிறுத்தி வைத்து இனியவர்கள் பலரை இருபுறமும் அமர வைத்து அவர்கள் அறிந்த, உணர்ந்த அறிவுப் புலங்களை இந்த விளையாட்டில் ஈடுபட்ட அனுபவச் செழுமைகளை மிகத் தெளிவான விளக்கங்களோடு வெளிப்படுத்தி தமிழர்களிடம் ஒரு புது உணர்வை புகுத்தி மகிழ வைத்திருக்கிறார்கள்.
இந்த விவாத அரங்கில்தான் தங்களின் உள்ளத்தை உண்மையான உணர்ச்சிகளோடு அதாவது என்னைப்போல தங்களை வெளிப்படுத்தினார்கள்.
அட அடா ஜல்லிக்கட்டு எதிர்பாளர்கள், இரைந்து எரிச்சல் காட்டியபோதெல்லாம், ஆதரவாளர்கள் எரிமலைக் குழம்பாக பொங்கி வழிந்தார்கள். இந்த இனிய விளையாட்டுத் தரவுகளை நிலைப்படுத்த உலகில் உள்ள அனைத்தையும் இந்த விவாதத்தில் கொட்டிக் குவித்து மக்களை குளிர வைத்து விட்டார்கள். பண்பாட்டுத் தரவுகளை உலகின் உயர்வுகளை தங்களுக்கு உணர்த்தும் போதிக்கும் தகுதி இந்த உலகில் யாருக்கும் இல்லையென்று அறைந்தார்கள் திரு. கோபி உள்ளீட்டோர்கள்.
இனியவர் திரு.இளங்கோ, திரு.சேனாதிபதி பரிசு பெற்ற இனிய இளைஞர் உடலில் தொன்னூறு விழுப்புண் பெற்று விஜயாலாய சோழனை நினைவு கூர்ந்தவர் அனைவரும் உலக தரத்துக்கு தங்கள் உணர்வுகளை முன் வைத்தார்கள்.
திராவிட இயக்கம் விதைத்த இனிக்கும் நிலைகள் சிதைந்து விட்டதோ என்று இதயம் கலங்கும் இந்த நாளில் ஈயா? நானா?வின் நல்ல இந்த நிகழ்வு அப்படி இல்லையென்று நிலைப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக எதிர்த்தவர்களின் வரிசையில் பரிசு பெற்ற அந்தப் பெண்மணி, சில ஊடக நிகழ்வில் வக்கிரமாக தன் உணர்வுகளைக் காட்டி வந்தார். இந்த நிகழ்வில்தான் தன் நிலையை மாற்றிக்கொண்டு உண்மைகளை உணர்ந்து தனக்கும் இதயம் இருக்கின்றதென்று தளதளத்த உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
இதில் இன்னொரு இனிமையும் இணைந்திருந்தது. இதற்கு முன் நடந்த இதற்கான நிகழ்வுக்கும் இப்பொழுது நடந்த நிகழ்வுக்கும் தாங்கள் ஆய்வுகள் செய்ததை குறுந்தாடியை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஒளிரும் முக அழகோடு தோன்றிய திரு.கோபி அவர்கள் விளக்கிய போதும் வேறுசில நேரங்களில் அவர் வெடித்த போதும் அறிஞர் அண்ணாவின் கருத்துகளின் மனம், இளைஞர்களின் இதய உணர்வில் ஊடுருவி நிற்பதாக உணர முடிகிறது.
பொங்கலின் சிறப்புகளை அண்ணாவின் எழுத்தோவியங்கள் வரைந்த காவிய அழகை இன்னொருவர் படைப்பது கடினம். அவர் விதைத்த வளங்கிய வண்ணத் தமிழ் நிலைகள் நிகழ்வின் வெளிப்பாடு என்று சொன்னால் அது மிகையாகாது. சிற்றூரின் சீர்மைகளை சிந்தையில் கொண்டு இந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஆங்கிலப் புலமையில் அது வெளிப்படுத்தும் ஆற்றலில் உலகில் ஏற்ற நிலையில் இருக்கின்றவர்களோடு இணைந்தவர்கள் நாங்கள் என்று அந்த அருமை மொழியில் தங்களை முழுக்கக் காட்டினார்கள். இதில் இனியவர் கோபிக்கும் இடம் உண்டு.
இந்த நேரத்தில் இருமொழித் திட்டம் தந்து இனிக்கும் நிலையை ஏற்படுத்திய இனியவர் அண்ணாவின் இலட்சிய முகம் இதயத் திரையில் ஒளிர்கிறது. அண்ணாவும் அவர் கண்ட இயக்கத்தின் தோழர்களும் மத்திய அரசின் ஆங்கிலத்தை ஒழிக்கும் முயற்சியை அணைபோட்டுத் தடுக்க வில்லையென்றால் இங்குள்ள நிலை எப்படி இருந்திருக்கும்? இந்தி பேசாதோரின் இதயக் கூட்டில் வெடிவைத்தது போலாக இருந்திருக்கும். இதில் இங்கு இந்தியை ஆதரித்தோரும் அடங்குவர்.
அண்ணாவின் வெளிப்பாடுகள் அனைத்தையும் உற்று நோக்கினால் இன்று அந்த இனிமைகள் தாங்கள் இருவரிடமும் இருப்பதுபோலவே இங்குள்ள பெரும்பாலோரின் இதயப் பேழைக்குள் இருப்பதை பல நிகழ்வுகளில் என்னால் உணர முடிகிறது.
திராவிட இயக்க சிந்தனையில் பூத்த இந்தச் செழுமைகள் இயற்கை வேதியியல் நிலைபோல என்றும் அழியாது என்பதற்கு இந்த நீயா? நானா? ஓர் இனிமைக் காட்சியாகும். இதைப் படைத்த உங்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்.

மக்கள் பெற்ற மரங்கள் மாண்புகளின் உறைவிடம்

மக்கள் பெற்ற மரங்கள் மாண்புகளின் உறைவிடம்
மரங்கள் மண்ணுலகிற்கு இயற்கை தந்த புதுக்கொடையாகும். பூவுலகில் புத்தரைப் போல நாளும் புதுமைகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டது மரங்கள் ஆகும். தாவரங்களின் தலைவனான மரங்கள் மாசற்ற நிலை கொண்டது. அதுதான் உலக மாசுகளை அகற்றும் மருத்துவராகவும் இயங்குகிறது.
மரங்கள் இல்லையென்றால், மலையழகு இருக்காது. மரங்கள் இல்லையென்றால் மனிதர்கள் மழைதந்த மண்ணில் வளம் தரும் குளிர்நிலை தங்காது. மரங்கள் இல்லையென்றால் உயிரினங்கள் இயங்க முடியாது. உயிரினங்களின் உயிரைக் காத்து இயங்க வைக்கும் உயிர்க்காற்றை (ஆக்சிஜன்)  தருவது மரங்கள்தான். அதுவும் எப்படித் தெரியுமா? மனிதனும் மற்றவைகளும் விடுகின்ற கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) உட்கொண்டு, வட்டியும் முதலுமாக ஆக்சிஜனை வெளியிடும் கொடை வள்ளலாக விளங்குவது இந்த மரங்களும் மற்றத் தாவர இனங்களும்தான்.
அதாவது 100 கிராம் கரியமில வாயுவை பெற்றுக் கொண்டு 130 கிராம் உயிர்காற்றை தருகின்ற கொடைவளம் இந்த மரங்களுக்கு இருக்கிறது. உலக மக்கள் உயர்ந்து உயிரினங்களும் பெருகி வரும் நிலையில் காடுகளை அழிக்கும் கயமை நாளும் நடைபோடக் காண்கிறோம்.
ஆப்பிரிக்கா, அமேசான், ரஷ்யக் காடுகள்தான் உயிரினங்களைக் காப்பாற்றி வருகிறது. அதிலும் ரஷ்ய ஊசியிலைக் காடுகள்தான் உயர்ந்து நின்று உயிர் காக்க உதவி வருகின்றது.
அய்ந்து வகை நிலம் கண்டு அதைத் திணை வாழ்வென்று உரைத்த தொல்காப்பிய தமிழ் இலக்கணம் ஒவ்வொரு நிலத்திலும் வளருகின்ற மரங்களை வகைப்படுத்தி வளம் சேர்த்தது.வரலாறு என்று முதலில் எழுதப்பட்டதென்ற எகிப்து வரலாற்றை அறிஞர்கள் சொல்கிறார்கள். அது பாப்பிரஸ் என்னும் ஆற்றோரம் வளர்ந்த கோரைப்புல்லில் தான் எழுதப்பட்டதாம்.
தமிழுக்கு அணி சேர்த்த உலகப் புகழ் இலக்கியங்களெல்லாம் பனை மரத்து ஓலையில்தான் உருவாகி உயிர் வாழ்ந்தது. இந்த பனை மரத்தைப் பற்றிய பாடல் ஒன்று நான் இளமையில் ஒரு சிற்றூர் பள்ளியில் ஒன்னரை ஆண்டே படித்த நாளில் பாடப் புத்தகத்தில் பதிந்திருந்த நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது.
பனை மரமே பனை மரமே, ஏன் பிறந்தாய் பனை மரமே
நான் வளர்ந்த காரணத்தை நாட்டோரே சொல்லுகின்றேன்
எழுத நல்ல ஏடாவேன், படுக்க நல்ல பாயாவேன்
குளிர் வழங்கும் நுங்காவேன், குடிக்கும் நல்ல பதநீராவேன்
இனிக்கும் கனிந்த பழமாவேன், கொட்டைதரும் கிழங்காவேன்
கிழங்கோடு தவுணாவேன், வீடுகட்ட உத்தரமாவேன்
கூரைபோட ஓலையாய் உதவி நிற்பேன்.    என்று ஒரு மரத்தின் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதை பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக வைத்திருந்தது பசுமையாக ஒளிர்கிறது. பனைமரம் இப்படி என்றால் மற்றமற்ற பயன்தரும் பலம் தரும் மரங்களையும் அதனுடைய உறவுகளாக மற்றமற்ற தாவரங்களை வளரும் தலைமுறைக்கு எந்த அளவுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்பதை அரசர்கள் உணர வேண்டியது கடமையாகும்.
கடந்த பல நூற்றாண்டுகளாக உலகில் உள்ள எந்த மண்ணிலும் புதிய தாவரங்கள் தோன்றியதில்லை, தோன்றுவதில்லை. ஆனால் இப்போது திராவிடம் எனப்படும் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் புதியபுதிய தாவரங்கள் முகிழ்த்து வளருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
விண்வெளியில் உலவுகின்ற மற்ற கோள்களுக்குச் சென்று வாழ வேண்டுமெனில் அங்கு ஆக்சிஜன் வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப் பேருலகம் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வுக் கருத்தொன்றை என்னுடைய கடிதச் சிலைகள் என்ற நூலில் அப்போதே விளக்கி எழுதியிருந்தேன்.
அன்று அறிவியல் மேதை வெளியிட்ட கருத்து எதுவென்றால் வெள்ளிக் கிரகத்துக்கோ செவ்வாய் கோளுக்கோ மனிதன் செல்லும் நாளில் அங்கு வாழ ஆக்சிஜன் வேண்டும். அதற்கொரு வழியில் முடிவு சொன்னார்கள்.
அந்தக் கிரங்களின் மேகத்தில் அமிலங்கள் சூழ்ந்திருக்கிறது. அந்த அமிலங்கள் மீது சில இரசாயனங்களைத் தூவினால் அது மழையாக அந்த மண்ணில் பொழியும். அந்த மண்ணில் தாவர விதைகளை தூவினால் அது மரங்களாகத் தழைக்கும். அது பெருகி நிறையும் போது மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கூட கூடி வாழலாம் என்று உரைத்தார்கள்.
ஆக எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்றால் காடுகளும், மலைகளும், அதில் மரங்களும், தாவரங்களும் உயிர்வாழ வேண்டும். இதைப் பகுத்தறியும் திறன் கொண்ட மனித இனம் உணர வேண்டும். உல்லாச நிலைகளுக்காக காடு, மலைகளை அழித்தால் இவர்களும் உல்லாசமும் நிலைக்காது, உயிரினங்களும் இருக்காது என்பது உணர வேண்டிய உண்மையாகும்.
தமிழ் தந்த அய்வகை திணைக் கோட்பாடுகளும் அதில் விளைந்த இலக்கியம், கவிதை, காப்பியங்களும் இயற்கையின் அறங்களாக விளங்கி மரங்களையும் மற்ற தாவரங்களையும் மகிழ்வோடு வாழ்த்திப் பாடியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். மனதில் மகிழ்ச்சிப் பொங்க, அது மாறாமல் தங்க மரங்கள் நடுவதும், மரங்களைச் சாலைகளில் நிறைய நிறைய நட்டு வளர்த்த புத்தனின் வழி வந்த மாமன்னன் அசோகனை வாழ்த்துவது கடமையாகும். மரங்களை வெட்டுவோருக்கு மரண தண்டனை என்றாலும் அதை அறம் சார்ந்ததாகக் கருதலாம்.

குறிப்பு: என்மீது நம்பிக்கை வைத்து மரங்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை தர ஆணையிட்டு என்மீது அன்பு செலுத்தும் வெல்கம் ஆலை அதிபர் அன்பிற்கினியர் எஸ்.எல். அழகராஜா அவர்களுக்கு நன்றியோடு இந்தக் கட்டுரையையும் நான் எழுதிய குறிஞ்சி, முல்லை விழாக்காலம் என்ற கவிதையையும் அவரது கரங்களில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Friday 8 January 2016

இது என்ன தீர்ப்பு?

இது என்ன தீர்ப்பு?
ஜல்லிகட்டு, ஜல்லிகட்டு என்றொரு குரல் பல இடங்களிலும் சங்கடப்பட்டு வருந்தியழுது கொண்டிருக்கிறது.
மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல், ஏறு தழுவுதல் என்று அறுவடைப்பொருள் குவிந்த நாளில் அதாவது தைப்பொங்கல் நாளில் மாட்டுப்பொங்கல் என்று கால்நடையை பாராட்டும் நாள்களில் அந்த மாடுகளில் காளைகளாக உள்ளவற்றை விளையாட்டுப் பயிற்சியளித்து அதனோடு விளையாடும் நல்ல நிகழ்வை எவனோ ஒரு தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகளை உணராதவன் தொடுத்த வழக்கில், இதை மிருகவதை என்று தவறான பொருள் கொண்ட நீதிபதியால் தடைவிதிக்கப்பட்டு, தமிழர் நெஞ்சங்களில் தவிப்பையே ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
நீதிமன்றங்களில் இருபோரின் உள்ளம் உண்மை எது, உள்ள உணர்வில் உயர்வு எது, அதில் ஊடுவி நிற்கின்ற தன்மை எது என்று உணர்ந்தவர்களாக உன்னதமானவர்களாக இருப்பது நீதியின் நிலைப்பாட்டில் நிறைவைத் தரும்.
தீர்ப்பு ஒன்றைத் தருவதால் ஏற்படும் நிலைகளை நினைத்துப் பார்த்து தீர்ப்பு தருவதுதான் அறமாகும். இந்த ஜல்லிக் கட்டுத் தீர்ப்பில் உள்ள நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் சோகமும் கலக்கமும் தோன்றுகிறது.
பசுவதைச் சட்டம் இப்போது காளை வதைச் சட்டம் என்கிறார்கள். இந்த இரண்டுமே இங்குள்ள நடைமுறைக்கு மாறாதானாகும். பசுவில் பால் கறப்பது என்பது அறமில்லாததாகும். கன்றுக்கு மட்டுமே உரிமை உள்ள பசுவின் பாலை, பசுவின் பால் காம்புகளை கசக்கிப் பிழிந்து பாலைக் கறந்து குடிப்பது எந்தவகை நீதியாகும். இதற்கு அனுமதி தந்தது ஏன் என்ற கேள்வி எழாதா?
அடுத்து இந்தப் பசுக்கள் வயதாகி வலிமை இழந்து நலிந்து எலும்பும் தோலுமாய் ஆன போது அதை அடிமாடாய் இழுத்துச் சென்று கொன்று அதன் எலும்பையும் நரம்புகளையும் மருத்துவத் துறைக்குப் பயன்படுத்துவது சரிதானா?
இதையடுத்து அதன் தோலிலிருந்துதானே கெட்டி மேளம் என்று தட்டச் சொல்லுகின்ற தாளவகைக் கருவிகளை உருவாக்கும் முறைகளை மங்கள வாத்திய மட்டுமல்ல. மகிழ்வைத் தூண்டுகின்ற இசைக்கருவிகள் கூட அதிலிருந்துதானே தோன்றுகிறது.
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி எனும் நால்வகை இசைக் கருவிகள் மாடு, ஆடு, முயல், உடும்புகளிலிருந்துதானே அதன் தோலிருந்துதானே தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த காளைகளை விரையை அதாவது அதன் பிறப்பு வீரியத்தை அழித்து அந்தக் காளைகளை ஏர்உழ, எருதுகளை வண்டியிழுக்க அதை இயக்குவதற்காக வேகப்படுத்துவதற்காக சாட்டையில் அடிப்பது, தார்க்குச்சியெனும் ஊசியால் குத்திக் குருதியை கொட்ட வைப்பது, லாடம் கட்டி கொடுமைப்படுத்துவது என்பதெல்லாம் வதையென்று நீதிபதிகளுக்குத் தெரியவில்லையா? ஆனால் காளைகளை வளர்த்து செல்லமாக பழகி, சினேகிதம் கொண்டு வளமாக வளர்த்து ஆளாக்கி பல்வேறு பாதுகாப்பு முறைகளைப் பயிற்சியாக்கி ஆண்டுக்கொருமுறை அறுவடை நாளில் விளையாடுவதை விலங்குத் தடைச் சட்டத்தில் இணைப்பது என்பது ஓர் இனத்தில் இறையாண்மையைக் கொச்சைப் படுத்துவது ஆகாதா. பல நிலை கொண்ட இந்தியா எனும் இந்த பகுதியில் எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையோடு அணுகுவது அறம் ஆகாது.
அடிமை இந்தியாவை உருவாக்கிய வெள்ளையர் சட்டத்தின் நகலாக பெரும்பாலான சட்டங்கள் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் பலர் வாதிக்கிறார்கள். இதில் வழக்கறிஞர்களாக நிற்போர் நீதிமன்றத்தையே கலவரப் பூமியாக்கி விட்டதாக நீதிமன்றம் கூறுகின்ற குறை நிலையும் குடிகொண்டிருக்கிறது. இத்தகைய வழக்கறிஞர்களில் இருந்துதான் நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார்கள்.
இந்த நீதிஅரசர்கள் என்பது அதாவது பழைய கால மன்னர்கள் அறம் மிகுதியும் சார்ந்ததாகவோ அறிவியல் உணர்வுகளை தாங்கியவர்களாகவோ இருந்ததில்லை. ஆதிக்க, ஆணவ உணர்வுகளை கொண்டவர்களாகவேதான் இருந்திருக்கிறார்கள். அந்த அரசநிலை நீதியரசர்களிடம் அண்டி விடக் கூடாது.
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக்கூடாது. வினாவெழுப்பக் கூடாது என்கிறார்கள் சிலர். இதை ஆய்வு செய்வது சட்ட மேதைகளின் கடமையாகும்.
ஓர் அரசியல் சட்டம் வழங்கும் நீதியும் நெறிமுறையும் ஒரே மாதிரியாக இல்லாமல் முரண்படுவது ஏன்? குன்காவும் குமாரசாமியும் வடதுருவம், தென்துருவமாக தோன்றியது ஏன்? இதுபற்றி சட்டம் என்ன சொல்கிறது? இதை சரியென்று சட்டம் சொன்னால் அது எந்த வகையில் சரி என்றெல்லாம் சட்ட நிபுணர்கள் குழப்பமின்றி, குளறுபடி எதுமில்லாமல் நிதானமாக மக்களுக்கு விளக்குவது அவர்களது கடமையாக வேண்டும்.
பல்வேறு இனம், மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் கோட்பாடு, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சிந்தனையில் தோன்றும் கருத்துக்கள், அதனால் உருவான தேசியம் என்ற பற்பல நிலைகொண்ட இந்திய அரசியல் சட்டம் சமத்துவ நிலையில் இருக்கிறதா என்று ஆராய்வதும் அறிவாளர்களின் கடமையாகும்.

ஏனெனில் இங்குள்ள ஆட்சிமுறை ஜனநாயகம் அதாவது டெமாகிரசி என்றபோது தந்தை பெரியார் சொன்னார், இங்கே டெமாகிரசி என்று இல்லை பிராமனோ கிரேசி என்றார். அவர் சொன்னதுதான் இன்றுவரை எல்லா இடங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. இங்குள்ள சட்டங்களும் தீர்ப்பும் அதற்காகவே இயங்குகிறது என்ற நிலையில் சமத்துவ உணர்வு கொண்டோர் முனைவதும் போராடுவதும் கடமை என்று கருத வேண்டும்.

உண்மை பேச வேண்டும்

உண்மை பேச வேண்டும்
இங்குள்ள தொலைக்காட்சியில் பற்பலச் செய்திகளை மக்களிடம் பதிவு செய்யும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அதில் ஒன்று இந்த விவாதப் பகுதியாகும். ஒவ்வொரு செய்தியின் பின்னணியில் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு பல்வேறு பட்டவர்களை அழைத்து கருத்துகளைக் கேட்கிறீர்கள்.
ஊடகம் எனும் சொல் வெறும் ஊடல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமில்லை உண்மைகளை ஒழித்து வைக்கும் மறைவிடமும் அல்ல. அது செய்திகள் கருத்துகளின் உண்மை நிலைகளை உற்று நோக்கி மக்களின் உள்ளங்களை ஊடுவிச் சென்று உறைய வைக்கும் உன்னத இடமாகும்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்போர் தங்கள் கட்சி மேடைகளாகக் கருதி தங்கள் பவுசு பம்மாத்துக்களை நியாயங்களுக்கு மாறாக பறைசாறறுக்கிறார்கள். இதை நெறிப்படுத்தி நேர்படுத்த வேண்டிய நெறியாளர்களும் புராணத்தில் வருகின்ற நாரதனைப் போல் அவரவர்களுக்குத் தக்கவாறு பேசுகிறார்கள்.
அரசியல் கட்சிகளில் அழைக்கப்படுபவர்களும் சரி, அறிவு ஜீவிகள் என்று கருதி அங்கு அமர்த்தப்படுபவர்களும் சரி, அறத்தன்மைக்கு மாறாக தங்கள் அழுக்கு மனதில் உருவான ஆக்கமில்லாத நிலைகளை முன் வைக்கிறார்கள்.
உலகம் உருவான காலத்திலிருந்து சிந்தனையில் பல்வேறு நிலைகள் நின்று வருவதைக் காணலாம். எந்த ஒரு மனிதனுக்கும் எண்ணத்தில் ஒரு சார்பு இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் இந்த சார்புநிலைகள் சமச்சீர் முறைகளுக்கு மாறாக இருக்கக் கூடியதாக கருதி நடுநிலை தரவுகளை ஏற்படுத்தினார்கள்.
ஒருசார்புடையவர் அறிந்திருந்த கருத்துகளை எங்கே சொல்ல வேண்டும், எங்கே சொல்லக்கூடாது என்று அறம் வகுத்தார்கள். அதைத்தான் சனநாயகம் என்றார்கள். அந்த சனநாயக மாறுதல்களை தாங்கி நிற்கும் மனத்தூய்மைகளான மக்கள் மன்றம், நீதிமன்றம் ஆட்சி மன்றம், ஊடகம் என்று உரை சொன்னார்கள், முறை வகுத்தார்கள். இந்தத் துறையில் பொறுப்பேற்பவர்கள் தங்கள் மன வேறுபாடுகளை வெளிப்படுத்தக் கூடாது என்றார்கள். இவர்களின் உள்ளமும் நடப்பும் உண்மை சார்ந்ததாக நடைமுறையில் உண்மைகளைச் சொல்லும் தூய உணர்வும் இருக்க வேண்டும் என்று ஓங்கி அறைந்தார்கள்.
உலகம் முழுவதுமே உருவான எல்லா அமைப்புகளும் ஒரு சார்புநிலை கொண்டதுதான். அது மக்களின் எந்த அளவுக்கு மாற்றத்தினை உருவாக்கி வளர்த்து வளம் பெறச் செய்யும் அந்த நிலையில்தான் தங்கள் நெஞ்சத்தைக் காட்ட வேண்டும்.
சொல்ல வேண்டிய கருத்துக்கள் கொள்கைக்காக அமைப்புகள் ஒரு பெயரைச் சூட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசியலில் மதமோ வேறு துறைகளைச் சார்ந்தவர்களோ தங்கள் அமைப்பிற்கு தங்களுக்குப் பிடித்தமானவர்களை வைத்துக் கொள்கிறார்கள். அந்த அமைப்பைத் தொடங்குகின்றபோது ஒரு கொள்கை அறிக்கையை வெளியிடுவார்கள்.
அப்படித்தான் திராவிட இயக்கம் என்றெழைக்கப்படும் தென்னிந்திய நல உணர்வுச் சங்கமோ, திராவிட கழகமோ தி.மு.க.வோ தங்கள் கொள்கைக் கோட்பாடு என்றுவென்று மகத்தான பதிவுகளை வெளியிட்டு சட்டப் புத்தகங்களில் கூட பதிவு செய்து வைத்தார்கள்.
இதுபோல பல அமைப்புகளும் வைத்திருக்கலாம். ஆனால் அந்த அமைப்புகளில் இருக்கின்ற முன்னோடி மனிதர்களுக்கு அந்த அமைப்பின் நிலைகளை மிகத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் அவர்களை ஊடக நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற விவாத நெறியாளர்களுக்கு மிகத் துல்லியமாகத் தெரிந்து வினாத்தொடுத்து விளக்கம் தரும் நிலையில் அவர் மனம் ஆற்றல் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கூட்டத்தில் உள்ள மயக்கங்களைத் தீர்த்து மகத்தான இடத்திற்கு அழைத்துச் செல்லும் இராசபாட்டையை போட முடியும்.
அப்படியொரு நிலையில் இங்கு எந்த அமைப்பும் இல்லையென்பது விழிகளில் நீர்வடிய வைக்கும் வேதனையாகவே இருக்கிறது. எந்தவொரு அமைப்பிற்கும் அதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் தெளிவான மனம் இல்லை. அதில் திரிந்த நிலையில் தான் இருக்கிறது.
எல்லாத்துறைகளையும் ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும் துறைதான் அரசியல். அது ஒன்றுதான் உலகம் முழுவதும் உயரிடத்தில் இருந்து கொண்டு ஆளுமை செய்கிறது. அந்த அரசியலை ஒரு அறிவியல் சார்ந்தது. விஞ்சிய நிலை கொண்ட விஞ்ஞானம் என்றனர் வியத்தகு அறிவாளர்கள். அந்த விஞ்ஞானம்தான் இன்றைய நிலையில் மட்டுமல்ல என்றென்றும் மக்களை வாழ்விக்கும் வற்றாத பேராற்றலும் இயற்கையின் இயக்கமும் அதில் ஏற்படும் இடர்பாடுகளும் கூட அறிவியல் வெளிப்பட்ட வீதியின் செயல்பாட்டு விதிகளால் என்பது விந்தைதரும் விஞ்ஞான விளக்கமாகும். அந்த விஞ்ஞானம் தான் இன்றைய நிலையில் மட்டுமல்ல என்றென்றும் மக்களை வாழ்வித்த வாழ்விக்கும் வற்றாத பேராற்றலாகும். இயற்கையின் இயக்கம், அதில் ஏற்படும் இடர்பாடுகளும் கூட அறிவியல் வழிப்பட்ட வேதியின் செயல்பாட்டு விதிகளால் என்பது விஞ்ஞானம் தரும் விளக்கமாகும். இதில் எத்தனை படிப்பாளிகளுக்கு இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற ஏழையாகவே இருக்கக் காணலாம். இங்குள்ள எல்லா நிலைகளுக்கும் உலகம் வழங்கும் மதிப்பீடு மிகக்குறைந்த விழுக்காடாகவே இருக்கக் காணலாம்.
அரசியலும் பிறவும், விஞ்ஞானம் என்றால் அந்த உண்மைகள் இங்குள்ளோர் உள்ளத்தில் ஊறித் திளைத்து உருவம் பெற்றிருந்தால் இங்குள்ள மதமும் மவூடிகமும் மயக்கக் கருத்துக்களும்  மண்டாது மங்கியிருக்கும். அறிவியல் ஆய்வுகளால் விஞ்ஞானம் வழங்கிய எல்லாவற்றையும் பெற்றுத் துய்ப்பவர்கள் அந்த விஞ்ஞான வளர்ந்த அறிவியல் தூய்மைகளை மட்டும் ஏற்பதில்லையென்று முடிவெடுத்து இங்கு உண்மையில் உளவியல் நெறி வளர்ச்சிக்கு கேடு தரும் பழைய கதைகளையே ஆவி, ஆன்மா, அமான்சியம், சொர்க்கம், நரகம், வரம், சாபம், பூசை இவற்றைப் புரிந்தவர்களும் மற்றவர்களிடமும் புரையோடிக் கொண்டிருப்பதை நினைத்தால் மனம் புண்ணாகிப்போகிறது.
இதில் வேதனை என்னவென்றால் தொண்டாகக் கருதி தூய்மை உள்ளத்துடன் நடக்க வேண்டிய கல்வி, மருத்துவம், ஊடகம், தன்னார்வ உணர்வு அனைத்துமே வணிக வலைக்களுக்குள் சிக்கி முழுமையின்றி, முடைநாற்றம் வீசுவதாக அறிவு சார்ந்த அருமையாளர்கள், ஆய்வாளர்கள் அறைந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இனிவரும் காலங்களிலாவது கெடு நாற்றங்களை நீக்கி நல்ல சமூகத்தைப் படைக்கின்ற நிலைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்வார்களா? இதை உணரவில்லை என்றால் இன்றைய சென்னை வெள்ளம் எல்லா நிலைகளிலும் இருந்தவர்களை அடித்துச் சென்றது. அதுபோல இவர்களையும் வரலாற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடும். இந்த உண்மையை உணர்வது நலம்.

Thursday 7 January 2016

இணைந்து செயலாற்றுவோம்

இணைந்து செயலாற்றுவோம்
பேரன்புடையீர் வணக்கம், வாழ்த்துகள். கடந்த  5-1-2016 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் தங்களுடைய வெளிப்பாடுகளைக் கண்டு கேட்ட நிலையில் அன்று தங்களுடன் அலைபேசியில் பேசியதை நினைவில் நிறுத்தி வைத்து நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
பல்வேறு கருத்துக்களை பரிமாறிக்கொண்ட மகிழ்வோடு நான் இணையதள வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் கட்டுரைகள் சிலவற்றை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
உளவியல் திறத்தில் உலக மொழிகளிலேயே உயரிடத்தில் இருக்கின்ற தமிழ் சிலபல வடிவங்களில் செய்திகளைச் சொல்லும் திறமுடையதாக விளங்குகிறது. என்றும் போடாத மகராசி இன்று போட்டால் நித்தம் போட்ட தேவடியாளுக்கு இன்று என்ன வந்தது? என்று பிச்சைக்காரன் சொல்வதாக இங்கொரு பாழ்பட்ட பழையமொழி ஒன்று உலவுவதைக் காணலாம்.
அதுபோல தமிழுக்கு எல்லாம் செய்த தி.மு.க.வைச் சாடுவது எதையும் செய்யாதவர்களை ஏதும் சொல்லாதது மட்டுமல்ல சில நேரங்களில் பாராட்டிப் போற்றுவது என்பது இங்கொரு நடைமுறையில் இருக்கிறது.
இது தொடர்பான ஓரிரு கட்டுரைகளை இத்தோடு தந்திருக்கிறேன். தமிழ் அமைப்புகள் போன்ற பல்வேறு அமைப்புகள் பல்வேறு செய்திகளை குற்றங் குறைகளை எந்த ஆய்வும் இல்லாமல் வெளிப்படுத்தக் காணலாம். சங்க காலத்தைத் தாண்டி நடைபோட்ட ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரிய, வேத, புராண இதிகாசங்களை  விளக்குகின்ற வடிவமாகவே தமிழும், தமிழ் அறிந்தவர்களும் இயங்கியதை உற்றுப் பார்த்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
வளரும் அறிவியல் சூழல்களை சங்ககாலத்தில் இருந்த நாட்களிலேயே சமாதியில் அடக்கம் செய்துவிட்டார்கள். மதவாதிகளும் அவர்கள் பிடியில் சிக்கியிருந்த மன்னர்களும் தமிழ் உணர்வை தமிழ் தரவுகளை மேம்படுத்தும் நிலைகளை துளிகூட துளிர்விட செய்யவில்லை.
பலவேறு நிலைகளில் உலகின் பல பகுதிகள் உயர்ந்து ஓங்கி வரும் சூழலில் தமிழும் தமிழர்களும் உலக மொழி அகராதிகளில் கூலி என்றே குறிப்பிடப்படுகிறார்கள்.
கொத்தடிமையாக வதிந்த தமிழர்களை திராவிட இயக்கமே இன்றுள்ள நிலைக்கு ஏற்றிவிட்டிருக்கிறது. இதில் அரசியல் அமைப்புகளைச் சாடுகின்ற தமிழ் உணர்வாளர்கள் அவர்கள் பங்கிற்கு தமிழுக்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுமல்லவா? புதுமைப் பொருள்களுக்கு புத்துயிர் ஊட்டும் சொல்வளக்களையோ கருத்துச் செறிவுகளையோ வடித்து வழங்கியிருக்கிறார்களா? உழைத்தவனின் இன்னலைத் தீர்க்கும் எத்தனையோ கருவிகள் இன்று வந்து வாழ்வுக்கு வளம் கூட்டி மகிழ்விக்கின்றது. அதற்கான தரவுகளை தமிழறிஞர்கள் செய்திருக்கிறார்களா?
பல்வேறு நிலைகொண்ட அரசியல் அமைப்புகளில் கலை, இலக்கிய பண்பாடு சார்ந்த தரவுகளை அதிகமாக ஈடுபாடு காட்டி சாதித்தது இங்குள்ள சூழலில் அது இமாலய சாதனையாகும். இது தி.மு.க. வைத் தவிர வேறு அமைப்புகள் செய்ததாக சான்றுகள் ஏதுமில்லை. அரசியல் கட்சிகள் முழுவதும் செய்யவில்லை என்பது ஆய்வுக்குப் பொருந்தாதது ஆகும்.
இதில் தமிழ் அமைப்புகள் தமிழறிஞர்கள், தமிழ் படித்த ஆசிரிய, பேராசிரியர்கள் பங்களிப்பு எத்தகையது என்பதை இங்கே யாரும் விளக்குவதில்லை. ஊதியத்திற்காக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர இவர்கள் சாதித்ததென்ன?
மதிப்புமிகு மணவை முஸ்தபா அவர்கள் இன்று அறிவியல் கலைச் சொற்களை இரண்டு இலட்சத்திற்கு மேல் உருவாக்கியதைப் போல ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே உருவாக்கியிருந்தால் அய்ரோப்பிய தொழிற்புரட்சியும் அறிவியல் ஆய்வு தன்மையும் இங்கேதான் தோன்றியிருக்கும்.
தமிழ் இயல்பான அறிவியல் மொழி, கண்டுபிடிப்புகளுக்கு பெயர் சூட்டுவதற்குரிய சொல்வளம் கொண்ட மொழி. இங்கே தேரடியென்றவன் இரயில் வந்தபோது அதுபற்றி ஏதும் தெரியாமலேயே அது நிற்கின்ற இடத்தை இரயிலடி என்றான். கண்டுபிடிக்கும் ஆர்வம் படித்தவர்களிடம் இல்லையென்பதை விட படிப்பை இங்கே கிடைக்கவில்லை, படிப்பதற்கு பெரும்பாலோர்க்கு அனுமதியோ உரிமையோ கிடையாது என்ற வேதம் சொல்லியதுதானே இங்கே சட்டம் இருந்தது. பின் எப்படி தமிழ் வியத்தகு விஞ்ஞான மொழியாக வளர முடியும்? இதுபோல இங்கு பல்வேறு சூழல் பாதக நிலைகளை பட்டியலிட்டுப் பார்த்தால் தி.மு.க. சாதித்தது வியக்கின்ற ஒன்றாக இருக்கிறது.
தி.மு.கவைப் பிழந்த திரு. எம்.ஜி.ஆரை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு ஆரியமாலைவை அவரது கட்சிக்கு தலைவராக்கியபின் அது திராவிட கட்சி விளிப்பது எந்த வகையில் சரியாகும்.
ஆகவே எதிர்வரும் காலங்களில் நிறைய செய்தவர்கள் அதைத் தொடரவில்லை என்று சாடுவதை விட மற்றவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்கும் அமைப்புகள் மொழி மட்டுமே ஒரு சமுதாயத்தைச் செழுமைப் படுத்தும் என்று நம்புகின்றவர்கள் தாங்கள் என்ன சாதித்தோம் என்று தரவுகளை முன்வைப்பது தான் அறிவு நாணயமாகும் அல்லது தி.மு.கவைத் தாண்டி, நிறைய சாதிப்பதற்கான தரவுகளை, நிலைகளை, உழைக்கும் உறுதியை தருவதற்கு யார் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிப்பது நல்லது.

பெருமிதம் கொள்ளலாம்

பெருமிதம் கொள்ளலாம்
பேரன்புடையீர், வணக்கம். நலம் சூழ நல்வாழ்த்துகள்.
நாடாளுமன்ற வரலாற்றில் இழிநிலையில் இருந்து திருநங்கைகளை மீட்டெடுக்கும் இலட்சிய உணர்வில் கொண்டுவந்த தங்களின் தனிநபர் தீர்மானம் எதிர்ப்பின்றி ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது என்னைப்போன்ற இயக்க இலட்சியங்களை உடைய இதயங்களை இனிப்பில் குளிக்க வைத்து ஈடில்லா மகிழ்வை உண்டாக்கியிருக்கிறது.
ஆட்சித்துறை அலுவல்களுக்காக படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞரை இலட்சிய கொள்கையில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் பொது நல உழைப்பாளராக அதிலும் தமிழர் நலம் காக்கும் உண்மைப் போராளியாக ஆக்கிய மிசா சட்டத்தை வேறு பல காரணங்களுக்காக பழித்தாலும் பகைத்தாலும் பாராட்டவே வேண்டும். இதை நினைத்து தாங்கள் பெருமித உணர்வில் திளைக்கலாம்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றபோது எங்கள் குல உறவொன்று குடும்ப அழகுமுகம் ஒன்று ஒளிருவதாகவே உள்ளம் உவந்து மகிழ்கிறது.
திருநங்கை தீர்மான வெற்றிக்குப்பின் நரிக்குரவர் இனத்தை ஆதிவாசிகள் பட்டியலில் இணைத்திட எடுக்கும் முயற்சியும் இனிமையூட்டக் கூடியதாகும்.

நான் தங்களிடம் பரிந்துரைத்த ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான முயற்சியும் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் சீர்நிலை பெற்று செழுமையுற்று சிறந்திடவும் ஆன முயற்சி தங்கள் திறத்தால் வெற்றிபெற்றால் - வெற்றி பெறும் - என்றால் உலகத் தமிழர்களும் இந்தியப் பிற்படுத்தப்பட்டோரும் எழில் ஏற்றநிலை பெறுவதோடு இன்றல்ல என்றென்றும் தங்களின் புகழ்நிலை ஈடற்றதாக எழில்நிலை கொண்டதாக ஒளிவீசிய வண்ணம் இருக்கும். இந்த இரண்டும் நமது இயக்கத்தின் தூய நிலை கொள்கையல்லவா. ஆகவே இயக்க வரலாற்றிலும் எங்கள் சிவாவின் இலட்சிய முகம் ஒளிரும் ஓவியமாய் நிலைபெற்ற ஆவணமாய் அழியாய் கல்வெட்டாய் நிலைகொண்டிருக்கும். வரலாறு வாழ்த்தியவண்ணம் மகிழ்ச்சி யடைந்திருக்கும்.

Wednesday 6 January 2016

இயற்கையை எதிர்கொள்ள வேண்டும்

இயற்கையை எதிர்கொள்ள வேண்டும்
இயற்கையின் இயக்கம் என்பது இயன்றவரை நெறிகொண்டது, நேர் சார்ந்தது ஆகும். வேதிப் பொருள்களை இயக்க வைக்கும் இயற்கையின் பிள்ளைகளான காற்றும், நீரும் கலைவடிவம் காட்டி களிப்படையச் செய்வதும் உண்டு. சில காலம் கலவரச் சூழலைக் காட்டி, கலங்கவைத்து கண்ணீர் சிந்த வைப்பதும் உண்டு.
வான், மண், வளி, ஒளி, நீர் என இயற்கையின் ஆளுமையால் நீர்நிலைகளை இந்த நிலஉலகில் ஏற்படுத்தியிருக்கிறது. விண்ணில் உலவும் பல்வேறு நட்சத்திரங்களும், கோள்களும் ஒலியலைகளால் உறவு கொண்டு இந்த மண்ணை இனிமையும் அழகும் ஒளிர்ந்தததாக ஆக்கி வைத்திருக்கிறது.
இயற்கையின் இயக்க உணர்வுகளை அவ்வளவு எளிதில் மனித அறிவு கணித்துவிட முடியாது என்பதற்கு உலகம் முழுவதும் ஏற்படுகின்ற எதிர்பாராத காற்றும், மழையும், பூகம்பமும், எரிமலைச் சீற்றமும் சான்றாக விளங்குகிறது. ஆயினும் அறிவில் சிறந்த நாடுகளில் சேதாரம் மிகக் குறைவாகவும் அறிவியல் உலகில் மிகவும் அப்பாவியாகத் திகழ்கின்ற இந்தியா போன்ற நாடுகளில் மிகுவாகவும் இருப்பதைக் காணலாம்.
இந்தத் துணைக்கண்ட வரலாற்றில் குறிப்பாக தமிழக வரலாற்றில் புயலெனும் பேய்க்காற்றும் அதனால் கொட்டும் பெருமழையும் பூகம்பம் எனும் நிலநடுக்கம், இதனால் ஏற்பட்ட அழிவு என்பது அய்யாயிரம் ஆண்டுகளாகவே பதிவாகிக் கிடக்கக் காணலாம்.
அதுபோக சிந்து சமவெளித் தமிழர்களின் அறிவியல் ஆய்வின் வெளிப்பாடான அறுபது ஆண்டு சுழலும் பருவச் சூழல் என்பது அறுபது ஆண்டுகளில் எந்தெந்த ஆண்டுகளில் இயற்கையின் நிகழ்வு எப்படி இருக்குமோ அதுதான் அறுபது ஆண்டுகளிலும் இயங்கும் என்பதுதான். அதுதான் கொல்லமாண்டு பஞ்சாக்கத்தில் இடைக்காடர் வெண்பாவில் விளக்கமாக வரையப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடந்த காலங்களை விட இன்றைய நாட்களில் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொண்டு பாதுகாப்பது எளிதாகவே இருக்கிறது. ஏனெனில் அறிவியல் தந்த விஞ்ஞானக் கருவிகள் வலிமைமிக்கதாக விளங்குகிறது. ஆனால் இயற்கையின் இயக்க முடிவுகளை மிகத் துல்லியமாக வரையறுக்க இயலாது. ஆனால் வருமுன் காப்போம் எனும் நிலைப்படி, நீதிப்படி தொலைநோக்குப் பார்வையில் அரசுகள் ஆய்வுசெய்து செயல்பட்டால் மக்களை முழு அளவில் பாதுகாக்க முடியும்.
ஆனால் இந்தியாவில் பெரும்பாலான அரசுகள் ஆவிஉலகிலும், அந்தராத்மாக்களின் அருள் வேண்டியே இயங்குவதால் முழு விஞ்ஞானமும் வினையாற்றுவதில்லை என்பதுதான் முழு உண்மையாகும்.
மக்களாட்சி முறைகள் பல இங்கே மயக்கத்தில் கிடக்கிறது. மக்களின் மனமோ மாயஜாலாங்களில் சிக்குண்டு சிந்தனையில் சீர்மையின்றி சீரழிந்த நிலையில் நின்று தவிக்கிறது. ஓர் அரசை ஆள எத்தகையவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனும் தெளிவில்லாமலலேயே திசை தவறி நடக்கக் காண்கிறோம்.
ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் வளர்ச்சி நிலைகளை உருவாக்குவதுதான் ஒரு நல்லரசின் கடமையாக வேண்டும். அதற்கு ஒவ்வொரு துறையிலும் உள்ள தேர்ந்த அறிவாளர்கள், ஆய்வாளர்கள், திறனாளர்களின் கருத்தறிந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்கு ஆள்வோரிடம் பொதுமக்களுக்காக இயன்றவரை உழைப்பதும் தியாகம் செய்வதுமான மனிதர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதைவிடுத்து, ஊழல் மனம் கொண்டவர்களையும் உழைக்காதவர்களையும் உல்லாசபுரிகளில் சென்று ஓய்வெடுத்து உறங்குபவர்களையும் தேர்வு செய்தால் 2015 சென்னையிலும் டெல்டா மாவட்டங்களிலும், கடலூரிலும் நேர்ந்த நிலை அதற்கு முன் இருந்த நான்காண்டு நலிவும் நாசமும் ஏற்படும். கடந்த அய்ம்பதாண்டுகளில் நடந்த அரசுகளில் கலைஞரின் அரசு நல்ல அடிப்படைகளோடு நிதி நிலை அறிக்கைகளை வழங்கி அதனடிப்படையில் பெருமளவு வளர்நிலை கண்டது. ஆனால் எல்லா நிலைகளிலும் வணிகமனம் படைத்தோரும், இடைத்தரககர்களும் இடம் பிடித்ததால் வானளாவ வளம்பெற வேண்டிய தமிழகம் ஏற்றநிலையிலிருந்து இறக்கச்சரிவில் உருண்டு வருவதைக் காண்கிறோம்.
அனைத்துத் துறையிலும் அடித்த தலைமுறையை அடிமைகளாக்கும் நிகழ்வு முறைகள் நிறைந்து வரக் காண்கிறோம். அரசியல், கல்வி, ஊடகங்கள், அரசு நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள், சமூக உணர்வுகள் அனைத்திலும் அடிமை உணர்வை உருவாக்கும், ஆளுமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் காண்கிறோம்.
இவற்றிலிருந்து விடுதலைப் பெற பாடுபடும் மிகச் சிறந்த மனிதர்களை விரக்தியடையச் செய்யும் முயற்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. படிப்பறிவு இல்லாக் காலத்தில் உரிமை வேட்கையும், அதற்கான தியாகம் செய்யவும், தீரர்கள் நிறைய தோன்றியவண்ணம் இருந்தார்கள். ஆனால், இன்று கருவிலேயே இவற்றைக் கொல்லும் காட்சிகளைக் காட்டுவோர் களைப்பும் சலிப்புமின்றி வினையாற்றுகின்றனர்.
உலகிற்கு எல்லாந் தந்த தமிழன் இன்று எல்லா நிலைகளிலும் உணர்ச்சியற்ற உதவாக் கரையாக உருவாகி வருகிறான். அதற்கோர் எடுத்துக்காட்டு காற்றிலும், மழையிலும் தன்னைக் காப்பாற்றும் ஓர் அரசை உருவாக்கும் திறத்தைப் பெறவில்லை என்பதுதான்.

ஏன் இல்லை

ஏன் இல்லை
இந்தியனாக இரு, இந்தியப் பொருளையே வாங்கு என்று இடிமுழக்கமொன்று என்றோ ஒலித்ததுண்டு. ஆனால் இங்கு யாரும் இந்தியனாக இல்லை, இருக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்தியப் பொருளையே வாங்கு என்று இனம் பிரித்துப் பார்த்தால் இருள்நிலையே தோன்றுகிறது. அடித்தள வேளாண்மையிலிருந்து அனைத்துத் துறையிலும் அந்நியம் சார்ந்ததாகவே அமைந்திருக்கிறது. பார்க்கும் கேட்கும் பழகும் முறைகளும் போதிக்கும் முறைகளும் இதுபோலவே இருக்கிறது.
இதற்குக் காரணம் இந்தியா என்று ஒன்று இருந்ததில்லை, இன்றும் இருப்பதில்லை. இந்தியப் பொருள்கள் எதுவும் இங்குள்ள மனிதர்களை ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணிப்படிகளாக இருந்ததில்லை. இங்கு எதிலாவது புரட்சி ஏற்படுவதற்கு ஏந்துகள் ஏதுமில்லை. அதனால் புதுமைகள் உருவாக்கும் காரணிகள் தோன்றாது போய்விட்டது. புரட்சியும் முகிழ்க்காது முடங்கிக் கிடக்கிறது.
அய்ரோப்பியர்கள் மட்டும் இங்கு வாராதிருந்தால் ஆதிவாசிகளாகவே இங்கிருப்போர் இருந்திருப்பர். இங்கு விடுதலை கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் முப்பது கோடிப் பேர் மின்சாரம் கிடைக்காமல் இருளில் அடைந்து கிடப்பது போலவே அந்தகாரத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.
இதில் இன்னொரு வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் படித்தவர்களும் பொதுநிகழ்வில் பங்கெடுப்பவர்களும் இந்துப் பண்பாடு, புனிதம் என்று இடியோசை போல எகிறிக்குதித்து எக்காலமிடுகிறார்கள். இதில் இந்தியா எப்படி இல்லையோ? அதுபோல இங்கு இந்துவும் இங்கே இல்லையென்பதுதான் ஆய்வில் அறிந்த உண்மையாகும். பல்வேறு தேசியம், பண்பாடு, மொழிகள், வரலாறு படைத்து வாழ்ந்த மண்ணில் வந்தேறிகள் வஞ்சகத்தால் நிலைப்படுத்தியதுதான் ஒற்றை இந்தியா, ஒற்றை நாடு, ஒற்றை மதம், ஒற்றை பண்பாடு, ஒற்றை தேசிகம் என்னும் உளறல் மொழியாகும். ஆயிரம் வருடங்களாகவே ஆதிக்கவாதிகளால் அடிமையில் ஆழ்ந்த பகுதி இது. படைபலம் கொண்ட மன்னர்களை மூளைச்சலவை செய்து மனித நேயம், மாண்புகளுக்கு மாறான முறைகளால் உருவானது வேதத்திற்கு பிற்காலத்தில் சொல்லப்பட்ட இந்து, இந்தியா என்ற இரு சொற்களை வைத்துக் கொண்டுதான் இங்குள்ள தன்னலக்காரர்களும், தகுதியற்றவர்களும் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வணிகத்தில் மக்களைச் சுரண்டி, கொள்ளையடிக்கும் வல்லமையாளர்கள், இவைகளுக்கு துணை போய் இந்தப் பகுதியை எழில் நலம் பெறவிடாமல் செய்கிறார்கள். அறிவியலை ஆய்ந்தறிந்து உணர்வில் உத்வேகம் கொண்டு புதுப்புது வடிவங்களைப் படைத்து மக்களை வாழ்விக்கும் முறைகள் சில கூட மக்களுக்காக இல்லாமல் வணிக மன்னர்களுக்காகவே இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் இருந்த அறிவுணர்வு ஆகாயமளவுக்கு இங்குள்ளவர்களை உயரச் செய்திருக்கும். ஆனால் இடையில் செருகியிருந்த இந்தியா எனும் முறையற்ற பதிவுகளால் உலகில் முதல் இடத்தில் இருக்க வேண்டிய இந்தப் பகுதிய இருட்டு நேரத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த நிலையில் தான் இந்தப் பகுதி இருக்கிறது.

ஆய்வுகள் வளம்பெற வேண்டும்

ஆய்வுகள் வளம்பெற வேண்டும்
இந்திய இலக்கியக் கழகம் வெளியிட்ட திரு. க. அரங்கசாமி அவர்கள் எழுதிய கபிலர் எனும் நூல் என் கண் முன் கலைவடிவம் காட்டி நின்றது.
சங்க காலக் கவிதைகளில் அதிகம் பாடிய கபிலர் அவர்களைப் பற்றிய பல்வேறு ஆய்வுச் செய்திகளை அடுக்கி வைத்து மகிழச் செய்கிறார். குறிஞ்சியைப் பாடிய குளிர்முகக் கவிதைகளின் சிறப்புகளை செதுக்கி, அழகிய சிலைகளாக கண்முன் நிறுத்துகிறார்.
அவருடைய அறச்சிந்தனை, துறவிவாழ்வு, அவரது நண்பருக்காக அவர் செய்த உதவி, உயிர்த்தியாகம் ஆகியவற்றை விளக்கிச் சொல்லி நம் நெஞ்சை நெகிழ வைக்கிறார். தமிழர் வகுத்த அய்வகை நிலத்தில் குறிஞ்சியை நேசித்த நெஞ்சினர் கபிலர் என்று பலவித சான்றுகளை முன் வைக்கின்றார்.
குறிஞ்சி நிலத்தில் தோன்றியவர் என்றும், பாரியும் அந்த நிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும், இந்த இருவரும் இதயம் நிறைந்த நண்பர்களாக ஆனதற்கு இதுதான் காரணம் என்றும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
இதையெல்லாம் விட நமது இதயத்தை ஈர்ப்பது பாரியின் பரம்புமலை என்பது இன்று சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற பிரான்மலை அல்ல. அது இன்றுள்ள தருமபுரி மாவட்டத்தில்  பர்கூரின் பின்னணியில் இருக்கும் படர்ந்த மலை என்ற தனது ஆய்வுக்கு பல்வேறு நிலைகளை எடுத்துக்காட்டி வலிமை சேர்த்திருக்கிறார்.
சங்க காலத்திற்கு நெடுநாட்கள் முன்னிருந்தே வளர்ந்து நிலைகொண்ட அறிவியல் ஆற்றல், அனுபவ செழுமையின் ஆற்றல் இடைக்காலத்தில் தமிழப் பகைவர்களால் இதிகாச புராணங்களில் அருளின் ஆற்றலாக பசப்பு மொழிகளால் பதிவு செய்யப்பட்டு மத, மகுடிக உணர்வுகளுக்குள் மக்களை மயங்க வைத்துவிட்டார்கள் என்ற கருத்தையும் முன்வைத்து பகுத்தறிவுக்கு செழுமை கூட்டுகிறார்.
அத்துடன் கபிலரின் கொள்கைக்கு மாறாக புராண இதிகாச வடிவங்களில் எழதியதை கபிலர் எழுதியது என்று அவரையும் தமிழ் உணர்வையும் இழிவுபடுத்தியதை எடுத்துக் காட்டுகிறார்.
நாள், திங்கள், ஆண்டு முறையில் இங்குள்ள வரலாறு இல்லாததால், தமிழ் பண்பாட்டுப் பகைவர்கள் ஆன வேதமோதும் வேதியர்குல கொழுந்துகளால் தமிழையும் தமிழர் நெறிகளையும் தெளிவற்ற நிலைகளில் நிறைத்து வைத்திருக்கிறார்கள். ஆய்வற்ற தமிழர்கள் அவர்கள் சொல்வது உண்மையென்று நம்பி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
வெள்ளையர்கள் வரவிற்குப் பின் கார்டுவெல் போன்றோரின் ஆய்வுக்குப் பின் வெள்ளையர்கள் வெளிக்கொணர்ந்த சிந்துவெளி சீர்மைக்குப் பின் பல்வேறு ஆய்வாளர்கள் ஆய்வுப் புலத்தில் பயணித்து பலவித செய்திகளை வெளிப்படுத்தி தமிழின் செழுமை பெருமைகளை பறைசாற்றி வருவதும் மாண்புகள் நிறைந்த தமிழை மனத்தூய்மையுள்ள நிலைகளை மக்களுக்குக் காட்டுவது வரவேற்கக்கூடிய, வாழ்த்துக்குரிய ஒன்றாகும். இந்த கபிலர் எனும் ஆய்வு நூலைப் படைத்த க.அரங்கசாமி அவர்களையும், நூல்களை வெளியிட்ட சாகித்திய அகாடமியையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.

Tuesday 5 January 2016

ஏன் இந்த நிலை?

ஏன் இந்த நிலை?

இதுவரை உலகில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் பதிவு செய்யப்பட்டு ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் நிகழ்வுகளாக இருந்தாலும் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து இனியவர்களாக இருந்தாலும், இதயமற்றவர்களாக இருந்தாலும் இயன்றவரை எல்லா நிகழ்வுகளும் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு பாருக்கு பறைசாற்றப்பட்டிருக்கிறது.
இடி, மழை, புயல், பூகம்பம் இதனால் இழந்த ஊரும், நாடும், உயிர்களும் காலவாரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து அனுபவத்தின் வாயிலாகவும், காற்று, மழை, பனி, வெயிலின் பருவங்களை கணித்து மனித அறிவு பலகாலமாக பல்வேறு நிலைகளில் தன்னை தக அமைத்துக்கொண்டு வாழ்ந்து வரக் காணலாம்.
இனிக்கும் தமிழை இதயத்தில் வைக்காது இழிநிலையில் வாழ்கின்ற இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் இயற்கையின் இயக்கத்தை பருவங்களாக வகுத்து வகை கண்டு வாழ்ந்தார்கள். காற்றுக்கும் மழைக்கும் கூட பெயர் வைத்து கலையுணர்வுடன் வாழ்ந்தார்கள். அறுபது நாட்களை ஒரு பருவமாக வைத்தார்கள். அறுபது ஆண்டுகளில் சுழலும் பருவ சூழலை வகுத்தார்கள். அதன் வழியில் வாழ்க்கையை துய்த்து சுவைத்தார்கள். வாடை, கோடை, கொண்டல், தென்றல் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் காற்றுக்குப் பெயர் வைத்தார்கள். எப்போதாவது வரும் பெருங்காற்றுக்கு பேய்க்காற்றுக்கும் புயலென்று பெயர் சூட்டினார்கள். 
சாரல், தூறல், மழை, அடைமழை, பேய்மழை, கர்ப்பேரி என்று மழையின் வலிமைக்குத் தக்கவாறெல்லாம் பெயர் சூட்டி, நிலைகாட்டி நிறைவடைந்தார்கள். ஒவ்வொரு பருவத்திலும் என்ன விதைத்தால் விளையும் என்று விஞ்ஞானப் பேரறிவுத் தோன்றாக் காலத்திலேயே விளையும் பயிர் இயல்பு கண்டு இயல் செய்தார்கள். நிலத்தின் நிலையறிந்து அதை அய்ந்தாக வைத்து, அந்த மண்ணில் என்ன விளையும், அதன் இயல்பு என்ன, இயக்கம் என்ன என்று இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இனிவரும் நாட்களின் ஆய்வும், அறிவும் மறுக்க இயலாத நிலையில் நிறுவினார்கள், நிலைப்படுத்தினார்கள்.
2015 நம்பரில் பெய்த பெரும் மழையால் பெருத்த சேதத்தைச் சந்தித்தது தமிழகம் இதுபோல கடந்த காலங்களில் கூட நிகழ்ந்திருக்கிறது. இயற்கையின் சீற்றத்தால், இனிய பூம்புகாரும், கொற்கையும், தனுஷ்கோடியும் கூட அழிந்து போயிருக்கின்றது. திரிகூட மலையில் இருந்து புறப்படும் ஆறு இலங்கை வரை பாய்ந்த பரவிய செய்திகள் உண்டு. இடையில் கடல் இடைமறித்து இலங்கையைத் தீவாக்கியது. அதுபோல மேற்கடல் பகுதியில் வஞ்சி, தொண்டி, முசிறி, துவாரகை போன்ற நல்ல நகரங்களையும் கடல் தன் வாயில் போட்டுக் கொண்டதை வரலாறு விளம்புகிறது. 
இதெல்லாம் இயற்கையை அறிய முடியாத காலங்களில் நிகழ்ந்தவை. ஆனால் இன்று பூத்து மணம் கமழும் அறிவியல் ஆய்வு முடிவுகள் நாளும் நாளும் நல்ல வண்ணம் வளர்ந்து பூமிப் பந்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிதாக்கப் பட்டிருக்கிறது. அறிவாளர்களால் உருவான இந்த இனிய முறைகளை நாட்டை, மக்களை வழிநடத்தும் அரசைச் சார்ந்த ஆட்சி ஆளுமையாளர்கள் விழிப்புடன் நிர்வாகத்தை நடத்தினால், நெறிசார்ந்த விதிமுறைகளோடு வினையாற்றினால் வேதனை தரும் நிகழ்வுகள் மிக அரிதாகவே இருக்கும். 
ஓர் நிகழ்வைக் குறிப்பிடுவது கடமையாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் வீசிய பெரும் புயலின் அறிகுறி தெரிந்தவுடன் இரண்டு நாளில் ஏறத்தாள 11 இலட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்த்தார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நிலை அதுவல்ல. இங்கு புயல் ஏதும் வீசவில்லை, பூகம்பம் வரவில்லை, வளக்கமான மழைகால நிகழ்வுகள்தான் இங்கே நிகழ்ந்தது. அதுகூட பத்துப் பதினைந்து நாட்களாக நாளும் நாளும் வானிலை மையம் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் கடைசி இரு நாட்களில்தான், சென்னை நகரெங்கும் ஏரிகளின் உபரி நீரால் சூழ்ந்து, உயர்ந்த நேரத்தில்தான் ஒருவாறு பார்க்க முனைகிறார்கள். 
இது ஒரு ஆட்சியின் அக்கறையற்ற அவல நிலையாகும். இவைகளை விட்டு விடுவோம். காரணம் இவர்கள், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள் அல்லர். மக்களின் அறியாமையால் மந்தகாச வாழ்வில் திளைப்பவர்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சனம் செய்யும் ஊடகக்காரர்கள் ஓய்வில் உட்கார்ந்து ஊர்க்கதை பேசுபவர் எல்லாவற்றிற்கும் கலைஞர் அரசே காரணம் என்று இந்த ஆட்சியில் மக்கள் மனம் பயத்தில் இருக்கும்போது கூட வாதங்கள் செய்து மகிழ்கிறார்கள். 
கலைஞர் ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு அவரது ஆட்சியில் எல்லாவகையான அரசுக் கட்டிடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், நினைவுச் சின்னங்களெல்லாம் நீர் நிலையில் நிறுவப்பட்டன என்று பயன் தந்ததை மறந்துவிட்டு, நிலை குலைந்து, நினைவு தடுமாறி நிற்கிறார்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகளைச் சந்திக்கலாம், தாங்கிக்கொள்ளலாம். அவர் அரசு கூட சில இடங்களில்தான் இதுபோல நடைமுறைப் படுத்தியது. நீரோடும் பாதையெல்லாம் தடுத்து நிறுத்தியது அவர் ஆட்சி என்றும் அதனால் இன்றைய சென்னை நிலை ஆனது என்று சொல்வதற்கு சான்றேதும் கிடையாது.
அவரது ஆட்சியில் எண்ணற்ற சிறுசிறு ஆறுகளில் அணைகட்டி நீர்வழிகளை நெறிப்படுத்தி, விளைநிலங்களை விரிவு படுத்தினார். ஒருவேளை அவரது ஆட்சியில் ஏதும் நிகழ்ந்திருந்தால் அடுத்து வந்த ஆட்சி அதை சரி செய்திருக்களாம். அய்ந்தாண்டுக்கு ஒரு முறை அவருக்கு மாறான ஆட்சியைத்தானே மக்கள் அமைக்க உதவுகிறார்கள். இதையெல்லாம் எடுத்துக் காட்டாமல் தங்களை அறிவு ஜீவி என்று பறைசாற்றுவோர் வாய்மூடி கிடைக்கிறார்களே அது ஏன்?
பருவ மழை காலங்களில் கூட மக்களைக் காக்க முடியாத ஒரு அரசசை புகழ்பாடிப் பூரித்துப் பாராட்டுவது அறிவுடைமையாகுமா? ஒரு நாளில் பலலட்சம் மக்களைக் காத்த ஒடிசா அரசின் செயலில் பாடம் படித்திருக்க வேண்டாமா? அவர்களின் ஆலோசனையைக் கேற்றிருக்க வேண்டாமா? பொறுப்புள்ளவர்களாக இருந்தால் இந்த அரசைப் புகழ்பாடும் ஊடகங்களும், எழுத்தாளர்களும் இந்த அரசுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டாமா? ஆனால் என்ன செய்வது? தன் நலன்களுக்காக, வணிகச் சிந்தனையோடு நடைபோடும் நிலையில்தானே இங்குள்ள பெரும்பாலோரின் உணர்வுகள் உறைந்து கிடக்கின்றது.
தமிழகத்தின் நில அமைப்பையும், அதன் நீர் வழிப் பாதைகளை எப்படிக் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதற்கு நான் பிறந்த சிற்றூரை எடுத்துக்காட்டாக கூற விழைகிறேன். நெல்லை மாவட்டத்தில் சிவகிரி தாலுகாவில், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் இருக்கின்ற ஊர் நான் பிறந்த கூடலூர் எனும் சிற்றூர். இந்த ஊரின் நிலையான குளம், இந்தக் குளத்திற்கு வரும் நீர், குளம் நிரம்பிய பின் வெளியேறும் கால்வாய், ஓடை, வெளியேறிய நீர் சேருமிடம் என்பதெல்லாம் சீருடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. 
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அருகிலுள்ள சிறுமலை தொடரிலும் பெய்கின்ற மழைநீர் சீருடன் வந்து சேர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீர் இரண்டு குளங்களில் நிறைந்த பின், எங்கள் குளத்திற்கு வரும் அது வரும் கால்வாய் ஓரிடத்தில் அதாவது குளத்துக் கரையைத் தொடும் இடத்தில் ஒரு வளைவு வரும். மிகுதியாக வரும் வேகத்தில் வளைவான இடத்தில் கரை உடைந்து விடும். குளமும் கரையும் அந்த ஊர் மக்களின் பொதுவில் இருந்ததால் ஊரே திரண்டு வந்து அந்த உடைப்பை அடைக்க முயலும். அருகிலுள்ள மலைத் தண்ணீர் தெற்குப் புறத்திலும் மேற்குப் புறத்திலும் குளம் நோக்கி ஓடிவரும் பாதையில் மாடுகள் குளிக்க ஓர் ஊருணியில் நீரைத் தேக்கி வைப்பார்கள்.
மேற்கில் உள்ள குளங்களில்வரும் தண்ணீர் வடக்குத் தெற்காக இருக்கும் கரையில் தென்பாகத்தில் வந்து குளத்தை நிறைய வைக்கும். குளம் நீரால் நிறைந்து நீர்வரத்து ஆகின்ற போது வெளியேற மதகு, மடைகள், கலிங்கல்கள் என்று நீர் வெளியேறும் வழியை உருவாக்கி வைத்திருப்பார்கள். முதலில் மடைகளின் வழியே பாய்ச்சுவார்கள். அடுத்து மதகுகளின் அடைப்புகளைத் திறந்து விடுவார்கள். அதிக நீர் பெருகி வரக் கண்டால் கலிங்கள்களைத் திறந்து விடுவார்கள். மிக அதிக அளவில் நீர் வந்தால் பெரிய கால்வாய்களின் குள முகப்பின் அருகே கால்வாய்களை வெட்டி விடுவார்கள். நீர்வரத்து குறைந்தபின் அடைத்துவிடுவார்கள். குளத்தின் வருவாயும், பராமரிப்பும், பாதுகாப்பும் ஊர் மக்களின் உரிமையில் இருந்ததால் இதெல்லாம் இனிமையாக நிகழ்ந்தது. இழப்பு என்பது யாருக்கும் இல்லாமல் இருந்தது. இன்று இதெல்லாம் அரசின் கைக்குச் சென்று விட்டதால் ஊராருக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது.
பெருகும் நீரை ஆளுமை செய்வது என்பது கடுமையானது அல்ல. காஷ்மீரில் படகு வீடுகளில் வாழ்க்கை நடத்தவில்லையா? ஆறுகளில் பரிசல்களில், படகுகளில் பயணிக்கவில்லையா? கடற்பயணத்திலும் கடற்போரிலும் உலகிற்கே வழிகாட்டிய தமிழ்ச் செல்வங்களின் வழித்தோன்றல்கள் கண்களை மூடி கடவுளைத் தொழுதும் கடின வாழ்வு நிலையில் விழுந்து கிடப்பது ஏன்? சிந்திக்கத் தெரிந்தோர், சிந்தனையில் சீர்நிலை கண்டால் வரும் தலைமுறைக்காவது பாதுகாப்பை வழங்க வேண்டும்.

திரும்பிப் பார்த்தால்...

திரும்பிப் பார்த்தால்....
திசையெங்கும் கார்காலப் பெருமழையில் பெருவெள்ளத்தில் சிக்கி உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிற்கும் இந்த வேளையில் எண்ணிப் பார்க்க வேண்டிய இன்றியமையாத செய்திகளை எண்ணிப் பார்க்க வேண்டியது இன்றைய தமிழர்களின் கடமையாகும்.
1949ல் உருவான தி.மு.க. தொடங்கிய நாட்களில் பெரியாரின் பேரறிவுக் கொள்கைகளை பெருமளவுக்கு மக்களிடம் பதிக்கின்ற பணியிலேயே தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தது. பெரியாரின் பேராதரவோடு ஆட்சியில் அமர்ந்த காமராசரும் அதற்கு முன்னிருந்த முதலமைச்சர்களும், பேரறிஞர் அண்ணாவின் பேராற்றலால் வளர்ந்துவரும் கழகத்தை அழித்திட பல்வேறு வழிகளைக் கையாண்டார்கள்.
சமூகக் கொள்கைகளையும் நிகழ்வுகளையும் சொல்லி வந்த கழகம் ஆட்சியின் கடமைகளை வலியுறுத்தி அதன் அவலங்களையும் எடுத்துக் காட்டி வாதித்த நிலையில் காமராசர் அவர்கள் வெட்டவெளியில் பேசுவது ஏன்? சட்டமன்றத்திற்கு வந்து பார் என்று சவால் விடுத்தார்?
உலகப் புதுமையாக கட்சி முடிவெடுக்க பொதுமக்களின் முன் வாக்குப் பெட்டியை வைத்து நாங்கள் தேர்தலில் நிற்கவா? வேண்டாவா? வாங்களியுங்கள் என்று வேண்டிக் கொண்டது. தேர்தலில் பங்கெடுக்க மக்கள் ஆதரவளித்த நிலையில் 1957ல் தேர்தலில் பங்கெடுத்து பதினைந்து இடங்களைப் பெற்றது. அருமைத் தமிழர்கள் அதன் பின்னர்தான் ஆட்சியின் தரவுகளும் சனநாய மாண்புகளும் தமிழகத்தில் மணம் தரும் மலர்களாக மலரும் நிலை கண்டார்கள்.
பின்னர் 1962ல் பரிணாம வளர்ச்சியாக பதினைந்து அய்ம்பதாக ஆனது. அதன் பின்னர் 1967ல் 138 உயர்ந்து தமிழர்களின் அன்பினால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பு கழகத்தை வரவேற்றி நின்றது. கழகம் தோன்றுவதற்கு முன் இருந்த தமிழக சமூக நிலைகளையும் அது ஆட்சியேற்ற நாளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் விளைவால் தமிழகம் இருக்கின்ற நிலைகளையும் மன மாசற்ற மாண்புகளோடு ஆராய்ந்து உருப்பெருக்கி உற்றுப்பார்த்தால் உண்மைகள் ஒளிவிடக் காணலாம்.
1967ல் ஆட்சியேற்ற அண்ணா ஈராண்டுகளில் மறைந்துவிட்டார். அதன்பின் ஆட்சியேற்ற கலைஞரின் ஆட்சித் திறத்தையும் அவரின் திட்டங்களையும் தீட்டிய சட்டங்களையும் அதன் வளர்ச்சி நிலைகளையும் கண்ணில் குறையின்றி அறம் சார்ந்த உணர்வோடு ஆய்வு நிலையோடு ஆராய்ந்தால் கிடைக்கின்ற முடிவு, வரலாற்றில் என்றுமில்லா வாழ்வை வளநிலைகளை தமிழர்கள் பெற்றுத் துய்த்தது கலைஞரால்தான் என்பது வானவில் போன்று வண்ணம் காட்டி நம்மை மகிழவைக்கும்.
அதன்பின் கழகத்தை உடைத்து சில வணிக நிறுவனங்கள் போல ஒரு கட்சியைத் தொடங்கிய திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கலைஞர் மீது பகை மனத்தோடு தகாத நிலையை எடுத்து பெரியார் அண்ணா கொள்கைக்கு மாறானவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைத்தார்.
அதுவரை கொஞ்சுமொழி பேசி கோல நிலை காட்டிய தமிழகம் ஊடகக் காரர்களின் திராவிட இயக்க எதிர்ப்பு காரணமாக மூகாம்பிகையின் பக்தியால் ஊமை நிலை கண்டது, உருமாறிப்போனது. எம்.ஜி.ஆர் கழகத்தில் இருந்த போது சில இயல்புகள் சிறந்தது என்றாலும் சீர்கேடுகள் மிகுதியும் உணர்வுகளிலும் நடப்பிலும் சூழ் கொள்ளத் தொடங்கியது.
எம்.ஜி.ஆரின் உளப்பாங்கில் உள்ள உணர்வு நலிவுகளை உற்று நோக்கி உயர்சாதி ஆணவக் காரர்களும் அவர்களது ஊடகங்களும் அவரை மகானாக சித்தரித்து மக்களை மயங்க வைத்து அவர் அருகில் இந்த ஜெயலலிதாவை அமர வைத்தார்கள். எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு அருகிலிருந்து பாடுபட்ட ஆர்.எம். வீரப்பன் போன்ற விசுவாசிகளை புறந்தள்ளிவிட்டு, இந்த ஆரனங்கை காட்சிப் பொருளாக்கி அவரின் நிழலாக்கினார்கள்.
இதையெல்லாம் அறியாது அ.தி.மு.க வில் அங்கம் வகித்த தமிழர்கள் எப்போதும் போலவே ஏமாளியாகவே இழிவடைந்தார்கள். இவர்களைப் போலவே பெரும்பாலன தமிழர்கள் சிந்தனையில் சீரின்றி, அடிக்கடி, ஆடும் இந்தப் பாவையிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள்.
ஆய்ந்த நல்உணர்வோடு ஆட்சியை அமைக்க வேண்டிய மக்கள் பத்திரிக்கைகள் காட்டிய வானவெடி வண்ணக் காட்சிகளில் மயங்கி, அவர்கள் ஊதிப் பெரிதாக்கிய பொய்களை நம்பி, அவர்கள் போடுகின்ற புகைமூட்டம் கண்ணை மறைக்க அடிக்கடி தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள் தமிழர்கள்.
இங்குள்ள எல்லாத் துறைகளிலும் அதிகார நிலைகள், பசப்பும் பாசாங்கும் காட்டுகின்ற காட்சி மயக்கத்தில் இங்குள்ள தமிழர்கள் அறிவும் பார்வையும் கூட அலங்கோலம் என்றாகி விடுகிறது.
இலட்சியவாதிகளாக மிளிர்ந்த திராவிட சிந்தனையாளர்கள் கடும் உழைப்பாளிகள் கூட ஊனஉணர்வுகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். விளைவு தமிழர்களின் தமிழகத்தின் தமிழ்மொழியின் நிலை தாழ்வுற்றுத் தள்ளாடி வருகிறது. இந்த சூழலில் தன்னந்தனியராக, சர்வ வல்லமை பொருந்திய தமிழ் எதிர்ப்பு தத்துவவாதிகளோடு தன்னலக் காரர்களோடு முதுகில் குத்தும் மோசக் காரர்களோடு எத்தனை வகை அரசியல் திறம் உண்டோ எத்தனை வகை அணுகுமுறை உண்டோ அத்தனையும் கைக்கொண்டு போராடி வருகிரார் கலைஞர்.
இவருக்குப் பின் அணிவகுக்க வேண்டிய அறிவாளர்கள், ஆற்றலாளர்கள், சோம்பிச் சோர்ந்து சுருண்டு விடுகிறார்கள். உறங்கியவர்களை எழுப்பி விட்டு இயங்க வைக்கும் நிலைகொண்ட தமிழர்களும் சொளுக்கென்று படுத்து விடுகிறார்கள். கலைஞரால் ஏற்றம் பெற்றோரும் எழில் நிலை அடைந்தோரும் இதயத்தில் ஏற்றம் பெற்றோம், எழில்நிலை அடைந்தோம் என்று எண்ணுபவர்கூட அவ்வப்போது உண்மையற்றவர்கள் நடத்துகின்ற ஊடகங்களின் உணர்வில் மயங்கி, இந்த இழிதகை போக்குக்கு இரக்கம் காட்டி இளகி விடுகிறார்கள். விளைவு தொடர்ந்து தமிழகம் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகி நலிந்து வரும் நிலையே இங்கே நிலவுகிறது.

இன்றைய தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு அருகில் வருகிறது. உண்மையை உணர்ந்து உழைப்பவர்களை தமிழர்கள் வாழ்வின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை ஓயாது உழைப்பவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். அப்படி அமர வைத்தால், கல்வி நிலை வளர்ச்சி, தொழிற்துறை அணுகுமுறை, அதன் விளைவு, வேலை வாய்ப்பு, சமூக அமைதி அதனால் ஏற்பட்ட வருவாய் பெருக்கம், வாழ்க்கையின் வளர்ச்சி, ஒவ்வொரு வீட்டிலும் அழகிய பொருள் மட்டுமல்ல வியத்தகு விஞ்ஞானப் பொருள்கள் மேலும் மேலும் நிறைந்து உற்சாகத்தில் ஊஞ்சலாடி மகிழ்வு நிலை காணலாம்.