Wednesday 30 July 2014

தலைவர் கலைஞருக்கு எழுதிய மடல்

அன்பார்ந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.

 நாளும் நாளும் நலன் சூழ நல்வாழ்த்துக்கள்.

கழகத்தின் உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி கழக வளர்ச்சி குறித்து விவாதிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. குழுவின் முடிவுகள் இழந்தவைகளை ஈட்டுவதற்காக மட்டுமல்லாது எதிர்கால கழகம் இரும்பனைஉறுதிபெறும் வகையில் இருக்கும் என்று உண்மைத் தொண்டர்களின் நம்பிக்கையாகும்.

ஆட்சியில் அமர்ந்து ஆக்கமிக நிலையை வளம்மிகு சூழலை தமிழர்களுக்கு தர வேண்டும் எனும் உணர்வில் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நமது இயக்கம் பெருமளவு சாதனைகளை நிகழ்த்தி சரித்திரம் படைத்திருக்கிறது.

அதுவும் தங்கள் தலைமை தந்த ஆட்சி, இனிக்கும் வாழ்வை இமய அளவுக்கு தமிழர்களுக்குத் தந்து மகிழ்வித்திருக்கிறது.

கழகத்தின் தேர்தல் வரலாற்றில் கூட்டணி முறையில் ஒரு புதுமையைப் புகுத்தி ஆட்சியில் அமர்ந்து அரும்பணிகளை ஆற்றியது. 1967லிருந்து கடந்த தேர்தல் வரை கூட்டணி தொடர்கின்றது.

கழகத்தை பின்பற்றி மற்ற கட்சிகளும் இந்த முறையை கடைப்பிடிக்கும் காட்சிகளைக் காணலாம். ஆனால் இது முழுக்க சரியென்று சொல்ல முடியவில்லை. கூட்டணியின் உதவியோடுதான் ஆட்சியைப் பிடிக்கும் நிலையிலிருந்து கழகத்தை வலிமைப்படுத்தியோ, அல்லது தோற்றாலும் பரவாயில்லை என்று துணிந்து தனியாக போட்டியிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மற்றொன்று வேட்பாளர்களின் தேர்வில் கடைப்பிடித்த முறை கூட்டணி போன்ற நடைமுறை நிலைகள் தோற்றபின் கொள்கை ரீதியான கட்சியின் அடிப்படையில் தேர்வாகியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜாதி, பணம், தனி மனித செல்வாக்கு, நட்புவட்டம் என்பதெல்லாம் தாண்டி, கட்சிக் கொள்கை, கட்சி உழைப்பு, பொதுவாழ்வு  ண்ணியம், தனி மனித ஒழுக்கம், தூய்மை என்ற அலகுகளை எடுத்துத் தேர்வாக்கியிருக்கலாம்.

கிளைக் கழகத்தை தொடங்கியபோது அண்ணா சொன்ன விளக்கம், தங்களின் நினைவில் தங்கியிருக்கும். கிளைக்கழகம் உருவாகும் இடத்தில் உள்ள தரமான பெரிய வீட்டில் உள்ளவரை செயலாளராக கொண்டுவர முயலுங்கள். அப்படி வந்தால், அந்தப் பகுதி மக்கள் கழகத்தை நேசிக்கும், ஆதரிக்கும் நிலை தோன்றும் என்றார்.

செக்குமாட்டுச் சுபாவத்தில் சிக்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு நன்றி உணர்ச்சி குறைவு என்பது நாடறிந்த ஒன்றாகிவிட்டாது என்றாலும் அந்த உணர்வை அவர்களிடம் வளர்க்க வேண்டிய பொறுப்பும், கடைமையும் பண்பாட்டு இயக்கமான கழகத்திற்கு உண்டு என்பதை தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டுமல்லவா?

ஏழைகளால் தொடங்கப்பட்ட கழகத்தில் இங்கு எத்தனை எத்தனை கோடீஸ்வரர்கள். பணம் தேடுகின்ற போது, உண்மையும், வீரமும் செத்துப் போகும் என்றார் மாமேதை ரூசோ அவர்கள். அது கழகத்திற்கும் பொருந்தும் தானே. பொதுவாழ்வு என்பது பொருள் தேட அல்ல, புகழ் சூடும் ஒன்று என்பதை தோழர்களுக்கு புரிய வைப்பது நல்லதுதானே.

கூடிக் கலையும் காகமாக இல்லாது, கூடிப்பொழியும் மேகமாக இருக்க வேண்டும் என்ற தங்களின் மொழி உயர்மட்ட செயல் திட்டக்குழுவிற்கும் பொருந்தும்தானே.

தலைமைக் கழக சொற்பொழிவாளர்களில் பலர் பொருள்படப் பேசுவதை விடுத்து, புகழ் சொற்களை அடுக்குவதைப் பார்த்தால் சட்ட சபையில் செயலலிதாவை அவர் கட்சியினர் கூவுவது போலவே இருக்கிறது. அதைத் தவிர்க்க ஆவன செய்திட வேண்டுகிறேன். அதுமட்டுமல்ல, தலைமைக் கழக சொற்பொழிவாளர்கள் பலர் சாதிக்குழுக்களை ஏற்படுத்தி அதுக்கோர் தரகரை உருவாக்கி, தங்கள் பிழைப்பைப் பார்ப்பதாகவும் செய்திகள் வருகிறது. அதையும் சரிசெய்ய வேண்டுகிறேன்.

திருமாவளவன் நல்ல உணர்வாளர் தான், ஆனால் அவர்களது அமைப்பில் இருப்பவர்கள், டாக்டர். கிருஷ்ணசாமியின் அமைப்பினரும் தங்கள் சமூகத்தை புதிய பார்ப்பனிய நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் வன்முறையை சரிதான் என்கின்றனர். அதுபோலவே இஸ்லாமியரின் நோக்கமும் என்றால் அது கழகத்துக்கு உடன்பாடானது அல்லவே. அடுத்த தலைமுறையே நமக்கு முக்கியம் எனில் தேர்தல் வெற்றிக்காக இத்தகைய கூட்டணி தேவையில்லை.

நமது இயக்கத்திற்குக்குள் சாதிய உணர்வு தழைக்கவும், தலை விரித்து ஆடும் நிலைகள் சில இடங்களில் இருக்கக் காணலாம். இதெல்லாம் இல்லா நிலை எதிர்காலத்தில் உருவாகும் என்ற எண்ணம் வெற்றி பெற வேண்டும்.

எதிர்காலத்தில் எவர் தயவும் இல்லாமல் எல்லாவகை வலிமையும் கழகத்தில் பெறச் செய்து தனித்து ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்க வேண்டுகிறேன். 2014ல் சாதி அமைப்போடு ஏற்பட்ட கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. அந்த நிலைதான் கடந்த தேர்தலிலும் நடந்தது. இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மொத்த தமிழர்களுக்காக பாடுபடும் கழகம், தங்கள் தங்கள் சாதி, மதங்களுக்கு வன்முறை வழியில் செயல்படும் திருமாவளவன், கிருஷ்ணசாமி, மற்றும் முஸ்லீம் அமைப்புகளோடு கூட்டணி என்பது பொருத்தமில்லாத ஒன்றுதானே. தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் உயரவேண்டும் தான், அதுவும் கழகத்தின் வழியில் அறம் சார்ந்த அறிவுப் பிரச்சாரத்தால் ஆகவேண்டும். அவரவர் சார்ந்த சாதி, மதம் அமைப்போடு கூட்டுச் சேர்ந்து தோற்பதை வி தனித்துப் போட்டியிட்டு தோற்பது பெருமைதானே.

    பெரியாரின் வழி நடந்த, பெருமைக்குரிய அண்ணாவின் தம்பியின் நெஞ்சில்

இது போன்ற எண்ணங்கள் சூழ் கொண்டிருக்கும் என்றாலும் இந்த இளவலின் 

இதயத்தில் தோன்றியது சொன்னேன். வேறொன்றுமில்லை

No comments:

Post a Comment