Friday 27 February 2015

அறிவியல் சார்ந்த ஆய்வுகள் வேண்டும்

கடந்த காலத்தின் மனித வாழ்வின் ஏற்ற இறக்க மாற்றங்கள், எச்சங்கள் பற்றிய எல்லா பதிவுகளையும் பல்வேறு ஆய்வுகள் வழிகய அதற்கான காரண காரியங்களைத் தேடும் ஆய்வாளர்கள் நீண்ட நாட்களாகவே தங்களது பணிகளை ஆற்றினார்கள்; ஆற்றி வருகிறார்கள்.

படித்தவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாணவர்களும், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்களும்,  நுண்ணறிவு சார்ந்த நூலாய்வு கல்வெட்டாய்வு வரலாற்றாய்வு மற்றும் கள ஆய்வுகள் செய்து தங்கள் கருத்துகளை முன்னிறுத்துவதை நிறைய நிறையவே காண முடிகிறது. இது அறிவுப்புலத்தில் நலன் சார்ந்த நிலை என்றே எண்ணத் தோன்றுகிறது.

 
இந்த ஆய்வாளர்களின் மனபோக்கிலும் வெளிப்பாடுகளிலும் சார்பு நோக்கமும் சான்றுகளின் முரண்பாடும் இல்லாதிருந்தால் ஆய்வுக்கு ஆக்கம் தரும்.  ஆனால் சாதி நோக்கு, சமய நோக்கு, அரசியல் நோக்கு, ஆகம நோக்கு, ஆதிக்க நோக்கு, எதிர் கருத்துகளில் ஏற்படும் வெறுப்பு, ஆய்வு நெறியில்லாத அறியாமை ஆகியவையும் ஆய்வாளர் பலரை சூழ்ந்திருப்பதை காண முடிகிறது.

இதில் நமது இதயத்தில் நிறைந்த இனியவர் தொ.. என்று குறிக்கப்படும் தூயவர் பேராசிரியர் திரு தொ.பரமசிவனின் ஆய்வுகள் சீர் நிறைந்த தெளிவுடன் துலங்குகிறது.

பெரியாரியலாளர் என்று பெருமையுடன் தன்னை முன்னிறுத்தும் இவர் நாட்டுப்புறத்தின் நானாவித செய்திகளை தன் கள ஆய்வின் மூலமாக ஒளியேற்றிக் காட்டுகிறார்

அண்மையில் கோவையில் என் மகன் வீட்டில் அவருடைய நூலகத்தில் "தொ,." வின்  பரண் - வழித்த்தடங்கள் எனும் இரு நூல்கள் மின்னி மிளிர்ந்தன. இமை விரித்த போது என் விழி முன் ஓவியம் போல தன் ஒளிமுகம் காட்டியது.

அதைப் பார்த்த போது ஏற்கனவே நான் படித்திருந்த "அறியப்படாத தமிழகம்", "தெய்வம் என்றதொரு", "விடுபூக்கள்" இந்த நூல்களின் அருகில் நின்று அழகூட்டியது.

பரண் எனும் நூலில் 25 செய்திகளை ஆய்வுக்கு உட்படுத்தி விளக்கி இருக்கிறார். வழித்தடங்களில் 20 செய்திகளை ஆய்வு செய்தி அருமையாக விளக்கம் தந்திருக்கிறார். நானும் என் ஆய்வும் என்று தொடங்கி தமிழ்ப் பண்பாடு பற்றிய ஓர் ஆங்கில கட்டுரையில் முடித்திருக்கின்றார்இன்னொன்றில் சங்க காலம் ஒரு மதிப்பீடு என்று தொடங்கி வில்லிபுத்தூர் கண்ணா, விளையாட வாடா என்று முடித்திருக்கின்றார்

இவற்றில் கணிப்பொறிஞர் சுஜாதா, மூ.இராகவையங்கார், க்ரியாவின் அகராதி ஆகியவற்றையும் மறுக்கவியலாத சான்றுகளோடு திறனாய்வு செய்திருக்கிறார்.

ஒரு கட்டுரையில் பேரறிஞர் அண்ணாவைக் குறிப்பிடுகிறார் -- தமிழர்களுக்கு புது வாழ்வு தந்தவர் என்று. 40 ஆண்டுகளுக்குப் பின் இந்த நாடு கொள்ளை போகப் போவதை இங்குள்ள தேசியவாதிகளுக்கு உணர்த்தி எச்சரித்தார் என்று குறிப்பிடுகிறார். அந்த நிலை இன்று உலக வங்கி முதலீடாக, உலகமயமாக்கல் சுரண்டலாகி கொள்ளை போவதாக பலரும் ஓலமிடக்காண்கிறோம்.


புது வாழ்வு தந்த அண்ணா என்று கூறி புளகாங்கிதம் அடையும் தொ.பவின் எழுத்து நம்மை எங்கெங்கோ அழைத்துச் சென்று நினைவுத் தேனாற்றில் நீந்தச்  செய்து மகிழ்ச்சியில் உணர்வுகள் பொங்கிப் பூரித்த நிலை அடைகிறது.


அந்த அருமை அண்ணாவை கல்விக் கூடங்கள், மாணவர்கள், கலைத்துறையினர், ஆசான்கள், அரசியல் தம்பிகள், அறிவுலகைச் சேர்ந்தோரில் பெரும்பான்மையினர் அடியோடு மறந்தது தவறு, குற்றம் என்று உண்மையான உணர்வாளர்களும், நடுநிலையாளர்களும் எண்ணி இதய நோவு கண்டு நடுங்கவே செய்வார்

பெரியாரைப் பற்றி பெரிதும் ஆய்வு செய்த தொ.. ஒரு நூலில் பெரியாரின் கருத்துகள் மறு வாசிப்புக்குரியவை என்று கூறி இருப்பதாக ஒரு நினைவு. அதை தந்தை பெரியாரே மறுக்கவில்லை. எனக்குப் பின்னால் வருபவர்கள் என்னை ஆய்வு செய்து முட்டாள் ராமசாமி என்று கூட சொல்ல வேண்டும் அறிவு நிலையில் என்றார். அது எதிர்வரும் முன்னேற்றத்தின் காரணமாக இருக்க வேண்டும் என்றார்.

பெரியாரின் சிந்தனைகளில் ஒளிராதது எதுவும் இல்லை. தொலைநோக்கு என்பது இழந்து போன நாட்களை விட எதிர்வரும் நாட்களுக்காகவே வேண்டும் என்டரர். தொன்மங்களின் சிறப்புகளை அறியாதவர் அல்ல. சிலவற்றை போற்றதவரும் அல்ல. ஆனால் அது வாழ்வுக்கு உலகோடு இணைவதற்கு மேலும் உயர்வதற்கு உரியதாக உதவுவதாக பெரும்பாலும் இல்லை என்பதால் இன்றிலிருந்து எதிர்கால ஏற்ற நிலையை ஏற்படுத்தும் ஏணியாக வேண்டும் என்கிறேன் என்றார்.

படிந்து கிடக்கின்ற நல்ல பழைமைகள் புதுமைக்கு உரமானால் மகிழ்ச்சி என்றார். ஆனால் வளத்தில், மன வலிமையில் துருப் பிடிக்கும் நிலை என்றால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றார்ஆனால் இன்றைய ஆய்வாளர்கள் பழைமையின் சிறப்பு என்று இன்றைய உலகிற்கு பயன்படாத ஆய்வுகளைச் செய்து அறைந்த வண்ணம் இருக்க காண்கிறோம்.

பெரியாரின் கடவுள் எதிர்ப்பை பற்றி குறிப்பிடும் தொ.. சமூக ஆதிக்கத்தையும், அதிகார ஆதிக்கத்தையும் ஏற்படுத்த பார்ப்பனர்கள் ஏற்படுத்திய நிறுவனங்களையும், வேதத்தையும், அதன் கடவுள் வடிவங்களையுமே எதிர்த்தார். நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை என்று குறிப்பிடுகின்றார். போரிடவில்லையே தவிர கடவுள் என்ற கருத்தில் அதுவும் இணைந்ததுதான் என்பது பெரியாரின் கொள்கையாகும்.


கல்லும் மண்ணும், காகிதக் காட்சிகளும், சிலையும் பீடங்களின் முன் நின்று கை கூப்பி வணங்கிக் கற்பூரம் கொளுத்திக் காவடி எடுத்தால், அருள் வழங்கும், ஆசி வழங்கும், வழங்குவியும், வாழ்க்கை செழிக்கும் என்று யார் நினைத்தாலும் அது முட்டாள்தனந்தான், மூட நம்பிக்கைதான், என்றார் பெரியார்.

இந்த இடத்தில் நூலில் உள்ள தொ,, வின் செய்தி ஒன்றைச் சொல்ல வேண்டும். அதை நூலைப் படிப்போர் சிந்தனைக்கு விட்டு விட நினைப்பதால் சொல்லவில்லை.

அடிக்கடி இடம்பெயர்ந்து நிலை மாறுவோர் ஆய்வுக்களங்களை நாடக் கூடாது. எண்ணுபவர்கள் திண்னியராக இருந்தால் நலம். இன்று கூட உலகத் தரத்திற்கு உயர்ந்திருக்கின்ற ஆய்வாளர்கள் நாங்கள் என்ற நினைவோடு நாளும் நாளும் பல செய்திகளை இன்றைய ஊடகங்களில் முகங்காட்டி முன்னிறுத்துவது, பார்ப்போர் படிப்போர் கேட்போருக்கு சிறிதளவு மகிழ்ந்து முறுவாழிக்கவும் பெருமளவு முகஞ்சுழிக்கவும் வைக்கிறார்கள்.  

தர்க்க நியாய வாதமறியாமல் , சொல்லுக்குச் சொல், கருத்துக்குக் கருத்து  விளக்கத் தெரியாமல் குண்டக்க மண்டக்க என்பார்களே அது போலக் கூவி கூச்சலிடுகிறார்கள். அத்தோடு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்துபவர்களும் சேர்ந்து கோஷம் போடுவதால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல் சானலை மாற்றி மகிழ்கிறார்கள் மக்கள்.

ஊடங்களின் பொறுப்பு என்பது உண்மையை தேடிப் பெறுவதும், தருவதுமாக இருக்க வேண்டும். ஊன மனம் உள்ளவர்களையும், உதவாத கருத்துக் கொண்டவர்களையும், தன்னல நோக்கால் தன்னிலை இழந்தவர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதை பொதுமக்கள் இப்படிதான் நினைப்பார்கள்

ஆம், பெரிதும் மக்களைச் சுரண்டிக் கொளுத்த நிறுவனங்களின் விளம்பரப் பணத்தால் விளையாடுகிறார்கள், வித்தை காட்டுகிறார்கள்; கேடுகளுக்குத் துணை போகிறார்கள். நல்ல நேரத்தை வீணாக்குகிறார்கள் என்றே கருதுவார்கள்.


உலகத்தோடு உயர்ந்து செல்ல வேண்டிய செய்திகள், கருத்துகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. அதைச் சொல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆக்கமில்லாத்தனங்கள், ஆடம்பரக் கலைஞர்களின் போலித்தனங்களை, பொய்ப்பெருமைகளை புகழ்ந்து போற்றினால் சமுதாயம் சவக்குழிக்குச் செல்லும் பாதைகள் பெருகும், நீளுமே தவிர வேறெதுவும் விளையாது. இது வரலாற்று உண்மை.

No comments:

Post a Comment