Tuesday 27 October 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்
இரண்டு தலைமுறைப் பெண்தான் இலக்கியம் தொடர்பான திரைப்பாடல்களின் மீது கொண்ட ரசனை பற்றிய நிகழ்வில் மனம் நீந்தி மகிழ்கிறது.
முந்தைய தலைமுறைப் பெண்களின் வெளிப்பாடுகள் பாராட்டத் தக்கதாக வேண்டும் இருப்பினும் இன்னும் நினைவுகளை தித்திக்கும் பாடல்களை நிறைய நிறைய சொல்லியிருக்கலாம்.
ஜி.இராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, வேதா, கே.வி.மகாதேவன், டி.ஜி. லிங்கப்பா, மஞ்சுபாப்பா, சுதன்சமை குமார், ஆதிநாராயணராவ், இராமாராவ், .. இராசாசி, இராமசந்திரர் போன்ற இசை வல்லுனர்களின் இசைக்கும் பாடல்களை பாடிக் கூடக் காட்டியிருக்கலாம்.
இலக்கியம், கலையும், இனிமையும் பொருட் செழுமையும் கொண்ட தமிழ்மகள் பரிசு பெற்ற பெருமாட்டி பாராட்டுதலுக்குரியவர், மொத்தப் பரிசையும் இசைவடிவான அந்த இனியவருக்கே வழங்கிய தாங்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள். கடவுள் கோட்பாட்டில் டாக்டர்ஸ் - டாக்டர்ஸ் எனும் பயனுடைய நிகழ்வொன்றைத் தந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி.
நிகழ்ச்சி தொடங்கிய முக்கால்மணி நேரத்தில் இருபகுதி மருத்துவர்களும் வழங்கிய செய்திகளை உற்று நோக்கினால் தாங்கள் முன்னர் நடத்திய கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் உற்றவர்கள் எனும் நிகழ்வே நினைவுக்கு வருகிறது.
அதில் கடவுள் கோட்பாட்டைப் பற்றி அய்ன்ஸ்டீன் கருத்து எதுவும் முன்வைக்கவில்லை என்று இந்து அரவிந்தன் சொன்னதை திரு. டாக்டர் மோகனும், அபிலாசும் மருத்தார்கள். அதில் நானும் சிலவற்றைச் சொல்லியிருந்தேன். பின் தங்களுக்கு கடிதம் ஒன்றையும் வரைந்திருந்தேன்.
இந்த பரிணாமம் என்பதே உண்மையாகும். படைப்பு என்பது முழுமை ஒன்றை சொல்வதாகும். படிநிலையன்றி (பரிணாமம்) இயற்கையில் ஏதும் கிடையாது. முழுமை என்பதும் முற்றானது என்பதும் கூட இயற்கையில் எங்கும் இல்லாதது.
கடவுள் கோட்பாட்டைச் சொன்னவர்கள் கற்பனைச் சிறகு கொண்டு பறந்தவர்கள். கனவுகள் உண்மையென்று நம்பியவர்கள். அந்தக் கனவுகளைப் பற்றிய உண்மையறியாமல் கண்மூடிக் கிடந்தவர்கள். எண்ணத்தில் தோன்றுவது ஏன் என்ற ஆய்வு நிலையில் அருகில் கூட நிற்காதவர்கள்.
மேற்கு உலகிலும் கிழக்கு உலகிலும் வெகு நாட்களுக்கு முன்னரே இந்தச் சிந்தனையில் ஈடுபாடு கொண்டோர் விவாதித்து வந்திருக்கிறார்கள். தொய்வற்றுத் தொடர்ந்திருக்கிறார்கள். அய்ரோப்பாவில் எண்ண முதல்வாதிகளும், பொருள் முதல்வாதிகளும் நீண்ட போர் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் இங்கே நடக்கும் உலகில் நீண்ட நாள் போராட்டமான ஆரிய-திராவிடப் போர் என்பது கூட அது தொடர்பானதுதான்.
அறிவில் ஆய்வில் முடிவு தெரியாதவை கடவுள் என்கிறார் ஒரு மருத்துவர். இது இங்குள்ள சாதரண, சாமான்ய, சராசரி மனிதர்களுக்குச் சரிதான். அறிவு, ஆய்வுப் புலம் தந்த மருத்துவம் பயின்ற இவர்களுக்கு இது தகுமா?
எதிலும் முழுமையில்லாத நிலைக்காக இனிய வள்ளுவன் ஒரு குறளைத் தந்தான்.
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் செயிளை மாட்டு.
என்று எழுதி வைத்தான். ஒன்றை அறிகின்ற போது மற்றொன்று தொற்றி நிற்கும் தொடர்ந்து நடந்து செல்லும் இது தான் உண்மையாகும்.
தமிழர்கள் கடிதம் எழுதும்போது ஒரு செய்தியை சொல்லி முடித்ததும் நிற்க. என்று எழுதுவார்கள். அது நில், கவனி, செல் எனும் போக்குவரத்து விதியோடு செய்திகளை நோக்கச் சொல்லும் முறையாகும்.
டாக்டர் கோவூர் அவர்கள், ஆய்வுகளை உற்று நோக்கினால் ஒளிவிடும் உண்மைப் பொருள் விளங்கும். எண்ணம் உண்மையென்று எண்ணுபவர்கள் கற்பனைகளை முழுதெனக் கருதுவார்கள். கனவுகள் தெய்வீகம் என்று கண்மூடிப் பின்பற்றுபவர்களிடம் என்ன சொன்னாலும் எடுத்துக் காட்டுகள் எண்ணற்றவற்றை வெளிச்சமிட்டு வெளிப்படுத்தினாலும் ஏன் அவர்களுக்கே சரியென்று தோன்றினாலும் கூட கேட்டுக் கொள்ள மாட்டார்கள். தங்கள் நிலையிலிருந்து இடமாற மாட்டாரகள். இதற்குக் காரணம் மூளையின் நரம்புகளில் தோன்றிய நலிவுகள்தான். அதை நரம்பு நோய் என்கிறார். இதற்கு நிறைய விளக்கம் கொடுக்கிறார். இதைத்தான் நமது நல்லறிவாளர் வள்ளுவன், தனது வாய்மைக் குறளில் எடுத்து வைத்தான்.
நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன்
சொந்த அறிவே மிகும்.
என்றான். அதாவது, மூளையில் படிந்திருக்கும் கருத்துக்கள்தான் எத்தனை படித்தாலும் எத்தனையோ எடுத்துச் சொன்னாலும் படிந்துபோன தன் அறிவே முன்நிற்கும் என்றான். ஆக, எத்தனை கற்றாலும், காட்சிகளைக் கண்டாலும், படிந்துபோன பண்புச் சிறப்போ, பாழ்நிலைகளோ முன்னிற்கும் என்றான் இனிய குறளாசான்.
தங்கள் எனக்களித்த முதல் நிகழ்ச்சியில் இதை வலியுறுத்திருக்கிறேன். அதற்குப் பாராட்டி பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தீர்கள். தந்தைப் பெரியார் ஒன்றைச் சொல்லிச் சென்றார். கல்வி கற்றால் முட்டாள்தனம் ஒழியுமென்று கருதினேன். ஆனால் கற்றவன் இரட்டை முட்டாளாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் என்று நினைந்தேன். ஆனால் இங்கே அதையும் மூடநம்பிக்கைக்குள் இணைத்து விட்டான்.
கலப்பு மணம் செய்தால் சாதி ஒழியும் என்று பேசினேன். ஆனால் கலப்பு மணம் செய்தவனெல்லாம் தனிச்சாதியாகி விடுகிறான். இந்த நாடு ஒரு வித்தியாசமான நாடு. உலகில் எங்குமில்லாத பிறவியில் பேதம் பார்க்கும் அதிலும் மேல், கீழ் என்று மனிதர்களை இழிவுபடுத்தும் முறை இங்கேதான் இருக்கிறது. அது ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கிறது என்று அறைந்தார் அந்த சமுதாய விஞ்ஞானி. பல்வேறு நிலைகளை நெஞ்சில் கொண்டு ஆராய்ந்தால் துக்கமும் வெட்கமும் தொண்டையை அடைத்துக் கொள்ளவே செய்யும்.

இந்த நிகழ்வில் கூட ஒரு சாராரின் நிலை கூட நெஞ்சை வருத்தவே செய்கிறது.

Tuesday 13 October 2015

அறிவாளரோடு உறவாடும் மடல்
பேரன்புடையீர் வணக்கம். வாழ்த்துக்கள். நிறைவு தரும் நிகழ்வு மணி முடியில் முத்தொன்றைப் பதித்தது போல் நல்லதொரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நகரத்துப் பெண்கள் சிற்றூர் (கிராமத்து) பெண்களின் பார்வை என்ற தலைப்பில் பயனுள்ள செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
விரிந்த பூமலர் போன்ற முகத்தோடு மணம் கமழும் மனதின் கருத்தோடு மகளிர் கூட்டம் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் அரங்கம் நிரம்பி வழிந்தது. பார்ப்பவர் மனதை பரவசப்படுத்தி பற்றிப் படர்ந்த கலித்தொகைக் காட்சிகளைப் போல மனம் களிப்புற்றும் மகிழ்ந்திருக்கும்.
படிப்படியாய், பகுதியாய் கேள்விகள் கேட்டு எழிலோடு நிகழ்வை ஒளிர வைத்த தங்களுக்கும் திரு.கோபி அவர்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள்.
மதுவில் தொடங்கி பெற்ற மக்களுக்கு என்ன பெயர் வைப்போம் என்பது வரை ஆழமான உணர்வுகளை பெண்கள் அள்ளி நிறைத்தார்கள்.
பண்பாடு சார்ந்த சிற்றூரும், பற்பல உணர்வுகளில் நகரமும் இருப்பதை பாருக்கு உணர்த்தினார்கள். ஆயினும் உடைகளில் சில உணர்வுகளில் இரு பகுதியினரும் இணைந்தே பயணித்தார்கள்.
இருளில் இருந்து இயக்கும் இயக்குநரும், ஒளியில் நிகழ்ச்சியை உலாவ அழைத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளரும் கொண்ட ஒருங்கிணைந்த உணர்வுகள், கருத்துகள் சொற்கள் ஆகியவற்றை பங்கெடுப்பாளர்கள் உணர்ந்து கொண்டால் தமிழ் நிலம் மேலும் மேலும் பெருமை மிகு நிலைபெறும். அதை இளம்பெண்கள் இயன்ற வரை புரிந்தே வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய பெண்களில் எல்லாவளச் சிந்தனை ஆக்கத்திற்கும் ஆக்கத்திறன் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்தவர், உழைத்தவர் திட்டமிட்டு போராடியவர் தந்தை பெரியார் என்பதை ஓரிடத்திலாவது ஒருமுறையாவது ஒலிந்திருந்தால் பெண்ணினம் மேலும் மேலும் மிகுந்த நிலைகாண உதவியிருக்கும்.
ஏöனினில் தமிழ் ஆய்வு, கருத்து ஆய்வு அதில் சாதிய இனக் கொடுமை. அதில் பெண்ணிய ஒடுக்குதல் ஆகியவற்றை அறவே நீக்க ஆர்த்தெழுந்து நின்றவர் அவர்தான். அவரைச் சொல்லாமலே, எண்ணிப்பார்க்காமலே எல்லாம் பேசுகிறார்கள் எல்லோரும் பேசுகிறார்கள்.
தீ என்பது இங்கு எல்லா இடத்திலும் இருப்பதுதான் அதுபோல செய்தி என்பதும் அதுபோலத்தான். அது எல்லார் உள்ளத்தையும் சூடாக்காமல் அப்படித்தான் பெரியார் தந்ததெல்லாம் ஏதோ ஒருவடிவத்தில் குறையாமல் சுவை குன்றாமல் நிறைந்திருக்கும்.
இந்த புதுமை, புரட்சி என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமளவு விளக்கம் தந்து வெளிச்ச மேற்றினார். மழையாகப் பெய்து மலையருவியாய் ஒடிவரும் தண்ணீர் வெள்ளமாக ஆற்றில் ஓடுகிறது. ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஓரிடத்தில் பாறையின் பிளவுகளுக்குள் மறைந்து விடுகிறது. ஆறும் நீரும் காணாமல் போய் விடுகிறது. ஆற்றை காணாமே என்று அலை மோதுகின்ற போது வேறொரு இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு வெளிவந்து ஆறாக பெருக்கெடுக்கும். அதுபோலத்தான், புரட்சியும் புதுமையும் பொங்கிவரும் என்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.
அதுபோலத்தான் பெரியாரின் கருத்துக்களும் போதனைகளும் வெளிப்பாடுகளும் போராட்டங்களின் முடிவுகளை இன்று பெருமளவு பேசப்படவில்லையென்றாலும் மறைத்திட முயன்றாலும் மனிதர்களின் மரபு வழித் தாக்கத்தால் அதாவது பரப்புரை பேச்சுக்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு வந்து சேரும்.
இந்தக் குழந்தை பலவற்றைப் புரிந்து கொண்டு வளர்வதற்கு காரணம் மரபு வழி மூளையாலும், மொழியின் வழியாக ஒன்றைச் சொன்னால் அதை ஒட்டிய சொற்களை தாமாகவே பற்றிக் கொள்ளும்.
இன்றைய எல்லாவகை உரிமை உணர்வுகளுக்கும் இனிய மொழி சார்ந்த இயங்கும் நிலைகளுக்கும் தந்தை பெரியாரும், அவரைப் முற்றாகப் புரிந்து கொண்ட முதல் மாணவன் பேரறிஞர் அண்ணாவும், அவரது தம்பிகளும் பெரியாரின் பற்றாளர்களுமே காரணம் என்பதை பெருகி வரும் பெண்ணினம் புரிந்து நடந்தால் இயற்கையின் இயல் அறிந்து பயணித்தால் ஏற்றமிகு நிலையை பெண்ணினம் எய்தும்.
திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் அதன் மொழி ஆளுமை எல்லா இடங்களிலும் பரவி வாழ்கிறது என்பதை தமிழர்கள் மறந்திருந்த நேரத்தில் நீயா? நானா? கிராமத்து - நகரத்து பார்வை வழியாக பாருக்கு உணர்த்தியதை பாராட்டி மகிழ்கிறேன்.
நூதனாகவும், மிக நுட்பமாகவும் நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் தங்கள் இருவரின் திறன் மேலும் மேலும் சிறந்தோங்கி வளம்பெற, நிலைபெற வாழ்த்துகிறேன்.
அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள் பெயர்களைப் பற்றிய மனப்பதிவுகளை காட்சிகளாகக் காட்டும் நிகழ்வொன்றை காட்டிக் களிப்படைய வைத்திருக்கிறீர்கள்.
பலரும் தங்கள் இயல்புக்கேற்றவாறு பெயர் வைத்ததை வெளிப்படுத்தினார்கள். பெயர்களின் பொருள் பற்றியோ அதன் செழுமை பற்றியோ கிஞ்சிற்றும் கவலை பெரிதும் இல்லாமல் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். பெரும்பாலோர் இலக்கிய அளவிலும், ஸ்டைலாகவும் பெயர் வைப்பதாகக் கூறினார்கள்.
இந்தச் சுருக்கம், ஸ்டைல் என்பது நல்ல தமிழ்ப் பெயர்களில் ஒளிமுகம் காட்டி நிற்கிறது என்பதை உணராமலேயே பேசினார்கள். இந்த ஸ்டைல் என்பது தங்களை பலர் பார்க்க வேண்டும், ஈர்க்க வேண்டும் என்ற ஆசையில் சொன்னார்கள்.
உடல் மூட உருவான ஆடையைச் சுருக்கி ஸ்டைலாக் காட்சி தருவதால் ஏற்படும் அவலங்களும் ஆபத்துகளும் நாளும் நாளும் அரங்கேறுவதைக் காண முடிகிறது.
இந்த ஆடைக் குறைப்பு பெயர்ச்சுருக்கம் என்பது இந்த நடிகைகளிடம் இருந்தே தொடங்கக் காணலாம். நடிகை என்பதற்கு காமசூத்ரா வாத்சாயானா தரும் பொருள் வேறு அதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களும் நடிகைகளைப் பின்பற்றி ஆடையிலும் பெயரிலும் ஆர்வம் கொள்ள அணி வகுத்து நிற்கிறார்கள்.
எழில், அழகு, ஸ்டைல், சுருக்கம் கொண்ட தமிழ்ப் பெயர்கள் ஆயிரஆயிரமாக அலங்கரித்து அணிவகுத்து நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அர்த்தம் இல்லாத அன்னியப் பெயர்களில் மயங்குவது சரியல்ல.
திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் தோன்றியதால் துலங்கிய மொழிகள் ஆயிரக்கணக்கில் அழகூட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பெயர் பற்றிய வரலாற்றுப் பின்னணி சுவை கொண்டதாகும். சங்க காலத் தமிழர்கள் ஆதன், பூதன், மூலன், பேயன், கபிலன், மருதன், வர்ணன், நன்னன். நக்கீரன், பொன்முடி, பாடினி, வெண்ணி, செண்ணி, அய்யை, வைகை, மாதவி, மேகலை, கிள்ளி, வளவன், மாறன், நம்பி, செம்பியன், சேந்தன், அமுதன், கண்ணன், முருகு, நகை, முகை, வாசுகி, வானதி, மதி, அதியமான் மலையமான், திருமகள், மலைமகள், கலைமகள், பாரி, காரி, பேகன், இனியன், இறையன், தென்னன், மாறன் போன்ற பெயர்களை சூட்டி மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.
சங்ககாலத்தில் அகம்புறம் என்று வாழ்ந்த தமிழன் அதன்பின் இகம், பரம், சுகம் தேடும் சோம்பேறியாய் மாறி தமிழுக்குள் இல்லாத, தமிழ் ஏற்காத மதவாதிகளின் மயக்கு மொழிக் கருத்துகளுக்கு மனம் கொடுத்து அனைவருக்கும் அடங்கி, அறிவிழந்து, ஆய்விழந்து, அடிமையான நாட்களில் பொருளற்ற சொற்களின் பெயர்களை சூடிக் கொண்டார்கள்.
சாமி எனும் சொல்லோடு நாதன், நாயகன், பகவன், பகவதி, தலைமுடி (கேசவன்) , பாம்பு (சேஷன்) மூர்த்தி(முகம்) ஆகிய சொற்களை வெட்டியோ ஒட்டியோ தங்கள் பெயர் அடையாளங்களை அமைத்துக் கொண்டார்கள்.
பின்னர் திராவிட இயக்கம் முகிழ்த்த காலத்தில் அதில் பெரியார் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாட்களில் இந்தப் பெயர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, திராவிடப் பிள்ளைகளுக்கு மரியாதைக்குரிய பெயர்களை சூட்டத் தொடங்கினார்.
இங்குள்ள தமிழர்களின் பெயர்களை சாதியவாதிகள், சனாதனிகள் எப்படி அழைக்கிறார்கள் என்பதறிந்தார் பெரியார்.
மாடசாமியின் பெயரை டேய் மாடா என்றும் குப்புசாமியின் பெயரை டேய் குப்பா என்றும் இருளப்பசாமியின் பெயரை டேய் இருளா என்றும் வேடசாமியின் பெயரை டேய் வேடா என்றும் வேலுச்சாமி, பாலுச்சாமி என்ற சொற்களிலுள்ள சாமியை தவிர்த்து மீதியை செல்லியே விளித்தார்கள் இந்த மேட்டுக் குடியினர்.
இதற்கு பெரியார் ஒரு தீர்வு கண்டார். தமிழர் கூட்டத்தின் முன் நின்று உங்கள் பெயர்களை அப்பாசாமி, அய்யாசாமி, துரைசாமி, அண்ணாசாமி, அப்பாத்துரை, துரைக்கண்ணு, கண்ணுதுரை என்று வையுங்கள் என்று சொன்னதோடு மாஸ்கோ, ரஷ்யா, மாஸ்கோமணி, லெனின் என்றெல்லாம் பெயர் சூட்டினார். பாதிப் பெயரை அழைத்தாலும் பெருமை மிகுந்ததாகவே இருக்கும். பின்னர் சூரியநாராயணசாஸ்திரியின் பெயரை தூயதமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டபிறகு திராவிட இயக்கத்தில் அண்ணாவின் தலைமையில் இயங்கிய இயக்கத்தினர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் அண்ணாவின் தம்பிகளும் அண்ணாவின் தமிழ்மீது தாக்கம் கொண்டோரும் எண்ணற்ற இனிய தமிழ்ப் பெயர்களை தாங்கி தமிழ்ப்பற்றையும் தன்மான உணர்வையும் தாங்கி நிற்கிறார்கள்.
நடுவராக வந்த நால்வரில் ஆறுமுகத் தமிழனும், எழுத்தாளர் இமயமும் இனிய செய்திகளை கருத்துகளை எடுத்து வைத்து இனிமை சேர்த்தார்கள். அபிலாஷ் தெளிவில்லாமல் குழம்பினார். ஸ்ரீதர் சமூக அக்கறையின்றி தன் நிலையைத் தெரிவித்தார். மற்றும் பல பங்கேற்பாளர்களும், பொழைப்பு மனம் புரியாத உணர்வு, பொறுப்பு குறைவான தன்மையோடு தங்களை வெளிப்படுதினார்கள். நீயா? நானா? வில் பங்கெடுத்தப்  பின்னராவது இந்த, இனம், மொழி, பண்பாடு, இயற்கை, அறிவியல் செய்திகளோடு தங்களை இணைத்துக் கொண்டு இயங்கத் தொடங்கினால் இனிவரும் தமிழகம் உலகில் உச்ச நிலை அடையும்.