Friday 8 January 2016

இது என்ன தீர்ப்பு?

இது என்ன தீர்ப்பு?
ஜல்லிகட்டு, ஜல்லிகட்டு என்றொரு குரல் பல இடங்களிலும் சங்கடப்பட்டு வருந்தியழுது கொண்டிருக்கிறது.
மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல், ஏறு தழுவுதல் என்று அறுவடைப்பொருள் குவிந்த நாளில் அதாவது தைப்பொங்கல் நாளில் மாட்டுப்பொங்கல் என்று கால்நடையை பாராட்டும் நாள்களில் அந்த மாடுகளில் காளைகளாக உள்ளவற்றை விளையாட்டுப் பயிற்சியளித்து அதனோடு விளையாடும் நல்ல நிகழ்வை எவனோ ஒரு தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகளை உணராதவன் தொடுத்த வழக்கில், இதை மிருகவதை என்று தவறான பொருள் கொண்ட நீதிபதியால் தடைவிதிக்கப்பட்டு, தமிழர் நெஞ்சங்களில் தவிப்பையே ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
நீதிமன்றங்களில் இருபோரின் உள்ளம் உண்மை எது, உள்ள உணர்வில் உயர்வு எது, அதில் ஊடுவி நிற்கின்ற தன்மை எது என்று உணர்ந்தவர்களாக உன்னதமானவர்களாக இருப்பது நீதியின் நிலைப்பாட்டில் நிறைவைத் தரும்.
தீர்ப்பு ஒன்றைத் தருவதால் ஏற்படும் நிலைகளை நினைத்துப் பார்த்து தீர்ப்பு தருவதுதான் அறமாகும். இந்த ஜல்லிக் கட்டுத் தீர்ப்பில் உள்ள நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் சோகமும் கலக்கமும் தோன்றுகிறது.
பசுவதைச் சட்டம் இப்போது காளை வதைச் சட்டம் என்கிறார்கள். இந்த இரண்டுமே இங்குள்ள நடைமுறைக்கு மாறாதானாகும். பசுவில் பால் கறப்பது என்பது அறமில்லாததாகும். கன்றுக்கு மட்டுமே உரிமை உள்ள பசுவின் பாலை, பசுவின் பால் காம்புகளை கசக்கிப் பிழிந்து பாலைக் கறந்து குடிப்பது எந்தவகை நீதியாகும். இதற்கு அனுமதி தந்தது ஏன் என்ற கேள்வி எழாதா?
அடுத்து இந்தப் பசுக்கள் வயதாகி வலிமை இழந்து நலிந்து எலும்பும் தோலுமாய் ஆன போது அதை அடிமாடாய் இழுத்துச் சென்று கொன்று அதன் எலும்பையும் நரம்புகளையும் மருத்துவத் துறைக்குப் பயன்படுத்துவது சரிதானா?
இதையடுத்து அதன் தோலிலிருந்துதானே கெட்டி மேளம் என்று தட்டச் சொல்லுகின்ற தாளவகைக் கருவிகளை உருவாக்கும் முறைகளை மங்கள வாத்திய மட்டுமல்ல. மகிழ்வைத் தூண்டுகின்ற இசைக்கருவிகள் கூட அதிலிருந்துதானே தோன்றுகிறது.
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி எனும் நால்வகை இசைக் கருவிகள் மாடு, ஆடு, முயல், உடும்புகளிலிருந்துதானே அதன் தோலிருந்துதானே தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த காளைகளை விரையை அதாவது அதன் பிறப்பு வீரியத்தை அழித்து அந்தக் காளைகளை ஏர்உழ, எருதுகளை வண்டியிழுக்க அதை இயக்குவதற்காக வேகப்படுத்துவதற்காக சாட்டையில் அடிப்பது, தார்க்குச்சியெனும் ஊசியால் குத்திக் குருதியை கொட்ட வைப்பது, லாடம் கட்டி கொடுமைப்படுத்துவது என்பதெல்லாம் வதையென்று நீதிபதிகளுக்குத் தெரியவில்லையா? ஆனால் காளைகளை வளர்த்து செல்லமாக பழகி, சினேகிதம் கொண்டு வளமாக வளர்த்து ஆளாக்கி பல்வேறு பாதுகாப்பு முறைகளைப் பயிற்சியாக்கி ஆண்டுக்கொருமுறை அறுவடை நாளில் விளையாடுவதை விலங்குத் தடைச் சட்டத்தில் இணைப்பது என்பது ஓர் இனத்தில் இறையாண்மையைக் கொச்சைப் படுத்துவது ஆகாதா. பல நிலை கொண்ட இந்தியா எனும் இந்த பகுதியில் எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையோடு அணுகுவது அறம் ஆகாது.
அடிமை இந்தியாவை உருவாக்கிய வெள்ளையர் சட்டத்தின் நகலாக பெரும்பாலான சட்டங்கள் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் பலர் வாதிக்கிறார்கள். இதில் வழக்கறிஞர்களாக நிற்போர் நீதிமன்றத்தையே கலவரப் பூமியாக்கி விட்டதாக நீதிமன்றம் கூறுகின்ற குறை நிலையும் குடிகொண்டிருக்கிறது. இத்தகைய வழக்கறிஞர்களில் இருந்துதான் நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார்கள்.
இந்த நீதிஅரசர்கள் என்பது அதாவது பழைய கால மன்னர்கள் அறம் மிகுதியும் சார்ந்ததாகவோ அறிவியல் உணர்வுகளை தாங்கியவர்களாகவோ இருந்ததில்லை. ஆதிக்க, ஆணவ உணர்வுகளை கொண்டவர்களாகவேதான் இருந்திருக்கிறார்கள். அந்த அரசநிலை நீதியரசர்களிடம் அண்டி விடக் கூடாது.
நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக்கூடாது. வினாவெழுப்பக் கூடாது என்கிறார்கள் சிலர். இதை ஆய்வு செய்வது சட்ட மேதைகளின் கடமையாகும்.
ஓர் அரசியல் சட்டம் வழங்கும் நீதியும் நெறிமுறையும் ஒரே மாதிரியாக இல்லாமல் முரண்படுவது ஏன்? குன்காவும் குமாரசாமியும் வடதுருவம், தென்துருவமாக தோன்றியது ஏன்? இதுபற்றி சட்டம் என்ன சொல்கிறது? இதை சரியென்று சட்டம் சொன்னால் அது எந்த வகையில் சரி என்றெல்லாம் சட்ட நிபுணர்கள் குழப்பமின்றி, குளறுபடி எதுமில்லாமல் நிதானமாக மக்களுக்கு விளக்குவது அவர்களது கடமையாக வேண்டும்.
பல்வேறு இனம், மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் கோட்பாடு, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சிந்தனையில் தோன்றும் கருத்துக்கள், அதனால் உருவான தேசியம் என்ற பற்பல நிலைகொண்ட இந்திய அரசியல் சட்டம் சமத்துவ நிலையில் இருக்கிறதா என்று ஆராய்வதும் அறிவாளர்களின் கடமையாகும்.

ஏனெனில் இங்குள்ள ஆட்சிமுறை ஜனநாயகம் அதாவது டெமாகிரசி என்றபோது தந்தை பெரியார் சொன்னார், இங்கே டெமாகிரசி என்று இல்லை பிராமனோ கிரேசி என்றார். அவர் சொன்னதுதான் இன்றுவரை எல்லா இடங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. இங்குள்ள சட்டங்களும் தீர்ப்பும் அதற்காகவே இயங்குகிறது என்ற நிலையில் சமத்துவ உணர்வு கொண்டோர் முனைவதும் போராடுவதும் கடமை என்று கருத வேண்டும்.

No comments:

Post a Comment