Tuesday 28 June 2016

சொற்கள் தரும் பொருள் வேறு
அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். நெஞ்சை நிறைவுறச் செய்யும் நீயா? நானா? வில் மீண்டும் ஒரு நல்ல நிகழ்வைத் தந்த ஈருடல் ஓருணர்வுள்ள இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
ஆவிகள் - பேய்கள் என்று காரியசித்தியோடு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக மக்களை அறியாமையில் ஆழ்த்த ஆரிய இன வேதமோதிகள் மேற்கொண்ட ஆயிரம் வழிகளில் கடவுள், பேய், பூதம், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், மோகினி என்பதெல்லாம் அடங்கும். பேய், பூதம், பிசாசு, விதி, வினை என்பதற்கு இப்பொழுது உள்ளது போன்ற பொருள் தமிழ் அகராதியில் இல்லை. அது வந்து மிகப் பிரம்மாண்டத்தை பேருருவைக் காட்டுவது. பேய்க்காற்று பேய்மழை என்பதுபோல.
இதில் கலந்து கொண்டவர்கள் இன்னும் நிறையச் நிறையச் சொல்லியிருக்க வேண்டும். இருநிலைகள் கொண்ட இயற்கையில் வேறுபாடும் முரண்பாடும் என்றும் இருக்கின்ற ஒன்றுதான். இருளும் ஒளியும் ஒன்றை ஒன்று வீழ்த்தவே ஒவ்வொரு நொடியும் போராடுகிறது. இங்குள்ள பல அமைப்புகளில் உள்ள போல அறியாமையும் அறிவுக் கூர்மையும் அது போலத்தான் அதன் வெளிப்பாடுதான் இந்த நீயா? நானா? நிகழ்ச்சி.
இருவினைகளின் அய்க்கியமே இயக்கத்தின் உயிர்நாடி என்று இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை முன் வைத்தார் இலட்சிய அறிஞர் திரு. பிரடரிக் ஏங்கல்ஸ் அவர்கள்.
பேய் ஓட்டுவதாக சொல்பவர்களை ஏமாற்றுக்காரர்கள் தன் பிழைப்புக்காக பொய் சொல்கிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் - ஆய்வாளர்கள் சொன்னார்கள்.
அது முற்றிலும் உண்மையல்ல. ஆவி பேய் என்பது மனக் கோளாறு. மனநோய் என்றால் இதை அறியாத பேய் ஓட்டிகளுக்கும் இது பொருந்தும். ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை. இந்த பேய் ஓட்டும் பயிற்சியை யாரிடம் கற்றீர்கள் என்பது கேள்வி. இதில் கற்பவர்களும் கற்றுக் கொடுப்பவர்களும் நோயாளிகள்தான். மூளையில் உள்ள சின்ன சின்ன சிக்கல்தான் இது போன்ற குறைகளுக்கு காரணம் என்றார் ஒருவர். அது தான் உண்மை.
ஆம் உண்மையில் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான சின்னச்சின்ன நரம்புகள் இயங்குகின்றன. அது மின் ஆற்றலால் எண்ணங்களால் உருவாக்குவதும், இடம் பெயர்வதும், இணைபிரிவதும் வேறொன்றில் இணைவதும், விரிவதும் சுருங்குவதும், சுறுசுறுப்பும் சோம்பலும், வாய்மையும் பொய்மையும், மென்மையும் வன்மையும், பாசமும் பகைமையும், அறிவும் அறியாமையும் ஓரிடத்திலேயே குடியிருக்கும் நிறை கூடியதும் கோலேச்சும், நிமிரும் குனியும், நீளும் வளையும், உருளும் புரளும், உறங்கும் விழிக்கும், வேறுபாடுகளும் உடன்பாடுகளும் தோன்றும். இது மூளை இயங்கும் நிலையாகும்.
பேய் ஓட்டுபவர்கள் பயமுறுத்தப் பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே புராணப் போதனை செய்யும் புளுகு மனிதர்களான புலவர்கள் பயன்படுத்திய சொற்கள்தான். அபிராமிப் பட்டரின் வர்ணனை போல் மகாபாரதி கண்ணன் என்ற கடவுளை காதலி காதலனாக கைக்குழந்தையாக ஊழியனாக சேலைகளைத் திருடும் காமலோலனாக கற்பிக்கும் கற்பனைக் கிறுக்குப் போன்றது இந்த பேய் ஓட்டுகளின் உணர்வும் செயலும்.
மனயியல் பற்றி விளக்கிய அறிஞர் சிக்மண்ட் ப்ராய்ட் பற்றியும் செயல்வடிவில் பலதுறை நிலைகளில் வெற்றி கண்ட பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் பற்றியும் மனநல ஆய்வாளர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆவிகள் பேய்கள் கடவுள்களை நிரூபித்தால் பரிசாகத் தருவதற்கு நாற்பதாயிரம் டாலர்களை அமெரிக்காவில் ஓர் அறிவாளிகள் கொட்டி வைத்திருக்கிறார். அவரிடம் வாதிட்டு எந்தக் கொம்பனும் இன்னும் அந்த தொகையை பெற முடியவில்லை. ஆல்காட் போன்ற முழு எத்தர்களால் கூட.
ஆயினும் உச்சக் கட்டமாக ஒரு செயல்பாட்டு நிகழ்வொன்றுக்காக ஒரு பெண் மருத்துவரையும் ஒரு பேயோட்டியையும் உடன்பட வைத்து தெளிவு படுத்தியது பாராட்டுக்குரியதாகும். இதில் பகுத்தறிவு, நாத்திகம், சுயமரியாதை, பெண்ணுரிமை மீட்சிக்காக ஒரு இயக்கம் கண்டு, பின்பற்றுவோரை பெருக வைத்து ஊரெங்கும் நாடெங்கும் வீதிதோறும் வீட்டோரங்களிலும் பிரச்சாரம் செய்து போராட்டங்களும் நடத்தி சிறை சென்று தொண்டு செய்த பெரியாரின் நினைவுகளோடு தங்களை பாராட்டுகிறேன்.

No comments:

Post a Comment