Sunday 9 November 2014

இயற்கையழைத்த இலட்சிய நடிகர்

இலட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ்.இராசேந்திரன் அவர்களை இயற்கை தன்னிடம் இணைத்துக் கொண்டது. இயற்கை வகுத்த வேதியியல் முறைப்படி இயங்குவதுதான் இந்த உலகில் வாழும் உடல்களும் அதன் இயக்கமும்அந்த வகையில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து தனது இறுதி நாளை இலட்சிய நடிகர் அடைந்து அமைதியாகி விட்டார்.
அறிவியக்கப்பாதையில் நடைபோட்டு திராவிட இயக்கம் தந்த கொள்கை வழி நடந்து சாதனைகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று சிறந்த வாழ்வை நடத்தி மறைந்திருக்கிறார்.எல்லாவற்றிலும் சிறப்பாக அண்ணாவை தன் மனதில் உறைய வைத்து அவர் வழியில் பொது வாழ்வில் புகழ்சூடி மறைந்திருக்கிறார். அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.கவில் தீவிர பணியாற்றிய தீரராகத் திகழ்ந்தார். நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம் என்று தி.மு.கவிற்கு பொது மக்களின் ஆதரவையும் தொண்டர்களின் உழைப்பு முயற்சியையும் வியந்து விளக்கியவர் அவர்.
அண்ணா இவர் மீது வைத்த பாசத்தைப் போலவே இவர் அண்ணாவின் மீது மாசற்ற பாசத்தைப் பதிய வைத்துப் பணியாற்றினார். அண்ணாவின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் திரு. எஸ்.எஸ்.ஆர் அவர்கள்தான். ஆம் அண்ணாவின் அய்ம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி அய்ம்பது பொருட்களை பரிசாக அளித்தார். அந்தப் பொருட்களை எண்ணிப் பார்த்த பேராசிரியர் நாற்பத்து ஒன்பது தான் இருக்கிறது ஒன்று குறைகிறது என்றார். அதற்கு திரு. எஸ்.எஸ்.ஆர் அவர்கள் அந்த ஒன்று என் உயிர் என்று தன் கலை அறிவையும் அண்ணாமீது வைத்த அளாவிடாத அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார்.
கட்சிப் பிரசாரத்திலும் கழகப் பணிகளிலும் ஈடுபாடு காட்டினார். கழகம் போட்டியிட்ட முதல் தேர்தலில் தேனித்தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். அன்றைய மதுரை மாவட்டத்தில் வலிமைமிக்க அடாவடி அரசியல் நடத்திய காங்கிரசின் தேனி தியாகராசனை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.
அடுத்து வந்த 1962 தேர்தலில் அதே தியாகராசனை எதிர்த்து வெற்றி வாகை சூடினார். கலைத்துறையைச் சேர்ந்த ஒரு நடிகர் சட்டமன்ற உறுப்பினராக ஆனது உலகிலேயே இவர்தான் முதல்வர். அத்துடன் தயாரிப்பாளர் இயக்குநராக தயாரித்த முதல் படமான தங்கரத்தினம் படத்தில் திமுக கொடியையும் மதுரை மாவட்டக் கழக மாநாட்டையும் மக்களுக்குக் காட்டினார். அத்துடன் அந்த மாநாட்டுப் பந்தலில் ஒரு தொண்டராக உணர்ச்சி மிகுந்த குரலில் அண்ணா வாழ்க, தி.மு.. வாழ்க என்று உரத்து ஓங்கி முழங்கவும் செய்தார். அன்றைய காங்கிரசை எதிர்த்து செயல்பட்டது மிகுந்த தீரமான செயலாகும்.
இளமை முதல் இறுதி நாள் வரை மிக அழகாக தோன்றிய அவரை இயற்கையும் நேசித்தது போல; அவரை அணைத்து இணைத்துக்  கொண்டது . சாவது புதிது அன்று என்றான் சங்கத்து கணியன் பூங்குன்றன்.

     நெடுநாள் உளனொருவன் இன்றில்லை என்ற சிறப்புடைத்து இவ்வுலக 
என்றான் வள்ளுவப் பேராசன். அதுபோல அவரும் சங்ககாலக் கவிதைக்கும் 
குறளுக்கும் உயர்வு தந்து உயிர் இழந்தார் என்ற பெருமையோடு அவரை நினைவில் வைப்போம்.

No comments:

Post a Comment