Saturday 8 November 2014

முதுமை

முதுமை - ---உடல் படைத்த உயிர்கள் எல்லாமே சந்திக்க வேண்டிய சங்கடம்தான். கருவறையில் உருவாகி கல்லறை வரைக்கும் பல்வேறு மாற்றங்கள் என்பது நிகழந்தே தீரும். இதை மாற்றவோ, மறுக்கவோ இதுவரை ஏதுமில்லை.

தத்துவ சிறப்புற்ற தமிழ் மொழியில், முதுமைக்குச் செல்லும் வழிகளை சொல்வதுண்டு, பத்தில் பால்யம், இருபதில் எழுச்சி, முப்பதில் முறுக்கு, நாற்பதில் நடுக்கம், அய்ம்பதில் அசதி, அறுபதில் ஆட்டம், எழுபதில் ஏக்கம், எண்பதில் தூக்கம்.

எதையும் இசையோடு, கலையோடு, எழிலோடு, அழகோடு சொல்லும் தமிழ், இறுதி நாளை எட்டுவதைக்கூட எதுகையோடு சொல்கிறது. உண்மையில் முதுமை என்பதை எண்ணிப் பார்த்தால் இனிக்கவும் செய்யும், இடர்ப்படவும் வைக்கும்.

தாய் எட்டடி என்றால், குட்டி இருமடங்கு என்பது, இளமையையும், முதுமையையும் எடுத்துக் காட்ட சொல்லப்பட்டதுதான். உடலும் மனதும் வயதாகும்போது ஓய்ந்து விடுகிறது. உணர்வுகள் உலர்ந்து போகிறது. உழைத்தால் கால் முட்டியும் கழுத்து நரம்புகளும் தேய்ந்து போய் தெம்பும் குறைந்து விடுகிறது.

வேகம் சுருங்கி, விறுவிறுப்பு குன்றி, சுறுசுறுப்பு சோர்ந்து விடுகிறது. எதையும் எதிர்கொள்ள முடியாமல் இதய வலிமை குன்றி விடுகிறது.

பகுத்தறிவு பாவேந்தர் தனது முதியோர் காதலில் மூழ்கித் திளைத்ததைப் படிப்போம். அந்தப் பெரியவரின் முதுமை நிலையை இப்படிப் பாடுகிறார் பாவேந்தர்.

அன்று செய்த பொருள் அடுத்த நாள் பழசாகும்
நீதரும் இன்பம் நித்தப் புதுமையடி என்ற பெரியவர்
காற்றில் சருகுபோல் தவழ்ந்து வந்தாள்
அருகருகே இருவர்; செயல்தான் இல்லை
இவள் இருப்பதொன்றே இன்பம் என்றார்.

இயலாமையால் ஏற்படும் எண்ணச் சுவடுகள் இமயம் அளவு வளர்ந்து விடுகிறது. எதிலும் ஓர் ஈடுபாடு இல்லாது இருந்த இடத்திலேயே இருந்து விடும் இயல்பு வளர்ந்து விடுகிறது. ஓடியாடி உழைத்த உடல் ஓய்ந்து விடும் நிலை கண்டு உள்ளம் கவலையில் சாய்ந்து விடுகிறது. நலிந்து நடமாடும் நிலை குன்றிய நாட்களில், இளமையில் ஊஞ்சலாடிய எண்ணங்களும், செயல்களும் ஏன் சேட்டைகளும் கூட எதிர்நின்று எள்ளி நகையாடும் காட்சி தோன்றுகிறது.

கட்டுடல் வாய்ந்து, கலை உணர்வில் நீந்தி, கவின்நிலைத் தோற்றத்தோடு, காளையாய் தெருவில் நடந்து - கண்ணசைவில் தோன்றிய காட்சிகள்- ----------------------------------------------- தோன்றும் போது பெருமூச்சு, பேரளவிற்கு வெளியேறுகிறது.

பொட்டு வைத்து, பூமுடித்து, புன்னகைத்து, புதுப்புது உடையுடுத்தி, புதுக்கோலம் பூண்டு ஆலயத்திற்கு சென்றாலும் தனது ஆசைத் தோழிகளைச் கண்டாலும், வயதாகின்றபோது மனம் வாடிப்போகிறது.

விதவிதமான வண்ணக் காட்சிகளைக் கண்ட கண்கள், எதிர்நிற்கும் எதுவும் தெரியாமல் அருகில் அமர்ந்துள்ளவரை அறியாமல், அலைமோதும் கண்களையும், மனதையும் எண்ணி, மனம் மகிழ்கிறது.

எதிரில் வரும் இளசுகளைக் கண்டால் தாங்கள் எழிலழகோடு இருந்த நாட்கள் இதயத்தில் தோன்றி என்னென்னமோ செய்கிறது. இயல்பாகவே இருக்கின்ற நிலையைச் சொல்ல, கிழவன், கிழவி என்று சொன்னால் உள்ளம் வாடி வதங்கி எரிச்சல் உண்டாகி சொன்னவரைச் சாடும் நிலை ஏற்படுகிறது.

என்னதான் வயதாகிப் போனாலும் இளமை நாட்களை, அதிலும் காதல் நினைவுகளை நினைக்கின்ற போது இளமை திரும்பி இன்பமூட்டுவதைக் காணலாம். உறங்கும்போது கனவுகள் உல்லாசபுரிக்கு அழைத்துச் செல்வதாக இருக்கலாம்.

வயதானபோது ஏற்படும் வாட்டமும், வருத்தமும், இந்த நாட்டை விட வளர்ந்த நேச நாடுகளில் குறைவாகவே இருப்பதைக் காணலாம். இங்கு மணமுடித்து ஓரிரு குழந்தைகளைப் பெற்ற பெண்கள், தன்னை வயதானவர்களாகவே உணர்கிறார்கள். ஆனால், மேல்நாடுகளில் இருபது வயது இளமை இன்பத்தை எழுவது வயதிலும் ஆழமாக உணர்ந்து துய்க்கிறார்கள். அறிவியல் உணர்வுகள் ஆழமாகப் பதிந்திருப்பதால் எண்பது வயதிலும் சாதனை படைக்க துடிப்பவர்கள் அங்கே அநேகம் பேர் உண்டு.

மதம் சார்ந்த மவுடீக உணர்வு அதிகம் இங்கே ஆளுமை செய்வதால் இளமையிலேயே கிழடு தட்டிப் போகின்றவர்கள் இங்கே நிறையப் பேர் உண்டு. இயற்கையின் இயக்கமே அறிவியல் என்பதை உணராமல் எல்லாம் அவன் செயல் என்று எண்ணுவதால் வயதான தோற்றத்தை உடலும் மனமும் வரவழைத்து வாடிவிடும் நிலை காணலாம்.

இளமையின் உணர்வோட்டத்தோடு எண்பது தொன்னூறுகளிலும் இயங்கும் மேதைகள் தலைவர் கலைஞரும், பேராசிரியரும் இங்கோர் எடுத்துக்காட்டாக திகழ்வதைக் காண்கிறோம். பல்வேறு பணிகளில் சோர்வின்றி இயங்குவது சிறப்புக்குரியது. பண்டித நேரு அவர்கள் மிக குறைந்த நேரமே உறங்கி, உழைத்தார் என்பதும் வரலாற்றில் பதிந்த உண்மையாகும்.

தங்கள் விழிமூடி இந்த உலகிலிருந்து விடைபெறும் நேரம்வரை பெரிதும் மகிழ்ச்சியுடன் தந்தை பெரியாரும், அண்ணாவும் உழைத்தார்கள் என்பது இந்த நாடு கண்ட உண்மையாகும்.

நம் கண் முன்னே வாழ்ந்திருந்து உழைத்து, வெற்றிகளைக் குவித்து, வரலாறு படைத்த பின்னரும் கூட இளமை குன்றாமல் கலைஞர் அவர்கள் இயங்குவதற்குக் காரணம் அவரிடமிருந்த கலையுணர்வே காரணமாகும்.

என் தம்பிமார்களிடம் எல்லாம் இருந்தாலும் தம்பி கருணாநிதியிடம் உள்ள கலையுணர்வை எல்லோரும் பெற வேண்டும். அதுதான் உழைப்பதற்கும், வெற்றி காண்பதற்கும் உதவும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

சீர் நிறைந்த கலையுணர்வும், சிந்தனைச் செழுமையும் உள்ளத்தை ஆளுமை செய்தால் சோர்வு என்பது எந்த வயதிலும் தோன்றாது. உயிர்களின் உடலைத் தவிர மற்றவற்றில் முதுமை சிறப்புக்குரியதாகவே உயர்த்தப்படுகிறது.



கல்வியில் முதுநிலை கல்வியே உயர்வானது, தாவரங்களின் முதுமைதான் வலிமையானது. முதிர்ந்த பின்தான் பொருள்களில் வைரம் விளைகிறது. முதுகுடி, முதுமலை, முதுகுன்றம், முதுகுன்றத்தூர், முதுமக்கள் தாழி என்றெல்லாம் மதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment