Tuesday 25 October 2016

மாசற்ற காதல்

மாசற்ற காதல்
சாதாரணமாக பார்க்கின்றபோதே பரவசமூட்டும் அந்த பேரழகுப் பாவை பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவி. அவன்  அந்த உணகத்தில் பணியாளன். உணவக வேலையனைத்தும் தெரிந்தவன். முதலாளியின் நம்பிக்கைகுரிய நல்ல வேலைக்காரனாக காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்த தன் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிடுவான்.
அந்த ஓட்டலை தாண்டி சற்றுத் தூரத்தில் அவள் வீடு இருந்தது. தாய், தந்தை, தங்கை, தம்பிகளோடு வாழ்ந்த அந்த வாடாமலருக்கு வயது பதினைந்து, அவனுக்கு வயது பதினாறு, அந்த இளவயதில் தான் இனிய உணர்வுக்கு இருவரும் இலக்காயினர்.
ஒளி மலர்களின் நிறம் அவள் மேனியில் வாசம் செய்வது. மனமலர்த்தேன் அவள் குரலில் இழையோடியது. உள்ளமும் கண்ணும் அவள் வசப்பட்டு உருகித் தவித்தான். கண்ணும் கண்ணும் நேரில் காணும் நாள் வருமா? பேசமுடியுமா? இதயம் கலந்து இருவரும் ஒருவராக முடியுமா? என்று எண்ணிக்கிடந்தான்.
அன்று அதிகாலை அந்தத்தோ இடுப்பில் குடத்துடன் அசைந்து வந்தது. அவன் இதயத்தில் ஆவல் கிளர்ந்தது. குடத்துடன் கிணற்றுக்கு சென்றாள். கூந்தலை விரித்தாள், குளித்தாள். குன்று போல் ஆசைகளை அவன் உள்ளத்தில் கொட்டிவிட்டு மறைந்து விட்டாள்.
மறுநாள் மார்கழித்திங்கள் முதல் நாள், அன்றிலிருந்து அத்திங்கள் முழுவதும் அதிகாலையில் எழுந்து ஆண்டாளின் பாசுரங்களை பாடிய படியே குளித்து கூந்தல் விரித்து அங்குள்ள ஆலயத்து முற்றத்தில் கோலமிடும் நேரத்திலெல்லாம் அவள் குளிர்முகத்தை பார்த்து ரசிப்பான்.
அந்த ஆலயமும் ஓட்டலும் அருகருகே இருந்தது. அதிகாலை நாலுமணிக்கு அவர்கள் இருவரைத்தவிர யாரும் இருக்கமாட்டார்கள். நித்தம், நித்தம் காலையில் குளித்து பூந்தளிர் மேனியையும் அவள் கோலத்தின் நேர்த்தியையும் ரசித்து பார்ப்பான். பால்யப் பருவத்திலேயே பகுத்தறிவு நூல்களைப் படித்த காரணத்தால் கோவில் பற்றிய பலசங்கதிகள் அவனுக்கு பரிச்சயமில்லாமலேயே போய் விட்டது. ஆயினும் அவள் வருவதைக்கான அந்த ஆலயத்திற்கருகிலேயே நின்றிருப்பான். அதிகாலை நேரம் ஆவல் கொண்ட உள்ளம், நிமிடங்கள் நடக்க நடக்க நெஞ்சம் படபடக்கும். ஆ..... அதோ வந்துவிட்டாள் ஓட்டலுக்கும் கோவிலுக்கும் பின்புறம் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் குளிக்கிறாள். இவனும் தண்ணீர் இறைக்கும் சாக்கில் கிணற்றிற்கு செல்கிறான். அவள் குளிக்கும் வரை அருகிலிருந்து அவள் அழகை அள்ளிக் குடிக்கிறான். அவளிடம் எந்த ஆட்சேபமும் இல்லாததால் அவளை சாண்டில்யனின் கதை நாயகிகளாக்கி ரசிக்கிறான். பார்த்து ரசித்தபடியே அவள் தன்னை கவனிக்கிறாளா என்பதில் கவனம் செல்கிறது. அவள் அவனைப் பார்த்து முறுவலித்தாள். பின் இதழ்விரித்து முத்துப் பல்வரிசை காட்டி இன்பத்தில் மூழ்கடித்தாள். ஆசாரம் மிகுந்த அய்யங்கார் வீட்டுப் பெண் என்றாலும் அவன் மீது நேசம் கொண்டான்.
அதிகாலை நேரத்தில் ஆலயமுற்றத்தில் கோலமிடும் போதெல்லாம் அவன் அருகில் நிற்பதை பார்த்து கோலம் நன்றாக இருக்கிறதா? என்பாள். போட்டி வைத்தால் உலகில் உனக்கிணை யார் என்பான். சிரிப்பாள், அவன் சிலிர்ப்பான். இப்படி பல நாள் அதிகாலை சந்திப்புகள்.
பிறிதொரு நாள் குளித்துவிட்டு ஈரப்பாவாடையுடன் ஆலய பிரகாரம் சுற்றி வருகிறாள். அழகு செழிக்க அவள் நடந்து செல்லும் எழிலை அவன் கண் கொட்டாமல் பார்த்த வண்ணம் இருக்கிறான். சுற்றி வந்த அவள், விழிகளை அவன்மீது நாட்டிய படியே ஏன் எப்போதும் சும்மாவே நிற்கிறாய் சாமி கும்பிட்டால் என்ன? என்று கேட்கிறாள் அந்த விசயத்தில் அவன் தன் மனதை காட்டவில்லை. மறுநாள் காலையில் ஒப்புக்கு கைகூப்பி நிற்கிறான். அவள் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்கிறாள் அவன் குறும்பாக உன்னை வேண்டிக் கொண்டேன் என்கிறான். அவள் அந்த கோவில் மணி ஓசையாய் சிரிக்கிறாள்.
கதை கவிதைகளை வார இதழ்களில் படிக்கும் பழக்கமும் சினிமா பாடல்களில் ஈடுபாடும் கொண்ட அவன் அவளருகில் இருக்கும் போதும் அவளிடம் பேசும் போதும் தன்னை ஒரு கதாநாயகனாகவே பாவித்துக் கொண்டான். தன்னுடைய குல ஆசாரங்களையும் மீறி தன் மீது அவள் அன்பு காட்டியதாகவே உணர்ந்தான்.
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோய் என்று காதலை இலக்கியம் கூறுகிறது. ஆனால் அவனைப் பொறுத்தவரை மாலை அரும்பி இரவெல்லாம் போதாகி அதிகாலை மலரும் நேயாகவே காதல் இருந்தது. அவன் வேலை அப்படி.
நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள், அழகும் நிறமும் எடுப்பான தோற்றமும் கொண்ட ஒரு பணக்காரப் பையன் பள்ளி செல்லும் நேரத்தில் அவளைப் பார்த்து பல்லைக் காட்டியிருக்கிறான். குறும்புச் சேட்டைகள் செய்திருக்கிறான். மாலை பள்ளிவிட்டு வரும் போது ஒரு சலூனில் அவன் இருப்பதை பார்த்து கடைக்குள் சென்று கால்ச் செருப்பை கையில் எடுத்து அவனிடம் காட்டி பிய்ந்துவிடும் ஜாக்கிரதை என்று பேசியிருக்கிறாள். அதற்கு அவன் அவளையும் அவளுடைய அவனையும் இணைத்து ஏதோ சொல்லியிருக்கிறான். அதற்கு அவள் அவனை நானும் என்னை அவனும் நேசிக்கிறோம். உன்னைப்போல் பொறுக்கியல்ல... கண்ணியமிக்க காதலன் அவன், பல காரணங்களால் அவனை மணமுடிக்க முடியாது போனாலும் நெஞ்சிருக்கும் வரை அவனை நினைத்திருப்பேன் என்று அவள் கூறியதை இன்றும் நினைத்து இதயம் பூரிக்கிறான்.
கால மாறுதல்.... அவள் குடும்பம் வேறு பகுதிக்கு மாறிப் போய் விடுகிறது. அவனும் வெளியூர் போய் விடுகிறான். பொருளாதார சூழல்கள் பலரை பாதை மாறி செல்ல வைக்கிறது. மூன்றாண்டுகள் கழித்து வந்தான். அவளைப் பற்றி கேட்டான். அவன் வாழ்வில் வைகறை பூபாளம் பாடிய அந்த வஞ்சிக்கொடி மணம் முடித்து தஞ்சைக்கு சென்றுவிட்டதாக சொன்னார்கள்.
அடுத்து ஒரு ஓட்டலில் வேலை செய்தான். ஓய்வு நேரங்களில் அவனுக்கு தெரிந்த கீற்றுத் தட்டி கடையில் உட்கார்ந்து கவிதை நூல்களை படித்துக் கொண்டிருப்பான். அந்த கடையின் எதிர்த் திசையில் அந்த நிலவு உதயமானது. பகலில் முழு நிலவு உதயமானதை அன்றுதான் அவன் பார்த்தான். கடைக்கு எதிரில் இருந்த முஸ்லீம் குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து தான் அந்த அழகு நிலா தன் முகம் காட்டியது. உடைமூடிய இடம் போக மற்றவை ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
அவள் முன் நடந்தால் முழு அழகும் பின் அசைவில் பேரழகும் பிரியாமல் சென்றது. சித்திரமும் சிற்பமும் எழுந்து நடந்தால் அந்த சிங்காரி போல் நடக்கும் என்று எண்ணிக் கொண்டான். காவிய கதாபாத்திரங்களை படித்த அவனுக்கு அந்த நாயகிகளில் ஒருத்தி தன் முன் நடமாடுவதாகவே தோன்றியது. பார்த்தான்.... பார்த்தான்.... பல நாள் பார்த்த வண்ணமே இருந்தான்.
நடந்தாலும் கிடந்தாலும் பார்த்தான் நனைந்தாலும் காய்ந்தாலும் நாலு பேரோடு பேசினாலும் அவளைப் பார்ப்பதிலேயே தன் விழிகள் வினையாற்றுகின்றன என்பதை உணர்ந்தான்.
அவள் தந்தை தங்க வியாபாரம் செய்பவர் அதனால் தான் அந்த தங்கச் சிலையைப் பெற்றாரோ என எண்ணி மகிழ்ந்தான்.
அவன் பார்வையின் பொருளை செய்பவர் அதனால் தான் அந்த தங்கச் சிலையப் பெற்றாரோ என எண்ணி மகிழ்ந்தான்.
அவன் பார்வையின் பொருளை புரிந்தாளோ என்னவோ அவளும் அவனைப் பார்த்தாள். இருவருக்கும் இடையில் இருநூறு அடிகள் அந்த இடைவெளி இருட்டை தங்கள் விழிகளால் விரட்டினர். கண்ணொளியினால் காதல் உணர்வுகளை பரிமாறி உண்டனர்.
ஆனிப்பொன்னால் அச்சிட்ட அந்த உடலை ஆடையின்றி காண அவன் ஆசை கொண்டான். பார்வைகள் சிரிப்புகள் சைகைகள் கண் சிமிட்டல்களை தாண்டி அன்று ஒரு துண்டுத் தாளில் ஓரிருவரிகளில் தன் ஆசையை வெளிப்படுத்தி அவள் பள்ளி செல்லும்போது கண்ணில் படுமாறு போட்டான்.
பிறந்த மேனியுடன்
உனைக்காண வேண்டும்!
பிறவியில் முழுப்பயனை
நான் அடைய வேண்டும்!
இப்படித்தான் அந்தத் துண்டுத்தாளில் எழுதியிருந்தான். மறுநாள் காலையில் அவளுடைய வீட்டின் பக்க வாட்டில் இருந்த கீற்றுத்தட்டி மறைவில் உள்ள குளிக்கும் இடத்தில் இருந்து அந்த பூங்குயில் கீதம் இசைத்தது.
உன்னைக் கண் தேடுதே - உன்
எழில்காணவே உள்ளம் ஏங்குதே;
நடந்து வந்த அவன் சட்டென்று நின்று கீற்றுத் தட்டியின் இடைவெளியில் தன் கண்களை நுழைந்தான். அங்கு தண்ணீர் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது. சொம்பு நீர் உச்சியில் விழுந்தது. உடலெங்கும் வெள்ளியாய் ஓடுகிறது. தங்கமேரி தந்த மேனியாய் தளிர்மேனியாய் தகத்தகாயம் காட்டியது. காலை இளங்கதிரின் ஒளிமலை அந்த மேனியில் பட்டு அவனைக் கண் கூச வைத்தது.
எல்லாம் காணாத வசந்தத்தை அன்று அவன் வாழ்வில் கண்டான். கலை மோகம் கொண்ட அவன் அந்தக் கோதையின் உடலை கோவில் சிற்பமாகவே கண்டான். கொச்சையாக கொள்ளவில்லை.
பின் கண்ணால் கதைபேசியே பல நாட்களை கழித்தனர். நாளும் பார்த்து இன்பத்தை நெஞ்சளவில் பயிர் செய்தனர். ஒரு நாள் தன் தோழியிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அவனும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் நேசிக்கிறோம். ஆனால் இணைந்து இல்லறம் நடத்த இயலாது என்றே கருதுகிறேன். காரணம் எங்கள் வீட்டில் மதக் கட்டுப்பாடும் பற்றும் மிக அதிகம் என்னால் மீற இயலாது. பொருளாதார நிலை அவனையும் என்னோடு இணையவிடாது. பின் அவளுக்கு மணம் பேசினார்கள். கல்யாணம் நடந்தது. பிள்ளைகள் பெற்றாள். ஆனால் இன்றும் அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அவள் கண்களில் காதல் உணர்வுகள் அலை மோதவே செய்கிறது.
மீண்டும் அவன் வெளியூர் சென்றான். நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். கத்தோலிக்க மீனவர்கள் நிறைந்த பகுதி. கல்வி மிகுந்த மக்கள், அங்கிருந்து ஒரு ஓட்டலில் வேலை செய்தான். கடற்கரையோரம் இருந்த அந்த ஊர் மிக அழகானது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகாலை நாலுமணிக்கெல்லாம் நல்ல உடைகளை அணிந்த நாயகன் ஏசுவை வணங்கவும், ஆலயப் பாதிரியாரின் அறிவுரையைக் கேட்கவும் ஆண், பெண், இளைஞர், யுவதி, சிட்டுகளாய்ப் பறக்கும் சிறுவர் சிறுமியர் அனைவரும் அந்த ஆலயத்தல் கூடுவர். நாலுமணிக்கே நந்தவனம் நடந்து செல்வதாகவே நங்கையரின் உடைகள் தோன்றும்.
வியாபாரம் இல்லாத நேரங்களில் அவன் அந்த கடை முன் அமர்ந்து ஏதாவது கவிதை நூல்களை படித்துக் கொண்டிருப்பான்; அன்றும் அவன் குனிந்து நூலைப் படித்தவன் நிமிர்ந்தான். அந்த கடையின் எதிரில் இருந்த இல்லம் ஒரு மலர்த் தோட்டமாக மாறியிருந்ததை காணமுடிந்தது. வித்தையொன்றை பார்க்கின்ற வியப்பு அவன் விழிகளில்.
வண்ண மலர்கள் அனைத்தும் ஒரே வடிவெடுத்து வந்து அந்த வனிதையாய் நின்றது போலிருந்தது. வசந்தமே அந்த வாசலில் நிற்பதாய் எண்ணிக் கொண்டான். அங்கங்களில் இப்படியொரு அமைப்பா? அதிசய உணர்வுகளால் அவன் அலை பாய்ந்தான்.
காலை உதயமானது மாலை மங்கியது. நாட்கள் நடந்து சென்றன. அவன் இதயமெல்லாம் அந்த இளங்கிளியின் எண்ணமே மேலோங்கியது. விழிகள் அந்த வாசலையே வட்டமிட்டது. அவனுக்கு வேலை படவில்லை.
அந்த வீட்டிற்கு ஓட்டலில் ஏதாவது உணவு பொருள் பார்சல் வாங்குவது வழக்கம். ஒரு நாள் அந்தப் பார்சலில் உள்ள இலையில் பேனாவால் சிலவரிகளை எழதினான்.
சிலை உடல் மீது ஆசை வைத்த
இலை மடல் மீது பாவிசைத்து
ஏழை நான் தூது விட்டேன்
ஏற்பாளோ? மறுப்பாளோ?
அன்றும் மாலையில் ஒரு கவிதை நூலை படித்துக் கொண்டிருந்தான். எதிர் வீட்டு வாசலில் வனப்பு மிகுந்த அந்த வனிதாமணி தன் முழு நிலவு முகத்தில் முறுவல் ஒன்றை தவழவிட்டாள். பின் சைகையால் அவனிடமுள்ள அந்த கவிதை நூலைக் கேட்டாள். அப்போது அந்த மீன் கண்களில் தோன்றிய மானின் மருட்சி... அவன் இதயத்தில் இன்பத்தை பூக்க வைத்தது. நாற்பது அடிகள் நடந்து சென்று அந்த நளினத்தின் கைகளில் அந்தக் கவிதை நூலை தவழவிட்டான். காதல் மலரை அவள் கண்ணில் சொருகி விட்டான். ஆதரத்தை விரித்து அவள் இதயத்தை அள்ளினான். பிறகென்ன.. காலையில்... மாலையில் வாரத்தில் இரு நாட்கள் அதிகாலையில் கண்கள் சாந்தித்தன கதைகள் பேசின! கவிதை நூல்கள் கை மாறின. அவன் அந்த நூல்களில் உள்ள இனிய பகதிகளில் அடிக்கோடிட்டுத் தன் உணர்வுகளை அவனுக்கு உணர்த்தினாள். அவனும் அவளை பின் தொடர்ந்தான். அவளைப் பற்றி தெரிந்த செய்திகள். அவள் பெயர் ஜெனிபர். குணக்குன்றாய் திகழ்ந்த தம்பதியர்க்கு கொழும்பில் பிறந்தவள் இந்த குளிர் நிலவு. தாய் தந்தையர் முன்பே இங்கு வந்துவிட்டனர். கொழும்பில் பாட்டி வீட்டில் இருந்து பள்ளியில் தொடங்கி இளங்கலை வரை பயின்றவள். இருமாதங்கள் முன்புதான் கொழும்பிலிருந்து இங்கு வந்தாள். இயற்கையாய்த் தோன்றும் இளவயது உணர்வுகள் அவர்கள் இருவரையும் இணைத்து இதயத்தை இனிப்பால் குளிப்பாட்டியது. அவனை அழ வைத்த அந்த ஞாயிற்றின் அதிகாலையில் ஆலயம் செல்லும்போது அவனும் அவள் அருகில் நடந்து சென்றான். கண்ணில் நீர் தவழ குரல் தழுதழுக்க அவன் காதருகே சொன்னாள். இங்கு நான் தங்கியிருந்த இருமாத காலத்தில் என் இதயத்தை நீ எடுத்துக் கொண்டாய் இது வரை நான் உணராத இனிய உணர்வை என் உள்ளத்தில் பயிர் செய்தாய். நினைவுகள் கனவுகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாய். கல்லூரி காலத்தில் கூட காத்து வைத்திருந்த என் உள்ளத்தை களவாடி விட்டாய். உன் கலையுணர்வும், கவிதை ஈடுபாடும் என்னைக் கவர்ந்தன. கண்மூடும் வரை என் கண்ணனை மறக்க மாட்டேன் என்றாள். சில நாட்களில் கொழும்பு சென்றாள். செல்லும் நாளில், முன்பெல்லாம் கொழும்பு செல்லும்போது குதூகலம் என் நெஞ்சைத் தாலாட்டும், இப்போது உன்னைபிரிவது, உன்முகம் பார்க்காமல் இருப்பது வேதனையைத் தருகிறது. எனினும் உன் நினைவுகள் என்னை நிம்மதியுறச் செய்யும். மீண்டும் சந்திப்போம் என்று விம்மியபடியே விடைபெற்றாள்.
அவளுடைய பிரிவு இதயத்தை பிசைந்தது. உறைந்த உள்ளத்தோடு அவளைப் பிரிந்தான். அவள் கொழும்பு சென்றாள். இவள் சொந்த ஊர் திரும்பினான். பின் அவனுக்கு கிடைத்த செய்தி அவள் தன் தாய் மாமனை மணந்து விட்டாள் என்பதுதான்.
அவன் மூச்சில் கலந்து அந்த மூவரின் உணர்வும் முடிவும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. பகுத்தறிவாளன் என்றாலும் மதப்பிடிப்புள்ள குடும்பத்தை சேர்ந்த அப்பாவையர் மூவரும் அவன் மீது காட்டிய பாசமும் காதலும் மாசற்றதாய் விளங்கியது. இந்த மத சிந்தை கொண்ட எழிலரசி ஜெயாவும் மக்காடிட்டாலும் முழு நிலவு முகம் காட்டி அவன் உணர்வில் ஒளியேற்றிய முஸ்லீம் பாவை பீவியும், பெர்ணான்டோ குடும்பத்தின் பெருமாட்டியாய் பிறந்த திருமகள் ஜெனிபரும் அவன் உள்ளத்தில் இன்றும் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றனர். நினைவுகளை தித்திக்க வைக்கின்றனர். முதலில் முறுவலித்து பின் இதழ் திறந்து முத்துப் பல்வரிசை காட்டி மோகனம் எழில் சிந்தியது போன்றே இப்போதும் மகிழ்விக்கின்றனர்.
தாவணி விசிறிகள் கொண்டு அவன் வழிவழியாய் இதயத்தை தாலாட்டி இதப்படுத்திய நாட்கள் இன்றும் இனிக்கவே செய்கின்றன. பத்தாண்டுகளில் பசுமை நிறைந்த பல நேரங்களில் அவனும் அவர்களுமாய் இருந்த நாட்களிலெல்லாம் கவிஞர் பெருமக்கள் அவனுக்கு துணையாய் இருந்தனர்.
கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொல் எப்பயனுமில என்று வள்ளுவன் வந்தான்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று கம்பன் தன் கவிதை அம்புகளை எய்தான்.
கண்ணம்மாளின் பெயர் சொன்னாளே வாயில் அமுதூறும் என்ற பாரதியின் நினைவில் அவர்கள் பெயரை உச்சரித்த போதெல்லாம் அவன் அமுதக் கடலில் தானேமிதந்தான். பார்க்கும் இடங்களெல்லாம் உன் பசிய நிறம் தெரியுதடா நந்தலாலா என்பது போல் பசுமைக் காட்சியெல்லாம் அந்தப் பைங்கிளிகள் முகமே தெரிந்தது.
வேல் விழியாலே என் விலாவை குத்தாதே என்று காதல் வேதனையை வெளிப்படுத்திய பாவேந்தரின் அழகின் சிரிப்பெல்லாம் அந்த அழகு நங்கையரே ஆதிக்கம் செலுத்தினர். படிக்கும் நூலின் பக்கங்களை புரட்டினால் அந்த பனிமலர்ப் பாவையர் அவனைப் பார்த்து புன்னகைத்தனர்.
மதப்பற்றும் குடும்பக் கட்டும் மீறி கோடு தாண்டி வந்து அவன் உடல் தொட்டு அந்த பூங்கொடிகள் படரவில்லை என்றாலும் தங்கள் இதயத்தில் கொலு வைத்து அவனை கொண்டாடினர். உள்ளத்தை நேசித்தனர் உறவை யாசித்தனர்.
இதழ் ஒன்றின் கடைசி பக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதினான். “நான் அந்த விடுதியில் தங்கியிருந்தேன் விடுதியின் எதிரில் இருந்த வீட்டில் மஞ்சள் பூசி குளித்த முகம் மலர் தழுவிய கூந்தல்... அடடா அழகிய அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நான் தான் பார்த்தேன் அதற்கு பிறகு எத்தனையோ ராஜகுமாரிகளை மஞ்சத்தில் சந்தித்திருக்கிறேன் அவர்கள் நினைவில் இல்லை” அது ஆத்மாவின் ராகம் இது சரீரத்தின் தாளம். ஆவியில் கலந்து விட்ட அந்த ஆத்மாவின் ராகமாகவே இன்றும் அவனை ஆனந்தப்படுத்துகிறார்கள்.
காதலின் ஆழம் அல்லது வேகம் ஆகியவற்றின் அளவுகோலான வரலாற்றுச் செய்தி.
காதல்கவிஞன் பைரனை கன்னியர் பலர் அவன் கவிதை வழியாக காதலித்தனர். அவன் மரித்து மரன ஊர்வலம் இலண்டனில் நடந்தபோது அந்த பெண்களில் பலர் தங்கள் கணவர்களின் மார்பில் செத்துக் கிடந்தனர்.
அலைமோதும் நெஞ்சமெல்லாம் அடங்கி அமைதியாய் வாழும் அவன் இன்றும் காதல் வயப்படுகிறான். தன் அன்பு மனைவியை காதலிக்கிறான். அருமை மகன்களை காதலிக்கிறான். மண்ணை, இனத்தை, மொழியை காதலிக்கிறான். உயர்வு உலகம் செல்லும் ஒவ்வொர அசைவையும் காதலிக்கிறான்.

முக்கனியில் சுவை உணர்வோடு அந்த மூவரையும் காதலிப்பான். சமயச் சடங்குகளிலும் மதக் கோட்பாடுகளிலும் நம்பிக்கையும் பற்றும் கொண்ட நங்கையர் மூவரும் அந்த நாத்திகன் மீது கொண்ட மாசற்ற காதல் அவன் உயரில் கலந்து விட்டதால் மரணத்தின்பின் கூட அதை மறக்க முடியாது.

No comments:

Post a Comment