Monday 14 March 2016

ஊடகவியலாளர்களின் கடமையும் நடப்பும்

ஊடகவியலாளர்களின் கடமையும் நடப்பும்
தமிழ்நாட்டில் வெளிவருகின்ற ஏடுகள், இதழ்கள், தொலைக்காட்சிகளிலும் வருகின்ற செய்திகள், விவாதங்கள் பெரும்பாலானவை நகைச்சுவையாகவும், சிறிது செழுமையுள்ளதாகவும், சில வேதனையும் வெட்கமும் தக்கவகையாகவே உள்ளதாக உணர முடிகிறது.
மனிதர்களுக்குத் தேவையான புறப் பொருள்களே மட்டுமே விற்கின்ற சந்தை நிலை போல உண்மை, உயர்நிலைகள், உளச்சான்று, மனச்சாட்சி, மாண்புகள், மான உணர்வு, மாசற்ற தன்மை, மண்வாசனை ஆகியவற்றை தன் நலத்திற்காக கூறு போட்டு கூவிக் கூவி விற்கின்ற நிலை நாளும் இங்கே அரங்கேறி வருவதைக் காணலாம்.
எப்போதுமே கடந்த கால நிகழ்வுகளை அது பல்வேறு வரலாறுகளாக இருந்தாலும், மற்ற மற்ற நிலைகளானாலும் தவறுகள், குற்றங்குறைகளைக் கண்டறிந்து, ஆய்ந்து பார்த்து, அறிவார்ந்த எண்ணங்களை அந்தந்த தலைமுறைகளை நல்வழிப்படுத்தும் நிலைகளையே மேற்கொள்ள வேண்டியது அறிவார்ந்த மனிதர்களின் பொறுப்பும் கடைமையும் ஆக வேண்டும்.
ஆனால் இங்கே, ஊடகவியலாளர்களின் உள்ளமும் நடப்பும் பெரிதும் தன்னலம் சார்ந்த வணிக வடிவங்களிலேயே வெளிப்படக் காண்கிறோம். மக்களிடம் பிளவுபட்ட, பேதப்பட்ட எண்ணங்களை சரிசெய்து, ஒருங்கிணைத்து உயரிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய ஊடகவியலாளர்கள் உறக்கத்திலும் உள்நோக்கத்திலும் ஊனப்பட்ட உள்ளத்திலும் எதற்கும் உதவாத உதவாக்கரைகளையும் அழைத்து அருகில் அமரவைக்கும் அவலங்களே அன்றாடம் நிகழ்வதைக் கண்டால் நல்லோரின் நெஞ்சு நடுங்கவே செய்யும்.
படிக்காதவர்களாக இங்குள்ளோர் இருந்த காலத்தைவிட கல்விச் செழுமைகள் நிலைகொண்ட இன்றைய நிலையில் படித்தவர், படிக்காதவர் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும் நிகழ்வுகளும், செய்திகளும் நிமிடந்தோறும் நிகழ்ந்து வருவது கண்டு நல்லவர்களுக்கு நெற்றிக்கண் என்று ஒன்று இருந்தால், இவை அனைத்தையும் அவசர நிலையில் அழித்துவிடவே தோன்றும்.
நீதி நெறிகளை, நேர்மையை, நெஞ்சத் தூய்மையை உயர்வின் உச்சிக்கு அழைத்துச் செல்லவேண்டிய ஊடகவியலாளர்களின் உள்ளம் உண்மைகளைக் காணாமல், உறங்குவதுபோல் பாவனை காட்டினால் பெரிதும் உழைப்பவர்கள் மனம் ஒருபோதும் மன்னிக்க முன்வராது.
சமூகம் உயர்ந்து வந்தால், அதில் இந்த ஊடகவியலாளர்களும் உயர்வர், சமூகம் தாழ்ந்தால், சரிந்தால் அதில் இவர்களும் அடங்குவர். தமிழே, நீ உயர்ந்தால், நானும் உன்னுடன் வருவேன். நீ நலிந்தால், அந்த நலிவும் எனக்குத்தானே என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகளை ஊடகவியலாளர்கள் உணர்வது நல்லது.
உலக மக்களுக்கு, அவர்களின் வாழ்வியல் மேம்பாடுகளுக்கு பல்வேறு மனிதர்கள், பல்வேறு கருத்துக்களை வழங்கி வந்திருக்கிறார்கள். நிலம் மட்டுமே வாழ்வாதரமாக இருந்த நாளில் நிலவுடைமை ஆதிக்க வாதிகள் பல்வேறு முறைகளைப் பகுத்து மக்களை அடிமைப் படுத்தி வந்தது. அதாவது மதவாதிகளோடு சேர்ந்து கோவில் கொண்டாட்டம், அரசனை கடவுளாக வழிபடுவது என்பதெல்லாம் இங்கு நீண்ட நெடுங்காலமாகவே நிலைகொண்டிருந்தது.
பரிணாம வளர்ச்சியில் மூளையில் முன்னேற்றம் கண்ட நாட்களில், தொழில்நுட்ப அறிவு துலங்கியபோது, தொழில் ஆதிக்கவாதிகள்  நிலவுடமை ஆதிக்கவாதிகளை புறங்கண்டு, புதுப்புது வழிகளை உருவாக்கி, மக்களை அடிமை விலங்குகளுக்குள் அடைத்து வைத்து ஆளுமை செய்து வந்தனர், வருகின்றனர்.
தொழில்நுட்பத்தில் உண்டான கருவிகளைக் கையாண்ட தொழிலாளர்களின் மூளையில் கூர்மை கண்ட நாட்களில்தான் இந்த சமத்துவம் என்ற சோசலிச சிந்தனை தோன்றி போராட்டங்கள் தொடங்கின, தொடர்ந்தன.
சோசலிசத்தின் முழுமையில் உடைமைகள் பொது என்ற சிந்தனை செழுமைகண்டது. அதுதான் பொதுஉடமைக் கொள்கையும் கோட்பாடுகளும் ஆகும். பொதுவாக உலகில் நிலவுடைமை சார்ந்த மதவாதம், தொழில்சார்ந்த மதவாத்துவம், சமத்துவம் சார்ந்த சோசலிசம், கம்யூனிசம் என்ற நிலைகொண்டிருக்கின்றன.
ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதாக இருந்தால், இவர்கள் சந்தித்த மனிதர்களிடம் நீங்கள் எந்த சித்தாந்தத்தைச் சார்ந்தவர்கள் என்று வினா எழுப்பி, விளக்கம் பெற வேண்டும். அல்லது இவர்கள் விளக்கம் தர வேண்டும்.
எல்லா நிகழ்வுகளும், இதனடிப்படையில் இயங்குகிறதா என்று, அறிந்து விளக்குவதுதான் ஊடகவியலாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அது இங்கே இன்று இருக்கிறதா? எண்ணிப்பார்க்க வேண்டியது கடமையாகும்.
பொதுநல ஈடுபாடு கொள்வோரின் இதய எண்ணங்கள், அதன் வெளிப்பாடுகள், எளிமை, தியாகம் ஆகிய இலக்கணங்கள் பற்றி எல்லாம் விவாதங்களில் கலந்து கொள்பவர்களிடையே வினாக்கள் தொடுத்து விளக்கம் பெற வேண்டியது. ஊடக செல்வர்கள் உள்நோக்கம் கொண்டு, ஆளுக்குஆள் அளவீடுகளைப் பொறுத்திக் காட்டி, வாதங்களை முன்வைப்பது அறமாகாது என்பதை உணர்வார்களா?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்கள் தொழுதுண்டு பின்செல்வர் என்றார் இனிய வள்ளுவன். அந்த உழுவனும் உழைப்பாளிகளும்தான் உலகில் அனைத்து நபர்களுக்கும் உல்லாச வாழ்வு தந்து, வேறுபலவற்றிலும் அள்ளித் தரும் வள்ளல்களாகும். ஆனால் அவர்கள் எங்காவது முன்னிருத்திகிறார்களா?

திரை நடிகை நடிகர்களை போற்றிப் புகழ்கின்ற ஊடகவியலாளர்களுக்கு உள்ளமோ உண்மை உணர்வோ இருக்கிறதா என்று எண்ணுவது இதயமுள்ளோரின் கடமையாகும்.

No comments:

Post a Comment