Thursday 31 July 2014

மூன்று நூல்களும் படிப்பினைகளும்

சங்க காலத்தையொட்டிய காலத்தில் தென்னிந்தியாவில் ஐம்பது இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக ஓர் ஆய்வு உரைக்கின்றது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஒன்றரை கோடியாக இருந்திருக்கக் கூடும். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியத் துணைக் கண்ட மக்களை அறிவொளி இல்லாத இருட்டறையில் அடைத்திருந்த குற்றம், கொடுமை, மிகச் சிறுபான்மையானராக இருந்த வடமொழி எழுத்தாளர்கள் அறிவுஜீவிகளையே சாரும்.

கொஞ்ச நாட்களாக மூன்று நூல்கள் என் விழிமுன் விரிந்து கிடந்தது. இந்திய நிலையை எளிதாய் விளங்கிக் கொள்ள நூல்கள் இரண்டு. தெளிந்த நீரோடை பூக்கள் கண்ணுக்குள் மகிழ்வூட்டுவது போல மூளைக்கு செவியூட்டும் நூல் ஒன்று.

ஒரு நூலின் பெயர் ஆர்.எஸ்.கிரிகர் எழுதிய அறிவியல் வரலாறு. மற்றொன்று பி.வி.ஜெகதீஸ் ஐயர் எழுதிய புராதண இந்தியா 56 பழைய தேசங்கள். பிறிதொன்று வெங்கடகிருஷ்ண ஸ்ரீராம் எழுதிய தேவதாசியும் மகானும்.

இந்த நூல்களில் இரண்டு இந்தியாவைப் பற்றியது. அறிவியல் வரலாறு ஐரோப்பாவை எகிப்தை சிந்துவெளியை சார்ந்த அறிவியல் உணர்வு வளர்ச்சியை சார்ந்தது.

தேவதாசியும் மகானும் எனும் நூல் ஒரு கலைமங்கையின் வாழ்வைப் பற்றியது. நாட்டியம், பாடலைக் கற்று லைப்பணி செய்த ஒரு பெண்மணியின் ஆற்றலை பெருமையோடு பேசுகின்ற நூல். ஆனால் அந்தப் பெண்ணைச் சுற்றியிருந்த பெரிய மனிதர்களின் எண்ணமும் ஏக்கமும் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்ப்பது தான் நமது நோக்கமாகியிருந்தது.

இந்தியப் பேரரசுகள் வாழ்ந்த போதும், அது சிதைந்து போன பின்பும், ஆங்காங்கே வாழ்ந்த சிற்றரசர்கள், நிலவுடைமையாளர்கள், பின் பல்வேறு ஆட்சிகளின் ஆதரவு நிலை பெற்ற பெரிய மனிதர்கள், அதிகாரிகள், ஆகிய அனைவரும் செய்த சமூகத் தொண்டு என்னவென்றால், மக்களின் உழைப்பில் விளைந்த பொருளை பல்வேறு வகையில் சுரண்டி திருடி ஆங்காங்கே கோவில்கள், சத்திரங்கள் கட்டி, தெப்பங்களை வெட்டி, அதில் அறிவு வழியில் வளர்ந்த ஆய்வு மனம் இல்லையென்றாலும் அறிவாளிகள் என்று மதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களைக் கொண்டு கண்ணிலோ, கருத்திலோ சிக்காத செய்திகளைச் சொல்லி கோவிலிலும், தெப்பக் குளத்திலும் மற்றவற்றிலும் புனிதம் இருப்பதாக காட்டி அந்தக் கோவில்கள் தெப்பங்களுக்கு விழா நடத்தி, அதில் ஆடல், பாடல், கதா காலாட்சேபம், செப்படி வித்தைகள் எல்லாம் நடத்தி மக்களை மயங்க வைத்ததை ஆயிரம் ஆண்டுகளாக தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். என் கண்ணில் இவர்கள் இந்திய சமூகத்தை சீரழித்து சிதறடித்த தீயவர்களாகவே படுகிறார்கள்.

மற்றொரு நூல் ஜெகதீச ஐயர் எழுதிய புராதன இந்தியா 56 பழைய தேசங்கள் எனும் நூல் .இராமாயணம், மகாபாரதம், விஷ்ணுபுராணம், மாகம், கிருஷ்ண கர்ணாமிர்தம், சிவ ரகசியம், கந்த புராணம், மேக சந்தேஸம், மார்கண்டேய புராணம், நெளஷதம், கம்ஷ் சந்தேஸம், தஜ சாஸ்திரம், சங்கீத சாஸ்திரம், போஜ சம்பு, இந்து பாக சாஸ்திரம், ருக்வேதம், சாம்ராஜ்ய லட்சுமி பீடிகை, சிவபுராணம், சகுணசாஸ்திரம், அமரகோஷம், சாகுந்தலம், யாதவாப்யுதம், பாகவதம், மயசில்பசாஸ்திரம், மூர்த்தி த்யானம், இந்தி புண்ணிய கதைகள், பார்க்கவ புராணம், வேதாரண்ய ஸ்தலபுராணம், மஹாபுராணம், ப்ரபோத சந்த்ரோதயம், சக்திஸங்கம தந்திரம், ஆக்நேய புராணம், காளிகா புராணம், சுக்ரநீதி, பெரிய புராணம், வாமனபுராணம், விச்வகுணாதர்சம், ரகுவம்சம், ரத்னபரீஷை, ஸாமுத்ரிகாலக்ஷணம், காச்யப ஸம்ஹிதை, கிரா தார்ஜுநீயம், காதம்பரீ, கஜாயுர்வேதம், அச்வலக்ஷணம், குவலயாநந்தம், கருடபஞ்சாசத், ஸாளக்ராம நிர்ணயம், ப்ரம்மாண்ட புராணம் போன்ற வடமொழி படைப்புகளை எடுத்து வைத்துக் கொண்டு இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.

அய்ம்பத்தாறு தேசங்களில் சீனாவும், பாரசீகமும், இலங்கையும் கூட இணைக்கப் பட்டிருக்கிறது. இந்நூல் பெறும் செய்திகளில் பல முரண்பாடுகள் தெரிகிறது என்றாலும் மக்களை மதம் சார்ந்த மௌடீகம் சார்ந்த அறிவு ஆய்வு இல்லாத நிலைக்கு கொண்டு செல்வதை ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் நிலங்கள், மலைகள், ஆறுகள், நீர் தேங்கும் நிலைகள், தெப்பங்கள், ஏரிகள், இயற்கையின் எழில் சிந்தும் இடங்களையெல்லாம் அது தோன்றியது எப்படி என்று அறிவியல் ஆய்வு இல்லாத - கண்ணை மூடிக்கொண்டு- கனவு மனோபாவத்தில் அதை கடவுளின் படைப்பு என்றும், அதில் புனித நீர் இருப்பதாக வர்ணித்திருக்கிறார்கள். கல்லையும் மண்ணையும், கடும் விலங்குகளையும் கும்பிட்டால் கடவுள் கடாட்ஷம் கிடைத்ததாக, கதை கட்டி, அதை பலகோடி மக்களின் உள்ளத்தில் நிலைநிறுத்தி, அந்த மக்களை நிமிர விடாத அடிமைகளாக ஆக்கி வைத்து விட்டார்கள் என்பதை இந்த இரு நூல்களின் மூலமாக அறிய முடிகிறது.

ஆரியர்கள் என்பவர்கள், மத்திய ஆசியப் பகுதியில் இருந்து மாடோட்டி பிழைக்க வந்தவர்கள் என்று கப்பல் ஆய்வாளர்கள் அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.  அவர்கள் பேசிய மொழி அந்தப் பகுதியில் வாழ்ந்த பல்வேறு மொழிகளின் கலப்பு என்று கூறுகிறார்கள். ஆரியர் என்பதற்குப் பொருள் அன்னியர்கள் என்று சொல்கிறார்கள். அறிவாளிகள் என்றும் சிலர் கதைக்கிறார்கள்.

 மக்களை மடையர்களாக்குபவர்களை அறிவாளி என்று சொல்லக் கூடாது வன்நெஞ்சர்கள் அதாவது வஞ்சகர்கள் என்று விளிப்பதே சரியாகும்.

இந்தியாவில் தோன்றுவதெல்லாம் இறைவனின் பார்வையில் பிறந்த இனிமை என்று புகாங்கிதம் அடையும் ஆரியப் புலவர்கள் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் கொன்று தின்னும் கொடிய மிருகங்களையும் காட்டுகிறார்கள். கொன்று திண்ணும் குணங்கெட்ட மிருகங்களை கடவுள் தோற்றுவிக்கவில்லையா என்ற கேள்வி எழும் தானே?

மிகமிக சிறுபான்மையினர் பேசிய மொழியை அதன் சொற்களை இந்திய மொழிகளுடன் கலக்க வைத்து பெருங்கூட்டத்தின் மொழிகளை சிறுபான்மையினரின் மொழியாக்கி இந்தியாவில் வாழ்ந்த வழிவழி சிறந்த மக்கள் தேசிய இனத்தையும் மொழிகளையும் சிதைத்து, சின்னாபிண்ணப் படுத்தி, சீரழித்து, சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்பதை இந்த நூல்களில் காண முடிகிறது.

சமஸ்கிருத எழுத்தாளர்களின் நூல்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட அய்ம்பத்தாறு தேசங்களிலுள்ள மதம் சார்ந்த வடிவங்கள் எல்லாம் இறைவன், கடவுள் ஆண்டவனின் படைப்பு என்றும் ஓங்கி முழங்கினாலும், மனிதர்களை சமமாக காட்டாது மட்டுமல்ல பிறவியில் மேல் கீழ் எனப் பிரித்து இயற்கை தந்த இனியவர்களை இழிவுபடுத்தியவர்களை, வடமொழி மேதைகளாகக் காட்டுவோர் சொல்வது போல கடவுளால் படைக்கப்பட்டவர்களை எள்ளி நகையாடி இழிவு படுத்தினார்கள் என்பதும் இந்த நூலைப் படிக்கின்ற போது தெரிகிறது.

திரு கிரிகர் எழுதிய ஓர் அருமையான நூல் அறிவியல் வரலாறு எனும் நூலில் ஏறத்தாள 2300 ஆண்டுகளில் வெளிப்பட்ட எல்லா அம்சங்களையும் விளக்கமாக தெளிவு படுத்துகிறது.

அய்ரோப்பா, எகிப்து, இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய அறிவு நுட்பங்களை வரிசைப்படுத்தி, அது உலக மக்களின் வாழ்க்கை நலத்திற்காக வளத்திற்காக, கடின உழைப்பின் எளிமைக்காக, படிப்படியாய் வளர்ந்த பல்வேறு புதுமைகளை படம்பிடித்துக் காட்டுகிறது.

நூற்றுக்கணக்கான அறிவாளிகள் இயற்கை, அதன் இயக்கம், அதில் ஏற்படும் மாற்றம், விளைவு என்று ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி உற்ற நண்பர்களுடன் கலந்து ஆய்வுக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பண்பு அரேபியாவிலும், அய்ரோப்பாவிலும், இருந்தது.

ஆரியர்கள் இங்கு வராமுன்னர் இங்கும் அது இருந்தது. புதுமைகள் பூத்துக் குலுங்கிய சிந்து சமவெளியில் தோன்றிய சுழியம் (சைபர்) பத்து பத்தாக கூட்டும் தசம கணிதத்தையும் வேறு பல புதுமைகளையும் மேலை நாடுகள் எடுத்துக் கொண்டு அறிவு நிலை நோக்கி பயணித்ததை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.

இந்த நூல்கள் மூன்றையும் உற்றுப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். மூன்றிலும் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை உள்ள நடைமுறைகளையும் நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

 இந்திய துணைக் கண்டத்தில்  தோன்றிய மக்களை முன்னேறச் செய்யும் மதம் சாரா அறிவு நிலைகளை அழிக்கின்ற வகையில் - மதம் சார்ந்த மயக்கம் தரும், கருத்துக்களை விதைக்க ஆடல், பாடல், ஆரவாரக் காட்சிகள், கதை பிரச்சார கலை வடிவங்கள், அந்தராத்மாவின் அருள் நிலை, அவதாரங்கள் என ஆய்வு நெறிகளை மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்கள் தொய்வின்றி நடந்துவந்திருப்பதை மக்களை வழிநடத்தும் இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் விருப்பத்துடன் செய்து வந்திருப்பதை தேவதாசியும் மகானும் அம்பத்தாறு தேசங்களும் என்று நூல்கள் ஓங்கி ஒலிகின்றன.

  ஆனால் அறிவியல் வரலாறு என்று நூலில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை மட்டுமல்லாத எதிர்கால நூற்றாண்டுகளிலும் பெருகி வரும் மக்கள் கூட்டத்திற்கு ஆக்கம் தரும் வாழ்வுச் செழுமையை கடினமான உடல் உழைப்பை தவிர்த்திடும் எளிமையான கருவி வடிவங்களை உருவாக்கும் ஆய்வு கருத்துக்களை வெளிப்படுத்தி செயல்முறை வடிவங்களாக போதித்து இன்றைய உலகில் பூத்துக் குலுங்கும் அனைத்து செழுமைகளுக்கும் பிறப்பிடமாக அய்ரோப்பாவும் அதன் அருமைச் செல்வர்களும் செயல்பட்டதை விளக்குகிறது.

மதவாத சண்டாளர்களின் வஞ்சகம், திமிரையும் மதக் கவர்ச்சிகளுக்கு அடிமையாகக் கிடந்த மன்னர்கள் கூட்டத்தின் அதிகார மமதையையும் எதிர்த்து தன் இன்னுயிர் உள்ளிட்ட பலவற்றை இழந்ததோடு இன்னல்கள், இடுக்கண்கள், துன்ப துயரங்களை எதிர்கொண்டு உலகத்திற்குப் புதுப்பாதை போட்டுத் தந்து, பலதரப்பட்ட அறிவுப் பூங்காக்களை உருவாக்கித் தந்ததை இந்த நூல் ஒளியேற்றி காட்டுகிறது.

        அறிவியல் அந்த அருமையான பொருட்களை துய்த்து இனிமை 

பெறும் இந்தியர்கள்இதைத் தந்தவரை இதயத்தில் வைத்திருக்கிறார்களா

ஊடகங்கள் நடத்துவோர் ஊருக்கு உரைக்கிறார்களா? என்பதெல்லாம் 

வினாக்குறியாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment