Saturday 2 January 2016

அறிவாளரோடு உறவாடும் மடல்

அறிவாளரோடு உறவாடும் மடல்
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துகள். வாத பிரதிவாத வல்லமையால் வருவாயும் அதன் வளங்களையும் சார்ந்த வழக்கறிஞர்களை அதிலும் முழுக்க பெண் வர்க்கத்தை அரங்கில் நிரப்பி வைத்து சமூக அவலங்களில் ஒன்றான மனமுறிவு பற்றிய கருத்துகள், செய்திகளை வெளிப்படுத்த வைத்திருக்கும் நிகழ்வை நீயா? நானா? நடத்தி மகிழவைத்திருக்கிறது.
மனமுறிவு பற்றி இரு வேறு நிலைகளை நிரல்படுத்த சொன்னதற்கு நிறைவான பதிலை செய்திகளை இன்னும் நிறைய நிறைய சொல்லியிருக்கலாம் என்றே கருதுகிறேன். குறிப்பாக சமூக அவலங்கள், உளவியல் மற்றும் சுற்றுச் சூழல்களையும் தமிழ் செழுமைகளையும் விளக்கியிருக்க வேண்டும் என்றும் மனம் நினைக்கிறது. மேல்நாட்டு நிலைமைகளை மேற்கோள் காட்டுவோர் இரு நிலைகளை எடுத்து வைக்கிறார்கள். ஒன்று பண்பாட்டுக் குறைவு என்கிறார்கள். மனதில் அன்புச் செழுமை இல்லையென்கிறார்கள். இணைந்து வாழ மறுத்து அடுத்த நிலைகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் எடுத்து விளக்குகிறார்கள்.
இதில் எண்ணிப் பார்க்க வேண்டியது என்னவெனில் தனிமனித உள்ள நிறைவே பண்பாடாகும். அன்பின் வழியது உயிர் - என்கிறான் அருமைக் குறளாசான். அன்பில் நிறைவதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே தவிர ஊர் கூடி ஆய்வற்ற நிலைகளையெல்லாம் பண்பாடு என்று முத்திரை குத்தக்கூடாது.
மேல்நாடுகளில் நிலவுகின்ற இணைவும் பிரிவும் இந்தியப் பண்பாட்டுக்கு மாறானது என்று சிலர் சொன்னார்கள். மேலும் பலரும் இங்கேயே சொல்லிய வண்ணமே இருக்கக் காண்கிறோம். இந்த இணைவும் பிரிவும் அடுத்தடுத்த நிலைகளில் எல்லாமே இங்கிருந்துதான் ஏற்றுமதியானது என்பதை இங்குள்ள சிற்றூர் வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டவள் இன்னொருத்தன் வீட்டில் குழந்தைகளைப் பெற்று வாழ்வதை சில மாதங்கள் கழித்தே தெரிந்த கொள்ள முடியும்.
சங்க காலத்தில் களவுமணம், உடன்போக்கு என்ற முறை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது. மனம் ஒன்றியவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி மணம் முடித்துக் கொள்ளலாம். உள்ளம் உடன்பட்ட இருவர்  உறவுகள் மறுத்தாலும் கூட ஒருங்கிணைந்து வாழலாம். அதை அடுத்து கற்பு எனும் ஒருநிலை வருகிறது. உடன்போக்கு, களவு மணம் புரிந்தவர்கள் கற்பு எனம் மன உறுதியோடு வாழ்கிறோம். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று உள்ளன்போடு உங்களோடு உறைகின்றோம் எனும் உறுதியை வழங்குவார்கள் இது தான் உளவியல் தூய்மையாகும்.
மற்றொன்று மணக்கின்ற இருவர் அவரவர் உள்ள நிறைவைத்தான் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தமிழ் இலக்கணம் இவைகளை அறிவியல் சார்ந்த பத்துப் பொருத்தங்களை முன்வைத்துத்தான் இணைத்து வைக்க முயன்றது. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் காத்தனர் கரணம் என்கிறது தொல்காப்பியம். (இந்த அய்யர் என்பது இன்றுள்ள பொருளில் அல்ல, பெரியவர்கள், சான்றோர்கள், அறிவாளர்கள் என்பது அன்றைய வழக்கு)
கர்ணம் எனும் கல்யாணத்திற்குத்தான் ஆண் பெண் இருவருக்கும் ஒத்துப் போகின்ற பத்துப் பொருத்தங்களை முன்வைத்தனர். ஆரிய புதைகுழிக்குள் இருந்த ஆய்வற்ற நிலைகளை மண நிகழ்வுகளில் நிலைப்படுத்தி விட்டனர் இந்த வேத அடிமைகள். மண இணைவுக்கு மார்க்கம் சொன்ன தமிழ் அறம் மணமுறிவுகளை எண்ணவில்லை. ஏனெனில் ஒவ்வொரு தமிழனும் உண்மையான உள்ளத்தைப் பெற்றிருந்தான். அவன் ஊனச் சிந்தனைக்குள் ஊடுருவவில்லை. உட்புக முனையவில்லை. ஆனால் இங்கு அன்றைய முறைகள் ஆளுமை செய்யும் நிலைமாறிய பிறகே நேர்மைக்கு மாறான முறைகள் எல்லாம் நிலைகொண்டு விட்டது.
தகுதி வாய்ந்த ஆண் பெண்ணை மணமுடித்த பின்னே தனி வாழ்வைக் காண வைத்ததுதான் தமிழர் முறையாகும். உழைப்பு, உண்மை, தமிழர் உள்ளத்தில் உறைந்ததால் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்கும் அவலம் இங்கே இருந்ததில்லை. ஆனால் சிலர் இந்த அலர் தூற்றுதலை எடுத்துக் காட்டுவார்கள். மனித மயக்கங்கள் என்பது பலவித நிலைகளால் ஏற்படும். அதை விதிவிலக்காக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பொதுவென்று சொல்லக்கூடாது. மனித மனத்தை தும்பை மலர் என்றும், தூய வெள்ளை என்றும் அறிவித்த தமிழன், உண்மைக்கு மாறான உறுத்தலோ, உள்ள நிலையோ கூடாது என்பதற்காகத்தான் சொன்னான் இதை.
அய்யம் விட்டு உண் என்றார் அவ்வைப் பெருமாட்டி. ஆனால் என்ன செய்வது. ஆரிய முறைகளும் வழக்கங்களும் நிலைகொண்ட பிறகு இந்த அய்ய அழுக்குகள் அவலங்கள் எல்லாம் இங்கே அணி சேர்ந்து கொண்டன, ஆளுமை செய்கின்றன. உளவியல் நிலையில் நிறைவும் வலிமையும் கொள்ளாதவர்களிடம் அன்பும் அறனும் அற்றுப் போனவர்களிடம் பாசமும் நேசமும் வற்றி வறுமைப் பட்டவர்களிடம் இந்த மனமுறிவு மட்டுமல்ல மற்றவற்றிலும் கூட மாசுகள் பற்றி விடும் என்பதுதான் உளவியல் உண்மையாகும். இதையெல்லாம் இன்னும் அதிக அளவில் ஆய்ந்து நீயா? நானா? அரங்கில் கொட்டிக் குவித்திருக்க வேண்டும். இந்த வல்லமை சேர் வழக்கறிஞர் பெருமாட்டிகள்.
வாடாத வருத்தமில்லா வாழ்வுக்கு தமிழ் உணர்வுகள் அதன் நெறிகளையும் அறிந்து அணிகலனாக்கினால் மணமுறிவு கேட்டு வருவோர்க்கு வலியுறுத்தி வழி அனுப்பலாம். ஏற்றத் தாழ்வான நிலையில் அன்பில்லா இடத்தில் இருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது என்றும் எடுத்துக் காட்டிருக்கலாம். சட்டம் படித்தவர்கள் வெறும் சட்ட நுணுக்கங்களையோ அதன் சந்து பொந்துகளையோ மட்டும் அறிந்து விடாமல் சமூகத்தின் கடைக்கோடி வரைக்கும் தெரிந்து தெளிவுபெறுவது அவர்களது கடமையாக வேண்டும். காரணம் இவர்கள் நீதிபதிகளாக ஆகப்போகிறவர்கள். அந்த இடத்திற்கு வருவதற்குமுன் எல்லாவற்றையும் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் இந்த அரங்கத்தில் அழகுபடுத்தியிருந்தால் நீயா? நானா? நிகழ்வு மேலும் நிறைவு கொண்டதாக இருந்திருக்கும்.
நன்றி
மழலைகளோடு மகிழ்ந்த நாள்
மழலையர்களின் மனமும் உணர்வும் மகிழ்வானது, மகத்தானது, மாசுகள் இல்லாதது மாண்புகள் சேர்ந்தது. இதில் குழந்தைகளோடு குழந்தையாக மாறி குதூகல உணர்வுகளோடு ஒளிர்ந்த கோபியின் முகமும், எதிரில் அமர்ந்து இதய நிறைவால் இதழில் இளநகையோடு இயக்கும் தங்களையும் நினைக்க வைத்த நீயா? நானா?வுக்கு நெஞ்சார்ந்த பாராட்டும் நன்றியும்.
நாட்டுப்புறச் சிறார்கள் நகரத்து வளநிலையில் வளர்ந்த மழலைகளை அரங்கில் அழகோவியமாய் அமரவைத்து பங்கெடுத்தவர்களுக்கு பரிசும் பாராட்டும் பணமுடிப்பும் வழங்கியதைப் பார்ப்பவர்கள் உள்ளத்தில் பரவச உணர்வுகள் பரவிப் படர்ந்து மகிழ வைத்திருக்கும்.
இருநிலைகளில் வாழ்ந்த இளவயதினரின் உணர்வுகளை தொகுத்துச் சொன்ன தங்கள் இருவருக்கும் மீண்டும் ஒரு கைதட்டல். விருப்பம், ஏக்கம், பயம், கனவு என உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்திய விழிப்புணர்வு குழந்தைகளிடம் இந்தப் பேய், ஆவி பற்றிய பதிவுகளை இந்தத் திரைப்பட குற்றவாளிகளே புகுத்திருக்கிறார்கள் என்ற வேதனையும் வெளிப்பட்டது.
பேய் இல்லையென்று தெளிவாக புரிய வைத்த கோபி அவர்கள், கடவுள் தெய்வங்கள் எல்லாம் இதனோடு இணைந்ததுதான் என்று சொல்லும் துணிவை பெறவில்லை என்பது இங்குள்ள சூழ்நிலைச் சிக்கல் என்பதும் புரிகிறது.

படத்துறையில் மழலைச் செல்வங்களை முழுமையாகப் பதிவு செய்த இயக்குநர்கள் பாண்டிராஜ், சார்லஸ் அவர்களின் இளமைக்கால உணர்வுகளை வெளிப்படுத்த வைத்த தங்களின் முயற்சி பாராட்டுவதற்குரியதாகும்.

No comments:

Post a Comment