Thursday 6 November 2014

கற்பனை....

மூளையில் ஒரு முக்கிய இடத்தில் உருவாகும் ஓர் அருமையான உணர்வு ஆகும். உயிரை நிலைபெறச் செய்யும் மூளையில் உள்ள ஒரு நரம்பில் தான் கனவும், கற்பனையும் உருவாகிறது. அந்த நரம்பு இல்லையென்றால் உடல் இயக்கம் நின்று போய் விடும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

அய்ம்பொறிகளில் அதாவது புலன்களில், கண்ணில் தோன்றும் காட்சிகள், காதில் கேட்கும் ஒலிகள், நாவின் சுவைகள், நாசியில் படும் மணங்கள், தோலில் படும் தொடு உணர்வு (ஸ்பரிசம்) ஆகியவற்றால் மூளையில் தோன்றுவதுதான் கனவும் கற்பனையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வேதியியல் வினைகளால் உருவான வான், மண், வளி (காற்று) ஒளி, நீர், ஆகியவற்றால் உருவான உயிரினங்களின் மூளை வளர்ச்சியில் தோன்றியதுதான் கற்பனையாகும்.

கற்பனை என்பது, ஒன்றுமில்லாதது என்று பலர் எண்ணியிருக்க கூடும், கற்பனை என்பது வெறுமையில் உருவானது அல்ல. மெய், வாய், கண், காது, நாக்கு ஆகியவற்றின் கூட்டு வடிவமாகவே கற்பனை தோன்றுகிறது. உதாரணமாக, சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது கற்பனைதான். ஆனால் அது வெறுமையில் தோன்றிய எண்ணம் அல்ல. பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் மூன்று கண் மிருகம் ஒன்று வாழ்ந்தது என்பது உண்மையாகும். அதன் அடியில் தோன்றியது தான் இந்தக் கற்பனை. ஏனெனில் எல்லா நிகழ்வுகளும் தொடர்புடையதாகும்.

இராவணின் பத்துதலை கற்பனைதான். ஆனால் வெற்றிடத்தில் தோன்றியதல்ல. இன்னும் கூட மயங்கிய கண்களுக்கு ஒன்று பத்தாக தெரிகிறது. அதன் வழியில் தோன்றியதுதான் பத்து தலை இராவணன்.

பிரபஞ்ச பெருவெளியில் பரவி நின்று, தொடர்பு கொண்டு, வேதிகளால் (இரசாயனம்) உருவான பொருள்களை தோற்றுவிக்கவும், மாற்றவும், வளர்க்கவும், மயக்கவும், மறைக்கவும், ஒழிக்கவுமான, ஆக்கமும், அழிக்கவுமான செயல்களை ஆற்றிக் கொண்டிருக்கிறது இயற்கையின் வேதி வினைகள்.

இதில் உடலில் சேருகின்ற வேதியின் அடிப்படையில் எண்ணங்களும், அதன் வழி செயல்களும் இயங்குவதைக் காணலாம். எல்லாம் அளவோடு அமைந்தால், இயல்பாக இயங்குவதைக் காணலாம். உடலில் வேதியின் அளவு கூடினாலோ, குறைந்தாலோ எல்லாம் இடர்பாடானதாகவோ இருக்க காணலாம்.

எடுத்துக்காட்டாக உடலின் கொழுப்பு கூடினால் அது உணவிலும் சேர்ந்து கொண்டால், கொடூர செயல்களில் ஈடுபடக் காணலாம். அதற்கு முன் கற்பனையாலும் இது கூடியிருக்கும்.

புராண இதிகாசங்களில் காணப்பட்ட பல்வேறு கதைகள், காவியங்களில் வரும் கற்பனை காட்சிகளெல்லாம் உயிரினங்களில் புறக் காட்சிகளின் வழியேதான் உருவானது என்கிறார்கள் உலகில் சிறந்த மேதைகள்.

வான்பரிதி தோன்றுகிறது. அது பல்வேறு நிலை காட்டுகிறது. காலையில் இளம்பரிதி, மதியத்தில் கடும் சூடு கொண்ட சூரியன், மாலையில் மஞ்சள் வெயிலில் மயக்கம் தரும் தோற்றம், காற்று பல நிலைகளில் வீசுகிறது. இயல்பான காற்று இளம் தென்றல், சுற்றி அடிக்கும் சூறாவளியாக, பூமியைப் புரட்டிப்போடும் புயல், பேரிரைச்சலோடு பெருங்காற்று, பேய்க்காற்று ஆக மாறி வருகிறது.

வானிலிருந்து மழை நம்மை வாழ்த்தும் தூறலாகிறது, இளம் சாரலாகிறது, அதுவே அடைமழை, தொடர்மழையாகிறது, நிலத்தையே நீர் நிலையாக்கும் பெருமழை, பேய் மழையாக கொட்டி, பூமியைக் குளிரால் பூரித்து புல்லரிக்க வைக்கிறது.

இதையெல்லாம் மூளையில் வளர்ச்சி பெற்ற எண்ண அலைகளுக்குள் இழையோடுகிறது. அது பின்னர் பெரிதாகவும், சிறிதாகவும், சிறியதை பெரிதாகவும், பெரியதை சிறியதாகவும் கற்பனை செய்கிறது.

இன்று வீடியோ கவரேஜ், டிஜிட்டல் கிராபிக்ஸ் என்கிறார்களே அது உயிரினங்களின் மூளையில் குடி கொண்டிருப்பதுதான். எடுத்துக்காட்டாக சொல்வதென்றால், சின்னஞ்சிறு செவி வழிக் கதைகளைக் கேட்டு சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளிடம் எடுத்து விளக்க அதை எண் சுவை இலக்கிய விதிகளோடு தமிழகத்தை இணைத்துக் காட்டி சிலப்பதிகாரமாக வெளிவந்து, நம் உணர்வுகளை தித்திக்க வைத்தது.

மாலை நேரத்தில் மேகம் பல்வேறு காட்சிகளை காற்றின் துணையோடு படைக்கிறது. காட்சி மறைகிறது, புதிதாய் மாறுகிறது. எண்ண அலைகள் எண்ணற்ற கற்பனைகள் தோன்றி நமக்கு இனிப்பூட்டுகிறது. இந்த அழகோடுதான் மேகத்தை தூதுவிட்டான் சாகுந்தலக் காளிதாசன்.

இமயமலை அடிவாரத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சண்டையும், அந்த குடும்பத்தின் வாழ்க்கை முறையும் வியாசரின் கற்பனைத் திறத்தால், மகாபாரதமாகி மக்கள் வாழ்வோடு நெருங்கி நிற்கிறது.

நேபாளத்தில் தோன்றிய புத்த சாதக கதைகளில் ஒன்றின் இராமன் - சீதை -இராவணின் குறிப்புகளை வைத்து வால்மீகியின் கற்பனை இராமாயணமாக உருவெடுத்தது. இன்று வரை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்றமிகு நிலை தடுத்து இடர்பாடுகளை உருவாக்கி வருகிறது.

வால்மீகியை மொழிபெயர்த்த கம்பன், மொழி பெயர்ப்பு விதிகளுக்கு மாறாக தன் கற்பனைகளை சேர்த்து இராமனையும் சீதையையும் குரங்கு முகம் கொண்ட அனுமனையும் தனது கவித்திறத்தால் தமிழர்களின் தெய்வமாகவே ஆக்கி விட்டார்.
எழுதுகோல் வேந்தர், இலக்கியச் செல்வர், இலட்சிய வழிகாட்டும் எழிலார்ந்த இனமொழிப் பண்பாட்டை காத்து வளர்க்கும் இனிய எங்கள் தி.மு. தலைவர் கலைஞர் அவர்கள், அண்ணன் எஸ்.எஸ். தென்னரசு எழுதிய செம்மாதுளை எனும் பாகனேரி - பட்ட மங்கலம் எனும் ஊரின் சிற்றரசர்களின் உண்மைக் கதைகளை சிறிய அளவில் எழுதியிருந்தார். அதை தென்பாண்டி சிங்கம் என்று கற்பனைக் கலை கொஞ்சும் காவியமாக வார்த்தளித்தார்.

தென்னரசு வேண்டுகோளுக்கு இணங்க குன்றுடையார் கோவில் எனும் அண்ணன்மார் சாமிகள் என்று வி பொன்னர் சங்கம் எனும் உணர்ச்சியூட்டும் வடிவங்களாக கற்பனையோடு படைத்தார் கலைஞர்.

இலங்கையில் வாழ்ந்த இலட்சியப் போராளி, பண்டார வன்னியனை வரலாற்றுப் பெருமையோடு இணைத்து பாயும் புலி பண்டார வன்னியன் என்று எழுச்சியுடன் புனைந்து பல்கலைக் கழகம் தரவேண்டியதெல்லாம் தந்து நம்மை மகிழ்வித்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

இரசிக்க வைக்கும் கற்பனைகள், நம்மை மகிழ வைக்கும், மலைக்க வைக்கும். கற்பனைகள், சில நேரங்களில் நாசத்தை விளைவிக்கும்.

அறிவியலில் விளைந்த பொருட்களெல்லாம் அறிஞர்களின் கற்பனையில் தான் முதலில் உருவானது. கனவுகளில் தோன்றியது. உளவியல் மாமேதை சிக்மண்ட் பிராய்ட் மிகத் தெளிவாக விளக்கினார். அணு விஞ்ஞானி அப்துல்கலாம் மாணவர்களை கனவு காண வலியுறுத்துகிறார்.

      கனவின் தாயகம் கற்பனைகள் தாம், கனவின் வெளிப்பாடுகள்தான் உலகில் 

உள்ள மதச் சின்னங்கள் எல்லாம். சோழ மன்னன், கோச்செங்கணானின் தாயின் 

கனவுதான், பெரும்பாலான கோயில்கள். நல்ல கற்பனையும், கனவுகளும் நலம் 

தரும். கெட்ட கற்பனையும் கனவும் கேடுகள் சூழவே பயன் தரும்.

No comments:

Post a Comment