Friday 15 July 2016

பொருள் புரிந்தால் தமிழன் புகழ் பெறுவான்
தமிழன் தன் தாழ்ந்த நிலையை அகற்ற, தன்மானத்தை நிலைநாட்ட, சிந்திக்காமல் 1000 ஆண்டுகளாக அடிமை உணர்வில் ஆழ்ந்திருப்பதை மாற்ற புரட்சிக் கருத்துக்களால் புதுமை கூட்ட, அறியாமை இருட்டறையில் இருந்து, வெளிச்சத்திற்கு அழைத்து வர எண்ணற்ற படைப்புகளை பார்புகழும் பா வடிவங்களாக, இந்த மண்ணில் விதைத்து பரப்பியவர் புரட்டிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
தன்மானத் தமிழன் என்று சொல்லி தமிழின் செழுமைகளை அறிந்தவன் நான் என்று மார்தட்டுவோர் அவன் தந்த இந்தப் பாடலை பொருள் புரிந்து புதுவேகத்துடன் மக்களிடம் கொண்டு சென்று, துணிச்சலூட்டி, போராட வைத்தால், தமிழனின் மூளையில் ஆழ்ந்திருக்கின்ற மூடநம்பிக்கை உதயசூரியனைக் கண்ட பனிபோல் உருகி உரிமை, உணர்வு தழைத்து உண்மைகள் புரியும்.
சிரம் அறுத்தல் வேந்தருக்கு
பொழுது போக்கும் வாடிக்கை
நமக்கோ அது உயிரின் வாதை
உனதன்னை தமிழ்
உலகாள வேண்டும்
உயிர்வாதை அடைகிறார்
உதவாதினி தாமதம்
உடன் எழுத தமிழா
கலையே வளர்
தொழில் மேவிடு
கவிதை புனை தமிழா
நிலமேயுழு நவதானிய
நிறையூதியம் பெறுவாய்
கடலே நிகர் படை சேர்கடு
விடநேர் கருவிகள் சேர்
களிபேருவகை அடைவார்
நிதிநூல்விளை உயிர்நூல் உரை
நிசநூல் மிக வரைவாய்
அலை மா கடல்
நிலம் வானிலும்
அணிமாளிகை ரதமே
அவையேறிடும் விதமேயென
அதிகாரம் நிறுவுவாய்
கொலைவாளினை எடடா
கொடியோன் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா.
சமமே புரி அறமே தலை
ஜனநாயகம் எனவே முரசறைவாய்
இலையே  உணவிலையே
கதியிலையே எனும் எளிமை
இனி இலையேயென
முரசறைவாய் முரசறைவாய்
தி.மு.கவின் தொடக்க நாட்களிலிருந்து தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை தி.மு.க பேச்சாளர்கள் தங்களது பேச்சின் தொடக்கத்திலும் முடிவிலும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களை முழங்கியே பேச்சை நிறைவு செய்வார்கள். இன்று இந்த நிலை இல்லையே என்று இதயம் வருந்துகிறது.
ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் பாவேந்தர் பாடல் ஒப்புவித்தல் போட்டி என்று பல ஆண்டுகளாக மாணவ, மாணவிகளை ஈடுபட வைத்து பாராட்டு பரிசுகளையும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். அது இன்றளவும் நடந்து வருகிறது. இன்று வரை பல இலட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்திருப்பார்கள். அதன் விளைவு இன்று எந்தளவிற்கு உருவாகியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஈடற்ற விளைவுகளையும் வெற்றிகளையும் உருவாக்கும் என்று என் உள்ளம் உறுதியாக நம்புகிறது.

No comments:

Post a Comment