Wednesday 6 April 2016

கடிதம்

பேரன்புடையீர், வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். கடந்து போன நாட்களில் மூன்று கடிதங்களில், பல்வேறு செய்திகளைத் தெரிவித்திருந்தேன். தங்கள் நினைவில் தங்கி நிற்கும் என்று கருதுகிறேன்.
நல்ல நோக்கங்களை முன்வைத்து கடின உழைப்பினால், தென்னிந்தியச் சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கின்ற அய்வர் அணி. சங்கக் கட்டிடத்திற்காக நிதி சேர்க்கும் முயற்சியின் தொடக்கமாக சன் டிவியில் தங்களின் திரைக்குடும்பத்தின் சங்கமமாக ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்றுக் களிப்படைந்தேன்.
திரையில் மின்னிய பற்பல தாரகைகள் பலரையும் நீண்ட இடைவெளிக்குப் பின் முதிய நிலையில் ஒரே இடத்தில் பார்க்கின்ற வாய்ப்பு இரசிகர்களையும் பரவசமடைய செய்திருக்கும்.
திரையுலகைத் தித்திக்க வைத்த தி.மு.கவிற்கு பரப்புரை செய்ததற்காக யாருக்கோ அஞ்சி, நல்ல நடிகர் தம்பி வடிவேலுவை திரையுலகம் ஒதுக்கி வைத்தது. அந்த வடிவேலை முன்னிருத்தி நிகழ்ச்சியை செழுமையுற முழுமையுற வைத்த தங்களுக்கு என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விந்தியத்தின் விரிநிலமாய் விளங்கி செழுமைகொண்ட பண்பாட்டுத் தளமாகவும் விளங்கிய மண் தென்னிந்தியா. பண்பாட்டில் நுழைந்த ஆரியச் சிந்தனை அழுக்குகளையும் அவலங்களையும் மாற்ற முயன்ற தமிழ் அறங்களை மூளையில் முடக்கி வைத்துவிட்டு மூளியான தன் முகத்தை ஒப்பனைகள் ஆரியம் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி ஆளுமை செய்தது. அதில் அதிகம் தென்னிந்திய திரையுலகம் அடிமைப் பட்டுக் கிடந்த காலத்தில்தான் பேரறிஞர் அண்ணாவின் திரையுலக நுழைவு சமூக, சமத்துவ தரவுகளை ஆய்வு செய்து மக்களின் அகத்தைத் தூய்மைசெய்யும் வேலைக்காரி எனும் சமூகப் படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இன்றுவரை ஒளிர்கின்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்பதை தாங்களும் தங்கள் குழுவினரும் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
நான் அறிந்தவரை கலைவாணர் அவர்களே நடிகர் சங்கத்திற்கான நிலத்தை வாங்கித் தந்து நல்லதொரு வளநிலைக்கு அடித்தளமிட்டவர். அதற்குப் பின் தி.மு.க வில் உழைத்து உயர்ந்தவர்களின் முயற்சியே இன்றைய ஏற்றநிலைக்கு காரணமாகி மகிழ வைத்திருக்கிறது.
கட்டிட வரைபடத்தைக் காட்டி, நடிகர்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, இரசிகர்களின் மனங்களிலும் மகிழ்ச்சியைத் தூவியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். இதில் அழுத்தமான ஒன்றை நெஞ்சில் வைக்க வேண்டுகிறேன். சங்கம் மேன்மைக்கு பெரிதும் உழைத்து பாடுபட்ட, மெரிலேண்ட் திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், திரு. எம்.ஜி.ஆர். அவர்கள், திரு. சிவாஜிகணேசன் அவர்கள், திரு. எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் உள்ளிட்டவர்களை சிறப்பான முறையில் நினைவு படுத்த வேண்டுகிறேன்.
கட்டிட வரைபடத்தில் நான் ஏற்கனவே வேண்டியிருந்த நூலகம் ஒன்று இல்லையென்பது நினைவுகூறத் தக்கதாகும். வீட்டுக்கொரு நூலகம் என்ற அண்ணாவின் நினைவில் ஒரு நூலகத்தை நிறுவலாம். ஏனெனில் செலவு மிகுதியாகும் புராண, இதிகாச, சரித்திரப் படங்கள் வந்த நாட்களில் செலவு குறைவான அதிலும் புதுமையும், புரட்சியும் பூக்க வைக்கும் சமூக திரைப்படத்தின் வெற்றித் தொடக்கமாக வேலைக்காரியைத் தந்தவர் அண்ணா அவர்கள்.
மறைந்த திரைத்தாரகைகளை வடிவேலு, மனோபாலா, ரோகிணி மற்றும் திறமைமிக்கவர்களைக் கொண்டு நினைவுபடுத்தி எல்லா நெஞ்சிலும் நினைவுச் செழுமையை உருவாக்க வேண்டுகிறேன். இறுதியாக ஒன்று எளிமையுடன் இதயத்தை இனிப்பாக்கி வைத்திருக்கும் தாங்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்கள் தொலைபேசி செய்திகளுக்கு தங்கள் உதவியாளர் மூலம் தொலைபேசியிலோ, ஓர் அய்ம்பது பைசா அஞ்சல் அட்டையிலோ, கிடைத்தது நன்றி தெரிவிக்கின்ற நாட்டில் இல்லாத நாகரிக நிலை ஒன்றை கடைப்பிடித்து உள்ளத்தை உவகையில் ஊஞ்சலாட வைக்க வேண்டுகிறேன். தோழர் என விளிக்கும் தங்களின் தூய சமத்துவ உணர்வோடு தோழமை கொண்டதால் இதைச் சொல்ல நினைத்தேன் வேறொன்றுமில்லை.
நன்றி!
இவண்
பெறுநர்,
நடிகர் நாசர் அவர்கள்,
தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்,
போக்ரோடு, அபிபுல்லா சாலை, தியாகராய நகர், சென்னை.

No comments:

Post a Comment