Thursday 26 February 2015

எழிலோடு ஒளிர வேண்டும்

எண்ணிப்பார் கோபியாமல் - இந்தத் தலைப்பில் இன்றய விஞ்ஞானப்பொருட்கள், கருவிகள் தந்து மனிதனின் உழைப்பை உரைத்து உயர்வூட்டும் செய்திகளைக் கூறி செவிக்கும் சிந்தைக்கும் மகிழ்வூட்டியிருக்கிறார் மாமேதை அண்ணா அவர்கள்.

அண்ணாவின் நூல்களின் தலைப்பை ஒரு நண்பருக்குச் சொல்வதற்காக எடுத்தெழுதிக் கொண்டிருந்த போது ஆறேழு கட்டுரைகளை மீண்டும் வாசித்துப் பார்த்தேன்மாசற்ற எண்ணங்கள் இதயமுழுவதும்  மணம் தூவி மகிழ வைத்தது.

ஆண்டாண்டு காலமாக போற்றி,புகழ்ந்து, வாழ்த்தி, வணங்கிக் கும்பிட்டுக் கொண்டாடும் சரஸ்வதி பூசை- ஆயுத பூசை மற்றும் பல பண்டிகைகள் நடத்தி , நேர்த்திக் கடன் செலுத்தி நிறைவு கொண்ட நம்மவர் தராததையெல்லாம் தந்தவர்கள் மேலை நாட்டு மேதைகள் என்கிறார் அண்ணா அவர்கள். அவர்களை மிலேச்சர் அதாவது இழிந்தவர்கள் என்பார்கள் இங்குள்ள மத ஆதிக்கவாதிகள்.

குண்டூசியிலிருந்து வாழ்க்கையைச் செழிக்கச் செய்யும் கோடிப்பொருட்களைத் தந்தவர்கள் சரஸ்வதி பூசை- ஆயுத பூசை கொண்டாடாதவர்கள். அறிவின் துணையோடு ஆய்வுகளின் வழியே ஆக்கம் தரும் வளமான வாழ்க்கைக் கருத்துகளும் கருவிகளும் தந்தவர்கள் அவர்கள்அவர்களை நினைப்பது கூட இல்லையென்பது அறந்தானா என்கிறார் அண்ணாஅந்த அண்ணாவை தமிழர்கள் மறந்தது சரிதானா என்கிறோம் நாம்.

இந்த கட்டுரையோடு குடியாட்சிக் கோமான், களிமண்னும் கையுமாக, மாற்றானின் மல்லிகைத் தோட்டம், இருளகல, இரயிலேறி ராமேசுவரம் போக, அரோகரா கோவிந்தா, திராவிட தேசியம், தமிழரின் மறுமலர்ச்சி எனும் கட்டுரைகளை வாசித்த போது ஓர் எண்ணம் இதயத்தில் பூத்து நின்றது.

எல்லாக் காலத்திற்கும் குறள் பொருந்தும் என்பார்கள். ஆனால் எல்லா நாட்களுக்கும் பொருந்துவது அண்ணாவின் சிந்தனைகள், வெளிப்பட்ட கருத்துகள் என்பதுதான் இதயத்தில்  தோன்றிய எண்ணப்பூவாகும்.


அண்ணாவை நினைப்பது, அவர் கண்ட இயக்கத்தை எண்ணிப் பார்ப்பது என்பது நெஞ்சத்தை இனிப்பாக்கும், சிந்தனையை கூர்மைப்படுத்தும் உணர்வாகும்.

அவர் கண்ட கட்சியில் உள்ளவர்கள் உணர்வு, உளத்தூய்மை கொண்டவர்கள்  என்பதற்கு சிலரை சான்றாகக் கட்ட விரும்புகிறது மனம்.

கோவை ஆனைமலையைச் சேர்ந்த உத்தமி என்ற திமுக மகளிரணிச் சகோதரி. அவர் சார்ந்த சமூகத் தலைவருக்கு வரவேற்பு வழங்க வருமாறு சிலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். வர இயலாது என்று மறுத்திருக்கிறார். ஜாதி ஒற்றுமையைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு அவரும் அவரது மகளும் எங்களுக்கு ஜாதி, மதம், குலம், கோயில் எல்லாமே திமு கழகந்தான் என்று உறுதிபட ஓங்கி முழங்கி இருக்கிறார்கள்.

அந்தப்பெருமாட்டி தன் பேரக்குழந்தைகளுக்கு பகலவன், ஆதவன், கதிரவன், கலைஞர் கோ, பேத்திகளுக்கு மொழியாள், நறுமுகை, ஒளி எழிலி, இசை எழினி என்று பெயரிட்டிருக்கிறார்.


அதைப்போல கோவை போத்தனுரைச் சேர்ந்த பிலிப் எனும் கிறித்துவரும், ரஹிமோ ரஹுமனோ (பெயர் நினைவில் இல்லை) எனும் இசுலாமியரும், என்னிடம் சொன்னார்கள் - நாங்கள் தேவாலயத்திற்கும் மசூதிக்கும் சென்றதில்லை. ஜெபமோ தொழுகையோ செய்ததில்லை. பைபிளோ குர்ஆனோ படித்ததில்லை. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் திமுக வும் அதை சார்ந்ததுந்தான் என்றார்கள்.

இவர்கள் மெத்தப்படித்தவர்களோ மேலிடத்தில் இருப்பவர்களோ அல்ல. பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் பெருமளவு புரிந்தவர்கள்; பெருமையுடன் நினைப்பவர்கள்.

இவர்களைப் போன்றோர் விழுக்காட்டளவில் கூடக் குறைய எண்ணற்ற தோழர்கள், இலட்சியத் தொண்டர்கள் எங்கும் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் இதயத்தில் ஒரு வினா எழுகிறது. இந்த இனியவர்களைப் போன்று இவர்களுக்கு மேலிருப்பதாக எண்ணுபவர்கள், நினைப்பவர்களுக்கு உறுதியும் உளத் தூய்மையும் இருக்கிறதா என்பதுதான் அந்த வினாவாகும்.

இல்லையென்றால் இயக்கத்தின் இனிமைகளை, இலட்சியங்களை, இயக்க விசுவாசத்தை, அறிவு நாணயத்தை பெரியார் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் தன் உணர்வால், உழைப்பால், உத்திகளால் ஏற்படுத்திய எண்ணற்ற நிலைகளை தேடித் திரட்டி இதயத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும்; இயங்க வேண்டும்.


அப்படி இயங்கினால் தியாக மனத்தோடு ஓடி உழைத்தால் உன்னத நிலைகள் இங்கு தோன்றத் தொடங்கும். அப்போது ஆட்சி என்ன அகிலமே கரங்குவித்து கைகட்டி கழகத்தின் முன் நிற்கும்.

No comments:

Post a Comment