Tuesday 12 July 2016

கண்ணதாசா! எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!

கண்ணதாசா! எண்ணமெல்லாம்
இனிக்கும் நேசா!
பழைய முகவை மாவட்டத்தின் சங்ககால சாகாக் கவிஞன் கணியன் பூங்குன்றன் பிறந்த பூங்குன்றம் எனும் ஊரின் அருகிலிருக்கும் கீழச் செவல்பட்டியில் பிறந்த திரு.முத்தையாதான் தன் பெயரை கண்ணன் எனும் கடவுள் மீது கொண்ட பற்றால் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் பாரதிதாசன் தன் பெயரை மாற்றியதன் வழியில் பலரும் மாற்றி வந்தார்கள்.
வாணிதாசன், கம்பதாசன் போன்று இவரும் கண்ணதாசன் என்று வைத்துக் கொண்டார். ஜுன் 24ல் பிறந்தநாள் காணும் நமது கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
திரைத்துறையில் ஈடுபட்டு சாராதா ஸ்டூடியோவை சென்னையில் நடத்தி ஏ.எல்.எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்து மற்றப் படங்களை வெளியிடுபவராக மிளிர்ந்த திரு. ஏ.எல். சீனிவாசனின் உடன் பிறந்த சகோதரர்தான் அருமைக் கவிஞர் அண்ணன் கண்ணதாசன் அவர்கள்.
கவிஞரை அண்ணன் என்று நான் குறிப்பிடக் காரணம் அண்ணன் தம்பியாக அனைத்துச் செழுமைகளையும் பெற்ற திமுகவின் இணைந்தவர் எனும் உறவுநிலையில்தான்.
மாடர்ன் தியேட்டரில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்ற நாளில், முன்னரே கலைஞரின் நண்பரானார் கவிஞர் அவர்கள். அதிலும் மிக நெருக்கமான நண்பர்களாக இணைந்திருந்தார்கள்.
திராவிட இயக்கச் சிந்தனை நிறைந்த நாட்களில் பக்தியின் சின்னமாக நெற்றியில் பூசிய நீற்றையும் பொட்டையும் அழித்து விட்டு ஆக்கிமிகு சிந்தனையாளராக சீர்மிகு பாவலராக தன்னை மாற்றிக் கொண்டார்.
திராவிட இயக்கப் போராளர்களைப்போல் உலகின் எல்லா அம்சங்களை குறிப்பாக தமிழ் இலக்கண இலக்கியச் செழுமைகளைக் கற்றுத் தேர்ந்து தெளிந்து தன் உள்ளத்தை கலைச் சோலையாகவே கட்டமைத்துக் கொண்டார்.
கவிஞரின் உள்ளம் மழலையின் உள்ளம் போன்றது, உணர்ச்சி மயமானது. முடிந்த வரை உண்மைகளை வெளிப்படையாக உணரக்கூடியது. உதாரணமாக ஒரு முறை கழகத்திற்குள் ஒரு பிரச்சனையில் அவர் சிக்கியபோது அண்ணா அழைத்து கனிவோடு விசாரித்தார். உடனே அவர் எண்ணத்தைத் தானே சொன்னேன், இதில் என்ன தவறு என்று கேட்டார்.
அதற்கு அண்ணா அவர்கள் எண்ணம் என்பது ஏப்பமல்ல வந்தவுடன் வெளியிட, எதையும் இடம் பொருள் அறிந்து ஏவுவதுதான் அறிவுடமை என்றார். ஆயினும் தொடர்ந்து அவரது இயல்பிலே இயங்கினார்.
அவர் பிறந்த இந்த நல்ல நாளில் அதிக இடர்பாடுகள், இடமாற்றங்கள் என்பதைத் தாண்டி அவருடைய இனிமைகளை எண்ணிப் பார்ப்போம்.
அரசியலில் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை என்றாலும் எழுத்துத் துறையில், திரைப்படத்துறையில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்து பிரமிக்க வைத்தார்.
திரை இசைப் பாடல்களை படைப்பதில் யாரும் எட்டமுடியாக இடத்தில் நிலை கொண்டிருந்தார். மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ் வரிசையில் மிகச் சிறந்த பாடல்களை வழங்கி மக்களை மகிழ்வித்தார்.
தி.மு.கவில் விலகிய பின்னர் எந்த அரசியல் கட்சியும் பின்னால் இல்லாமல் நூல்கள் படைப்பதிலும் திரை இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் நீடித்து நிலை கொண்ட புகழை நெடுநாள் வைத்திருந்தார்.
தனி மனிதனுக்கு இந்த நாட்டில் வழங்கப்படும் இலக்கணத்திற்கு உட்பட மறுத்தவர் அவர். பிறருக்கு கேடின்றி எல்லாவகைச் சுவைகளை துய்ப்பது தவறல்ல என்றார். மதுவருந்துவதை வெளிப்படையாகவே ஆதரித்தார். ஒரு நாள் மதுவருந்திக் கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டது. தான் இருந்த இருடத்தில் எதிரில் அமைந்திருந்த மின்துறை அலுவலகத்திற்கே கையில் மதுக் கோப்பையுடன் வந்து.. கத்தினார். மனிதன் மகிழ்விற்காக மது அருந்தும் நேரத்தில் இப்படி மின்தடையை ஏற்படுத்தி நோக வைக்கலாமா என்று உரத்த குரலில் கத்திச் சாடினார்.
பருவம் வந்த இளவயதில் முதல் முதலில் விலைமகளிருடன் ஏற்பட்ட உறவை வசந்த காலம் என்று வர்ணிக்கிறார். தன்னை விட வயது கூடிய மாதுடன் உடல் கலந்து உறவாடியதை இன்பம் என்றார்.
ஒரு தடவை அவர் எழுதியது மனதில் கலைச் சுவையை, காவிய உணர்வை நமது உள்ளத்தில் ஏற்படுத்துக் கொண்டே  இருக்கும்.
ஆம் அவர் கூறுகிறார். நான் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அந்த விடுதிக்கு எதிரில் ஒருவீடு. அதை விடுதியின் ஜன்னல் வெளியில் பார்த்தேன். அந்த வீட்டு மாடியில் ஒரு பெண் மஞ்சள் பூசி குளித்த முகம், மலர் தழுவிய கூந்தல்,  மணச்சாந்தில் பொட்டு வைத்த பிறை நுதல் நெற்றி, நான்தான் பார்த்தேன் அவள் என்னைப் பார்க்கவில்லை. ஆனால், அவளை மறக்க முடியவில்லை. அதற்குப் பிறகு எத்தனையோ இராசகுமாரிகளையும் மந்திரி குமாரிகளையும் மஞ்சத்தில் சந்தித்து இருக்கிறேன் அவர்கள் நினைவில் இல்லை. அது ஆத்மாவின் ராகம், இது சரீரத்தின் தாளம் என்றார் கவிஞர். படித்த பண்டிதர்களுக்குக் கூட விளங்காத இலக்கியங்களை திரை இசைப்பாடல்களில் எல்லாரும் புரிந்து இனிமை பெறும் வகையில் எளிமையாய் வழங்கியவர் இனியவர் கண்ணதாசன் அவர்கள்.
திமுகவில் இருந்த கவிஞர் அவர்கள் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த காலத்தில். அவர் உருவாக்கிய மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் இனிய குரலில் திராவிடப் பொன்னாடே என்ற தமிழர்களின் இதயத்தை கவ்விய பாடலோடு நிறையப் பாடல்களை விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசைமழையில் பொழிந்தார் கவிஞர்.
சிவகெங்கைச் சீமை எனும் உலகில் ஒரு புதுமையை உலகிற்கு வழங்கிய மருது சகோதரர்கள்களின் வாழ்க்கையை படமாக்கி கிழவன் சேதுபதி மற்றும் முக்குலத்தோரின் பெருமைகளை பாருக்குச் சொல்லி பரவசமடைந்தார்.
கொரில்லா எனும் போர்முறையை அதாவது சிறு எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் மறைந்திருந்து வெளிப்பட்டு பெரும் படைகளை நிருமூலப் படுத்தும் முறையை உலகிற்கு முதன் முதலில் வழங்கியவர்கள் மருது சகோதரர்கள்.
என்று முக்குலத்தின் பெருமைகளாக பறைசாற்றினர் கவிஞர்.
தி.மு.கவில் பணியாற்றிய நாட்களில் திராவிட நாட்டின் பெருமைகளை பல பாடல்களில் எடுத்துக் கூறி பரவசமடைந்தார்.
திராவிட பொன்னாடே

அஞ்சாமை திராவிடர் உடமையடா
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
போன்ற பாடல்களைத் தந்த கவிஞர் சிவகங்கைச் சீமை படத்தில் 
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 
வென்றவர் கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர்
வீழ்ந்தது கிடையாது, 
தன்னிகரில்லா மன்னவர் உலகில்
தமிழே நீதிபதி
தரணியிலே இதன் பெருமை காண்பது கிழவன் சேதுபதி.
எக்குலத்தோரும் ஏற்றிப் புகழ்வது
எங்கள் பெருமையடா
முக்குலத்தோர்க்கே உவமை காண்பது
உலகில் அருமையடா

என்றெல்லாம் முக்குலத்தோரின் பெருமைகளை பறை சாற்றினார், நாட்டுக்கோட்டை செட்டியார் மரபில் வந்த கவியரசர்.
இல்லற ஜோதி, சிவகெங்கை சீமை, மதுரை வீரன், நாடோடி மன்னன் போன்ற படங்களில் தமிழர்களின் பெருமை புகழைப் பாடும் உரையாடல்கள் வழங்கினார்.
அவர் எடுத்து இன்றயளவும் தேவைப்படும் படம் கறுப்புப் பணம். அன்றிருந்த கறுப்புப் பணத்தின் அளவு ரூ.2500 கோடி அது இன்று 70 லட்சம் கோடியாக குவிந்திருக்கிறது. கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை கொள்ளையடித்து நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தும் கதைக் கருவைப் படமாக்கினார். அவர் நீதிமன்றத்தில்  வாக்குமூலம் தரும் காட்சியும் கருத்துகளும் அவரது முகஅழகும் என்றும் மறக்க முடியாததாகும். கலைஞரின்,அவன் பித்தனா? கவிஞரின் கறுப்புப் பணம் போன்ற படங்கள் இன்றும் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும்.
பராசக்தியில் நீதிபதியாக நடித்த கவிஞர், சூரியகாந்தியில் பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா என்ற பாடலுக்கு வாயசைத்து நடித்தார். அதுபோல் இரத்தத் திலகம் படித்திலும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்புஒரு கோலமயில் என் துணையிருப்புஎனும் பாடலுக்கும் நடித்தார். அந்தப் பாடலிலில்
காவியதாயின் இளையமகன்
காதற்பெண்களின் பெருந்தலைவன்
பாமர சாதியில் தனிமனிதன்
படைப்பதினால் நான் இறைவன்
என்ற வரிகள் அவருடைய தன்னம்பிக்கையின் வெளிப்பாடாய் அமைந்தது மட்டுமல்ல பாடல் கேட்கும் கலைமணம், கவித்துவம் கற்பனைத் திறம் கொண்டோர் உள்ளத்தில் பரவச மகிழ்வை பதிக்கும்.
அண்ணன் கவியரசு கண்ணதாசனைப் பற்றி சிந்தையள்ளும் சிற்றூரிலிருந்து சீனா வரை என்ற நூலில் பதிவு செய்திருக்கிறேன். கண்ணதாசனின் பகுத்தறிவு வெளிப்பாட்டை அவருடைய பாடல்களிலிருந்து விளக்கியிருக்கிறேன்.
எழுத்துத் துறையில் நிறைய ஈடுபாடு கொண்ட கவிஞர் மதங்களில் ஈடுபாடு கொண்டவர் அடிக்கடி கிருஷ்ணா கிருஷ்ணா என்று முனகும் இயல்புள்ளவர். நெற்றியை சுத்தப்படுத்தியும் அவர் கண்ணனின் தாசனாகவே வாழ்ந்தார்.
அர்த்தமுள்ள இந்துமதம் என்று இல்லாத ஒன்றுக்காக எதைஎதையோ இணைத்து புகழ்மாலை சூட்டினார். சமணம், புத்தம், சைவம், வைணவம், லோகாதையம் போன்றக் கருத்துகளோடு இயற்கை நிலைகளையெல்லாம் கூட அர்த்தமுள்ள இந்துமதம் என்று அணியமாக்கினார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் இது உணர்வியல் உறவியல் வழியில் சாத்தியப் பாடானது. கண்ணதாசன் நல்ல மனைவி, நல்ல உறவுகள், நண்பர்கள் என்பதையெல்லாம் இந்து மதத்தின் சாரமென்று புகழ்ந்துரைத்தார்.
வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டதுதான் இயற்கை. அதுபோலத்தான் இந்து மதமும் என்றாரே பார்க்கலாம். நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான் அதுதான் இந்து மதம் என்றார். எல்லாம் இருந்தது, இருக்கும், ஆனால் இந்து மதம்  இருந்ததா இருக்கிறதா இருக்குமா என்று மட்டும் அவர் சொல்லவில்லை.
அடுத்து இந்துமதக் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட கிறித்துவத்துக்காகவும் புகழ் பாட்டை பதிவு செய்தார் கவிஞர். ஏசுகாவியம் என்று எழுதி கிறித்தவர்களை மகிழ வைத்தார். கிறிஸ்துவம் கூறும் கர்த்தர் வாழும் இடத்தை விண்ணரசு என்றார். எல்லா இடங்களிலும் இடம்பிடிக்கும் தண்ணீர்போல தனது உறவுகளை சமன்படுத்திக் கொண்டார். எது எப்படியோ அவரது தமிழறிவும், ஆளுமையும் உள்ளத்தின் சுதந்திர உணர்வும் என்றென்றும் இதயத்தை மகிழ வைக்கிறது.
என்னைப் போன்ற திராவிட இயக்க தமிழ் உணர்வு உள்ளவர்களும் கீழ்க்காணும் செய்திகள் சிந்தையெல்லலாம் சிலிர்த்து செம்மாந்து நடைபோட வைக்கும்.
கவிஞர் தி.மு.கவில் இருந்த காலம் அது. அன்றைய நாட்களில் காங்கிரசில், இராஜாஜியின் ஆலோசனைப்படி திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்காக அதன் தமிழ் சார்ந்த உணர்வுகளை தகர்பதற்காக காங்கிரசுக்குள்ளேயே தமிழரசுக் கழகம் என்று ஓர் அமைப்பை உருவாக்கி திரு.ம.பொ.சி. அவர்கள் தன் தரமற்ற ஆதரவாளர்களோடு திராவிட இயக்கத்தை குறிப்பாக தி.மு.கவை தரக்குறைவாக தாக்கி வந்தனர். அவர் பின்னால் எழுத்தாளர் நடிகர்கள் திரைப்பட இயக்குநர்கள் திரு. ஏ.பி.நாகராஜன், திரு.ஜெயகாந்தன், திரு. தமிழருவி மணியன் மற்றும் பலர் அணிவகுத்தனர்.
அவரைச் சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியோடு திராவிட எதிர்ப்பாளர்கள் போற்றிப் புகழ் மாலை சூடி மகிழ்ந்தனர். பல இடங்களில் கழகத் தோழர்கள் ம.பொ.சி.க்கு தங்கள் எதிப்புகளைப் பதிவு செய்தார்கள்.
ஒரு மேடையில் ஒரு தோழர் ம.பொ.சி. அவர்களுக்கு ஒரு மாலையை அணிவிக்கு முன் ஒலிபெருக்கியில் அசிங்கத்திற்கு பொட்டு வைப்பது போல் ம.பொ.சிக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன் என்று கூறி மாலையைப் போட்டுவிட்டு இறங்கிச் சென்று விட்டார். திராவிட இயக்கத்தை, பெரியார், அண்ணாவை தரமற்று சாடுவோரை பாதக் குறடெடுத்து பன்னூறு அடி அடிப்பேன் என்றார் கவிஞர்.
அந்தக் கால கட்டத்தில் தான் நமது கவிஞர் அண்ணன் கண்ணதாசன் ம.பொ.சிக்கு ஒரு அறைகூவல் விடுத்தார். தங்களை சிலம்புச் செல்வர் என்று நாடே போற்றுகிறது. அது உண்மையென்றால் சிலப்பதிகாரத்தை அதில் இருக்கும் சொற்கள் இல்லாமல் ஆனால் அதே பொருளை அப்படியே தரும் மற்றொரு சிலப்பதிகாரத்தை படைக்க முடியுமா, தங்களால் முடிந்தால் எழுதுவதையே நான் விட்டு விடுகிறேன். நான் எழுதினேன் என்றால் தாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலகிவிடுவீர்களா? என்றார். இன்றுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
கண்ணதாசனைப் பற்றி அறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் அளித்த மதிப்புரை கண்ணதாசன் புகழோடு இணைந்தே இருக்கும். ஆம், அண்ணா அவர்கள் கவிஞர் வேழவேந்தனின் வண்ணத்தோகை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்ணதாசனை அண்ணாவை விமர்சித்த காலத்தில் தம்பி கண்ணதாசனை போற்றவில்லை என்றால் நான் தமிழை அறியாதவனாவேன் என்றார். அண்ணா மறைந்தபோது கவிஞர் கையறுநிலையிலும் நாம் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? நாமும் ஒரு நாள் போகப்போகிறோம் என்று ஆறுதல் கொள்ளத்தான் முடியும்.
சேலத்தில் கலைஞர் தலைமையில் ஒரு கவியரங்கம். நமது கவியரசுவும் பாட வந்திருந்தார். காதலி என்ற தலைப்பில் பாடவந்த கவிஞரை கலைஞர் பாட அழைக்கின்ற போது தோகை மயிலே, தோளில் தொத்தும் கிளியே கண்ணதாசா எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா, காதலியாய் அழகு முகம் காட்டி கவிபாட  வாஎன்றார்.

பிறப்பவர்கள் எல்லோருமே இறந்துவிடுகிறார்கள். கவியரசு போன்றவர்கள் என்றும் புகழோடு இணைந்து புவிமீது வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

No comments:

Post a Comment