Monday 11 January 2016

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
நெஞ்சோடு நெருங்கிய நீயா? நானா?
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். நலம்சூழ வாழ்த்துகள்.
தமிழர் திருநாளாக தரணியில் ஒளிர்கின்ற தன் வாழ்வுக்கு உதவுகின்ற இயற்கைக்கும், ஏனையவற்றிற்கும் தன் இதய நன்றியை வெளிப்படுத்தும் இனிய நாளாக தை முதல் நாளில், அறுவடையில் கிடைத்த முதல் நெல்லை, அதாவது புதுநெல்லை புதுப்பானையில் புதுமஞ்சள், புது இஞ்சி இலை, குலைகளை சேர்த்துக் கட்டி, பாலூற்றி பொங்கல் வைத்து இல்லத்தார் அனைவரும் பொங்கலன்று பொங்கலோ, பொங்கலென்று ஒலியெழுப்பி உள்ளம் மகிழ்ந்து உவகையில் மிதந்த நாளிலிருந்து தொடரும் நாட்களின் உச்சம் தான் இந்தச் ஜல்லிக்கட்டு எனும் வீரவிளையாட்டு நிகழ்ச்சியாகும்.
இயல்பாய், இனிமையாய், இடையூறுகள் ஏதுமின்றி நடந்துவந்த நல்ல நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்ப் பண்பாட்டு பகைமனம் கொண்டவர்களின் மனதில் தோன்றும் வக்ரக் குணத்தாலும் பொறுப்புகளில் உள்ள புரியாதவர்களாலும் தடைபட்டு தமிழர்கள் தவிக்கின்ற நிலை நீடித்து வந்தது.
உட்பகையால் பல நிலைகளில் ஊனப்பட்ட உருக்குலைந்த தமிழர்கள் இதில் மட்டும் ஏனோ தனித்தனியாக என்றாலும் ஒருங்கிணைந்த ஆதரவை இந்தச் ஜல்லிக் கட்டு எனும் உடல் வலிமையையும், உள்ளச் செழுமையையும் உருவாக்கும் நிகழ்வுக்கு வழங்கினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ஊடகங்கள் பலவற்றில் உதவாக்கரை மனிதர்களால் உண்மைக்கு மாறானவற்றையெல்லாம் எடுத்துக் காட்டச் செய்தார்கள். இந்த நிலையில் நீயா? நானா? தன் இருப்பிடத்தில் இதை நிறுத்தி வைத்து இனியவர்கள் பலரை இருபுறமும் அமர வைத்து அவர்கள் அறிந்த, உணர்ந்த அறிவுப் புலங்களை இந்த விளையாட்டில் ஈடுபட்ட அனுபவச் செழுமைகளை மிகத் தெளிவான விளக்கங்களோடு வெளிப்படுத்தி தமிழர்களிடம் ஒரு புது உணர்வை புகுத்தி மகிழ வைத்திருக்கிறார்கள்.
இந்த விவாத அரங்கில்தான் தங்களின் உள்ளத்தை உண்மையான உணர்ச்சிகளோடு அதாவது என்னைப்போல தங்களை வெளிப்படுத்தினார்கள்.
அட அடா ஜல்லிக்கட்டு எதிர்பாளர்கள், இரைந்து எரிச்சல் காட்டியபோதெல்லாம், ஆதரவாளர்கள் எரிமலைக் குழம்பாக பொங்கி வழிந்தார்கள். இந்த இனிய விளையாட்டுத் தரவுகளை நிலைப்படுத்த உலகில் உள்ள அனைத்தையும் இந்த விவாதத்தில் கொட்டிக் குவித்து மக்களை குளிர வைத்து விட்டார்கள். பண்பாட்டுத் தரவுகளை உலகின் உயர்வுகளை தங்களுக்கு உணர்த்தும் போதிக்கும் தகுதி இந்த உலகில் யாருக்கும் இல்லையென்று அறைந்தார்கள் திரு. கோபி உள்ளீட்டோர்கள்.
இனியவர் திரு.இளங்கோ, திரு.சேனாதிபதி பரிசு பெற்ற இனிய இளைஞர் உடலில் தொன்னூறு விழுப்புண் பெற்று விஜயாலாய சோழனை நினைவு கூர்ந்தவர் அனைவரும் உலக தரத்துக்கு தங்கள் உணர்வுகளை முன் வைத்தார்கள்.
திராவிட இயக்கம் விதைத்த இனிக்கும் நிலைகள் சிதைந்து விட்டதோ என்று இதயம் கலங்கும் இந்த நாளில் ஈயா? நானா?வின் நல்ல இந்த நிகழ்வு அப்படி இல்லையென்று நிலைப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக எதிர்த்தவர்களின் வரிசையில் பரிசு பெற்ற அந்தப் பெண்மணி, சில ஊடக நிகழ்வில் வக்கிரமாக தன் உணர்வுகளைக் காட்டி வந்தார். இந்த நிகழ்வில்தான் தன் நிலையை மாற்றிக்கொண்டு உண்மைகளை உணர்ந்து தனக்கும் இதயம் இருக்கின்றதென்று தளதளத்த உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
இதில் இன்னொரு இனிமையும் இணைந்திருந்தது. இதற்கு முன் நடந்த இதற்கான நிகழ்வுக்கும் இப்பொழுது நடந்த நிகழ்வுக்கும் தாங்கள் ஆய்வுகள் செய்ததை குறுந்தாடியை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஒளிரும் முக அழகோடு தோன்றிய திரு.கோபி அவர்கள் விளக்கிய போதும் வேறுசில நேரங்களில் அவர் வெடித்த போதும் அறிஞர் அண்ணாவின் கருத்துகளின் மனம், இளைஞர்களின் இதய உணர்வில் ஊடுருவி நிற்பதாக உணர முடிகிறது.
பொங்கலின் சிறப்புகளை அண்ணாவின் எழுத்தோவியங்கள் வரைந்த காவிய அழகை இன்னொருவர் படைப்பது கடினம். அவர் விதைத்த வளங்கிய வண்ணத் தமிழ் நிலைகள் நிகழ்வின் வெளிப்பாடு என்று சொன்னால் அது மிகையாகாது. சிற்றூரின் சீர்மைகளை சிந்தையில் கொண்டு இந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஆங்கிலப் புலமையில் அது வெளிப்படுத்தும் ஆற்றலில் உலகில் ஏற்ற நிலையில் இருக்கின்றவர்களோடு இணைந்தவர்கள் நாங்கள் என்று அந்த அருமை மொழியில் தங்களை முழுக்கக் காட்டினார்கள். இதில் இனியவர் கோபிக்கும் இடம் உண்டு.
இந்த நேரத்தில் இருமொழித் திட்டம் தந்து இனிக்கும் நிலையை ஏற்படுத்திய இனியவர் அண்ணாவின் இலட்சிய முகம் இதயத் திரையில் ஒளிர்கிறது. அண்ணாவும் அவர் கண்ட இயக்கத்தின் தோழர்களும் மத்திய அரசின் ஆங்கிலத்தை ஒழிக்கும் முயற்சியை அணைபோட்டுத் தடுக்க வில்லையென்றால் இங்குள்ள நிலை எப்படி இருந்திருக்கும்? இந்தி பேசாதோரின் இதயக் கூட்டில் வெடிவைத்தது போலாக இருந்திருக்கும். இதில் இங்கு இந்தியை ஆதரித்தோரும் அடங்குவர்.
அண்ணாவின் வெளிப்பாடுகள் அனைத்தையும் உற்று நோக்கினால் இன்று அந்த இனிமைகள் தாங்கள் இருவரிடமும் இருப்பதுபோலவே இங்குள்ள பெரும்பாலோரின் இதயப் பேழைக்குள் இருப்பதை பல நிகழ்வுகளில் என்னால் உணர முடிகிறது.
திராவிட இயக்க சிந்தனையில் பூத்த இந்தச் செழுமைகள் இயற்கை வேதியியல் நிலைபோல என்றும் அழியாது என்பதற்கு இந்த நீயா? நானா? ஓர் இனிமைக் காட்சியாகும். இதைப் படைத்த உங்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்.

No comments:

Post a Comment