Thursday 30 June 2016

நாளும் மலர வேண்டும்
நலம் பெருக வேண்டும்
நாகரிகம் செழிக்க வேண்டும்
2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அடுத்து வந்த ஊராட்சி மன்றத் தேர்தலிலும் அதற்கடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதன் பின் நடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.கழகம் உரிய இடத்தை பெற இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் எதுவென பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் நடந்து வந்தன, நடந்து வருகின்றன.
தி.மு.வின் கொள்கை கோட்பாடுகளை விரும்பாதவர்கள் அந்த அறம் சார்ந்த அருமையான மாசற்ற கொள்கை மீது வெறுப்பும், பகைமையும் கொண்டவர்கள், நீதி, நேர்மை, நியாயம், நடுநிலைகளில் பாகுபாடு காட்டுவோர் மக்களிடம் சமத்துவ உணர்வு தழைத்திட விரும்பாதவர்கள் தி.மு.க.வில் கலகமூட்டியவர்கள் கலக மூட்டி முனைந்து செயல்படுவர்கள், கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து கழற்றி விடப்பட்டவர்கள் கலைஞரின் நிரந்தர அரசியல் புகழ்கான சகிப்புத்தன்மை இல்லாது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள், சாதிமதச் சண்டியர்கள் இலஞ்ச இலாவண்யத்தில் நாளும் குளிக்கும் நச்சுமன அரசு அதிகாரிகள், வணிக நிலையில் வாய்மையில் வறுமையானவர்கள் ஆகியோரின் முறையற்ற செயல்வடிவம்தான் தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாக ஒரு நீண்ட அணிவகுப்பைக் காட்டுகிறது.
இவையெல்லாம் உண்மையென்றாலும் இதையும் தாண்டி மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் மன்றங்களின் உள்ள இடங்கள் முழுமையும் பறிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் வக்கோ, வகையோ, வலிமையோ இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும்.
நல்ல மனமும் நடுநிலையும் நாகரிச் செழுமையும் கொண்ட நண்பர்கள் வட்டத்தில் நாளும் கலந்துரையாடுவது என்று வழக்கமா உள்ளவன் நான். அப்போது அந்த அருமைக் கலந்துரையாடலில் வெளிப்பட்டதைத் தொகுத்துத் தர முயல்கிறேன்.
பல்வேறு உணர்வுகள், கருத்துகளில் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தமிழ், தமிழர் நலன் காணும் உணர்வுள்ளவர்கள் அவர்கள் என்பதால் முரண்பாடோ, முட்டல், மோதலோ இல்லாத வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கும். மாலை வேளைச் சூழலில் மனதிற்கும் மகிழ்வூட்டும் இந்தவாத நிகழ்வுகள் நினைக்கின்றபோதெல்லாம் மகிழ வைக்கும்.
நாளிதழ்கள், திங்கள் இதழ்கள், தொலைக்காட்சி, கைப்பேசிச் செய்திகளை முன்னிருத்தி வாதிடும்போது பல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். அப்போது கடந்த தேர்தல்களின் நிலைகளை முன் வைத்ததை நினைத்தும் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் எல்லா மக்களிடமும் மாற்றத்தை வளர்ச்சியை ஏற்படுத்திய குறிப்பாக தி.மு.க. ஆட்சியை இறக்கியதற்கான காரணங்களைச் சொன்னார்கள்.
1989க்குப் பிறகு அமைப்புகளின் உணர்வுத் தூய்மை சிறிது சிறிதாக வலிமை குறைந்து வந்ததாக ஒருவர் வருந்தினார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது ஈழத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்கள் இழிமுறைகளால் அழிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.கவிற்கு எதிரணிப் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்து முறியடிக்கும் ஆற்றலைத் திறத்தை தி.மு.க. வெளிப்படுத்தவில்லை என்றார் இன்னொருவர்.
மத்திய அரசில் இந்தியை ஆதரிக்கும், வடநாட்டாரை போற்றிப் பாதுகாக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தன் தனித்தன்மையை விட்டு நலிந்து வந்தது என்றார் ஒரு தோழர்.
எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இணைத்து வளர்த்ததும் தவறு அவரைக் கட்சியிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாக்கியதும் தவறு என்றார் ஒரு நண்பர்.
தொலைக்காட்சி விவாதங்கள் பேட்டிகளில் நுட்பமாக தகவல் செய்திகள் கருத்துக்களை வெளிப்படுத்தியும் மறுக்கவியலாத நிலையை ஏற்படுத்தும் விற்பன்னர்கள் அருகி விட்டார்கள் என்றார் இன்னொரு தோழர்.
ஏற்கனவே செழுமை கொண்டிருந்த தி.மு.க.வின் பிரச்சார உத்திகள் செயல்முறைகள், கட்சிப் பற்று, பாசம், தன்னலமற்ற இயக்க உணர்வு, பஞ்சப் பிரதேச மனிதர்களைப் போல மெலிந்து போய் விட்டது என்றார் மற்றொரு தோழர்.
பொதுக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், தொழிற்சாலைகள், கல்லூரி வாசல்களில் நடக்கின்ற வாயில் கூட்டங்கள், கிளைகள் தோறும் மினிட் புத்தகம் போட்டு நடக்கும் மாதாந்திரக் கூட்டங்கள், தெருமுனை திண்ணைப் பிரச்சாரங்கள், அணிவகுக்கும் மாவட்ட மாநாடுகள், அய்ந்தாண்டுக்கொருமுறை நடக்கும் மாநில மாநாடுகள் தேவைப்பட்ட காலத்தில் நடக்கின்ற சிறப்பு மாநாடுகள் சுருங்கிப் போய் விட்டதாக சோகத்தோடு சொன்னார் இன்னொருவர்.
தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து சிறை செல்லும் தியாக உணர்வை ஆட்சி என்ற திரை மறைத்து விட்டதாகவும் ஆட்சியைக் கண்டபின்னும் மத்திய அரசை எதிர்த்து எழுச்சி நாள் எனும் போராட்டத்தை அறிவித்த அண்ணாவின் நிலை அனுசரிக்கப் படவில்லையென்றார் மற்றொருவர்.
ஏடுகள், இதழ்கள், நூல்கள் என ஏராளமான செய்திகள் கருத்துகள் என்று பொங்கிப் பெருகிவந்த நிலைகள் அனைத்தும் பொய்த்துப் போன பருவ மழை போல் மறைந்து விட்டது என்றார் இன்னொருவர்.
கலைக்குழுக்கள், தெருமுனைப் பாடகர்களின் பாட்டுமழை, வீதி நாடகங்கள், ஆர்வமுள்ள தோழர்களின் ஆங்காங்குத் தெருக்களில் நடத்துகின்ற நாடகக் குழுக்கள் ஆகிய அனைத்தும் கண்ணுக்குக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை என்றார் இனியவர் ஒருவர்.
அண்ணாவால் பொங்கிப் பெருகிவந்த மாணவர் பட்டாளத்தின் ஆற்றலும், திறனும், ஆர்வமும், போர்க்குணமும் மங்கி மறைந்து விட்டதாக விழிகளில் கண்ணீர் சிந்த விக்கித்து சொன்னார் ஒரு  மாணவத் தோழர்.
ஈழப் பிரச்சனை, 2ஜி வழக்கு, கடந்தகால ஊழல் போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வல்லமை தி.மு.கவில் வற்றிப் போய்விட்டதாக வருந்தினார் ஒருவர்.
கட்சித் தலைமையின் எண்ணங்கள் முடிவுகளில் கருத்துச் சொல்லும் சுதந்திரம் அறவே அருகிவிட்டது என்றார் இன்னொரு நண்பர்.
கட்சித் தலைமையின் குடும்பம் உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிணக்குகள், மோதல்கள் கட்சிக்குக் காயத்தை ஏற்படுத்தி வந்தது என்றார் வேறொரு நண்பர்.
ஆட்சியிலும் கட்சியிலும் இரண்டு மூன்று அதிகார மய்யங்கள் இயங்கியது சரியல்லை என்றார் ஒரு தோழர்.
உழைப்புத் தியாகம் கட்சிப் பற்று, பாசம், கொள்கை உணர்வுகள் புறந்த தள்ளப்பட்டு பணத்தால் எல்லாம் நடக்கும் என்ற நிலை ஆட்சியினால் அதிகளவு நிலை கொண்டு விட்டதாகவும் அதற்கு தலைமையும் அதன் வழியே நடைபோடுவதாகவும் நடுங்கிய குரலில் சொன்னார் ஒரு தோழர்.
பொறுப்பாளர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்த நாட்களில் ஆயிரத்துக்கு மேல் நடந்த கூட்டங்கள், திருவிழாக்கால நிகழ்ச்சிகள் போல தேர்தல் காலத்தில் மட்டுமே அது மிகவும் குறைந்த அளவிலலேயே நடப்பதாக நாவசைத்தார் ஒரு நல்லவர்.
மாநிலம் தழுவிய ஆற்றல்மிக்க தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள் அய்நூறுக்கும் மேல் இருந்தும் ஒரு இருபது முப்பது பேச்சாளர்கள் அதுவும் கூட்டம் நடத்துபவர்களின் குரல் வளையை நெறிக்கும் பேச்சாளர்கள் அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டணி வைத்துக் கொண்டு வாய்ப்புகளை பங்கிட்டு கொள்வதாக மருகினார் ஒரு தொண்டர்.
வாழ்க்கைச் செலவிற்கு வழிதெரியாத நாளில் கட்சி முன்னோடி என்பதற்குச் சான்றாக கடன் அல்லது நன்கொடை பெற்று ஏடுகள், இதழ்கள், நூல்கள் வெளியிடும் நிலை இருந்தது. ஆனால் இன்று மலையளவு பொருளும் பணமும் நிறைந்த நிலையில் அது போன்று நிகழாததற்கு காரணம் தெரியவில்லை என்றார் நெடுநாள் கழகத் தோழர் ஒருவர்.
தி.மு.கவற்கு எதிராக ஏராளமான தொலைக்காட்சிகள் திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் தி.மு.க.விற்கான ஆதரவான தொலைக்காட்சிகள் தோன்றவில்லை தொடரவில்லை உண்மைகளை துலங்கச் செய்யவில்லை என்று துயறுற்றார் தோழர் ஒருவர்.
திராவிட இயக்கச் சிந்தனைகள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்நிலைகளை தொக்கி நிற்கும் தொலைக்காட்சிகளுக்கு எதிராக இயங்க வேண்டிய தி.மு.கவின் ஓரிரு ஆதரவுத் தொலைக்காட்சிகளிலும்  திராவிட இயக்க சிந்தனைக்கு எதிரான காட்சிகளோடு இணைத்துக் கொள்கிறது என்றார் ஒரு பெரியார் பற்றாளர்.
நவீனத் தொழில் நுட்பக் கருவிகள் மின் அணுக் கருவிகளின் வழியே தலைவர் கலைஞரும் தளபதி ஸ்டாலினும் டுவிட்டர், முகநூல் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினாலும் பரவலாக அது முளைக்கவில்லை வளரவில்லை முன்னெடுத்து சொல்லப்படவில்லை முழுமை பெறவில்லை என்றார் வலைத்தளத் தொடர்புள்ள ஒரு நண்பர்.
கருவறையிலிருந்து வெளிவந்த மழலையிலிருந்த கல்லறை நோக்கிச் செல்லும் முதியவர் வரைக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகளை தந்தை பெரியாரின் உழைப்பை கொள்கையை பேரறிஞர் அண்ணாவினால் ஏற்பட்ட தமிழர்களின் ஆற்றல் திறம், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை கலைஞரின் ஆட்சிச் சாதனைகளை கார்டூன்களாக வண்ணக் காட்சிகளாக பல்வேறு வடிவங்களில் வகைப்படுத்தி வரிசைப்படுத்திக் காட்டாதது வரலாற்று குற்றம் என்றார் உலகறிந்த ஒருவர்.
எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பல்துறை அறிவாளர்கள் ஆற்றல் திறன்மிக்க படைப்பாளர்கள் கவிஞர்கள் கலைத்துறை விற்பன்னர்கள், காவியம் பாடும் புலவர் பெருமக்கள் உலக வரலாற்றை உற்று நோக்கி உண்மைகளை எடுத்துரைக்கும் அறநெறி சார்ந்த அருமையான மனிதர்களை உருவாக்கும் படைப்புலகமாக பல்கலைக்கழகமாக பல்துறை அறிவுப் பூங்காவாக மணம் வீசிய தி.மு.கவில் பிற கட்சிகளிலிருந்து  வந்தவர்களில் சிலர் அடாவடிகளாக அராஜகவாதிகளா சித்தரிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பும் பதவியும் தந்தது தவறு என்றும் பிற இடங்களில் இருந்து கூலிக்கு கூட்டி வந்து தேர்தல் காலங்களில் பேசவிட்டது சரிதானா என்றார் ஒருவர்.
தேசியக் கட்சிகளான காங்கிரசையும் பாரதீய ஜனதாவையும் தேசியத் தலைவர்களாகிய இந்திராகாந்தியையும் இரண்டு மூன்று தடவைகள் இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றி பொதுவாழ்வில் நிலைபெறச் செய்த கலைஞருக்கு ஏற்பட்ட நன்மை என்ன?அவருக்கு துன்பமும் கட்சியினருக்கு துயரமும் சூழந்தது. மேற்கண்ட கட்சிகளும் தலைவர்களும் தாமே என்றார் அரசியல் வரலாறு அறிந்த அறிஞர் ஒருவர்.
இடிப்பாரை இல்லா  ஏமரா  மன்னர்
கெடுப்பார் இலானும் கெடும்.
என்ற குறளின் வழியில் தி.மு.கவின் தலைமையே ஓர் அமைப்பை உருவாக்கி அதன் குறைகளை அன்புடனும் மென்மையுடன் எடுத்துக் காட்டுவது நல்லது என்றார் நடுநிலை உணர்வுள்ள ஒருவர்.
பல்வேறு பகைக்கூட்டம் பண்பற்ற பிரச்சாரங்கள் ஒட்டு மொத்த இந்திய ஆதிக்கவாதிகளின் பிரசார வடிவங்கள் மேட்டுக்குடி இராசதந்திரவாதிகளின் சதித்திட்டங்கள், முடிவுகள் வெறுப்புணர்ச்சி கொண்ட கட்சித் துரோகிகள், கலைஞரின் நீண்ட நெடிய கால ஆற்றல் திறத்தை நிலைகொண்ட புகழை தாங்க மாட்டாத தற்குறிகள், தன்னலக் காரர்கள், சாதிய சண்டியர்கள், சனாதனச் சண்டாளர்கள் ஆகிய அனைவரின் கூட்டு முயற்சி போன்ற வடிவங்களத் தாண்டி, தி.மு.க கற்கோட்டையாக நின்று நிலைப்பதற்கு கலைஞரின் ஆற்றலும் திறனும் அன்றாட நிகழ்வுகளும் அவரை மாசற்ற மனதோடு நேசிக்கும் நெஞ்சுரம் மிக்க தொண்டர்களுமே காரணம் என்றார் எப்போதாவது பேசுகின்ற ஒருவர்.
எந்தவோர் அமைப்பும், நாடும் ஒற்றைத் தனிமனிதரை முன்வைத்து அவரை மட்டுமே நம்பி நடைபோடுவது எப்போதும் நலம் பயக்காது. ஆற்றல் மிக்க தலைவரின் உணர்வுகளை உள்வாங்கி எல்லா இடங்களிலும் அவருடைய உயர்வுக்கான செயல்களை மட்டும் செய்து அணிவகுத்தால்தான் கட்சியும் நாடும், கற்கோட்டை போல் நெடுநாள் நிலை பெறும் என்றார் அனுபவ செழுமை கொண்ட இனியவர் ஒருவர்.
கொள்கைக் கருத்துக்களால் நடக்கும் பிரச்சாரம் மக்களின் மனதில் நிலைகொண்டிருக்கும் சம்பவங்களால் நடக்கும் பிரச்சாரம் மறந்து மறைந்துவிடும் என்ற பேராசிரியர் அன்பழகனின் கருத்து தி.மு.கவில் பின்பற்றப்பட வேண்டும் என்றார் நடைமுறையறிந்த ஒருவர்.
தலைமையை, முன்னோடிகளை போற்றுவது புகழ்வது சில நேரங்களில் அவசியம் என்றாலும் துதிபாடுவது அறவே கூடாது என்றார் நண்பர் ஒருவர். தி.மு.கவின் ஆட்சியினால் வாழ்வு, வள, ஏற்றம் என்பதை எல்லாத் தமிழர்களும் துய்த்து மகிழ்ந்தார்கள். இன்று வரைக்கும் நலிந்து, நசிந்து, சாக்காட்டில் சங்கமித்தவர்கள் இலட்சக்கணக்கான தி.மு.க. வின் இலட்சியத் தொண்டர்கள்தான் என்றார் தி.மு.கவைத் தெரிந்த நெஞ்சமுள்ள ஒருவர்.
கலைஞருக்குப்பின் தி.மு.க இருக்காது என்று ஒரு தடவை சொன்னார் பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்கள். இன்றைய நாளில் வலைத்தளங்களில் ஈடுபாடும் ஸ்டாலின் எளிமையும் உழைப்பும் கருத்தும் பேச்சில் முதிர்ச்சியும் இளைஞர்களின் வெளிப்பாடும் ஒரு நம்பிக்கையை உருவாக்கி உள்ளத்தில் ஊடுறுவி இருக்கிறது என்றார் உணர்வுகளை உற்று நோக்கும் ஒருவர்.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல் .            
எனும் குறள் வழியில் தி.மு.கவை நெஞ்சில் வைக்க வேண்டிய மாணவர் உலகமும் மகளிரும் மற்ற மற்ற துறையினரும் பொதுமக்களும் தங்கள் மனதை இடமாற்றி வைத்தது கொடுமையென்றார் நாட்டின் நடப்பு தெரிந்த ஒருவர்.
தமிழ் தமிழர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் அதன் திராவிட இயக்க சிந்தனை கொள்கை போன்ற அடையாளங்களின் வெளிப்பாடு கொண்டோரைப் பாராட்டி, பரிசளித்து தன்வயப்படுத்த வேண்டிய தி.மு.க. பேரளவுக்கு செய்யவில்லையென்றார் ஆய்வுகள் அறிந்த ஒருவர்.
தூயநிலை சமைக்க எல்லா இடங்களிலும் இருக்கும் இலக்கியவாதிகளைத் திரட்டி இணைத்து காவிய உணர்வுச் சூழலை உருவாக்க கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தி.மு.க இலக்கிய அணிக்கு தன்னாட்சி உரிமை இல்லாமல் மாவட்ட செயலாளர்களின் பிடிக்குள் சிக்கியதால் அதன் இலக்கை எட்டமுடியவில்லை என்றார் இலக்கிய நயம் அறிந்த முனைவர் ஒருவர்.
வானம்பாடியாய், வண்ணப் பறவையாய், மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் மேற்கு திசையில் வானில் முகில் காட்டும் பேரழகுக் காட்சிபோல் பல்துறை அழகுகளோடு வலம் வந்த தி.மு.க, ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் ஒத்தையடிப் பாதையில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அதன் இலக்கை எட்டமுடியாமல் இடையிடையே அதில் கூட ஓய்வு எடுப்பதாகவும் உருகினார் பழைய நிகழ்வுகளைப் பகன்ற பாவலர் ஒருவர்.
தன்னை ஒருவர் நாத்திகன் என்றும் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் தனக்கு சாதி, மத, மூடநம்பிக்கையில் இம்மியும் நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லையென்றும் பிரகடனப் படுத்திவரின் தலைமையில் இயங்கும் கட்சியில் அவரைப் பின்பற்றுமாறு எல்லாரையும் வலியுறுத்துவது நடைமுறை சாத்தியப்பாடு இல்லையென்றாலும் அந்தக் கட்சியின் முன்னோடிகள் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுவோர்கள், அந்தத் தலைவரின் அடியொற்றி நடப்பதும் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்வதுதான் அறமாகும். ஆனால் தி.மு.கவில் இல்லையென்றார் வேதனையுடன் ஒருவர்.
ஏழைகளை ஏதும் இல்லாதவர்களை எழுச்சியுற வைத்து அவர்களின் ஈடுபாட்டோடு வளர்ந்து, வலிமையுற்று தி.மு.கவில் எல்லாப் பொறுப்புகளிலும் அந்த ஏழைகளுக்கு ஏதும் இல்லாதவர்களுக்கு இடமில்லாது எல்லாவற்றையும் கோமான்களும், கோடீஸ்வரர்களும் கைப்பற்றிக் கொள்ளும் நிலை காணப்படுகிறது என்றார் இன்னொருவர்.
ஊர், பேரூர், நகரம், ஒன்றியம், மாவட்டம் ஆகியவற்றின் உட்கிளைகள் எல்லா இடங்களிலும் செயல்படும் கிளைகள் அமைந்தால் அது அந்த கட்சியின் வெற்றிக்குத் துணை செய்யும். ஒருகாலத்தில் அது பெருமளவுக்கு இருந்தது இன்று இளைத்துக் கிடைக்கிறது. நகரம் ஒன்றியங்களில் மூன்றில் ஒரு பங்கு கூட கிளைகள் இல்லையென்றும், அதில் இருப்பதில் செயல்படும் கிளைகள் சிலதான் என்றும் வருந்தினார் ஒரு நண்பர்.
அடைமழையாய் அணிஅணியாய் அடர்ந்து வந்த தி.மு.க. கூட்டங்கள் அருகி விட்டது என்றும் பேசவரும் சொற்பொழிவாளர்களை பிழைப்புக்காக வந்த அகதிகளாக இரவலனாக மாவட்டச் செயலாளர்கள் பார்க்கிறார்கள் என்றும் சொன்னார் அனுபவப்பட்ட பேச்சாளர் ஒருவர்.
திரைப்படத் துறையில் நீடித்த நின்ற தி.மு.கவின் பேரரசு வீழ்ச்சியுற்றது வேதனைக்குரியது என்று சொல்லிவிட்டு சொன்னார், அது மக்களின் விழிப்புணர்வு விழியில் மண்விழக் காரணமானது என்றார் வரலாறு தெரிந்த இனிய தோழர் ஒருவர்.
உள்நோக்கம் உண்டா என்று உற்று உளவியல் பார்வையோடு தி.மு.கவின் பொறுப்பாளர்களை தேர்வு செய்து போற்றிப் புகழ்ந்திருந்தால் தி.மு.கவின் நலிவு வீழ்ச்சி என எதுவும் என்னென்றும் நிகழ வாய்ப்பிருக்காது என்றார் வாழ்வில் தூய்மையும், பொதுவாழ்வில் தேவையென அடிக்கடி வலியுறுத்தும் ஒருவர்.
நாளும் நாளும் பத்து இருபது பேர்களோடு பல்வேறு உணர்வுகொண்ட உள்ளங்களைப் பெற்றவர்கள், நாகரிகம் தெரிந்தவர்கள் என கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக பல்வேறு இடங்களிலும் என் தொழிலகத்திலும் நண்பர்களாக வாதிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். அது எல்லாக் கட்சிகளைப் பற்றியும் உலகில் எல்லா நிலைகளின் தரவுகளைப் பற்றியும் வாதங்கள் நிகழ்வது வழக்கமாகும். தி.மு.கவைச் சொல்வதற்காக அதன் செழுமைகளை பதிவு செய்வதற்காக யாரையாவது இழுத்துப் பிடித்து வைத்து காப்பி, டீ, வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொடுத்து விவாதிப்பது இன்றும் நீடித்து வருகிறது. பத்து வயதிலிருந்தே படிப்பகங்களில் படிக்கின்ற நாள் தொட்டு தி.மு.கவின் செய்திகளை, கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் பேசி மகிழ்வதும் பழக்கமாகும். பேசும் ஆற்றல் இருக்கும்வரை அது இருந்தால் உலகில் நான் உயிரோடு இருக்கும் நாள் வரையில் என் நெஞ்சை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பேன்.

இயக்க உணர்வால் ஈட்டிய பொருளெல்லாம் இழந்த நிலையில் கூட இன்றும் இயன்றவரையில் என் கைக்காசை இதற்காக செலவழிக்கிறேன், செலவழிப்பேன். இது நான் இருக்கும்வரை தொடரும்.

No comments:

Post a Comment