Thursday 11 December 2014

உண்மைகளை ஊடகங்கள் ஓங்கி முழங்குமா?

கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் பல்வேறு பிரச்சனைகளை ஊடகங்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு மனிதர்களை வாதிடச்செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

உள்ளூர் நிகழ்வுகளிலிருந்து உலகின் உச்சி வரை விவாதிக்கும் ஊடகங்கள் உண்மைகளைச் சொல்கின்றனவா? உள்நோக்கம் இல்லாது உரைக்கின்றனவா? காய்தல் உவத்தல் இல்லாத கண்ணியத்தை வெளிப்படுத்துகின்றனவா? எண்ணிப் பார்க்க வேண்டிய அறிவு ஜீவிகள் எடுத்துக் காட்டும் கடமையைச் செய்கிறார்களா? ஊடகங்கள் தரும் செய்திகளை அறிய ஒரு சுற்று உலா வருவோமே?

பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் பல்வேறு சட்ட வடிவங்கள் அதன் விளைவுகள் ரூபாயின் விளைவு வீழ்ச்சி, மதக் கலவரங்கள், அதற்கு யார் பொறுப்பு, உணவு பாதுகாப்பு மசோதா, பாலியல் வன்முறை, இந்திய வெளிஉறவுக் கொள்கை, சீனா பாகிஸ்தான் அத்துமீறல் இவற்றையெல்லாம் பல்வேறு மனிதர்களின் கருத்துகளை வெளிப்படுத்தி விவாதிக்கும் ஊடகங்கள் உண்மைகளை மறந்து இயங்குவது சரிதானா?

இந்திய பிரதம வேட்பாளர் யார் என்றும், அவர்களின் திறமை என்ன என்று கூட விவாதிக்கிறார்கள். விளம்பரத்தில் மின்னெல ஜொலிக்கும் மோடியை அவர் ஆட்சியை வண்ணக் கோலமிட்டு ஜோடிக்கிறார்கள்.

உண்மையை உற்றுப் பார்க்காது போலியான புள்ளி விபரங்களை உருப்பெருக்கிக் காட்டி ஊர்வாயை மூடுகிறார்கள். ஆனால் ஊர் கெடுக்கும் உதவாக்கரை ஆட்சி ஒன்று இந்தியாவின் ஒரு மாநிலத்தின் இடைஇடையே தோன்றி மக்களின் வாழ்வில் இன்னலை ஏற்படுத்தி ஏற்றநிலையை தடுத்து வருகிறதே இதைப்பற்றி யாராவது சிந்திக்கிறார்களா? சீர்தூக்கிப் பார்க்கிறார்களா?

ஆம் தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் அலங்கோலத்தை, கேடுகளை அலசி ஆராய்ந்து நாட்டுக்குச் சொல்லும் உணர்வு ஊடகங்களுக்கு இருக்கின்றதா என்றால் இம்மியும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

ஜனநாயக அமைப்பில் உருவாகும் ஓர் அரசில் தனி ஒருவர் எல்லாம் நானே ஆக்கலும் அழித்தலும் நானே எனும் பகவத் கீதை நாயகனின் பாணியில் ஆர்ப்பரிக்கும் ஜெயலலிதாவின் ஆதிக்க உணர்வில் கலைஞரன்றி யாராவது பேசுகிறார்களா?

சட்டமன்றத்தில் ஒரு சில அவசர அறிவிப்பை வெளியிட வேண்டிய 110வது விதியை தன் விருப்பத்திற்கெல்லாம் பயன்படுத்தி ஒரு சர்வாதிகார உணர்வை காட்டுவதை எந்த ஊடகமாவது விமர்சிக்கிறதா?

நாட்டில் நடக்கின்ற கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழித்தல், பண மோசடி, நில மோசடி போன்ற குற்றங்கள் தொகை, தொகையாய் பெருகி வருவதை தடுக்க இயலாத அதிமுக அரசையும் குற்றப்பின்னணியில் முக்காடிட்ட அதிமுக பெரும் புள்ளிகளை அக்கு வேராக ஆணிவேராக பிய்த்தெறிய வேண்டிய ஊடகங்கள் ஊமை நாடகம் போடுவது சரிதானா?

ஒப்பிட்டு அளவில் பல மாநிலங்களின் வளர்ச்சிகளை ஆய்ந்து கணித்து வளர்ச்சி விகிதங்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புறச் செய்கின்ற நிகழ்வுகளை காட்டுவது பொதுமக்களின் முன் தோன்றும் ஊடகங்களின் கடமையாக வேண்டும். இங்குள்ள ஊடகங்களுக்கு அந்த கடமை உணர்வு இருக்கிறதா?

வெள்ளையர்கள் காலத்திலிருந்தே வடநாட்டு மனிதர்கள் தொழிற்துறைகளை தோற்றுவித்து மக்களின் பணத்தை வங்கியின் மூலமாக வரவழைத்து வெள்ளை அரசாங்கத்திற்கு சாமரசம் வீசி சாதித்து தங்கள் பகுதிகளை வளமாக்கிக் கொண்டார்கள்.

டெல்லி, மும்பை, கல்கத்தா முதலிய பகுதிகள் முன்னேற்றம் கண்டது. மராட்டியமும் குஜராத்தும் மிக முன்னணியில் நின்றது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று இந்திய உண்மையை ஊருக்கு உரைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் பணத்தோட்டம் எனும் நூலில் பலப்பல செய்திகளில் படம்பிடித்துக் காட்டிப் பாரறியச் சொன்னார். டாட்டாக்கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சேட்டுகள், மேத்தாக்கள், சிங்கானியாக்கள், அம்பானிகள், தங்கள் வணிகத் தந்திரத்தை - சாதுர்யத்தை பயன்படுத்தி பணத்தைக் கொட்டி குவித்தார்கள். வங்கி நிறுவனர்கள் இன்றும் கூட வடஇந்தியாவின் சில மாநிலங்களில் தானே இருக்கிறார்கள்.

ஆனால், வாய்ப்பே இல்லாத அளவுகடந்த அதிகாரம் வாய்ந்த மத்திய அரசின் கருணைக் கடாட்சம் இல்லாத மாநிலங்களின் முன்னேற்றம் தானே மிக முக்கியமானது என்பதை ஓரிருவர் சொல்கிறார்கள் என்பதைத் தவிர ஊடகங்களின் வாய்கள் மூடிக் கிடக்கின்றனவே.

அறுபத்தேழில் ஆட்சிக்கு வந்த தி.மு.கவின் ஆட்சிக் கொள்கையை குறிப்பாக கலைஞரின் திட்டத்தை சாதனைகளை எந்த ஊடகமாவாது இன்று திறந்த மனத்தோடு ஆய்வு செய்து உலகிற்கு உண்மையைச் சொல்லியிருக்கிறார்களா?

வரலாற்றில் என்றும் பெறாத வாழ்க்கைக்கான நலன்களை வாரித்தந்து வளர்ச்சி முகட்டில் தமிழர்களை நிறுத்தி வைத்திருக்கின்ற கலைஞரின் சரித்திர சாதனைகளை வெளிச்சமிட்டுக் காட்டச் சொல்லவில்லை. இருட்டடிப்பு செய்யாமலாவது இருக்கலாம். அல்லவா? இல்லையென்று ஊடகங்கள், இதயச் சுத்தியோடு சொல்வார்களா?

கடந்த 46 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இரண்டு கட்சிகள் ஆண்டு வருகிறது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியின் நிர்வாகத் திட்டங்கள், அதன் பயன்கள் சமூக பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சி அதனால் விளைந்த மக்களின் நிலை உயர்வு கருத்தியல் நிலையில் தோன்றிய முன்னேற்றம் என்பதையெல்லாம் ஆய்ந்து சொல்ல வேண்டிய ஊடகங்கள் ஒருதலை நிலையில் கலைஞருக்கு எதிராக அணிவகுத்து ஆக்கமில்லா ஆமைத்தனமும் ஊமை நிலையையும் உள்ள அதிமுக-வின் ஆட்சியைத் தானே ஆதரித்தன. வணிகத்தனமும், கணிகைக் குணமும் கொண்ட உணர்வுகளுடன்தானே ஊடகங்கள் விளங்கின.

இன்னும் சொல்வதென்றால் எம்.ஜி.ஆரை ஒரு மகானாகாவும், ஜெயலலிதாவை உலக நாயகியாகவும் ஊடகங்கள் உயர்த்தியது என்பது உண்மைதானே.

கலைஞரின் ஆட்சி சாதனைகளைப் பற்றி பல்வேறு பதிவுகள் இங்கே குவிந்து கிடக்கின்றன். பல்வேறு துன்ப நிலைகளைக் கடந்து வரலாற்றில் என்றும் பெறாத இனிமையையும் இன்பத்தையும் பெற்ற தமிழர்கள் உலக அளவில் உயர்ந்து வருகின்றனர் என்பது ஊடகங்களுக்குத் தெரியும். ஏன் ஊர் உலகத்திற்குக்கூட தெரியும். ஆனால் கழகத் தோழனைத் தவிர யாரும் ஓங்கி முழங்கவில்லையே இது சரிதானா?

கலைஞரின் ஆட்சி சாதனைகளை எண் வரிசையில் பட்டியல் இடுவதென்றால் பல நாட்களாகும். அவரால் தமிழர்கள் பெற்ற பயன்களை விளக்கி சொல்வதென்றால் பல மாதங்கள் கூட ஆகும். இதெல்லாம் இங்குள்ள எல்லாக் கட்சியனருக்கு, பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஏடுகள், இதழ்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் யாருமே வெளிப்படுத்தவில்லை என்பது வேதனைதான்.

இன்றும் கூட இந்த மக்களுக்காக இன்றிருக்கும் ஆட்சியின் அவலங்களை ஆகாத நிலைகளை மக்கள் படும் துன்பம் துயரம் வேதனைகளை தினமும் விளக்கி இந்த 90 வயதிலும் பக்கபக்கமாக எழுதியும், பொதுநிகழ்வில் பேசியும், உறங்காது விழித்திருந்து உழைக்கின்ற உன்னதத்தைக்கூட ஊடகங்கள் உணரவில்லை என்றால் ஊடகங்களை நடத்துவோர் உண்மையில் மனச்சாட்சிகள் கொண்ட மனிதர்கள்தானா? என்ற அய்யம் எழுவது இயல்புதானே.

ஊடகங்களைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அறிவாளர் பெற்றெடுத்த பத்திரிக்கை பெண்ணே என்றார். பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாக்கப்பெறின் - என்பது குறள். பத்திரிக்கைப் பெண்ணிற்கும் கற்பு தேவைதானே.

ஈடற்ற, இணையற்ற, உவமைகாட்ட இயலாத கலைஞரின் உணர்வையும், உழைப்பையும், ஆட்சித் திறத்தையும், அதனால் மக்கள் அடைந்த பயன்களையும் இனிவரும் நாட்களிலாவது எடுத்துக் காட்டவில்லை எழுதிக்காட்டவில்லை என்றால் எதிர்கால ஆய்வாளர்களும் மக்களும் ஊடக நிறுவனங்களை குடிகாரனின் கொச்சை மொழியில் திட்டினால் கூட சரியென்றே சொல்லத் தோன்றும்.

ஜனாதிபதியும், சபாநாயகரும் ஒரு கட்சியின் சார்பில் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். பதவியேற்ற நாட்களிலிருந்து எல்லாருக்கும் பொதுவானவர் ஆகி விடுகின்றனர். அதுபோலவே ஊடகங்களை நடத்துவோர் எந்தக் கருத்தைக் கொண்டவராயினும் அவர் நடுநிலையோடு தான் நடந்து கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ஆய்வு நோக்கில் ஆக்கப் பார்வையில்தான் ஊடக நிகழ்வுகள் உருப்பெற வேண்டும். உண்மைகள் ஓங்கி ஒலிக்கின்ற நிலை நாளும் நாளும் நல்ல நிலை பெற வேண்டும். ஓர் சமூக அமைப்பு நன்றாக இருந்தால்தான் நாடும் மனிதர்களும் நலம் பெற இயலும். அதில் ஊடக ஈடுபாடு உள்ளவர்களும் பொருந்தும்.

ஓர் இன்றியமையாத நிலை தெரிந்த ஊடகவியலாளர்கள் உணர்வது கடமை என்று கருதுகிறோம்.


தொலைக்காட்சி ஏடுகள் இதழ்கள் எந்த மொழியில் இயங்குகிறதோ அந்தமொழி பேசும் மக்களின் உழைப்பில் விளைந்த பொருளால் தங்கள் வீட்டு அடுப்பு எரிகிறது அந்த மக்களுக்கு உரியதைத்தான் உச்சக் கட்ட மனிதர்கள் வரை உண்கிறார்கள், திண்கிறார்கள், உடுத்தி உணர்ந்து உல்லாச வாழ்வு காண்கிறார்கள் என்பதை பொதுமக்கள் தொடர்பு கொண்ட எல்லோரும் உணர்வது மட்டுமின்றி ஊருக்குச் சொல்ல வேண்டும். அதுதான் நன்றியின் அடையாளம், நல்லொழுக்கம், அறிவு, நாணயம் ஆகும். எதிர் காலத்திலாவது இந்த அடிப்படை உணர்வுகளின் உண்மைகளை ஊடகங்கள் ஓங்கி முழங்குமா?

No comments:

Post a Comment