Saturday 11 April 2015

இசை முரசை இழந்தோம்

இசை வடிவில் இயக்கக் கொள்கைகளை முரசறைந்து எல்லாத் தரப்பு மக்களுக்கும் எழுச்சியூட்டிய இசை முரசு நாகூர் ஹனீபா இயற்கை எய்தி விட்டார் எனும் செய்தி இதயத்தில் இடியென இறங்கியது.
இசுலாமிய பெருங்குடும்பத்தில் பிறந்த ஹனீபா, அண்ணாவின் மீது கொண்ட அதீத அன்பால் திராவிட இயக்கச் சிந்தனைகளை இசை வடிவில் மக்களிடம் போதித்தார்.
தனித்துவம் வாய்ந்த தனது குரலால் அவர் பாடிய பாடல்கள் செவிடனையும் கூட சிலிர்க்க வைத்தது, சிந்திக்க வைத்தது. அவர் உச்சரிக்கும் சொற்கள், உளி பட்டு சிலையானது போல அவர் நாவில் பட்டு நலன் கூட்டியது. தொண்ணூற்றாறு வயதில் இயற்கை எய்திய அந்த இனியவரின் குரல் இன்றும் புதிதாய் கேட்கும் இனிக்கும் குரலாகவே செவிகளில் தேன் பாய்ச்சுகிறது.
இசுலாம் ஒரு மதம் அல்ல, வாழ்க்கைக்கான மார்க்கம் என்று சொன்ன அண்ணாவையும் பெரியாரையும் ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ஈடுபாடு காட்டி உழைத்தார். நாடெங்கும் தன் இசைத் திறனைக் காட்டி கழகக் கொள்கைகளை விதைத்தார். கிளைக் கழகச் செயலாளராக பணியாற்றினார்.
அவரால் கவரப்பட்ட இளைஞர்கள் ஏராளம் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்லி விளக்குவது கடமையெனக் கருதுகிறேன். ஓராண்டுக்குமுன் மறைந்துவிட்ட தி.மு.க. பிரமுகர், தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக சொற்பொழிவாளர், திருப்பத்தூர் அ.மகாதேவன் அவர்களும் ஒருவர்.
1965லிருந்து அவரை நான் அறிவேன் என்றாலும், நேரில் பார்த்தோ பேசியதோ இல்லை, 2012 செப்டம்பரில் நான் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். உடல் நலம் இல்லாததால் வர இயலவில்லை என்று தொலைபேசியில் வாழ்த்தினார்.
அவருக்கு எனது நூல்கள் அனைத்தையும் அனுப்பி வைத்தேன். அதில் நான் பிறந்த ஊரைப்பற்றி எழுதிய பகுதியில் அக்ரகாரத்தை பார்ப்பன சேரி குறிப்பிட்டிருந்ததைப் பாராட்டி பார்ப்பனக் குலத்தில் பிறந்த மகாதேவன் தமிழ் கொள்கையைச் சார்ந்து வாழ்த்தினார்.
அன்றிலிருந்து அவர் மறைவதற்கு 3 நாட்கள் முன்பு வரை ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு தடவை குறைந்தது 3-4 மணி நேர அளவுக்கு பேசிக்கொண்டு இருந்தார். நிறைய நிறைய பேசினார். வெளியில் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் சொன்னார்.
அவர் மறைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் அவரைக் காண்பதற்காக அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது கழகம், கழகத்தோழர் பற்றிய நூல் ஒன்றைக் காட்டி அதை வெளியிட இயலாத நிலையை விளக்கி தன் வேதனையையும் வெளிப்படுத்தினார். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த (நெல்லை) கடையநல்லூர் தான் அவருடைய பூர்வீக ஊராகும்.
நேரில் பேசியபோது, பிராமணரான நீங்கள், எப்படி திராவிட இயக்கத்தில் இணைந்தீர்கள் என்று கேட்டேன். அப்போது சொன்னார், கொட்டாம்பட்டியில், அவருடைய தந்தையுடன் வாழ்ந்த நாளில் அங்குள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மேலூரில் நாகூர் ஹனிபாவின் நிகழ்ச்சி நடந்ததை காணக் கேட்க பள்ளித் தோழர்களுடன் சேர்ந்து சைக்கிளில் போனேன். அவர் பாடல்களைக் கேட்ட நாளிலேயே நண்பர்களுடன் இந்தக் கட்சியில் ஈடுபாடு வந்துவிட்டது. பின்னர் அந்த நண்பருடன் இணைந்து நாகூர் ஹனீபாவின் நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவெடுத்து அவருடைய ஒப்புதலையும் பெற்றோம். அப்போது அவருக்கு வழிச்செலவு தொகை அய்ந்து, மற்ற செலவுகளுக்கு தொகை பத்து ஆகும்.
அந்த ரூபாயைச் சேர்க்க பல முயற்சிகள் எடுத்த நிலையில் கூட ரூபாய் பன்னிரண்டுதான் சேர்க்க முடிந்தது. நிகழ்ச்சி முடிந்தபோது அவரிடம் சென்று எங்கள் நிலையை விளக்கினோம். அவரும் பெருந்தன்மையோடு நாகப்பட்டிணம் செல்ல ஒன்னரை ரூபாய் போதும் என்று கூறி பெற்றுக் கொண்டு எங்கள் சங்கடத்தைச்த் தீர்த்தார் என்று கூறினார். அதன் கருப்பு, சிகப்புத் துண்டு இல்லாமல் நான் எந்த நாளும் தோற்றியதில்லை என்று கூற இன்னொரு சிறப்பையும் என்னிடம் சொன்னார்.
இன்று மூன்று மாவட்டமாகப் பிரிந்து கிடக்கின்ற பகுதிகள் முன்னாள் முகவை மாவட்டமாக (இராமநாதபுரம்) இருந்த நாளில் மறைந்த சிறுகதை மன்னன் தென்னரசு ஊரூராகச் சென்று கழக உணர்வுள்ளவர்களை தேடிப்பிடித்து கட்சி வளர்த்தார். அப்போது திரு மகாதேவன் அவர்கள் கண்ணதாசனின் கீழச்செவல் பட்டியில் ஓர் உணவகத்தில் கறுப்பு சிகப்பு துண்டோடு பணியாற்றுவது கேட்டு அவரைத் தேடிச் சென்று அவர் பணியாற்றிய உணவக வாசலில் நின்று விசாரித்தார்.
அப்போது அறிமுகமான மகாதேவன் இறுதிமூச்சு உள்ளவரையில் இயக்கப் பணியாற்றினார். அந்த மகாதேவன் இயக்கத்தில் சேர காரணமாயிருந்த நாகூர் ஹனிபா மறைந்து விட்டார். திராவிட நாடு கிடைத்தால் அதன் நாட்டுவணக்கப் பாடலை (தேசிய கீதம்) அனீபாதான் பாடுவார் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அவர் பாடிய அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா, வாழ்க திராவிடநாடு, ஓடிவருகிறார் உதயசூரியன், கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்ற பாட்டெலெல்லாம் இன்றும் காற்றில் கலந்து காதில் நுழைகின்ற போது இனிய நினைவுகளும் உணர்வுகளும் இதயத்தில் நிறைந்து இன்பமளிக்கிறது.

சாதித்தது என்ன?

சாதித்தது என்ன?
சிறுகதை உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். ஊடகங்களாலும் ஊடக வீதிகளில் உலவியவர்களாலும் உயர்த்தப்பட்டவர்.
வாசிப்போரின் மனதை மகிழ்விக்கும் வகையில் சிறுகதைகளைப் படைத்தவர் அவர். பொதுவுடமை உணர்வுகளில் ஊறிப்போனவர் என்று பேசப்பட்டாலும், காங்கிரசில் இணைந்து இந்திய தேசியம் என்று இல்லாத ஒன்றை இதயத்தில் பதிவு செய்து கொண்டவர்.
இந்தத் துணைக்கண்டத்து காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கூட திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவாகவே சித்தரித்தார்கள். அதில் ஜெயகாந்தனுக்கு முதலிடம் தர வேண்டும்.
அண்ணாவுக்கு இலக்கியம் தெரியாது, அவர் படைப்புகள் இலக்கியத் தரம் வாய்ந்தது அல்ல என்றது மட்டுமல்ல மிக இழிவான சொற்களாலும் அர்ச்சனை செய்தார். அவருடைய எழுத்துக்கள் அக்ரகார வாசிகளையும் அவர்களை ஒட்டிய மனிதர்களையும் மிகவும் கவர்ந்தது.
எனினும், தமிழ் என்ற உணர்வோடு கலைஞர் அவர்கள் மிகப் பெரிய மரியாதையை வழங்கினார். பொருள் உதவியும் செய்தார் எனவும் நினைவு.
அவருடைய சிறுகதைகள் பிரளயம், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள், சங்கர மடம் என்றெல்லாம் படித்திருந்தாலும் தேவன் வருவாரா என்னும் சிறுகதை என்னை ஈர்த்தது உண்டு.
தி.மு.கவின் மீதம், தி.மு.க வின் தமிழ் மீதும் வெறுப்பு கொண்ட ஜெயகாந்தன் அவர்கள் பின்னர் தி.மு.க. அறக்கட்டளை வழங்கிய பாராட்டு, மரியாதை, விருதைப் பெற்றுக் கொண்டார்.
அண்ணாவும், அவரின் தமிழ் நடையும் அவரின் இலக்கியமும், எழுத்தில், பேச்சில், கவிதை நடையும் இந்த மண்ணில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. மாணவர்களை மேம்படுத்தியது. ஒரு மொழிப் புரட்சியை உருவாக்கியது. என்றும் காணாத வளத்தை, வாழ்வை தமிழர்களுக்கு வழங்கிய ஒரு ஆட்சியை உருவாக்கிக் காட்டியது.

ஜெயகாந்தனின் எழுத்தும் அவரது சிறுகதைகளும் ஏற்படுத்தியது என்ன? என்ற வினா சிந்திப்போர் சிந்தையில் தோன்றுவது இயல்பானதானே.