Monday 2 March 2015

கிழக்குத் திசையில் விடியலும் வெளிச்சமும் கிழக்குப் பதிப்பில் இருள் சூழ்ந்த நூலும்

கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட திரு. பிரபாகரன் எழுதிய " தமிழரின் தாயகம் குமாரிக் கண்டமா? சுமேரியாவா? " என்று தலைப்பிட்ட தமிழரின் தோற்றமும் பரவலும் என்று துணைத் தலைப்பிடப்பட்ட நூலொன்றைப் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது.

திரு. இராமச்சந்திர தீட்சிதர் என்னும் பெருமகன் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழ்ங்கிய கட்டுரையின் பெயர் தமிழரின் தோற்றமும் பரவலும் என்பதாகும். அந்த அரிய நூலுக்கு எதிராக அதே பெயரை வைத்து தனது ஆசையை உள்ளத்தை ஊருக்கு காட்டியிருக்கிறார் ஆய்வு என்ற பெயரில்.

பழைய தமிழ் அழிப்பாளர்களான சனாதானப் புலவர்களைப் போல இவரும் முகங்காட்டுகிறார்  . பொய்களை முன்னிறுத்துகிறார். தமிழ் மீது , தமிழர் மீது பற்றுக் கொண்டவர் போலக் காட்டிப் பாதகம் செய்தவர்கள் பழைய தமிழ்ப் பகைவர்கள். திரிபு பேசுவது அடுத்துக் கெடுப்பது போன்ற அறம் சாரா நிலையை இவரிடமும் காணமுடிகிறது.

இந்த நூலில் தமிழர்களை தமிழகத்திற்கு உரிமை இல்லாதவர்களாகக் கட்ட புராண இதிகாசப் பொய்களை புளுகுகளைக் கொண்ட புழுதிக்காற்றில் பல உண்மைகளை மறைத்து எழுதுகிறார்.

ஊழிக்கால நிலப்பிரிவு கடல்களில் - பூமியில் தோன்றும் நில நடுக்கம், அதன் பாதிப்பின் அளவு, கடற்கோள், அதன் அளவுகள் என்றெல்லாம் காட்டி பாவாணர் - கா. அப்பாத்துரையார் மற்றும் பலரின் ஆய்வு உண்மைகளை உதறித் தள்ளி விட்டு சுமேரிய -பாபிலோனிய மொழி புராண மேற்கோள்களை முன்நிறுத்தி தம்மை ஓர் ஆய்வறிஞர் என்ற நினைவோடு தம்மை முன்னிறுத்துகிறார் திரு.பிரபாகரன் அவர்கள்.

அப்பத்துரையாரின் நூலின் ஒரு செய்தியை மறைத்து விட்டு அவரையும் ஒரு பொருட்டாக மதிக்க மறுக்கிறார்.

அப்பாத்துரையார் தனது இலெமூரியாக் கண்டம் எனும் நூலில் பிரபஞ்சப்பெருவெளியில் சுற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்திற்குள் வரும் ஹாலே வால்மீன் போல( தூம கேது), சில நூறாண்டுகளில் தோன்றும் வேறு சில நட்சத்திரங்களைப் போல அய்ம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரே பிரம்மாண்டமான அக்கினி நட்சத்திரம் ஒன்று வான்வழியில் சூரிய மண்டலத்துக்கு அருகில் வரும் என்றும் அப்படி வந்ததால்தான் பணி மூடிக் கிடந்த உறைவுகள் நீங்கி புது மாற்றம் தோன்றியது. சில கோள்களில் நிலை மாற்றம் கண்டது. அதில் இந்த நிலவுலகும் ஒன்றாகும்சூரியத் தன்மை போல் வியாளனும் ஒரு மாற்றத்தைப் பெற்றது. அது அந்த அக்கினியை உட்கருவாகக் கொண்டது என்று எழுதினார்.

இன்று சூரிய ஒளியை உள்வாங்கி சூரியனின் வாரிசாக வியாழன் உருவாகி விட்டது. ஒளியைப் பெற்ற வியாழன் ஒளியை வெளியிடும் நிலைக்குப் பக்குவப்பட்டிருக்கிறது. ஓர் நாள் இந்த பூமியில் இரண்டு சூரியங்கள் தோன்றும். அது அப்பா தாத்தா போல இருக்கும்; இயங்கும்ஒன்று வலிமை உள்ளதாகவும் மற்றொன்று ஓய்ந்து போனதாகவும் இருக்கும்

விஞ்ஞான விளக்கங்கள் தரும் போது விளக்கெண்ணை வடிவிலான செய்திகளை வெளிப்படுத்தக் கூடாது. தமிழரின் தாயகம் பற்றி உயிரோட்டமாக இருப்பது மொழி ஆய்வுகள்தான். டார்வின் தத்துவப்படி உலகில் இருந்து மனிதன் மாறிய பின்னரும் விலங்குகளைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்தான்

பின்னர் பேசு மொழி தோன்றிய போதுதான் ஓரிடத்தில் நின்று நிலை கொள்ளத் தொடங்கினான்.இருப்பினும் மற்ற விலங்குகளைப் போலவே  வேட்டையடியே உயிர் வாழ்ந்தான். இராகுல சாங்கிருத்தியாயனின் எழுத்துகளில் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கண்களில், கையசைவில் பேசியதை விட குரல் மொழியில் பேசிய பின்னரே வேளாண்மையும் கைத்த்தொழில் முதலியவை இயற்கை நிலையில் இருந்து செயற்கை முறையில் மேம்பட்டது. ஒரு மக்கள் கூட்டத்தின் தாயகம் எதுவென ஆராயும்போது சொல், மொழி பற்றிய ஆய்வில் கண்டறிய முடியும். அது அறிவியல் நிலையில் அந்த மொழியின் சொற்கள் தரும் கருத்து, புலப்படும் பொருள் வடிவில்தான் காண முடியும். மனிதனின் தாயகம் என்பது, அவனது பிறப்பு என்பது, கோண்ட்வானாவில் என்கின்றனர். கோண்ட்வானா என்பது இன்றைய ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்கள் ஒன்றாயிருந்த நிலப்பரப்பு என்கின்றனர். அதைத் தமிழறிஞர்கள் இலெமூரிய என்று இயம்புகின்றனர். அது குமரிக்குத் தெற்கேயும் இருக்கலாம்; மற்ற திசைகளிலும் இருக்கலாம். இங்கு இலெமூரியா என்பது கூட லெமூர் எனும் குரங்கின் பரிணாமந்தான் மனிதன் என்ற அறிவியல் முடிவுப்படியே இயம்புகின்றனர். 

மொழிகள் சொல்லும் கருத்து முடிவுகள் அறிவியல் ஆய்வு வழியே இருக்க வேண்டும். புராண இதிகாசக் கற்பனை, காவியங்கள், அமானுஷ்ய வடிவங்களில் இருக்கக் கூடாது. உலக மொழிகளில் முதல் மொழி எது என்பதை பாவாணரும் வேறு சில ஆய்வாளர்களும் சொல்லும் வடிவ முறையும் முறையானதாகவே இருக்கிறது. தமிழின் தோற்றம் எதுவென்று அதன் சொற்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் என்று தலைவர் கலைஞர் ஒருமுறை எழுதினார்.


கடற்கோளின்போது ஒரே நேரத்தில் நிலத்தை காதல் விழுங்காதது என்று சொல்லும் பிரபாகரன் தொடர்ந்து வந்து விழுங்காது என்பாரா? பூம்புகாரும், துவாரகையும் கடலில் ஆறேழு மைல்களுக்கு அப்பால்தானே கிடக்கிறது. ஆகாய வெளியில் அப்பாத்துரையாரின் அக்கினி நட்சத்திரங்கள் வரும்போது ஆறாயிரம் ஏழாயிரம் மைல்கள் அளவுக்கு நிலத்தை கடல் கொண்டிருக்காதா? கடல் அரிப்பிலேயே பல நிலப்பகுதிகள் காணவில்லையே?


அது மட்டுமின்றி இன்றைய ஓசோன் ஓட்டையைப் போல முன்காலத்தில் இயற்கையின் நிகழ்வில் பெரிய பெரிய ஓட்டைகள் விழுந்திருந்தால் சூரியச் சூடு உறைந்த பனிக்கட்டிகள் உடைந்து நீரின் பெருக்கம் ஏற்பட்டு நிலங்களை விழுங்கி இருக்காதா? இன்றும் கூட உலகில் உள்ள பனிக்கட்டிகள் உருகினால் பூமியில் 60, 70 அடிக்கு மேல் நீரின் உயரம் இருக்கும் என்கிறது அறிவியல் முடிவு. எழுதியவர் எண்ணிப்பார்க்க வேண்டிய இடங்கள் இவை.

மூன்று கண்டங்களும் இணைந்திருந்த காலத்தில் மணிதான் தோன்றவே இல்லை என்ற கருத்தும் இங்கே கூறக் கேட்கிறோம். கண்டங்களின் இடையே காதல் நீர் புகுந்திருந்தாலும் அதன் ஆலம் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. இன்றும் கூட கடல்களில் நடக்கின்ற அளவு மேட்டுப்பகுதிகளைப் பார்க்கலாம். கட்டுமரத்தால் கூட பிரிந்திருக்கும் இடங்களை இணைக்கலாம். அதனால் ஓரிடத்தில் உருவான மனிதர்கள் எளிதில் இடம் பெயர்ந்து இருக்கலாம்.

ஆரியரைத் தேடி என்று திரு ஆர் எஸ் சர்மா ஓர் ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். அதில் அரியருக்கென்று தாயகம் எதுவும் இல்லை என்கிறார். " அற்ற குளத்து அருநீர் பறவைகள்" போன்றவர்கள் என்கிறார். இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த இனக்குழு வாழ்க்கையையே இன்றளவும் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்இன்றைய சமஸ்கிருதமும் இவர்களது மொழியல்ல, பல ஆதிவாசிக்குழுக்கள் பேசிய கலப்பு மொழிதான் துவக்கத்தில் இவர்கள் பேசியது என்கிறார்.

வேளாண்மையின் பெருமை பற்றி பேசும் இவர் சுமேரியப்பகுதியைச்  சிறப்பித்து அதன் படத்தை தனது பூசை அறையில் வைத்து புளகாங்கிதம் அடைகிறார். பூசை அரை என்பதே கூட விஞ்ஞானப் பார்வையில் விலக்கப்பட்ட ஒன்றுதானே.

மக்களினம் மொழி உணர்ந்து அறிந்து முறைகளைக் கண்ட போது ஓரிடத்தில் நிலை கொண்டு வாழ்ந்த நாளில்தான் வேலனமி அறிவு உதித்திருக்க வேண்டும். அதுவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில்தான் உதித்திருக்குமென்று சொல்ல முடியாது. அந்த வேளாண்மையை போற்றிப் புகழ்ந்து பெருமைப்படுத்தியது தமிழும் தமிழர்களும் தமிழகமுந்தான். இன்றும் அதன் பெருமையை பல வழிகளிலும் வாழ்த்தப்படுகிறது; வணங்கப்படுகிறது

புராண இதிகாச புகழ் பாதி பொய்யான பரப்புரையை மேற்கொள்ளும் பிரபாகரனைப் போன்றவர்கள் புராணம் இதிகாசம் அது சார்ந்த இலக்கியங்களை ஆய்வுக்குட்படுத்தினால் சிறிதளவு விழுக்காடே உண்மையைச் சொல்லுவது தெரியும்.

ஆரியமும் சமஸ்கிருததமும் உழவுத் தொழிலை இழிதொழில் என்றது. உழைப்பவனை காலில் பிறந்த கடையன் அதாவது சூத்திரன் என்றது. அறிவு , ஆய்வுக்குட்படாத அனேக படைப்புகளை தந்தவர்களை அதிமேதாவிகள் என்றும் ஆஹா ஓஹோ என்றது ஆரியம். அதன் அடிமைகளும் ஆமாம் ஆமாம் என்றனர்

தமிழர்களை வாழ்த்துவது தமிழின் சிறப்பைச் சொல்லி போற்றிப் புகழ்வது பின்னர் தமிழ் தமிழருக்கு மாறான கருத்தை மாண்பு என்று சொல்லி மெல்ல மெல்லப் புகுத்துவது பின்னர் மனதிற்குள் வெறுப்பது என்பது வஞ்சப்புகழ்ச்சியாகும். பன்னெடுங்காலமாக பண்பாட்டுப் படை எடுப்பாளர்கள் செய்ததைத்தான் அன்பர் பிரபாகரனும் செய்கிறார். தனது தமிழரின் தாயகம் குமரிக்கண்டமா சுமேரியாவா என்ற நூலில்.


தமிழரின் தாயகம் பற்றி பேசுவோர் தரவுகளை சரியாக எதை போட தெரிந்திருக்க வேண்டும். அந்த மொழி சொல்லும் கருத்துகளை முற்றாக ஆயும் திறம் வேண்டும், அது அறிவியல் முறையில் ஆய்ந்து தெளிவு பெற வேண்டும். அதில் பெரும்பான்மை நிலையில் முடிவு காண வேண்டும்.

அந்த வகையில்தான் பாவாணரின் மொழி ஆய்வை அணுக வேண்டும். அவர் மொழிகளை இயல் மொழி திரிமொழி, சிதைமொழி என மூன்று வகைப் படுத்துகிறார்.  இதன் வழியில் உலக மொழிகளை ஊற்று நோக்குகிறார்ஆக ஒவ்வொரு மொழிச் சொல்லும் இயல்பாய்,இயற்கையாய் பிறந்ததா? ஒன்றைப் பார்த்துத் தன்னை உருவாகிக் கொண்டதா என்ற தெளிவு வேண்டும். இதை பாவாணர் தெளிவாக விளக்குகிறார்.


தமிழ் என்றால் இனிமையானது. இனிமை என்பது இயற்கையானது. சமசுகிருதம் என்றால் திருத்தப்பட்டது; செப்பனிடப்பட்டது; ஒப்பனை கொண்டது என்பார்கள். கிரேக்கம் போர் மொழி; இலத்தீன் ஆண்டவன் மொழி; ஆங்கிலம் பல மொழிகளின் கூட்டணி மொழி என்றும் கூறுவார்கள்.


தமிழரின் தாயகம் பற்றி ஆராய்வதென்றால் அவர்களின் தாய்மொழி  பற்றியும் தெளிவான ஆய்வுப் பார்வை வேண்டும். தாய்மொழி என்பது தாய் சொன்ன மொழி என்று பொருள் கொள்ளக் கூடாது. அந்தந்த மண்ணின் தட்பவெப்பங்கள், அங்கு வாழ்ந்த, வாழ்கின்ற, மக்கள் கூட்டம் அவர்கள் பேசிய, பேசுகின்ற மொழிதான் தாய்மொழி என்று பொருள் கொள்வது அறிவுடைமை ஆகும்.

தமிழ்ச் சொற்கள் பெரிதும் இயல்பாய், எளிதாய், இனிதாய் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற மொழியாகும். மற்ற மொழிகளின் சொற்களை இதனடியில் பார்த்தால் உண்மை விளங்கும். இம்மண்ணின் தன்மைகேற்ப தோன்றிய தமிழில்தான் இயல்பான சொற்கள் இன்றும் தோன்றிக்கொன்றே இருக்கின்றன.

உலகிலேயே நிலம் அய்ந்து என்று ஆய்ந்தறிந்து அந்த நிலத்தின் இயல்புக்கேற்ப இயங்கும் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்ன இனிய மொழி. ஏன் அறிவியல் மொழி ஆதி நாளில் தமிழ் ஒன்றுதான்.

உயிர் ஆறு, சுவை ஆறு, பூதம் அய்ந்து, புலன் அய்ந்து, இசை ஏழு, வண்ணம் ஏழு என்று அய்வகை நிலத்தின் தன்மைகேற்ப நிகழும் எல்லாவற்றையும் ஆய்ந்து சொன்னவர்கள் இந்த தமிழ் நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள்தான்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழகம் என்ற உண்மையோடு அணுக வேண்டுமே தவிர வேறு தவறான எண்ணங்கள் முடிவுகளோடு அணுகினால் உண்மை கிடைக்காது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்ற சுழியத்தை () பத்துப் பத்தாய் கூட்டுகின்ற தசமக் கணிதத்தை கண்டவர்கள் சிந்துச் சம வெளியில் வாழ்ந்து சிறந்த தமிழர்கள்தான்.

இந்த இரு நிலைகள் மட்டுமல்ல. தமிழ் எண்கள் கூட சிறு திருத்தத்தோடு அராபியர் வழியாக அய்ரோப்பாவிற்குள் சென்று உரோமன் எண்களுக்குத் தாயானது. காய்தல் உவத்தல் இல்லாது வரலாற்றைப் படிப்பவர், பார்ப்பவர் , ஆய்ப்பவருக்கு உண்மைகள் உள்ளத்தில் உலா வரக் காணலாம். உலகில் எந்தப் பகுதியிலும் புதிய தாவரங்கள் முளைப்பதில்லை. ஆனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாலையில்தான் புதிய தாவரங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் அறைகிறார்கள். இயற்கை தரும் எழிலும்புதுமையும் இங்கேதான் தோன்றியது; தோன்றுகிறது. அது போலவே தமிழும் தமிழர்களும் இங்கேதான் வாழ்ந்து சிறந்திருக்கிறார்கள்.

சுழன்று வரும் இந்தப் புவியில் உயிர் தோன்றும் சூழல் உள்ள இடம் குமரிப் பகுதியும் அதன் தொடர் நிலங்களுந்தான். இலெமூர் குரங்கும் தோன்றியது இங்கேதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். சுமேறியாவில் தமிழ் தோன்றும் சூழல்கள் நிலவியதா? நிலவுகிறதா? இருந்ததாக யாராவது சொன்னார்களா? விளக்குவது அதுவும் அறிவு ஆய்வு நிலையில் விளக்குவது பிரபாகரனின் கடமையாகும்.

குரங்கிலிருந்து மனிதனாக மாறுவதென்பது உடனே நடக்கின்ற ஒன்றல்ல. குழந்தை முதியவராக மாற காலங்கள் பிடிப்பது போல மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியாகும். அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளாகும். அந்த மனிதன் மொழி பேச ஆண்டுகள் பல ஆகியிருக்கும் என்பதை டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை உணர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.

மேற்காணும் நிலையில் இருந்து தோன்றிய தொடர்ச்சிதான் இன்றைய வாழ்க்கை முறையும் இயற்கை சார்ந்த இயல் மொழியும் பிறவும். ஓர் இனத்தின் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தின் தாயகம் எதுவென அறிந்திட மொழி ஆய்வுடன், தொல்பொருள் ஆய்வும் அதில் ஆய்வுமானத் தூய்மையும், முரணில்லாத முற்போக்குச் சிந்தனையும் முழுமையாக வேண்டியது அவசியமாகும்

தமிழரின் தாயகத்தை சுமேரியாவுக்குக் கொண்டு சென்று விட்டு தமிழ் நிலத்தை ( இந்தியா முழுமையும்) ஆரியருக்குச் சொந்தமென்று பின்னர் சொல்வார் என்பதற்கு இந்த நூலில் சான்றுகள் பல இழையோடக் காணலாம். தமிழ், தமிழினம், தமிழர் மீது வாஞ்சை கொள்கிறோம், வாழ்த்துப் படுகிறோம், உளத்தூய்மையுடன் உறவு கொண்டோம்; இது உண்மை என்றெல்லாம் சொல்லி அண்டி நின்று அடுத்துக் கெடுத்து தமிழை அளித்திடப் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்த பண்பாட்டுப் படையெடுப்புகளை இன்று இங்கு பல்வேறு அறிஞர்களும், நல்லவர்களும், நடுநிலையாளர்களும், உணர்ந்து வருகின்றனர்

ஆய்வாளர்கள் அறிந்து அறிவு நிலைகளில் அறிவித்து தமிழர்களின் மயக்கம் தீர்த்து வருகின்றனர். ஆயினும் புது வடிவில் பொய்மைப் போர் தொடர்ந்து நடத்துகின்றனர் என்பதற்குச் சான்று கிழக்குப் பதிப்பகம் க்ரியா போன்றவைகளைக் காட்சியாகக் காண முடிகிறது.


அறிவாளர் நெஞ்சில் பிறந்து பத்திரிக்கைப் பெண்ணே என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அதில் பத்திரிக்கைப் பத்தினிப் பெண்ணே என்று சேர்த்துக் கொள்ளலாம். பத்தினித்தனம் என்பது ஊசலாட்டம் இல்லாத உறுதியும் சூழலுக்குள் சிக்காத உளத் தூய்மையும் வணிகத்தனம் இல்லாத வாய்மையும் , கணிகைக் குணம் அண்டாத கண்ணியம் கொண்ட கற்பு நெறியும் இணைந்த ஓர் உணர்வாகும். அது பத்திரிக்கைகள், பதிப்பகங்கள், தொலைக்காட்சிகள்,பொதுமக்களுக்குப் போதனை செய்வோர் மற்றும் பல வழிகளில் பரப்புரை செய்யும் ஊடகங்களை நடத்தும் நிறுவனம்/ நிறுவனர்களிடமும் இருக்க வேண்டும். இருந்தால் எல்லோருக்கும் நல்லது. இல்லையெனில் அழிந்து விடுவதில் இவை அனைத்தும் அடங்கி விடும்; அய்க்கியமாகிவிடும்/விடுவார். இது மாறாத வரலாற்று உண்மையாகும்,

1 comment: