Friday 15 July 2016

பொருள் புரிந்தால் தமிழன் புகழ் பெறுவான்
தமிழன் தன் தாழ்ந்த நிலையை அகற்ற, தன்மானத்தை நிலைநாட்ட, சிந்திக்காமல் 1000 ஆண்டுகளாக அடிமை உணர்வில் ஆழ்ந்திருப்பதை மாற்ற புரட்சிக் கருத்துக்களால் புதுமை கூட்ட, அறியாமை இருட்டறையில் இருந்து, வெளிச்சத்திற்கு அழைத்து வர எண்ணற்ற படைப்புகளை பார்புகழும் பா வடிவங்களாக, இந்த மண்ணில் விதைத்து பரப்பியவர் புரட்டிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
தன்மானத் தமிழன் என்று சொல்லி தமிழின் செழுமைகளை அறிந்தவன் நான் என்று மார்தட்டுவோர் அவன் தந்த இந்தப் பாடலை பொருள் புரிந்து புதுவேகத்துடன் மக்களிடம் கொண்டு சென்று, துணிச்சலூட்டி, போராட வைத்தால், தமிழனின் மூளையில் ஆழ்ந்திருக்கின்ற மூடநம்பிக்கை உதயசூரியனைக் கண்ட பனிபோல் உருகி உரிமை, உணர்வு தழைத்து உண்மைகள் புரியும்.
சிரம் அறுத்தல் வேந்தருக்கு
பொழுது போக்கும் வாடிக்கை
நமக்கோ அது உயிரின் வாதை
உனதன்னை தமிழ்
உலகாள வேண்டும்
உயிர்வாதை அடைகிறார்
உதவாதினி தாமதம்
உடன் எழுத தமிழா
கலையே வளர்
தொழில் மேவிடு
கவிதை புனை தமிழா
நிலமேயுழு நவதானிய
நிறையூதியம் பெறுவாய்
கடலே நிகர் படை சேர்கடு
விடநேர் கருவிகள் சேர்
களிபேருவகை அடைவார்
நிதிநூல்விளை உயிர்நூல் உரை
நிசநூல் மிக வரைவாய்
அலை மா கடல்
நிலம் வானிலும்
அணிமாளிகை ரதமே
அவையேறிடும் விதமேயென
அதிகாரம் நிறுவுவாய்
கொலைவாளினை எடடா
கொடியோன் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா.
சமமே புரி அறமே தலை
ஜனநாயகம் எனவே முரசறைவாய்
இலையே  உணவிலையே
கதியிலையே எனும் எளிமை
இனி இலையேயென
முரசறைவாய் முரசறைவாய்
தி.மு.கவின் தொடக்க நாட்களிலிருந்து தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை தி.மு.க பேச்சாளர்கள் தங்களது பேச்சின் தொடக்கத்திலும் முடிவிலும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களை முழங்கியே பேச்சை நிறைவு செய்வார்கள். இன்று இந்த நிலை இல்லையே என்று இதயம் வருந்துகிறது.
ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் பாவேந்தர் பாடல் ஒப்புவித்தல் போட்டி என்று பல ஆண்டுகளாக மாணவ, மாணவிகளை ஈடுபட வைத்து பாராட்டு பரிசுகளையும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது இன்றளவும் நடந்து வருகிறது. இன்று வரை பல இலட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்திருப்பார்கள். அதன் விளைவு இன்று எந்தளவிற்கு உருவாகியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஈடற்ற விளைவுகளையும் வெற்றிகளையும் உருவாக்கும் என்று என் உள்ளம் உறுதியாக நம்புகிறது.

Wednesday 13 July 2016

ஆவணங்களை அழிய விடுவது சரியா? அழிப்பது அறம் மீறும் ஆணவமல்லவா?

ஆவணங்களை அழிய விடுவது சரியா?
அழிப்பது அறம் மீறும் ஆணவமல்லவா?
இந்தியத் துணைக் கண்ட வரலாறு பற்றிய செய்திகளை பல காலம் பல்வேறு ஆய்வாளர்கள் அறிவார்ந்த பெருமக்கள் அவ்வப்போது கிடைக்கின்ற சான்றை முன் வைத்து தங்கள் படைப்புகளில் தருகின்ற வகையில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
தென்மொழி (தமிழ்) வடமொழி (சமஸ்கிருதம்) இவைகளுக்கு முன் வழங்கிய மொழிகள். இவைகளிலிருந்து பிரிந்து, திரிந்து, சிதைந்த மொழிகளில் கிடைக்கின்ற செய்திகளை முன்வைத்து ஆய்ந்து தங்கள் வெளிப்பாட்டை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்னும் பலர் இதில் ஆர்வம் கொண்டு தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
ஆயினும் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமையோ உடன்பாடோ இருப்பதாக அறிந்து ஓர் ஆராய்ச்சி அரங்காக ஆகி விடக் கூடும்.
இவர்களுக்கு முன்னோடியாகவும் மற்றும் பல உலகப் பயணிகள் குறிப்புகளில் இந்தப் பகுதியின் செய்திகள் அடங்கியிருக்கின்றன.
உலகில் பல உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வழங்கிய அய்ரோப்பியர்களின் மனச் செழுமை இந்தியத் துணைக் கண்டத்திலும் ஈடுபாடு காட்டியது.
ஆங்கில படைத்தளபதி, நில அளவையாளர் காலின் மெக்கன்சியின் பெருமனமும் பேருழைப்பும் உன்னதமானது. அய்ரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து கிறித்துவத்தைப் பரப்ப வந்த மதகுருமார்கள், ஆங்கிலேய அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இங்கு மறைக்கப்பட்ட மறந்து மறைந்து கிடந்த பல்வேறு உண்மைகளை உலகிற்கு ஒளிவெள்ளத்தில் காட்டி இங்குள்ள பகுத்தறிவாளர்கள் உண்மை ஆய்வாளர்களின் மனங்களை மகிழ்வித்தார்கள்.
சிந்து வெளிச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதையெல்லாம் நூல் ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி கடல் ஆய்வுகள் வழியாக எண்ணற்ற உண்மைகளை இங்குள்ள மண்சார்ந்த மக்களுக்கு எடுத்துக் காட்டி இனிமை சேர்த்தார்கள்.
இங்குள்ள ஆலயங்கள், கோவில்கள் பல்வேறு மலைக் குகைக் பாறைகளில் பதிவு செய்யப்பட்ட, மண்ணுக்குள் கிடந்த பல்வேறு கல்வெட்டுகளில் அறுபத்தைந்து விழுக்காடு தமிழ்மொழியிலும், முப்பத்தைய்ந்து விழுக்காடு வடமொழியிலும் பதிவாகியிருக்கிறது.
இந்தியா உருவாக எண்ணற்றவற்றை இழந்த தமிழர்கள் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் கல்வெட்டுச் செய்திகளை இந்திய அரசாங்கம் பொருள் அறிந்து அச்சாக்கி வைக்கும் முயற்சியில் முழுமையும் ஈடுபாடு காட்டவில்லை.
தங்களை அடிமைப் படுத்திய ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியின் சிறப்புகளை தோண்டி எடுத்து துடைத்து பதிவு செய்ய சிந்துசமவெளி அகழ்வாய்வை நடத்தியது ஆங்கில அரசு. ஆனால் தமிழகத்தையும் இணைத்து விடுதலை பெற்றபின் இந்திய அரசின் பாராமுகம் அல்லது தமிழ் தமிழர்மீது உள்ள வெறுப்புக் காரணமாக கல்வெட்டுகளையே வேறு பல வரலாற்று ஆதாரங்களை இன்று வரை அழியவிட்டுக் கொண்டிருக்கிறது.
பதினெட்டு மேடுகளைக் கொண்ட சிந்துவெளியில் இரண்டே மேடுகளை மட்டுமே தோண்டியதால் வெளிப்பட்ட புதுமையும் பொருளுகளும் உலகையே வியக்க வைத்தது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் பல்கலைக்கழகங்களும் சிந்து வெளிப்பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கமிகு செய்திகளை அள்ளி வழங்கியது. மேல்நாட்டு கிறித்துவ மதகுரு ஈராஸ் போன்றவர்கள் நிறைய நிறைய ஆய்வுச் செய்திகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அரசாங்கங்களோ இந்தியப் பல்கலைக்கழகங்களோ பார்வையிடுவதேயில்லை. அழிந்து வரும் சிந்துவெளிப் பகுதிகளை பாதுகாக்கவும் எந்தவித முயற்சியும் செய்யவில்லை. காரணம் அது தமிழ் தமிழர்கள் சார்ந்தது என்பதுதான்.
உலகத்தின் முதல் உயிர் அல்லது முதல் மனிதன் எங்கு என்று ஆய்வு செய்த மேல்நாட்டு ஆய்வாளர்களும் அறிஞர்களும் ரஷ்ய கீழ்த்திசை ஆராய்ச்சி மையமும் கோண்டுவானா என்னும் இலமூரியப் பகுதியை அகழ்வாராய்வு செய்தால் தெரிந்து விடும் என்றார்கள். ஆனால் இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் எந்த அக்கரையும் இல்லை என்பதுதான் உண்மை. காரணம் என்ன? இலமூரிய என்பது தமிழர் வாழ்ந்த பகுதி என்பதுதான்.
இந்தியா முழுவதும் தமிழகமாக இருந்த நாள் ஒன்று உண்டு. அப்போது கீழ்க் கடலிலும் மேல்க்கடலிலும் ஆற்று முகத்துவாரங்களில் அமைந்திருந்த வணிக நகரங்களான பூம்புகார், அழகன்குளம் (தொண்டி, கொற்கை, குமரித்துறை, வஞ்சி, முசிறி, துவாரகை மற்றும் சில நகரங்களை கடலாய்வு செய்ய வேண்டும் என்ற அக்கறையோ முயற்சியோ இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை. இல்லாதது மட்டுமல்ல. அதில் விருப்பமும் இல்லை. இதில் பூம்புகாரையும், துவாரகையையும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து அருமையான செய்திகளை அள்ளி வழங்கின. இலக்கியத்தில் உள்ள பூம்புகார் போன்ற நகரங்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோலவே இருந்ததாக எடுத்து விளக்கினார்கள்.
உலகில் உள்ள பல இடங்களில் தமிழும் அதுசார்ந்த அடையாளங்களும் வெளிப்பட்டன. குறிப்பாக தமிழர்கள் பயன்படுத்திய வண்ணம் கறுப்பு, சிவப்பு என்பதை உலகில் எல்லாம் இடங்களிலும் காட்சியாகி களிப்படைய வைத்தது.
கடந்த சில நாட்களாக திருப்புவனம் அருகில் கீழடி பள்ளிச் சந்தையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்தப் பொருகள் சங்க இலக்கியங்களில் உள்ளது போலவே இருப்பதாகவும் சிந்து சமவெளிபோல் கட்டிடங்களும்  அதன் நகர அமைப்பும் இருப்பது போலவே ஏன் அதைவிட சிறப்பாக இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் விழிமூடாமல் வியந்தபடி நிற்கிறார்கள். தொல்லியல் துறைக்கு இந்த ஆய்வு பெருமைக்குரிய ஒன்று என்கிறார்கள்.

இங்குமட்டுமல்ல இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆய்வாளர்கள் இடங்களை தேர்ந்தெடுத்து அகழ்ந்து ஆய்ந்தால் வங்கத்துப் பெருமகன் சோதிமையிர்பாசு சொல்வதுபோல் இந்திய முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள்தான். உண்மை தெரிந்து உறுதிப்படுத்தப்படும். இருக்கின்ற தமிழ் சார்ந்த தரவுகள் அடையாளங்கள் அழிக்கின்ற  எண்ணம்கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் செவி சாய்ப்பார்களா? சிந்தையில் கொள்வார்களா, மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்.

நீயா? நானா?

அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ நல்வாழ்த்துக்கள். விதவிதமான வித்தயாசத் தலைப்புகளில் விவாத அரங்குகளில் விளக்கம் தந்து விழிப்புணர்வை உருவாக்கும்  நீயா? நானா? அதிகம் படித்து பட்டங்கள் பெற்றவர்களையும் அது அவசியமில்லை என்று நினைப்பவர்களையும் எதிர் எதிர் இருந்து கருத்துக்களை வெளிப்படுத்த வைத்திருக்கிறது.
ஊர் சுற்றிகள் என்று போட்டு விட்டு அவர்களுக்கு ஆதரவாகத் தானே பலவற்றையும் சொன்னீர்கள். படிப்பைக் குப்பை என்ற அந்த இளைஞரை பாராட்ட முடியாது பொது விவாதங்களில் பண்பட்ட சொற்களை பயன்படுத்துவது தான் அறிவுடமையாகும்.
140 பட்டங்கள் பெற்ற அபூர்வ பார்திபன் கோபியின் கேள்விகளைப் புரிந்து பதில் சொல்லத் திணறிப் போனார். மெத்தப் படித்தவன் பித்தன் என்பது தமிழ்ப் பழமொழி. 140 பட்டங்களைப் பெறுவதற்கு மாதம் ஒன்று என்றால் 12 லி ஆண்டுகள் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒன்று என்றால் முப்பத்து ஏழு ஆண்டுகள் ஆகும். இதில் எதுவும் சாத்தியமில்லை.
இந்தியாவில் பட்டங்கள் பெறுவதற்கு பணம் முக்கிய இடம் வகிக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலர் ஒடிசா பல்கலைக்கழகங்களிலும் கர்நாடகத்திலும் பல எம்.ஏ. பட்டங்களை பணம் கொடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
பட்டங்கள் பெற்றிருந்தாலும் பட்டறிவுதான் பயனுடையதாக இருக்கும். ஒரு மருத்துவரோ, வழக்கறிஞரோ படிப்பை முடித்தவுடன் அனுபவப்பட்ட ஒருவரிடம் முதலில் பயிற்சி எடுப்பது தான் வழக்கமானதாகும்.
சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஓய்வுப் பெற்றவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கு தங்கள் அனுபவங்களை எடுத்துக் காட்டி பயிற்சியளிப்பார்கள்.
படிப்பது தவறல்ல, பட்டங்கள் பெறுவதென்பது அதுவும் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்களை பெற்றதை எத்தனையோ கிறுக்குத்தனங்களுக்கு எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்கின்ற போது இந்த பட்டங்களைக் குவித்தவரையும் பதிவு செய்யலாம்.
டிராவல்ஸ் செய்யும் ஒருவர் தாய்லாந்தில் கண்ட மறைக்கப்பட்ட தமிழ் செல்வங்களைச் சேகரித்து நூலாக வழங்கியதைக் குறிப்பிட்டார். அவரை அது பற்றியச் செய்திகளை இன்னும் சொல்ல வைத்திருக்கலாம். நல்ல நிகழ்வை நல்கிய நீயா? நானா?வை பாராட்டுகிறேன்.

Tuesday 12 July 2016

கண்ணதாசா! எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!

கண்ணதாசா! எண்ணமெல்லாம்
இனிக்கும் நேசா!
பழைய முகவை மாவட்டத்தின் சங்ககால சாகாக் கவிஞன் கணியன் பூங்குன்றன் பிறந்த பூங்குன்றம் எனும் ஊரின் அருகிலிருக்கும் கீழச் செவல்பட்டியில் பிறந்த திரு.முத்தையாதான் தன் பெயரை கண்ணன் எனும் கடவுள் மீது கொண்ட பற்றால் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் பாரதிதாசன் தன் பெயரை மாற்றியதன் வழியில் பலரும் மாற்றி வந்தார்கள்.
வாணிதாசன், கம்பதாசன் போன்று இவரும் கண்ணதாசன் என்று வைத்துக் கொண்டார். ஜுன் 24ல் பிறந்தநாள் காணும் நமது கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
திரைத்துறையில் ஈடுபட்டு சாராதா ஸ்டூடியோவை சென்னையில் நடத்தி ஏ.எல்.எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்து மற்றப் படங்களை வெளியிடுபவராக மிளிர்ந்த திரு. ஏ.எல். சீனிவாசனின் உடன் பிறந்த சகோதரர்தான் அருமைக் கவிஞர் அண்ணன் கண்ணதாசன் அவர்கள்.
கவிஞரை அண்ணன் என்று நான் குறிப்பிடக் காரணம் அண்ணன் தம்பியாக அனைத்துச் செழுமைகளையும் பெற்ற திமுகவின் இணைந்தவர் எனும் உறவுநிலையில்தான்.
மாடர்ன் தியேட்டரில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்ற நாளில், முன்னரே கலைஞரின் நண்பரானார் கவிஞர் அவர்கள். அதிலும் மிக நெருக்கமான நண்பர்களாக இணைந்திருந்தார்கள்.
திராவிட இயக்கச் சிந்தனை நிறைந்த நாட்களில் பக்தியின் சின்னமாக நெற்றியில் பூசிய நீற்றையும் பொட்டையும் அழித்து விட்டு ஆக்கிமிகு சிந்தனையாளராக சீர்மிகு பாவலராக தன்னை மாற்றிக் கொண்டார்.
திராவிட இயக்கப் போராளர்களைப்போல் உலகின் எல்லா அம்சங்களை குறிப்பாக தமிழ் இலக்கண இலக்கியச் செழுமைகளைக் கற்றுத் தேர்ந்து தெளிந்து தன் உள்ளத்தை கலைச் சோலையாகவே கட்டமைத்துக் கொண்டார்.
கவிஞரின் உள்ளம் மழலையின் உள்ளம் போன்றது, உணர்ச்சி மயமானது. முடிந்த வரை உண்மைகளை வெளிப்படையாக உணரக்கூடியது. உதாரணமாக ஒரு முறை கழகத்திற்குள் ஒரு பிரச்சனையில் அவர் சிக்கியபோது அண்ணா அழைத்து கனிவோடு விசாரித்தார். உடனே அவர் எண்ணத்தைத் தானே சொன்னேன், இதில் என்ன தவறு என்று கேட்டார்.
அதற்கு அண்ணா அவர்கள் எண்ணம் என்பது ஏப்பமல்ல வந்தவுடன் வெளியிட, எதையும் இடம் பொருள் அறிந்து ஏவுவதுதான் அறிவுடமை என்றார். ஆயினும் தொடர்ந்து அவரது இயல்பிலே இயங்கினார்.
அவர் பிறந்த இந்த நல்ல நாளில் அதிக இடர்பாடுகள், இடமாற்றங்கள் என்பதைத் தாண்டி அவருடைய இனிமைகளை எண்ணிப் பார்ப்போம்.
அரசியலில் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை என்றாலும் எழுத்துத் துறையில், திரைப்படத்துறையில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்து பிரமிக்க வைத்தார்.
திரை இசைப் பாடல்களை படைப்பதில் யாரும் எட்டமுடியாக இடத்தில் நிலை கொண்டிருந்தார். மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ் வரிசையில் மிகச் சிறந்த பாடல்களை வழங்கி மக்களை மகிழ்வித்தார்.
தி.மு.கவில் விலகிய பின்னர் எந்த அரசியல் கட்சியும் பின்னால் இல்லாமல் நூல்கள் படைப்பதிலும் திரை இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் நீடித்து நிலை கொண்ட புகழை நெடுநாள் வைத்திருந்தார்.
தனி மனிதனுக்கு இந்த நாட்டில் வழங்கப்படும் இலக்கணத்திற்கு உட்பட மறுத்தவர் அவர். பிறருக்கு கேடின்றி எல்லாவகைச் சுவைகளை துய்ப்பது தவறல்ல என்றார். மதுவருந்துவதை வெளிப்படையாகவே ஆதரித்தார். ஒரு நாள் மதுவருந்திக் கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டது. தான் இருந்த இருடத்தில் எதிரில் அமைந்திருந்த மின்துறை அலுவலகத்திற்கே கையில் மதுக் கோப்பையுடன் வந்து.. கத்தினார். மனிதன் மகிழ்விற்காக மது அருந்தும் நேரத்தில் இப்படி மின்தடையை ஏற்படுத்தி நோக வைக்கலாமா என்று உரத்த குரலில் கத்திச் சாடினார்.
பருவம் வந்த இளவயதில் முதல் முதலில் விலைமகளிருடன் ஏற்பட்ட உறவை வசந்த காலம் என்று வர்ணிக்கிறார். தன்னை விட வயது கூடிய மாதுடன் உடல் கலந்து உறவாடியதை இன்பம் என்றார்.
ஒரு தடவை அவர் எழுதியது மனதில் கலைச் சுவையை, காவிய உணர்வை நமது உள்ளத்தில் ஏற்படுத்துக் கொண்டே  இருக்கும்.
ஆம் அவர் கூறுகிறார். நான் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அந்த விடுதிக்கு எதிரில் ஒருவீடு. அதை விடுதியின் ஜன்னல் வெளியில் பார்த்தேன். அந்த வீட்டு மாடியில் ஒரு பெண் மஞ்சள் பூசி குளித்த முகம், மலர் தழுவிய கூந்தல்,  மணச்சாந்தில் பொட்டு வைத்த பிறை நுதல் நெற்றி, நான்தான் பார்த்தேன் அவள் என்னைப் பார்க்கவில்லை. ஆனால், அவளை மறக்க முடியவில்லை. அதற்குப் பிறகு எத்தனையோ இராசகுமாரிகளையும் மந்திரி குமாரிகளையும் மஞ்சத்தில் சந்தித்து இருக்கிறேன் அவர்கள் நினைவில் இல்லை. அது ஆத்மாவின் ராகம், இது சரீரத்தின் தாளம் என்றார் கவிஞர். படித்த பண்டிதர்களுக்குக் கூட விளங்காத இலக்கியங்களை திரை இசைப்பாடல்களில் எல்லாரும் புரிந்து இனிமை பெறும் வகையில் எளிமையாய் வழங்கியவர் இனியவர் கண்ணதாசன் அவர்கள்.
திமுகவில் இருந்த கவிஞர் அவர்கள் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த காலத்தில். அவர் உருவாக்கிய மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் இனிய குரலில் திராவிடப் பொன்னாடே என்ற தமிழர்களின் இதயத்தை கவ்விய பாடலோடு நிறையப் பாடல்களை விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசைமழையில் பொழிந்தார் கவிஞர்.
சிவகெங்கைச் சீமை எனும் உலகில் ஒரு புதுமையை உலகிற்கு வழங்கிய மருது சகோதரர்கள்களின் வாழ்க்கையை படமாக்கி கிழவன் சேதுபதி மற்றும் முக்குலத்தோரின் பெருமைகளை பாருக்குச் சொல்லி பரவசமடைந்தார்.
கொரில்லா எனும் போர்முறையை அதாவது சிறு எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் மறைந்திருந்து வெளிப்பட்டு பெரும் படைகளை நிருமூலப் படுத்தும் முறையை உலகிற்கு முதன் முதலில் வழங்கியவர்கள் மருது சகோதரர்கள்.
என்று முக்குலத்தின் பெருமைகளாக பறைசாற்றினர் கவிஞர்.
தி.மு.கவில் பணியாற்றிய நாட்களில் திராவிட நாட்டின் பெருமைகளை பல பாடல்களில் எடுத்துக் கூறி பரவசமடைந்தார்.
திராவிட பொன்னாடே

அஞ்சாமை திராவிடர் உடமையடா
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
போன்ற பாடல்களைத் தந்த கவிஞர் சிவகங்கைச் சீமை படத்தில் 
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்தது கிடையாது, 
தன்னிகரில்லா மன்னவர் உலகில்
தமிழே நீதிபதி
தரணியிலே இதன் பெருமை காண்பது கிழவன் சேதுபதி.
எக்குலத்தோரும் ஏற்றிப் புகழ்வது
எங்கள் பெருமையடா
முக்குலத்தோர்க்கே உவமை காண்பது
உலகில் அருமையடா

என்றெல்லாம் முக்குலத்தோரின் பெருமைகளை பறை சாற்றினார், நாட்டுக்கோட்டை செட்டியார் மரபில் வந்த கவியரசர்.
இல்லற ஜோதி, சிவகெங்கை சீமை, மதுரை வீரன், நாடோடி மன்னன் போன்ற படங்களில் தமிழர்களின் பெருமை புகழைப் பாடும் உரையாடல்கள் வழங்கினார்.
அவர் எடுத்து இன்றயளவும் தேவைப்படும் படம் கறுப்புப் பணம். அன்றிருந்த கறுப்புப் பணத்தின் அளவு ரூ.2500 கோடி அது இன்று 70 லட்சம் கோடியாக குவிந்திருக்கிறது. கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை கொள்ளையடித்து நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தும் கதைக் கருவைப் படமாக்கினார். அவர் நீதிமன்றத்தில்  வாக்குமூலம் தரும் காட்சியும் கருத்துகளும் அவரது முகஅழகும் என்றும் மறக்க முடியாததாகும். கலைஞரின்,அவன் பித்தனா? கவிஞரின் கறுப்புப் பணம் போன்ற படங்கள் இன்றும் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும்.
பராசக்தியில் நீதிபதியாக நடித்த கவிஞர், சூரியகாந்தியில் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா என்ற பாடலுக்கு வாயசைத்து நடித்தார். அதுபோல் இரத்தத் திலகம் படித்திலும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்புஒரு கோலமயில் என் துணையிருப்புஎனும் பாடலுக்கும் நடித்தார். அந்தப் பாடலிலில்
காவியதாயின் இளையமகன்
காதற்பெண்களின் பெருந்தலைவன்
பாமர சாதியில் தனிமனிதன்
படைப்பதினால் நான் இறைவன்
என்ற வரிகள் அவருடைய தன்னம்பிக்கையின் வெளிப்பாடாய் அமைந்தது மட்டுமல்ல பாடல் கேட்கும் கலைமணம், கவித்துவம் கற்பனைத் திறம் கொண்டோர் உள்ளத்தில் பரவச மகிழ்வை பதிக்கும்.
அண்ணன் கவியரசு கண்ணதாசனைப் பற்றி சிந்தையள்ளும் சிற்றூரிலிருந்து சீனா வரை என்ற நூலில் பதிவு செய்திருக்கிறேன். கண்ணதாசனின் பகுத்தறிவு வெளிப்பாட்டை அவருடைய பாடல்களிலிருந்து விளக்கியிருக்கிறேன்.
எழுத்துத் துறையில் நிறைய ஈடுபாடு கொண்ட கவிஞர் மதங்களில் ஈடுபாடு கொண்டவர் அடிக்கடி கிருஷ்ணா கிருஷ்ணா என்று முனகும் இயல்புள்ளவர். நெற்றியை சுத்தப்படுத்தியும் அவர் கண்ணனின் தாசனாகவே வாழ்ந்தார்.
அர்த்தமுள்ள இந்துமதம் என்று இல்லாத ஒன்றுக்காக எதைஎதையோ இணைத்து புகழ்மாலை சூட்டினார். சமணம், புத்தம், சைவம், வைணவம், லோகாதையம் போன்றக் கருத்துகளோடு இயற்கை நிலைகளையெல்லாம் கூட அர்த்தமுள்ள இந்துமதம் என்று அணியமாக்கினார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் இது உணர்வியல் உறவியல் வழியில் சாத்தியப் பாடானது. கண்ணதாசன் நல்ல மனைவி, நல்ல உறவுகள், நண்பர்கள் என்பதையெல்லாம் இந்து மதத்தின் சாரமென்று புகழ்ந்துரைத்தார்.
வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டதுதான் இயற்கை. அதுபோலத்தான் இந்து மதமும் என்றாரே பார்க்கலாம். நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான் அதுதான் இந்து மதம் என்றார். எல்லாம் இருந்தது, இருக்கும், ஆனால் இந்து மதம்  இருந்ததா இருக்கிறதா இருக்குமா என்று மட்டும் அவர் சொல்லவில்லை.
அடுத்து இந்துமதக் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட கிறித்துவத்துக்காகவும் புகழ் பாட்டை பதிவு செய்தார் கவிஞர். ஏசுகாவியம் என்று எழுதி கிறித்தவர்களை மகிழ வைத்தார். கிறிஸ்துவம் கூறும் கர்த்தர் வாழும் இடத்தை விண்ணரசு என்றார். எல்லா இடங்களிலும் இடம்பிடிக்கும் தண்ணீர்போல தனது உறவுகளை சமன்படுத்திக் கொண்டார். எது எப்படியோ அவரது தமிழறிவும், ஆளுமையும் உள்ளத்தின் சுதந்திர உணர்வும் என்றென்றும் இதயத்தை மகிழ வைக்கிறது.
என்னைப் போன்ற திராவிட இயக்க தமிழ் உணர்வு உள்ளவர்களும் கீழ்க்காணும் செய்திகள் சிந்தையெல்லலாம் சிலிர்த்து செம்மாந்து நடைபோட வைக்கும்.
கவிஞர் தி.மு.கவில் இருந்த காலம் அது. அன்றைய நாட்களில் காங்கிரசில், இராஜாஜியின் ஆலோசனைப்படி திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்காக அதன் தமிழ் சார்ந்த உணர்வுகளை தகர்பதற்காக காங்கிரசுக்குள்ளேயே தமிழரசுக் கழகம் என்று ஓர் அமைப்பை உருவாக்கி திரு.ம.பொ.சி. அவர்கள் தன் தரமற்ற ஆதரவாளர்களோடு திராவிட இயக்கத்தை குறிப்பாக தி.மு.கவை தரக்குறைவாக தாக்கி வந்தனர். அவர் பின்னால் எழுத்தாளர் நடிகர்கள் திரைப்பட இயக்குநர்கள் திரு. ஏ.பி.நாகராஜன், திரு.ஜெயகாந்தன், திரு. தமிழருவி மணியன் மற்றும் பலர் அணிவகுத்தனர்.
அவரைச் சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியோடு திராவிட எதிர்ப்பாளர்கள் போற்றிப் புகழ் மாலை சூடி மகிழ்ந்தனர். பல இடங்களில் கழகத் தோழர்கள் ம.பொ.சி.க்கு தங்கள் எதிப்புகளைப் பதிவு செய்தார்கள்.
ஒரு மேடையில் ஒரு தோழர் ம.பொ.சி. அவர்களுக்கு ஒரு மாலையை அணிவிக்கு முன் ஒலிபெருக்கியில் அசிங்கத்திற்கு பொட்டு வைப்பது போல் ம.பொ.சிக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன் என்று கூறி மாலையைப் போட்டுவிட்டு இறங்கிச் சென்று விட்டார். திராவிட இயக்கத்தை, பெரியார், அண்ணாவை தரமற்று சாடுவோரை பாதக் குறடெடுத்து பன்னூறு அடி அடிப்பேன் என்றார் கவிஞர்.
அந்தக் கால கட்டத்தில் தான் நமது கவிஞர் அண்ணன் கண்ணதாசன் ம.பொ.சிக்கு ஒரு அறைகூவல் விடுத்தார். தங்களை சிலம்புச் செல்வர் என்று நாடே போற்றுகிறது. அது உண்மையென்றால் சிலப்பதிகாரத்தை அதில் இருக்கும் சொற்கள் இல்லாமல் ஆனால் அதே பொருளை அப்படியே தரும் மற்றொரு சிலப்பதிகாரத்தை படைக்க முடியுமா, தங்களால் முடிந்தால் எழுதுவதையே நான் விட்டு விடுகிறேன். நான் எழுதினேன் என்றால் தாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலகிவிடுவீர்களா? என்றார். இன்றுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
கண்ணதாசனைப் பற்றி அறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் அளித்த மதிப்புரை கண்ணதாசன் புகழோடு இணைந்தே இருக்கும். ஆம், அண்ணா அவர்கள் கவிஞர் வேழவேந்தனின் வண்ணத்தோகை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்ணதாசனை அண்ணாவை விமர்சித்த காலத்தில் தம்பி கண்ணதாசனை போற்றவில்லை என்றால் நான் தமிழை அறியாதவனாவேன் என்றார். அண்ணா மறைந்தபோது கவிஞர் கையறுநிலையிலும் நாம் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? நாமும் ஒரு நாள் போகப்போகிறோம் என்று ஆறுதல் கொள்ளத்தான் முடியும்.
சேலத்தில் கலைஞர் தலைமையில் ஒரு கவியரங்கம். நமது கவியரசுவும் பாட வந்திருந்தார். காதலி என்ற தலைப்பில் பாடவந்த கவிஞரை கலைஞர் பாட அழைக்கின்ற போது தோகை மயிலே, தோளில் தொத்தும் கிளியே கண்ணதாசா எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா, காதலியாய் அழகு முகம் காட்டி கவிபாட  வாஎன்றார்.

பிறப்பவர்கள் எல்லோருமே இறந்துவிடுகிறார்கள். கவியரசு போன்றவர்கள் என்றும் புகழோடு இணைந்து புவிமீது வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

Thursday 7 July 2016

மறக்க முடியாத நடிகர் திலகம்

மறக்க முடியாத நடிகர் திலகம்
1973ம் ஆண்டு மத்தியில் பம்பாய் (மும்பை) சண்முகானந்தா சபா கேண்டீனில் வேலை செய்த கொண்டிருந்தபோது பட்டிக்காடா? பட்டணமா? என்ற படத்திற்காக பிலிம்பேர் வழங்கும் பரிசைப் பெறுவதற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் நடிகை செல்வி ஜெயலலிதா ஜெயராமன் அவர்களும் வருவதாக இருந்தது.
கேண்டீன் உரிமையாளரும் பணியாளர்களும் எங்கள் இராசபாளையத்தைச் சேர்ந்தவர்கள். சிவாஜி வந்தபோது நாங்கள் அனைவரும் வரவேற்க வாசலில் நின்றிருந்தோம்.
காரிலிருந்து அவர் இறங்கியவுடன் ஏற்கனவே நான் எழுதி வைத்திருந்த கடிதக் கவரை அவரிடம் தந்தேன், அதை அவர் பெற்றுக் கொண்டார். கடிதத்தில் சில செய்திகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன், அதை கீழே தருகிறேன்.
திரைப்படங்களில் நடிகர் நடிகைகள் காதல் காட்சிகள் ரொமாண்டிங் சீன்களில், கன்னத்தோடு கன்னத்தை ஒட்டுகிறார்கள், காதைக் கடிக்கிறார்கள், கட்டிப்பிடித்து இறுக அணைக்கிறார்கள், இடுப்பை கட்டிப் பிடிக்கிறார்கள், கிள்ளி விளையாடுகிறார்கள், முகத்தை வருடி மகிழ்கிறார்கள். நடிகையின் மார்பகத்தின் மீது முகத்தை வைத்து படுக்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் உருண்டு புரளுகிறார்கள். இதையெல்லாம்விட காலோடு கால் பின்னுகிறார்கள். இதையெல்லாம் நடிப்பு என்கிறார்கள்.
இதெல்லாம் ஆண் பெண் உடல் சார்ந்த உறவுகளாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் நடிப்பு என்றால் உண்மை என்பது என்ன? நடிகர்களும் நடிகைகளும் நடிப்புத் துறையில் இல்லாதவர்களை மணக்க நேர்ந்தால் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும், இயங்கும். அவருக்குப் பிறக்கின்ற பிள்ளைகள் இந்தக் காட்சியைக் கண்டால் என்ன நினைப்பார்கள், குலம் மகள் நாணம் பண்பாட்டு அறங்கள் எப்படி எண்ணப்படும்? விளக்குங்கள் என்று கேட்டு எழுதியிருந்தேன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து காரில் ஏறும்போது வழியனுப்பக் காத்திருந்தபோது என்னை அருகில் அழைத்தார். காருக்குள் அமர்ந்து கொண்டு தம்பி நாங்கள் மக்களை மகிழ்விப்பர்கள் அதைத்தவிர வேறெதையும் நினைக்காதவர்கள். எங்களை எப்படி விமர்சனம் செய்தாலும் அது உண்மையென்றாலும் இல்லையென்றாலும் அதை தாங்கக் கூடியவர்கள், தாங்குவோம், தாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இதை நினைக்கின்றபோது உண்மையில் உள்ளம் மகிழ்கிறது. உண்மையை உள்ளபடியே ஒத்துக் கொண்ட அவர் உள்ளத்தை நினைக்கின்ற போதெல்லாம் நெஞ்சம் இனிக்கின்றது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி நடிகர் நடிகைகள் நாட்டின் அறம் போதிக்கிறார்கள், ஆட்சி நடத்துகிறார்கள், மக்களின் வாழ்வுச் சிறப்புகளுக்கு வழி கூறுகிறார்கள். இன்னும் சொல்வதென்றால் சர்வ ரோக நிவாரணி என்று நெஞ்சை நிமிர்த்துகிறார்கள். திரையுலகை அறிந்தவர்கள் அந்தந்த துறையின் நிறை குறைகளை அறிந்து மக்கள் தரும் ஆதரவும் மதிப்பும் சரியா என விளக்குவது நாட்டின் ஒழுக்க கொள்கையை பின்பற்றுவோரின் கடமையாகும், கடமையாக வேண்டும்.