Tuesday 21 June 2016

மண்ணில் புதைந்த மக்களாட்சி மறைந்த மடிந்த மரபும் மாண்பும்

மண்ணில் புதைந்த மக்களாட்சி
மறைந்த மடிந்த மரபும் மாண்பும்

நீண்ட நெடிய போராட்டத்தில் உதிரத்தைக் கொட்டி உடமைகளை உயிர்களைப் போக்கி உண்மையாக மக்களாட்சிமுறை செம்மணம் தரும் பூஞ்செடியை இந்த மண்ணில் நட்டு வைத்தனர் நாடறிந்த நல்லறிவாளர்கள் பலர்.
உரிமைக்கு உயிர்தரும் உன்னத முறைகளால் உலகில் பல துறைகள் முகிழ்த்து வளர்ந்து இயற்கையின் பல இடர்பாடுகளைக் களைந்து இனிமைதரும் வாழ்வை மனிதர்களுக்கு வழங்கியது.
மனிதகுலம் தோன்றிய நாளிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனின் ஆணை என்ற ஏமாற்றுக்காரர்களின் எண்ணப்படி மன்னனே எல்லாம் என்ற ஒற்றைத் தலைமையில் தான் உலக மாந்தர்களை ஒரு வட்டத்திற்கு அடுக்கி வைத்து ஆளும் நிலை நீடித்தது.
மனித அறிவு வளர வளர இந்த முறைகளை மீற முயல்பவர்களை பல்வேறு உத்திகளால் மடக்கி வைத்தார்கள், அடக்கி வைத்தார்கள். வழிவழி மன்னர்முறை அதுவும் மன்னனின் முதல் மனைவியின் முதல் மகனே மன்னன் என்ற அடாவடித் தனமே இங்கே நிலை கொண்டிருந்தது.
உடல்வலிமை உள்ளச் செழுமை இல்லாதவனெல்லாம் மன்னனானான். புத்தி கெட்டவனும் போதையுள்ளவனும் பூமியாளும் நிலைகண்டான். முரடனும் முட்டாளும் நாடாளும் உரிமை பெற்றான். இதற்கெல்லாம் விளக்கி சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். இவர்களின் கீழ்அடிகளாக இருக்கும் மக்கள் படாத இன்னல் இல்லை. துன்பம் துயரங்கள் இல்லை. சொல்லொனா வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
எல்லைக்கோடுகளுக்குள் ஊராண்ட உன்மத்தர்களால் உயிரிழந்தோர் ஏராளம், உடல் சிதைந்தோர் ஏராளம் ஏராளம். உழைத்துச் சேர்த்த உடமைகளைப் பறி கொடுத்தோர் ஏராளம் ஏராளம் ஏராளம். செத்த பிணங்களாக வாழ்ந்தோர் தொகை இன்னும் அதிகம்.
மனித குல வரலாற்றில் எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்த அய்ரோப்பாவில் ரோமாபுரியை ஆண்ட கொடுமைக்காரர்களை எதிர்த்து ஒற்றை ஒரு தனி மனிதனாக வெகுண்டெழுந்தான் ஒரு மாவீரன். ஆம் ரோமானிய அரச குலத்தார் ஆழக் குழி தோண்டி அதில் பலநாள் பட்டினி போட்ட ஒரு சிங்கத்தை உள்ளே விட்டார்கள். அத்துடன் அடிமைக் குலத்தைச் சேர்ந்தவனை குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டு அவனையும் அந்தக் குழிக்குள் இறக்கிவிட்டு சிங்கம் உணவாக்கிச் சாப்பிட்ட கோரக் காட்சியை மேல் மாடத்திலிருந்து வேடிக்கைப் பார்க்க கூடியிருந்தார்கள். இப்படிப் பலரை பலிகொடுத்து பார்த்து ரசித்து மகிழ்ந்தவர்கள் அவர்கள்.
இறங்கியவன் இறக்கப் போகிறான் ரசிப்போம் என்று காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சி வேறாக அமைந்தது. குழிக்குள் இருந்த வீரன் சிங்கத்துடன் மோதி அந்தச் சிங்கத்தைச் சாகடித்து மேலேறி வந்து வேடிக்கைப் பார்த்த அரசக் குலத்தாரை வெட்டி வீசினான். ஸ்õபார்டக்ஸ் எனும் மாவீரனால் அடிமைகளின் போர் உணர்வு எழுச்சிக் கொண்டது. அது வளர்ந்து வளர்ந்து பிரெஞ்சுப் புரட்சியாய் உருவெடுத்தது. இந்த் பேரெழுச்சி தோன்ற உணர்ச்சியூட்ட இழந்த மனித உயிர்கள் ஏராளம்.
சாக்ரடீஸ் காலத்திலிருந்து அய்ரோப்பாவிலும், புத்தன், வள்ளுவர் காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும் உருவான சமத்துவ சனநாயகச் சிந்தனைகள் பல்லாயிரம் பேரை பலி கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது.
பிரெஞ்சுப் புரட்சியின் உணர்வுத் தூண்டலை கவிஞன் ஷெல்லியின் கவிதையும் வால்டர் ரூசோவின் எழுத்துக்களும் ஊக்கமூட்டி ஏற்படுத்துகிறது. காணாத ஒரு விடுதலைப் புரட்சியை சமத்துவம், சுதந்திரம், சகோரத்துவம் என்ற தூய கோட்பாட்டில் செயல் வடிவம் காட்டியது. கேலியும் கிண்டலும் செய்த மன்னர் குலத்தை கில்லட்டின் எனும் வெட்டுப் பாறையில் தலைகளை சீவினார்கள். ஏற்கனவே பிளேட்டோ விளக்கிய குடியரசு, பின்னர் மாமேதை ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஒரு நல்ல மக்களாட்சி வடிவமாக வளர்த்தெடுத்தது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய ஊக்கத்தால் உலகின் பல நாடுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு தோன்றி மன்னர் குலத்தை எதிர்க்கின்ற துணிச்சலைத் தந்தது மதவாதிகளின் ஆலோசனைகளால் திமிரேறியிருந்த அரச குலம் ஆட்டம் காணத் தொடங்கியது.
தனி மனித உரிமைகள் தலை தூக்கி நின்றது. ஏதென்ஸ் சாக்ரடீசின் ஏன் எதற்கு என்ற கேள்விகள் எழுந்து நின்று எங்கும் விழிப்புணர்வை உருவாக்கியது. வல்லாண்மைக்கு வளைந்து கொடுத்து வணங்கிக் கிடந்த மக்கள் வீறு கொள்ளத் தொடங்கினர். ஆக்கம் நிறை அறிவாளர்கள் நெஞ்சில் மக்களாட்சி உரிமை உணர்வுகள் மலரத் தலைப்பட்டது.
பல்வேறு முறைகள் திருத்தம் கண்டு வயது வந்தோருக்கு அதாவது சிந்திக்கும் சீர்கண்ட வயதில் வாக்குரிமை என்ற தேர்வு முறை மலரத் தொடங்கியது. ஒவ்வொருத்தரும் தன் மனக்கருத்தை வெளிப்படுத்திய பின் மக்கள் கூட்டத்தின் பெரும்பகுதியினர் விரும்புவோர் ஆளுமைத் தளங்களில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும் பேரறிஞர் அண்ணா போன்ற உள்ளத்தூய்மை கொண்டோர் தலைகளை மட்டும் எண்ணுவல்ல மக்களாட்சி தலைக்குள்ளிருப்பதையும் எண்ணிப் பார்ப்பதுதான் மாசில்லாத மக்களாட்சி முறை என்றனர்.
ஆனால் அதே அண்ணாதான் குடியாட்சிக் கோமான்கள் என்றும் பொதுவாழ்வில் இருப்போரின் பொறுப்பின்மையும் சுட்டிக் காட்டினார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்த மதவாதிகளின் மயக்கக் கருத்துகளால் நீடித்த வந்த மன்னர் குலம் மக்களாட்சி நடை போடும் போதும் மனிதர்களைப் பற்றிக் கொண்டது.
சனநாயகம் என்று பேசுவோர் அதன் அடித்தளம் கீழே இருந்து மேல்நோக்கி வருவதை தவிர்த்து அந்தரத்தில் இருந்து ஆணையிடத் தொடங்கினார். மக்களாட்சி பாவனையோடு  பலர், மன்னர்முறைகளை மனதில் கொணடே இயங்கினார்.
எல்லார்க்கும் எல்லாம் எனும் இனிய முறைகளை வல்லாண்மை மனிதர்கள் தங்களுக்காகவே என்று வளைத்து போட்டனர். பழைய மதவாதிகளைப் போலவே புதிய கட்டுரைகளிலும் மதம்சார்ந்த மடமைகளை புகுத்தி புதுமை தந்த மக்களாட்சி முறைகளை புதைகுழியில் போட்டுப் புதைத்தனர்.
தூய கொள்கையுள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டோர் கூட துயர்தரும். தூய்மையற்ற நிலைகளை நிலைப்படுத்தினர், நியாயப்படுத்தினர். எதிர்க்க வலுவற்றவர்கள் என்ன செய்வார்கள் பாவம், என்ற ஒரு திரைப்பட உரையாடல் சொல்வதுபோல் மக்கள் கூட்டம் இந்த சனநாயகச் சண்டாளர்களிடமும் தொண்டனிட்டு சரணடைந்தது மன்னர்களின் வாரிசு முறைகளில் சற்று மாறுதல் கண்டது. ஆம் மன்னனின் மூத்த மகன் தான் மன்னன் எனும் நிலை, எந்தப் பிள்ளையானாலும் சரி என்று நடைமுறையான இழிவான இந்த நிலை  எங்கும் இருக்கக் காணலாம். இந்த நிலைமாற மீண்டும் ஒரு பிரெஞ்சுப் புரட்சி தோன்ற வேண்டும், தோன்றுமா? தோன்றாது காரணம் விஞ்ஞானம் யாரையும் பட்டினி போடவில்லை அதனால் அந்த வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகிறது.
மன்னன் குலத்திற்கு மாபெரும் பாதுகாப்பை வழங்கியவன் மாமேதை அரிஸ்ட்டாட்டில். ஆம் அவன் சாதாரன மக்கள் அரசியலில் ஈடுபாடு கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்றான்.
மன்னர்களை தங்கள் பிடியில் வைத்து புகழ் மாலைகள் மூலம் மூளைச் சலவை செய்து மதவாதிகள் தங்கள் பிழைப்பை பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்கள். மன்னன் கடவுளின் வடிவம். இறைவன் மன்னனாகப் பிறந்தான் என்றெல்லாம் மக்களை மடமையில் மவுடீகத்தில் ஆழ்த்தி வைத்தனர் மயக்கும் வித்தை கற்ற மதவாதிகள்.
வரலாற்றில் 90 விழுக்காடு நிலைகொண்டிருந்த மன்னர் குல உணர்வுகள் மக்களாட்சியின் தூய்மையின் மீது மாசுகளை பூசி மங்கச் செய்து வருவதைக் காணலாம்.

மூளையில் படிந்துபோன மூடநம்பிக்கை புறவாழ்வில் புதுப்பொருளால் ஏற்பட்ட மாற்றம் மனதளவில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை; வளம் தரவில்லை. அறிவாளர்கள், ஆய்வாளர்கள் அரசியலில் தூய்மை துலங்க விரும்புவோர் ஒருங்கிணைந்து ஒரு கருத்துத் தெளிவை உருவாக்க முனைந்தால், மக்களாட்சியின் இதயமும் நுரையீரலும் இரத்தமும் நரம்புகளும் நலிவு நீங்கி நலம் பெறலாம்.

No comments:

Post a Comment