Tuesday 29 December 2015

கவிதை

கவிதை
வஞ்சத்தால் வீழ்த்தினர்
வேதமோதிகள் இங்கு வந்து
விதிவினையென வித்தை காட்டி
வீரனாய் வாழ்ந்தவனை
விழிமறைத்து வீழ்த்தினர்.


சீர்மலிந்த செல்வங்களை
சிந்தனைச் செழுமைகளை
சிறுமைக்குள் சிறை வைத்து
சீரழித்து மகிழ்ந்தனர்.


பலவேறு மதங்களில் உட்புகுந்து
பாழ்படுத்தி, சீர்கெடுத்து
பண்பாட்டு நிறையளித்து
பரவசம் அடைந்தனர்.


வீரர்களின் விழிபறித்து
விந்தியப் பண்பாடுகளை
நிலைமாற்றி நிற்கவைத்து
நித்தம் மனம் பூரித்தனர்.


துணைக்கண்டம் முழுமையும்
துலங்கிநின்று ஒளிரவைத்த
தூய்மைநிலை தனையழித்து
துன்பமே தந்தனர்.


தும்பை மலர்போன்ற
தூய மொழிகளோடு
வேற்றுமொழி சொல் கலந்து
வேதனையை விதைத்தனர்.


மண் மணந்த முறைகளையும்
மணம் தூவும் நெறிகளையும்
புண்ணான செய்திகளால்
புரையோட வைத்தனர்.


தேன்போன்ற தேசியமும்
தெவிட்டாத கலைவுணர்வும்
ஆகாத மனிதர்களால்
அழிந்த நிலை தோன்றியது.


வேகாத பொருள்களையும்
வீணான முறைகளையும்
வீதியிலே முரசறைந்து
விற்று நலன் பெற்றனர்.


பழந்தமிழர் சீரழித்து
பண்பாட்டை சிறைவைத்து
பாவடிவம் பல தந்து
பார்சிரிக்கச் செய்தனர்.


கலை வடிவ எழில்சூழ்ந்த
கவிதைமண நிலை கண்ட
தன்மானத் தமிழர்களை
தாழ்ந்திடச் செய்தனர்.


வேதமோதி வந்தவரை
விருந்தினர் எனக் கருதி
வரவேற்று மகிழ்ந்தவனை
வஞ்சகத்தால் வீழ்த்தினர்.
குறிஞ்சி முல்லையின் விழாக்காலம்
புள்ளினங்கள் இசைபாடும்
பூவினங்கள் மணம் தூவும்
பூமியின் செழுமையெல்லாம்
பூரித்து மகிழ்ந்தாடும்


அருவிகள் ஆலோலம் பாடும்
அரிமாக்கள் அரசநடை போடும்
ஆனைக்கூட்டம் அசைந்தாடும்
அழகனைத்தும் ஆட்சி செய்யும்


மரங்களில் கனிகுலுங்கும்
மந்திகள் அங்குவரும்
கனிபறித்து உண்டபின்னே
கவலையின்றி இளைப்பாகும்


மலர் குலங்கும் குளிர்மண்ணில்
மானினங்கள் மருண்டோடும்
மாண்புள்ள மனிதர்களாம்
மலைக்குறவர் கலைபடைப்பர்


பச்சைக் கொடிகள் எல்லாம்
பற்றிப் படர்ந்திருக்க
அருகிலுள்ள கொம்புகளை
ஆரத் தழுவி நிற்கும்


பாருக்குள்ளே உயர்ந்து நிற்கும்
பசுமை நிறை குறிஞ்சி நிலம்
மாசுகளை துடைத்துவிடும்
மக்கள் மனம் கூத்தாடும்


விலங்கோடு பறவைகளும்
விளைந்திருக்கும் உணவுகளை
உண்டு மகிழ்ந்த பின்னே
ஊடல்கொண்டு உறவாடும்


கானகமென்று சொல்லப்பட்ட
கலைசிந்தும் மண்வளத்தை
காவியம் பாடிவைத்தார்
கபிலர் எனும் பெருமகனார்


ஓவியமாய் ஒளிர்கின்ற
ஒப்பிலாக் காடுகளை
ஏடுகளில் எழுதிக்காட்டி
இலக்கியமாக்கி வைத்தார்


இயற்கையின் எழிலெல்லாம்
இங்கேதான் தழைக்கிறது
கானகத்தின் புகழ்பாடும்
கவிதைகளை படைத்திடுவோம்


வானமளந்த மலைமுகடை
வளம்தரும் குறிஞ்சி என்று
மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்க
மாண்புரைத்தார் பாவலர்கள்


காடுகளை அழிக்கின்ற
கயவர்களை சாடிடுவோம்
குறிஞ்சி முல்லை காக்க
கூடிக் குரல் கொடுப்போம்


விளையாடும் விலங்கினங்கள்
வீசுமணப் பூவினங்கள்
கலைசிந்தும் கானகக் காட்சிகளை
கண்ணில் நிறைத்து வைப்போம்


குறிஞ்சி முல்லை திணை வாழ்வை
குறையாமல் காத்திடுவோம்
குளிர் நிறை செழுமைகளை
குறையாது தழைக்கச் செய்வோம்


குளிர்முக குறிஞ்சிக் கலியும்
முறுவலிக்கும் முல்லைக் கலியும்
முத்தமிழின் எழில் காட்டி
மூவேந்தர் புகழ் பாடும்.


முழுதான அழகமைந்த
முல்லையின் இனிமையும்
புதுமையின் எழில்காட்டி
பூமியில் புகழ் சேர்க்கும்.

ஊர்களின் விழாக்கள்
ஒருநாளில் முடிந்துவிடும்
காடுகளின் விழாக்காலம்
காலமெல்லாம் நிலைகொள்ளும்.

1 comment: