Friday 16 September 2016

பெரியார் கொள்கையைப் பேசும் புத்தகம்

பெரியார் கொள்கையைப் பேசும் புத்தகம்
ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்த பேரறிஞர் அண்ணாவின் கலிங்கராணி எனும் நாவல் வடிவான நூல் அதில் பார்ப்பனியத்தைப் பதிய வைத்து தமிழர்களைப் பாழ் படுத்திய பாவிகளின் செயல்களை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
நான் இளமை நாளிலிருந்தே சரித்திர நாவல்களை வாசிக்கும் வழக்கமுள்ளவன். வார இதழ்களில் வந்த என்னற்ற நாவல்களை படித்திருந்தாலும், அண்ணாவின் கலிங்க ராணி போன்ற தான் சார்ந்த கொள்கைகளை விளக்கி மக்களிடம் மாற்றங்களை விதைத்த ஒரு நாவலை இன்றுவரை படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
கல்யாண கிருஷ்ணமூர்த்தி (கல்கி), பாஷ்யம் அய்யங்கார் (சாண்டில்யன்), நா.பார்த்தசாரதி, அசோக்மித்திரன், விக்ரமன், கோவி.மணிசேகரன், ஜெகசிற்பியன் மற்றும் பலரின் கதைகளையெல்லாம் ஆய்வு செய்தால் பெரிதும் தமிழில் உள்ள சிறப்புகளை சொல்வதுபோலக் காட்டி, அதில் ஆரியக் கருத்துக்களை புகுத்துவதை நோக்குமாகக் கொண்டே எழுதியிருக்கிறார்கள் என்றே கருதத் தோன்றகிறது.
ஆனால், அண்ணா ஆரியமாயை, சூழ்ச்சியை பக்கத்துக்குப் பக்கம் படம் பிடித்துக் காட்டி, தன்மான தமிழர்களை தலைநிமிர வைக்கிறார். நாவல்முழுவதும் விரிவாக விளக்க வேண்டுமென்றால், பக்கங்கள் பலவாகும். தமிழர்களின் செழுமையான உள்ளங்களில் சந்தேகங்கள் கொள்ள வைத்து, குழப்பி, தங்கள் பிழைப்புக்கா எத்தனை வேடங்கட்டி நடித்தார்கள் இந்த வேதமத வைதீக பார்ப்பனர்கள் என்பதை அழகிய எழுத்து நடையில் அணிவகுத்து சொல்கிறார் நமது அண்ணா அவர்கள்.
இந்த நூலைப் படித்தால் தமிழர்தம் பெருமைகளை எப்படியெல்லாம் தாழ்த்தினார்கள் சூழல்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் நமது பண்பாட்டை நலிவுறுச் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர் என்று விளங்கிக் கொண்டு உறுதிமிகு உள்ளத்தை பெறலாம். படியுங்கள் பகுத்தறிவும் பண்பாடும் கொண்ட திராவிட சீர்மைகளை சிந்தையில் கொள்ளலாம்.

கலிங்கராணியை கையிலெடுத்தால் கீழே வைக்க தோன்றாது, பசி, உறக்கத்தை மறந்து நாவல் முடிகின்ற வரை தடையில்லா வாகனம் போல செல்லும் சுகத்தை அவருடைய அழகு நடையால் பெறலாம். படியுங்கள் பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment