Thursday 3 September 2015

ஆய்வுகள் நிகழ்வுகள்


தமிழ் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாத நிலை தோன்றியது.

இருப்பினும் உலக நிகழ்வுகளை கணித்துச் சொல்லுகின்ற ஐக்கிய நாடுகளின் மன்றமொன்று அறைந்ததை நினைக்கின்ற போது நெஞ்சம் பதறுகின்றது.

ஆம், அடுத்து வரும் நூறு ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் அழிந்து மறைந்து விடும் என்று அந்த அமைப்புக் கூறியிருந்தது.

மொழி தோன்றிய நாளிலிருந்து எளிமை, இனிமை, எழில், அழகு, இதய நிறைவு என்று எத்தனையோ தந்தாலும் பெருகி வரும் மக்கள் தொகையை வளமுறச் செய்யும் கருவிகளையும் கருவிகள் தந்து பொருள் குவிதலுக்குகந்த வகையில் தமிழ் தன்னை ஆயத்துப்படுத்திக் கொண்டதா என்றால் முற்றிலும் இல்லை என்பதுதான் முழு உண்மையாகும்.

அது மொழியின் குற்றமல்ல. அந்த மொழி பேசும் மக்களின், அந்த மக்கள் கூட்டத்தை வழி நடத்தும் பேராளர்களின் குற்றமாகும்.

தந்தை பெரியார் மொழியில் சொல்வதென்றால், தமிழ் ஓர் அறிவியல் மொழி. ஆங்கிலத்திலும் குறைவான வரிவடிவங்களால் அதை இயங்கச் செய்ய இயலும்.

அறிஞர் அண்ணா கூறியதை நினைவில் கொண்டால்.. மிகக் குறைந்த எழுத்துக்களால் எல்லாப் பொருள்களையும் எடுத்தெழுத முடியும். ஓரெழுத்து, இரண்டெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து மூலமே தொண்ணூறு விழுக்காடுச் சொற்கள் தமிழில் இருப்பதை அண்ணா எடுத்துக் காட்டுகிறார்.

உலக மொழிகளின் வேர்கள் அனைத்தும் தமிழ் நோக்கியே விரிவதாக ஆய்வாளர்கள் பலர் தங்கள் ஆய்வுகளின் முடிவாக முழங்குகிறார்கள்.

ஆக எல்லாச் சிறப்பும், இயக்க ஆற்றலும் இருந்தும் உலக மொழியாக உவகை தரும் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் அது வளர்க்கப்படவில்லை என்பது கல் போன்ற உண்மையாகும்.

தொல்காப்பியும் கூறும் இலக்கண நுட்பங்கள், சங்க இலக்கியச் கவிதைகல் வழங்கும் இயற்கை ஆய்வு நெறிகள், உளவியலின் உள்ளுணர்வுகளை உற்று நோக்கி செயல்முறைப் பயிற்சிகளை செய்திருந்தால் சிந்தை மகிழும் நிலை தமிழிக்குத் தோன்றியிருக்கும்.

இயற்கையின் இயக்கம் என்பது வளர்ச்சியை தோற்றுவித்து முன்னோக்கி செல்லும் என்பதுதான். அதை மேலும், மேலும் மேம்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழைக் கையாண்டவர்கள் நிலை தடுமாறி நேர்வழியை மறந்ததால் நெஞ்சினிக்கும் நிகழ்வுள் தமிழை விட்டு நெடுந்தொலைவு சென்று விட்டது.

எழில் மிகுந்த சங்க காலத் தமிழ்ச்சிந்தனை, இந்திய துணைக் கண்டச் சிந்தனையாக சிதைந்து சீரழியத் தொடங்கியது.

புராண இதிகாசப் புனைவுகள், தகுதியற்ற தனி நபர் வழிபாடு, மக்கள் மனதை ஆய்வுகள் நிறைந்த கூடமாக ஆக்குவதை விடுத்து அடிமை மடமாக ஆக்கும் கலை வடிவங்கள் எல்லாம் உணர்வை, மனதை கூர் மழுங்கச் செய்தது என்பது இமாலய உண்மையாகும்.

தொல்காப்பியர் உயிர்களின் அதன் உருவங்களை அறிவியல் முறையில் ஆய்ந்து சொன்னதை இன்றைய உயர் அறிவியல் கூட மறுக்கவில்லை. அணுவை அன்றே கண்டவர் நம் ஔவையார்.

கணியன் பூங்குன்றன் உரைத்த உலகம் ஒன்று என்பதையும், உலகமாந்தர் அனைவரும் ஓரிடத்தில் தோன்றிய உறவுக் கூட்டம் என்பதையும் தமிழில் தோன்றிய தலைசிறந்த சிந்தனையெல்லாம் உயர் அறிவாளர் யாவரும் உணர்ந்து உவந்து பாராட்டுகின்றனர்.

கதிரவனின் தீப்பிழப்பிலிலுந்து வந்து குளிர்ந்ததே இந்த நிலம் என்றுரைத்த சங்க கவிதையும், வளவன் ஏவா வானவூர்தி எனும் சங்க கவிஞனின் கற்பனை அல்லது யூகமும் தமிழ்ச் சிந்தனையாளர்கள் - அறிவாளிகள் - ஆய்வாளர்கள் மனதைத் தொட்டிருந்தால், ஆய்வுகள் தொடங்கி தொடர்ந்திருந்தால் தொழிற்புரட்சியும், அதன் தொடர்ச்சியான தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கேதான் தோன்றியிருக்கும்.

ஆனால் இங்கே நிகழ்ந்ததென்ன? தமிழ்ச் சிந்தனையை தவற விட்டு இந்தியச் சிந்தனையை இதயத்தில் கொண்டதால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக மதம் சார்ந்த மவுடீகம் சார்ந்த இயல்பினர்களாகவே தமிழர்கள் வசித்தார்கள்.

இயற்கையை உற்று நோக்கி எதையும் ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கும் தமிழ்ச் சிந்தனையின் வழி மறந்ததால் எதையும் ஆய்வின்றி ஏற்றுக் கொள்ளும் இந்தியச் சிந்தனை தமிழிரைச் சிறை செய்தது.

கிரேக்கச் சிந்தனையாளர்களின் உள்ளத்தை ஊடுருவிப் பாருங்கள். ஏதன்ஸ் சாக்ரடீசை தன் இதயத்தில் ஏற்றி வைத்து நேசித்தாலும் பல இடங்களிலும் பிளேட்டோ, அவனில் இருந்து மாறுபட்டு முன்னேற்றக் கருத்துகளை முன் வைக்கிறார்.

பிளேட்டோவை பிதா மகனாகக் கருதும் அரிஸ்டாட்டில் அவனில் இருந்து வளர்ந்து ஆய்வு முறைகளை அள்ளி வழங்குகிறார். இங்கே இந்திய சிந்தனையாளர்கள் அல்லது மேதைகள், ஞானிகள், முனிவர்கள், ரிசிகளின் இதயப் பரப்பை, எண்ண ஓட்டத்தை எண்ணிப் பார்த்தால் ஆய்வு முறைகள் ஆழப் புதைக்கப்பட்டதாகவே தெரியும்.

இங்கே எதையும் ஆய்ந்து சொல்வது என்பது பொருந்தாச் செயல் (அபத்தம்) என்று சொல்லப்பட்டது. முன்னோர் சொன்னது எதுவென்றாலும் மறுக்கக் கூடாது. மறுத்தால் அது மாபெரும் தண்டனைக்குரியது என்கிறார்கள். இந்த இழிநிலை இன்று வரை இங்கு நீடித்த வண்ணம் இருக்கிறது.

வழி வழி மன்னர் முறை என்பது வல்லான் வகுத்த விதிமுறை என்பதை உணர மறுத்தார்கள். மன்னனின் வாயிலிருந்து உதிர்வதெல்லாம் வாய்மை என்றார்கள். பின் அவன் இறந்த பின் கடவுளாக்கி அடிக்கடி தோன்றுகின்ற அவதாரமாக்கி கோவில் கட்டி மக்களை அடிமை இருட்டறையில் அடைத்து வைத்தார்கள். இந்த உணர்வுகள் இன்னும் இங்கே கிளை விரித்து படர்ந்தவாறு இருக்கிறது.

சிந்தனையின் ஆய்வில் சிறகுகளை இந்தியச் சிந்தனை வழிவந்தோர் ஒடித்து உயிர்வதை செய்தார்கள். சிந்தனை என்பது தடைகளற்று சிறகடித்துப் பறக்க வேண்டும். அது இங்கே இயலாமற் போய் விட்டது.

ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள், அரிஸ்டாட்டிலின் அடிமைகளாய் அறியாமை இருட்டில் கிடந்த ஐரோப்பிய அறிஞர்களை, விழிப்புற செய்கின்ற வித்தையை வெளிப்படுத்தினான் அறிஞன் கலிலியோ கலிலி.

ஆம். அரிஸ்டாட்டில் ஒரு முட்டாள் என்றான். ஐரோப்பா அதிர்ந்தது. மதபீடம் மத யானையானது. ஆய்ந்து பாராது கலிலியோவை கண்டித்தது, தண்டித்தது.

அப்படியென்ன அரிஸ்டாட்டிலைப் பற்றி கலிலியோ சொன்னார்? ஆண்களுக்கு முப்பத்திரண்டு பற்கள் என்றும் பெண்களுக்கு முப்பது பற்கள் என்றும் அரிஸ்டாட்டில் சொன்னான். ஒன்றுக்கு இரண்டு மனைவி இருந்தும் எண்ணிப் பார்க்காமலேயே சொன்னதால் அதாவது பரிசோதிக்காமல் சொன்னதால் அரிஸ்டாட்டிலை முட்டாள் என்றான் கலிலியோ. அதன் விளைவு எல்லாத் துறைகளிலும் பரிசோத்து உண்மை காணும் ஆய்வு முறை வானளாவ வளர்ந்து உலகம் இன்று வளம் பெற்று மகிழ்கிறது.

ஆனால், இந்தியச் சிந்தனையென்பது எண்ண முதல் வாதமாகவே இருந்தது. இன்னும் இருக்கிறது. இங்கே விமர்சனம் என்பதே கூட ஆகாத ஒன்றாகவே பேசப்படுகின்றது. கடவுள், மதம், அது சார்ந்த பல்வேறு செய்திகளில் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே என்றுதான் பறைசாற்றப்படுகிறது.

ஆனால், தமிழ்ச் சிந்தனை என்பது வளர் விதிகளுக்கு உட்பட்டது. ஒரு நல்ல நூலுக்கு பத்து வித விதிகளை வகுத்த நன்னூர் தமிழில்தான் தோன்றியது. ஒரு நல்ல பாடத்தை நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியர், நல்லவிதமாக போதித்தால் தான் அது நல்ல பயன் தரும் என்று நன்னூல் கூறுகிறது. இது இன்றைய அறிவியல் விதிகளுக்கு உட்பட்டது.

தொல்காப்பியமும், குறளும், சிலம்பும் மூன்று குறிக்கோள்களின் வழியே வாழ்வின் எல்லாச் செய்திகளையும் சொல்லி மகிழ்விக்கிறது.

ஒரு நாவல் கொடியை நாட்டி வைத்து வாதத்துக் அழைக்க, கருத்துப் போர் செய்து தனது கொள்கையை நிலை நாட்டும் மணிமேகலை தமிழில்தானே வாதிட்டார்.

புராணம் இதிகாசம் இதன் புகழ் பாடும் இலக்கிய வடிவங்கள், அகவல், அந்தாதி, வெண்பா, விருத்தம், என்பதையெல்லாம் தில்லை தீட்சிகர், தேவராம் திருவாசகத்தை கோவிலில் பூட்டி வைத்தார்களே அதைப்போல் மறைத்து விட்டு, இன்றைய புது வாழ்வுக்குப் பயன்படும் பொருள்களையும் கருவிகளையும் பொறிகளையும் புதுப்பித்து நூல்களையும் அதற்குரிய ஆய்வினையும் விளக்கிச் சொல்லி வளம் சேர்க்கும் வழிவகைகளையும் சொல் வடிவங்களையும் தமிழ் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கணித வல்லுநர்கள் கள ஆய்வு செய்து, நூல் வழங்கும் பல்வேறு எழுத்தாளர்கள் ஆகிய அனைவரும் தமிழ் வளர்ப்பது தங்கள் கடமை எனக் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்க, மாணவியருக்கு தமிழ் ஊட்ட முனைவர்களோயானால் ஐக்கிய நாட்டு மன்றத்தின் கருத்தை பொய்யாக்கலாம்.

அகம், புறம், அறம் பொருள் இன்பம் இயல் இசைக் கூத்து, அதிகாரம், அரண், மனை, அகழ், காவல் மரங்கள், காதல், வீரம், மானம், கருணை, கொடை, படைகுடி, கூழ் அமைச்சு, தூங்காமை கல்வி துணிவுடைமை, இயற்றல் ஈட்டல் காத்தல் வகுத்தல், ஈதல் இசைபட வாழ்தல், செய்க பொருளை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, போர் நெறி, பொதுச் சிந்தனை, என்றெல்லாம் மனித மூளை வகுத்த வாழ்வு நெறிகளுக்குள் இயைந் வாழ்ந்த தமிழன் எப்படி மதி மயங்கி மந்திரங்கட்குட்பட்டான்? மாயைகளுக்கு ஆட்பட்டான்? மதச் சிக்கலில் மாட்டிக் கொண்டான்? ஆய்வுகளால் மட்டுமே தெளிவு கிடைக்கும்.

இன்னும் சொல்லப் போனால், உயர் உணர்வுகளோடும், மனித உறவுகளோடும் கூட தொடர்பு காட்டி ஆய்வு மனதை அழியச் செய்தார்கள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கல்லானாலும் கணவன், குருவை மிஞ்சாதே என்று கூறி ஆய்வு செய்ய விடாது அமுக்கி வைத்தார்கள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள்: 68)

என்னும் குறளை மறந்ததால் குறைபட்டார்கள். தமிழ் கூறும் நல்லுகச் செய்திகள் தமிழர் நெஞ்சில் பாய்ந்து செழிக்காமல் தரிசாய்ப் போனதற்கு காரணம். இந்தியச் சிந்தனைக்குள் தமிழர்கள் தங்களை இணைத்துக் கொண்டதுதான்.

வடமொழி தரும் வாழ்வியற் கோட்பாடுகள் மனிதர்களை பிறவியிலேயே தரம் பிரித்து தாழ்த்தி வீழித்தியது. ஆனால், தமிழ்ச் சிந்தனை உலகை ஒன்றாக்கி மகிழ்ந்தது. இந்த உண்மையை சிந்திக்கும் திறன் கொண்டோர் அனைவருக்கும் உணர வேண்டும்.

இந்த புதுமை உலகில் தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் மொழியியல் ஆய்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், அரசியலார், போராசிரியர்கள் உலகம் முழுவதும் தமிழை ஆய்வு செய்யும் பேராளர்கள் மற்றும் பொருள் வளம் படைத்த தமிழர்கள் அனைவரும் இணைந்து ஒரு முகமாக அறிவியலை விளக்கும் ஆற்றல்மிகு மொழியாக தமிழ் விளங்க உழைக்க வேண்டும்.

புற்றீசலென புதுப்புதுக் கருவிகளும் வாழ்க்கையை வளப்படுத்தும் புதுமைப் பொருள்களும் பூத்துக் குலுங்கும் உலகில் தமிழை முதன்மைப்படுத்தும் ஆய்வுகளும் நிகழ்வுகளும் பொங்கிப் பெருக வேண்டும்.

தமிழின் தமிழர்களின் உரிமைகள் உலகோர்க்கு உள்ளது போல நிலைக்க வேண்டும். மொழி மற்றும் மாநில சமத்துவம் உள்ள கூட்டமைப்பாக இந்திய இறையாண்மைச் சட்டப்படி அமையவும், இனக்குருதி வழிச் சொந்தங்களை காக்க, ஸ்டாலின் போலந்து மீது படையெடுத்தது போல், இந்திய அரசு இயங்கவும் வழி காண வேண்டியது தமிழர் கடமையாகும். அப்போதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைக் காக்க இயலும். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இணங்கவில்லை என்றால் வேறு வழிகளைத் தேடுவதும் தமிழர் கடமையாகும்.

No comments:

Post a Comment