Thursday 3 September 2015

தமிழ் இந்தியா மலரட்டும்!





மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ் இலெமுரியா வைப் பார்த்த போது எழிலார்ந்த எண்ணங்கள் அனைத்தும் இதயத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.
இலெமுரியா எது என்பது கருத்துகள் பல உண்டு என்றாலும், எதையும் அறிவார்ந்து, ஆராய்ந்து முடிவுகளைச் சொல்லும் அய்ரோப்பியா அறிவாளிகள் சொல்வதை நினைத்து நெஞ்சத்தைக் குளிர்விக்கலாம்.
சோவியத் நாடுகள் இணைந்திருந்த நாள்களில் வெளிவந்த மாக்கடல் மறைபொருள்கள் எனும் நூலில் இலெமுரியாயாவை ஓரளவு ஆய்ந்து கருத்துகளை வெளியிட்டார்கள்.
ஆஸ்திரேலியாவும், ஆப்பிரிக்காவும் இணைந்த நிலப்பகுதியாக இருந்தததை ஆராய்ந்து அதை கோண்டுவான எனும் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால், தமிழறிஞர்கள் கோண்டுவானாவை இலெமுரியா என்று அழைத்து அது கடலில் மூழ்கிய தமிழ் நிலம் என்றார்கள்.
டார்வின் தத்துவப்படி முதல் மனிதன் தோன்றியது இலெமுரியாவில் வாழ்ந்த இலெமூர் எனும் குரங்கிலிருந்துதான் என்றும் பலர் வாதிட்டார்கள்.
அழகிய கலை கொஞ்சும் அந்த நிலத்தில்தான் கபாடபுரம் எனும் பாண்டியனின் தலைநகரம் இருந்ததாக இராமாயணம் நம்மிடையை பதிவு செய்கிறது.
பொதிகை மலையின் மீதிருந்து கபாடபுரத்தின் எழிலை, அழகை எண்ணற்ற, எழுநிலை மாடங்களை ஏழேன் நாடுகளை எல்லாம் அனுமனுக்கு காட்டி, அதன் அருகில் உள்ள தொடர்ச்சி தான் இலங்கை என்று, இராமன் விளக்குவதாக இராமாயணம் சித்திரிக்கிறது.
இலெமுரியா என்ற இனிய பெயர் கொண்ட இதழ் ஒன்றை முப்பைத் தோழர்கள் நடத்துவது அறிந்தபோது எண்ணற்ற காட்சித் தொகுப்புகள் இதயத்தில் தோன்றி இனிமையூட்டுகிறது.
இலெமுரியாவில் மனிதர்கள் வானில் பறந்து செல்லும் அறிவியல் வகையறிந்திருந்தார்கள் என்று, அய்ரோப்பிய ஆவியுலக மாயாவாதிகள் கருத்தொன்றை முன் வைத்து வாதிட்டார்கள்.
கவிஞர் கண்ணதான் கடல்கொண்ட தென்நாடு என்னும் நூலில் இன்றுள்ள அய்ரோப்பியரின் இல்லற வாழ்வின் ஆண் - பெண் உறவுகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலெமுரியர்கள் கொண்டிருந்தார்கள் என்று கோடிட்டு காட்டியிருந்தார்.
எண்ணற்ற நூல்கலை யாத்த ஈடில்லா எழுத்தாளர் கா.அப்பாத்துரையாரின் இலெமுரியா என்னும் நூலில் இலெமுரியா கடலில் மூழ்கியதற்கான அறிவியல் நிலையை அருமையாக விளக்கியிருந்தார்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கோள் அருகே வந்து காட்சி தரும் ஹோலிவால்மீன் போல அய்ம்பதாயிரம் ஆண்டுகளுக்கொரு முறை வரும் ஓர் அயனக்கோள், அதாவுவது தீக்கோள் (அக்னி) ஒன்று பூமி அருகே வந்தபோது இலெமுரியா கடல் கொண்டது என்று விளக்குகிறார்.
தமிழ் இலெமுரியா கண்ணில் பட்ட போது மும்பையில் (பழைய பம்பாய்) வாழ்ந்த பல மாதக் காட்சிகள் கண்களில் ஒளிந்து களிப்பூட்டியது.
பம்பாய் மாநகரத்தில் பரந்து வாழ்ந்து வரும் தமிழர்களோடு பழகிய பசுமைக் காட்சிகள் இன்றும் பரவசப்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலிருந்து எல்லா ஊர்களிலிருந்தும் வந்த தோழர்களையும் சந்தித்த நாள்கள் இன்றும் இனிமையூட்டுகிறது.
இங்கு வந்த பின்னர் முழுமையும் இலக்கிய உணர்வை இதயத்தில் பதித்த பிறகு இந்தியாவையும், அது ஓர் நாள் தமிழ் இந்தியாவாக இருந்ததையும் அறிய முடிந்தது.
வடவேங்கடம் தென்குமரி யாயிடை, தமிழ் கூறும் நல்லுலகம் எனும் தொல்காப்பியர் பாயிரம் கட்டும் வேங்கடம் என்னும் பெயர் வெப்பம் கொண்ட நிலம் என்றும், அது தார்பாலைவனத்தைக் குறிக்கும் வெப்பம் நிறைந்த இடம் என்றும், அதுதான் தமிழகத்தின் வட எல்லை என்றும், இன்றைய குமரி வரை அமைந்திருந்தது என்றும், அந்த நிலத்தை ஆட்சி செய்த தமிழும் அதன் கிளை மொழிகளும் இசைமொழிகளும் இன்றும் தித்திப்பைத் தருகிறது.
அந்த, அருமையான தமிழ் நிலம் கால ஓட்டத்தில் காட்சிகள் பலவாகிப் போனது.
ஆரிய தேசம், பரத கண்டம் என்றெல்லாம் அலங்கோணமானது. ஆதிக்கவாதிகள் வேட்டைக்காடாக ஆகிப் போனது.
மூக்கில்லாத நிலம் மூளியானது போல தமிழ் மொழி திரிந்த நிலையிலும் சிதைந்த நிலையிலும் பலப்பல மொழிகளாக பாழ்நிலை கண்டது.
உலகோர் போற்றும் உயர்நிலை மொழி தமிழ் இன்று ஓரங்கட்டப்பட்டது. தமிழ் பற்றிய தவறான தகவல்களைத் தருவோர் பெருகி வந்தனர்.
பாசம் நிறைந்த பயன் மிகுந்த தமிழை பல வழிகளிலும் ஒதுக்கவும், ஒழிக்கவும் முயன்று வந்தனர் - வருகின்றனர் பண்பாட்டுத் படையெடுப்பாளர்கள். அதுவும் தமிழர்களிடையே வளர்ந்து, தமிழர்கள் பொருள் வளத்தைத் தின்று கொழுத்தவர்களே தமிழை ஒழித்து - தமிழரை வீழ்த்தும் பாதகச் செயல்களைச் செய்கின்றனர். அதையும் தமிழர் பாரா முகமாக இருக்கக் காண்கிறோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழன் - பிறவியில் மேல் கீழ் சொல்லும் பகவத் கீதையின் பிடியில் சிக்கி மாசுகொண்ட மனத்தவனாக - மானத்தை இழந்தவனாக இருக்கின்றான் என வருந்துகின்றார்கள் பல அறிவாளர்கள்.
இந்த நிலையில் தமிழ் இலெமுரியா வின் பணிகள் நிரம்ப இருப்பதாக நினைவு படுத்த விரும்புகிறேன்.
தமிழ் இந்தியா எனும் தலைசிறந்த நிலை காணும் நோக்கில் இயங்குவது இலெமுரியாவை மேலும் காணும் வாய்ப்பை உலகம் உணர உதவும்.
மும்பை நகர் முழுவதும் சிதறிக் கிடந்த தமிழர்கலை 1983இல் ஈழத் தமிழர்களுக்காக ஆற்றல்மிக்க வரதாபாய் ஒன்றாகத் திரட்டி இந்தியாவையே வியக்க வைத்தார்.
தமிழர்களுக்கு எதிரானோர் என்று காட்டப்பட்ட பால்தாக்கரே, தலைவர் கலைஞர் மும்பை வந்தபோது, தலைவரைச் சந்தித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தாக்கரே சொன்னார், மராட்டியம் நிலவியலிலும், பண்பாட்டு நிலையிலும் தென்னிந்தியாவைச்  சார்ந்தது என்றார்.
பஞ்ச திராவிடக் கதைகளில் மாரட்டியிலும், குசராத்தும் திராவிடம் என்றே குறிக்கப்படுகிறது.
அண்மையில் அகழ்ந்தெடுத்து குசராத் கடற்கரை நகர் ஒன்று தமிழ் நகராக இருந்தது. அது பூம்புகாரை ஒத்து இருந்ததாக தெரிகிறது.
ஆகவே, தமிழ் இலெமுரியா வின் பணிகள் மராட்டியரை, தமிழின் தொன்மக்களாக விளக்கும் வகையில் அமைய வேண்டுகிறேன்.
இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள், மலைவாழ் மக்களெல்லாம் முன்னொரு நாளில் உயர்ந்த பண்பாட்டின் உறைவிடமாக விளங்கியவர்கள் என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
பிகார், சார்க்கண்ட, உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகள், பஞ்சாப், சம்பல், வங்காளம் போன்ற பகுதிகளில் உள்ளோர் ஒரு காலத்தில் தமிழர்களாக ஒளி வீசியவர்கள் என உணர்த்த வேண்டுகிறேன்.
தமிழ் இலெமுரியா வை நடத்தும் நல்ல நண்பர்கள் தமிழ் இந்தியாவைக் காணும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுவது சிறப்பெனக் கருதுகிறேன்.
பாவாணர் மொழியில் சொல்வதென்றால் உலகமே தமிழ் நிலம் தான். உலக மொழி யனைத்தும் தமிழ் வழிதான் என்றாலும் உலகோர் விழிகளில், தமிழைக் காட்டுவதற்கு தமிழ் இந்தியாவைக் காட்டுவது முதல் முயற்சியாக வேண்டும்.

வாழ்க தமிழ் இலெமுரியா!

No comments:

Post a Comment