Sunday 11 September 2016

பெரியார் பிறவாதிருந்திருந்தால்?

பெரியார் பிறவாதிருந்தால் என்ற வினாவிற்கு விடை அளிப்பதென்றால் நீட்டோலைகள் நிறைந்து மலை எனக் குவிந்துவிடும். அவருடையது எல்லாம் இங்கே நிறைந்த பதிவுகள் குவிந்து கிடக்கிறது.
அவர் பிறவாதிருந்தால் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் இன்னும் அதே நிலையில்தான் கிடந்து அமிழ்ந்திருப்பார்கள்.

ஆரியப் பார்ப்பனர்களின் சதி வலைகளில் சிக்கிச் சிதைந்து சீரழிவில் உழன்று கொண்டிருந்திருப்பார்கள்.

அவர் பிறவாதிருந்திருந்தால் வேதத்தின் விசம் முறிந்திருக்காது. பார்ப்பனர்களின் சதிச்செயல்கள் அம்பலத்திற்கு வந்திருக்காது. அவர் பிறவாதிருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட பிரிவினர் தலைதூக்கி இருக்க முடியாது. நிமிர்ந்து நேர் நின்று நெஞ்சுயர்த்தி நடந்திருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பெருமளவிற்கு உயர்ந்திருக்க முடியாது.

அவர் பிறவாதிருந்திருந்தால் வைதீகர்களின் வித்தைகள் இங்கே விலகி இருக்காது. எல்லாருக்கும் எல்லாம் என்ற இனிய நிலைகள் இல்லாமலேயே போயிருக்கும்.

அவர் பிறவாதிருந்திருந்தால் இந்து மத ஆதிக்கவாதிகளின் அயோக்கியத்தனம், அடாவடிச் செயல்கள் அடங்கி இருக்காது. அவர்களின் ஆளுமைகள் அருகியிருக்காது. தாழ்ந்த வீழ்ந்த தமிழர்களுக்கு விடுதலை கிடைத்திருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் தூய கொள்கை கோட்பாடுகளை எடுத்துச் சொல்லும் எண்ணற்ற ஆற்றலாளர்கள் உருவாகி இருக்க முடியாது. குறிப்பாக பட்டுக்கோட்டை அழகிரி, தோழர் ஜீவானந்தம், வீரமங்கை முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரின் இடி முழக்கக் குரல் இங்கே ஒலித்திருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் படித்த நிலையில் அவருடைய கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு ஏழை வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் வேலை அதனால் வாழ்வில் வளம் என்ற எண்ணங்கள் இல்லாமல் மக்கள் எதிர்த்த நிலையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முன்வந்த உலகம் போற்றும் உன்னதமான அறிவாளி பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்.

அவர் பிறவாதிருந்திருந்தால் அண்ணாவின் பின் அணிவகுத்த ஆயிரமாயிரம் அருமைத் தம்பிகளின் ஆற்றல் திறம் ஆய்வு நெறி உள்ளிட்ட வெளிப்பாடுகளை வழங்கி ஒளி வீசி இருக்க மாட்டார்கள். பாவேந்தர் பாரதிதாசனும் அவருடைய புரட்சிக்கவிதைகளும் அவருடைய பரம்பரையில் வந்த கவிஞர் படையும் கிடைத்திருக்காது.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் தமிழர்கள் தன் சாதி வால்களை அறுத்தெறிந்திருக்கமாட்டார்கள். பிறவிச் சாதி உணர்வுகள் சாட்டையடிபட்டிருக்காது. ஒரே இடத்தில் கூடி வாழும் சூழல் ஆடிப்போயிருக்கும்; அற்றும் போயிருக்கும். உணவகங்களில், ஆலயங்களில் மற்ற இடங்களில் எல்லாச் சாதியானரும் ஒட்டி உரசி நடக்கும் நிலை நேராது போயிருந்திருக்கும். மேல் சாதிகளைச் சேர்ந்தவர்கள், கீழ்சாதிகளாக இருப்பவர்கள், எல்லா வித உறவுகளுக்கும் உடன்படும் நிலை தோன்றி இருக்காது.

அவர் பிறவாதிருந்திருந்தால் நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாதாரின் நிலையை உயர்த்திய கல்வி இடஒதுக்கீடு பெண்ணுரிமை கிடைக்காமலேயே போயிருந்திருக்கும். அரசு நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நிரம்பி இருக்க மாட்டார்கள். இந்தியப் பார்ப்பனர்களின் எல்லா வகைச் சதிச் செயல்களும் இடுப்பொடிந்து போய் இருக்காது.அவருடன் அண்ணா கலைஞர் ஆனைமுத்து போன்றோர்களின் பரப்புதலால் ஏற்பட்ட அகில இந்தியாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை எழுச்சி கொண்டிருக்காது.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் 100 க்கு 97 மனிதர்களுக்குச் சுயமரியாதை என்பதும் பகுத்தறிவுச் சிந்தனை என்பதும் துளி கூடத் துளிர்க்காது போய் இருந்திருக்கும். புதுமை எண்ணங்களும் புத்தெழுச்சி உணர்வுகளும் புது மணம் வீசும் செயல்களும் பூக்காமலேயே போயிருக்கும்.

அவர் பிறவாதிருந்திருந்தால் பொதுவாழ்வில் புகைமூட்டம் கலையாது காரிருள் சூழ்ந்திருக்கும். மக்களை கவலைகள் கப்பி இருக்கும். வெளிச்சக் கோடுகளே தெரியாத இருட்டறைக்குள் இந்நாடு முடங்கி இருக்கும். மடமை,  மதமயக்கம், மூடநம்பிக்கை,  முட்டாள்த்தனம், முடைநாற்றச் சிந்தனைகள் முழுமையாக ஆட்சி செய்திருக்கும். வாழ்வில் உயரும் வழிகள் எல்லாமே அடைபட்டிருக்கும். எதையும் ஏன் எதற்கு என்று கேட்ட சிந்தனைச் சிற்பி கிரேக்கத்து சாக்ரட்டீஸின் குரல் நமது காதில் விழாமலேயே போய் இருந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் விழி இருந்தும் பொட்டைகளாய், முடி இருந்தும் மொட்டைகளாய், உணர்விருந்தும் கட்டைகளாய் விழுந்து கிடந்தவர்கள் சற்றும் விழிப்புணர்வும் விடுதலை எண்ணமும் பெற்றிருக்க மாட்டார்கள். இன்னும் நிறைய நிறையச் சொல்லி நெஞ்சை மகிழ்விக்கலாம். மேலே காணும் எதுவும் கற்பனையல்ல; கதையல்ல; துதியல்ல; துயர் துடைத்த தூய உணர்வுகள். இதை உணராதோர் பெரியார் பிறவாதிருந்த காலத்தில் கண்மூடி துயில்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம். பெரியாரைப் பற்றி அண்ணாவின் கருத்தோவியம் கலை கொஞ்சும் சொல் ஆரம் நெஞ்சில் நிறைந்து இருக்கிறது.

பெரியார் தனி மனிதரல்லர்; அவரோர் சகாப்தம். அவர் கண்ட களங்கள் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் இன்னும் அவர் போர்க்களத்தில்தான் நிற்கிறார். அறுபது ஆண்டுகள் அவரது பேச்சும் பிரச்சாரமும் அருவியாய் விழுந்து ஆறாகப் பெருகி ஓடுகிறது. அவரை வெறுத்த பலர் வெட்டுவேன்; குத்துவேன் அவரை; கொல்வேன் நான் என்று கொக்கரித்தவர்கள், சூளுரைத்து வாள் ஏந்தியவர்கள் எல்லாம் அவரவர் நிலை தானே மாறிடக் கண்டனர் என்று சொன்னார். இன்னும் நிறைய நிறையச் சொன்னார்.

பெரியார் பிறவாதிருந்திருந்தால் என்னைப் போன்ற மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே தோன்றியவர்கள் மேட்டுக்குடி மக்களோடு சமமாக அமர்ந்திருக்க முடியாது; ஒன்றாக உணவு அருந்தி இருக்க முடியாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் தலை தூக்கி இருக்க முடியாது என்றார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அவர் பிறந்தநாளை வீடு தோறும் வீதி தோறும் ஊர் நாடு நகரம் எல்லாவற்றிலும் கொண்டாட வேண்டும. ஆனால் நன்றியை வாழ்வின் நிலையாக, வழிபாட்டு உணர்வாகக் கொண்ட தமிழர்கள் நன்றி மறந்த, நாகரிகம் இழந்த வேதனை மிக்க நாட்களில் வாழ்வதால் எதிர்பார்ப்பு இல்லாத உள்ளத்தோடு அவரை நினைப்பதுதான் மகிழ்வானதாகும்.

No comments:

Post a Comment