Monday 11 January 2016

மக்கள் பெற்ற மரங்கள் மாண்புகளின் உறைவிடம்

மக்கள் பெற்ற மரங்கள் மாண்புகளின் உறைவிடம்
மரங்கள் மண்ணுலகிற்கு இயற்கை தந்த புதுக்கொடையாகும். பூவுலகில் புத்தரைப் போல நாளும் புதுமைகளைப் படைக்கும் ஆற்றல் கொண்டது மரங்கள் ஆகும். தாவரங்களின் தலைவனான மரங்கள் மாசற்ற நிலை கொண்டது. அதுதான் உலக மாசுகளை அகற்றும் மருத்துவராகவும் இயங்குகிறது.
மரங்கள் இல்லையென்றால், மலையழகு இருக்காது. மரங்கள் இல்லையென்றால் மனிதர்கள் மழைதந்த மண்ணில் வளம் தரும் குளிர்நிலை தங்காது. மரங்கள் இல்லையென்றால் உயிரினங்கள் இயங்க முடியாது. உயிரினங்களின் உயிரைக் காத்து இயங்க வைக்கும் உயிர்க்காற்றை (ஆக்சிஜன்)  தருவது மரங்கள்தான். அதுவும் எப்படித் தெரியுமா? மனிதனும் மற்றவைகளும் விடுகின்ற கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) உட்கொண்டு, வட்டியும் முதலுமாக ஆக்சிஜனை வெளியிடும் கொடை வள்ளலாக விளங்குவது இந்த மரங்களும் மற்றத் தாவர இனங்களும்தான்.
அதாவது 100 கிராம் கரியமில வாயுவை பெற்றுக் கொண்டு 130 கிராம் உயிர்காற்றை தருகின்ற கொடைவளம் இந்த மரங்களுக்கு இருக்கிறது. உலக மக்கள் உயர்ந்து உயிரினங்களும் பெருகி வரும் நிலையில் காடுகளை அழிக்கும் கயமை நாளும் நடைபோடக் காண்கிறோம்.
ஆப்பிரிக்கா, அமேசான், ரஷ்யக் காடுகள்தான் உயிரினங்களைக் காப்பாற்றி வருகிறது. அதிலும் ரஷ்ய ஊசியிலைக் காடுகள்தான் உயர்ந்து நின்று உயிர் காக்க உதவி வருகின்றது.
அய்ந்து வகை நிலம் கண்டு அதைத் திணை வாழ்வென்று உரைத்த தொல்காப்பிய தமிழ் இலக்கணம் ஒவ்வொரு நிலத்திலும் வளருகின்ற மரங்களை வகைப்படுத்தி வளம் சேர்த்தது.வரலாறு என்று முதலில் எழுதப்பட்டதென்ற எகிப்து வரலாற்றை அறிஞர்கள் சொல்கிறார்கள். அது பாப்பிரஸ் என்னும் ஆற்றோரம் வளர்ந்த கோரைப்புல்லில் தான் எழுதப்பட்டதாம்.
தமிழுக்கு அணி சேர்த்த உலகப் புகழ் இலக்கியங்களெல்லாம் பனை மரத்து ஓலையில்தான் உருவாகி உயிர் வாழ்ந்தது. இந்த பனை மரத்தைப் பற்றிய பாடல் ஒன்று நான் இளமையில் ஒரு சிற்றூர் பள்ளியில் ஒன்னரை ஆண்டே படித்த நாளில் பாடப் புத்தகத்தில் பதிந்திருந்த நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது.
பனை மரமே பனை மரமே, ஏன் பிறந்தாய் பனை மரமே
நான் வளர்ந்த காரணத்தை நாட்டோரே சொல்லுகின்றேன்
எழுத நல்ல ஏடாவேன், படுக்க நல்ல பாயாவேன்
குளிர் வழங்கும் நுங்காவேன், குடிக்கும் நல்ல பதநீராவேன்
இனிக்கும் கனிந்த பழமாவேன், கொட்டைதரும் கிழங்காவேன்
கிழங்கோடு தவுணாவேன், வீடுகட்ட உத்தரமாவேன்
கூரைபோட ஓலையாய் உதவி நிற்பேன்.    என்று ஒரு மரத்தின் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதை பள்ளிக் குழந்தைகளுக்கு பாடமாக வைத்திருந்தது பசுமையாக ஒளிர்கிறது. பனைமரம் இப்படி என்றால் மற்றமற்ற பயன்தரும் பலம் தரும் மரங்களையும் அதனுடைய உறவுகளாக மற்றமற்ற தாவரங்களை வளரும் தலைமுறைக்கு எந்த அளவுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்பதை அரசர்கள் உணர வேண்டியது கடமையாகும்.
கடந்த பல நூற்றாண்டுகளாக உலகில் உள்ள எந்த மண்ணிலும் புதிய தாவரங்கள் தோன்றியதில்லை, தோன்றுவதில்லை. ஆனால் இப்போது திராவிடம் எனப்படும் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் புதியபுதிய தாவரங்கள் முகிழ்த்து வளருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
விண்வெளியில் உலவுகின்ற மற்ற கோள்களுக்குச் சென்று வாழ வேண்டுமெனில் அங்கு ஆக்சிஜன் வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப் பேருலகம் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஆய்வுக் கருத்தொன்றை என்னுடைய கடிதச் சிலைகள் என்ற நூலில் அப்போதே விளக்கி எழுதியிருந்தேன்.
அன்று அறிவியல் மேதை வெளியிட்ட கருத்து எதுவென்றால் வெள்ளிக் கிரகத்துக்கோ செவ்வாய் கோளுக்கோ மனிதன் செல்லும் நாளில் அங்கு வாழ ஆக்சிஜன் வேண்டும். அதற்கொரு வழியில் முடிவு சொன்னார்கள்.
அந்தக் கிரங்களின் மேகத்தில் அமிலங்கள் சூழ்ந்திருக்கிறது. அந்த அமிலங்கள் மீது சில இரசாயனங்களைத் தூவினால் அது மழையாக அந்த மண்ணில் பொழியும். அந்த மண்ணில் தாவர விதைகளை தூவினால் அது மரங்களாகத் தழைக்கும். அது பெருகி நிறையும் போது மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கூட கூடி வாழலாம் என்று உரைத்தார்கள்.
ஆக எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்றால் காடுகளும், மலைகளும், அதில் மரங்களும், தாவரங்களும் உயிர்வாழ வேண்டும். இதைப் பகுத்தறியும் திறன் கொண்ட மனித இனம் உணர வேண்டும். உல்லாச நிலைகளுக்காக காடு, மலைகளை அழித்தால் இவர்களும் உல்லாசமும் நிலைக்காது, உயிரினங்களும் இருக்காது என்பது உணர வேண்டிய உண்மையாகும்.
தமிழ் தந்த அய்வகை திணைக் கோட்பாடுகளும் அதில் விளைந்த இலக்கியம், கவிதை, காப்பியங்களும் இயற்கையின் அறங்களாக விளங்கி மரங்களையும் மற்ற தாவரங்களையும் மகிழ்வோடு வாழ்த்திப் பாடியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். மனதில் மகிழ்ச்சிப் பொங்க, அது மாறாமல் தங்க மரங்கள் நடுவதும், மரங்களைச் சாலைகளில் நிறைய நிறைய நட்டு வளர்த்த புத்தனின் வழி வந்த மாமன்னன் அசோகனை வாழ்த்துவது கடமையாகும். மரங்களை வெட்டுவோருக்கு மரண தண்டனை என்றாலும் அதை அறம் சார்ந்ததாகக் கருதலாம்.

குறிப்பு: என்மீது நம்பிக்கை வைத்து மரங்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை தர ஆணையிட்டு என்மீது அன்பு செலுத்தும் வெல்கம் ஆலை அதிபர் அன்பிற்கினியர் எஸ்.எல். அழகராஜா அவர்களுக்கு நன்றியோடு இந்தக் கட்டுரையையும் நான் எழுதிய குறிஞ்சி, முல்லை விழாக்காலம் என்ற கவிதையையும் அவரது கரங்களில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

No comments:

Post a Comment