Thursday 31 July 2014

உட்பகை ஒழிந்திட

உட்பகை ஒழிந்திட
மரபு வழியும் சுற்றுச் சூழலும் எண்ணத்தில் ஏற்பட்டும் இடையூறுகளான உணர்வுகளால் உட்பகை உண்டாவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மனதில் எழும் ஆசைகளின் விளைவு பகைஉணர்வைச் சூழலை உருவாக்கும் என்றாலும் இந்த உட்பகை என்பது அளவில்லா அழிவுகளை உருவாக்கி விடும்.
இயற்கையில் ஏற்படும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளால் இதயத்தில் ஏற்படும் எண்ணங்களை பகுத்தறிவு தோன்றிய நாட்களிலிருந்து பலவித போதனைகளால் மக்கள் கூட்டத்தை நேர்வழியிலிருந்து மாற்றிச் செல்ல முனைவதைக் காணலாம்.
ஆனால் அதே பகுத்தறிவுக் கூட்டத்தில் உழைக்காது பிழைக்க எத்தனித்த ஒரு சிறு கூட்டம் இந்த உட்பகை உணர்வுகளை பல வழிகளில் மக்களின் மனதில் பதிவு செய்து பாழ்படுத்தியதையும் பார்க்கலாம்.
இயற்கையிலுள்ள இருவேறு நிலைகள் எல்லா இடங்களிலும் இருக்கும் என்பதற்கு பகுத்தறியும் மனித கூட்டத்திலும் இருந்தது என்பதற்குச் சான்றாக செய்திகளைக் காண்போம். மிக மிக சிறுபான்மையினருக்காக உருவான இராமாயணம் - பாரத இதிகாசங்களைக் கற்பனைகளை கண்ணுறும்போது சில காட்சிகள் தெரிகிறது.
இராமாயாணத்தில் மனைவிகள் அதிகமானதால் இந்த உட்பகை உருவாகிறது. அது உறவுச் சண்டையாக மட்டுமல்லாது ஊர்சண்டையாகவும் மாறிவிடுகிறது. ஆனால் இதில் சக்களத்திக்குத்தான் பகை இருந்ததே தவிர சகோதரருக்கு இல்லை என காட்டுகிறார்கள். காரணம் இது ஆரியக் குடும்பம்.
ஆனால் வாலியுடன் மோதி மறைந்திருந்து இராமனைக் கொண்டு கொல்ல ஏற்பாடு செய்த சுக்ரீவனையும் இராவணன் மீது பகை கொண்டு விபீடன் இராவணின் போர் நிலைகளையெல்லாம் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனை அழித்து - அவனது இராச்சியத்தை ஆழ்வதாகவும் காட்டுகிறார்கள். காரணம் இது ஆரியர் அல்லாத இனம்.
ஒவ்வொரு இனத்திற்கும் மொழிக்கும் ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு கொள்கை, கோட்பாடு இருக்கும். தமிழ் தரும் செய்திகள் அறிவுப்பூர்வமானதுஒருவனுக்கு ஒருத்தி என்றும் ஓரிரு குழந்தை என்பதும் உடல், மன, உலகத்திற்கு ஊறு செய்யாதது. ஆனால் வடமொழிக் கருத்து என்பது ஆசைகள் அலைமோதுவது ஆதிக்க உணர்வுகளை நிலைநிறுத்துவதும் ஆய்வு அறிவுக்கு இடம் தராதது மந்திர தந்திர மாய்மால மயக்க கருத்துகளின் மையமாக விளங்குவது. அதனால் வடமொழிப் படைப்புகள் மேற்காணும் வடிவங்களை உருவாக்குகிறது.
இந்த உட்பகை என்பதை இருமொழி வடிவங்களால் பார்ப்போம். பாண்டவ, கெளரவ சகோதர்களின் பங்காளிச் சண்டையின் விளைவு 18 நாள் குருசேத்திரப்போர். இதை முறையற்றுப் பிறந்த வியாசரின் கற்பனைத் தொகுப்பாகும். இதில் மக்களின் ஒற்றுமையைத் சிதைத்து ஊனப்படுத்தும் செய்திகள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. இந்த உட்பகை உருவாக்கியது சகுனியால் மாத்திரமல்ல, ஆரியக் கோட்பாடுகளும்தான்.
இந்த ஆரியத் தாக்கம்தான் தமிழகத்திலும் உட்பகையை தோற்றுவிக்க காரணமானது.
ஆம், சேரர்களை ஆரத் தழுவிய ஆரியச் செய்திகளால்  வேள்விகளும் வேறுபல வீணான நிகழ்வுகளும் அரங்கேறின.
அது சேரலாதன் குடும்பத்தில் தோன்றிய குழப்பம். நாள் கோள் நிலை குறித்து சொன்ன நிமித்திகன் (சோதிடன்) செங்குட்டவனுக்குப் பட்டம் சூட்டக் கூடாது. இளங்கோவுக்குத்தான் சூட்ட வேண்டும் என்கிறான். இது ஆரியக் கொள்கை. ஆனால் தமிழறிந்த இளங்கோ தன்னை துறவியாக்கிக் கொண்டு ஆரியத்தை வீழ்த்தினான்.
துறவியான அவரை வரலாற்றில் இளங்கோவாக (இளவரசன் - யுவராசா) குறிப்பிடுவது வியப்புதான்.
இன்னொரு தமிழ்ச்செய்தி குமணன் மீது பொறாமை கொண்ட அவனது இளவல் அவன் தலையைக் கொண்டு வருவோர்க்கு பொற்கிழி தருவதாக பறை சாற்றுகிறான். புலவர் ஒருவர் குமணனைச் சந்திக்கும்போது தன்னிடம் தருவதற்கு ஏதுமில்லை. என் தலையை வெட்டி தம்பியிடம் தந்தால் அவர் நிறைய தருவார் என்று வாள் கொடுத்து தன் தலையை வெட்டி எடுத்துச் செல்ல சொல்கிறான். அதை மறுத்த புலவர் ஒரு பொய்த்தலையைச் செய்து தம்பியிடம் கொண்டு போய் தருகிறார்.
அண்ணனின் தலை கண்டதும் பகை உணர்வு மாறி பாசம் தலைக்குள் புகுந்து அலறித் துடிக்கிறான் அழுது புலம்புகிறான்.
கற்பனையில் உருவான ஆரிய இதிகாசங்கள், பகையை பல் வடிவங்களில் பறை சாற்றி பதிய வைத்து உறையச் செய்தது.
 ஆனால் தமிழ் சூழலால் ஏற்படும் உட்பகையை ஈகங்களால் எடுத்தெறிந்து இனிமை கூட்டுகிறது.
ஆனால் இந்தியா முழுமையும் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இராமயண - பாரதக் கதைகள் தான் பல்வேறு நிகழ்வுகளால் பறைசாற்றப்பட்டு பதிக்கப்படுகிறது. நூல்கள், காவியங்கள், நாடகங்கள், ஏடுகள், இதழ்கள், கதை சொல்லிகள் எல்லாம் அரசர்கள் மற்ற சாதனைக்காரர்கள், பொருள்வளம் படைத்தவர்களின் ஆதரவவோடு வீடு, வீதி, ஊர், உலகம் வரை நாளும் நாளும் நிலைநாட்டப்படுகிறது. மனதில் எது ஆழமாகப் படுகிறதோ, செயலில் அதுதானே வெளிப்படும்.
 இந்த காவியங்கள் இன்றைய ஊடகங்கள் வணிக மன்னர்களின் துணையோடு தொடர்ந்து பரப்பப்படுகிறது. இவற்றிலுள்ள செய்திகளின் வழியேதான் திரைப்படங்களும் பத்திரிக்கைககளும், ஊர்சண்டை, உறவுச் சண்டை, சாதிச் சண்டை, சமயச்சண்டை, சக்களத்திகள் சண்டை, போதை சண்டை, பங்காளிகள் சண்டை, அரசியல் தொழிற்சங்கச் சண்டைகள் என்றெல்லாம் காட்டப்படுகிறது.
பின் எப்படி உட்பகை இல்லாது ஒழியும்.
இந்த இரு புராணங்களும் இருக்கின்ற வரை, வளர்ச்சி புள்ளி விபரங்களில் இந்தியா கடைசி இடத்தில்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும்.
தமிழில் செழுமைகொண்ட தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆகியவை இந்த இராமாயணம், பாரதம் அளவில் பத்தில் ஒரு பங்கு பரப்பப்பட்டிருந்தால், பதிய வைத்திருந்தால் இந்தியத் துணைக்கண்டம் எவரும் தொட இயலாத உயரத்தில் வளர்ச்சியில் நிலை கொண்டிருக்கும்.
ஆரியம் ஒழியாதவரை அதன் ஆதிக்கம், ஆளுமை அகலாதவரை உண்மைகள் நிலைக்காது, உட்பகை ஒழியாது, உயர்வு என்பதை தொடர்ந்து துய்க்க முடியாது. இதை ஆரியர் அல்லாத அறிவாளிகளும் பிராமணர் அல்லாத பெருமக்களும் உணர்தல் நல்லது.

No comments:

Post a Comment